எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 25, 2025

போனது போனது தானே!

 மாமாவுக்கும் எனக்கும் சுமார் ஏழரை வயது வித்தியாசம். இந்தக்காலத்துப் பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எங்க பெண்ணைக் கூட நாங்க எட்டு வயது வித்தியாசத்தில் தான் கொடுத்திருக்கோம். அது போகட்டும்  பெண் அம்பேரிக்கா போக வேண்டிய தினம் பார்த்து மிசல்(Missile) அட்டாக் இரு பக்கமும். வான்வெளியை மூடிவிட்டார்கள் எனச் செய்திகள். எப்படிப் போகப் போறா என அன்றிரவு முழுக்க பதட்டம். போறாத குறைக்கு தோஹாவில் போட்ட மிசைல் பையர் இருக்கும் இடத்துக்கு அருகே சுமார் 50 கிலோ மீட்டருக்குள்ளாக .போட்டிருக்காங்க. போட்டிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் சாப்பிடும்போது சப்தம் பலமாகக் கேட்டிருக்கு.. நல்ல வேளையாகச் சேதம் எதுவும் இல்லை. என்றாலும் கவலை, பதட்டம், செய்வது தெரியாமல் முழிச்சது என முந்தாநாள் இரவு எங்களுக்கெல்லாம் கழிந்தது. இன்று காலை ஆறு மணி அளவில் பெண் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததும் தான் கொஞ்சம் நிம்மதி.

எதுவோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். இந்த ஐம்பத்தி ஐந்து வருட இல்வாழ்க்கையில் நாங்கள் பிரிஞ்சிருந்தது என்றால் என்னுடைய இரு பிரசவத்தின் போது மட்டுமே. அதிகம் நான் அவரைத் தனியாச் சமைத்துச் சாப்பிடும்படி விட்டதில்லை. அவரும் அந்த அளவுக்கு என்னை அனுமதித்ததில்லை. கல்யாணங்களுக்குப் போனால் கூட அவருடனே போயிட்டு அவருடனேயே திரும்பிடுவேன். இதுக்காகப் பெண், பிள்ளை படிக்கும் நாட்களில் இருவரும் சேர்ந்து போக முடியாதவற்றுக்கு மாமனார், மாமியார் போவாங்க. அல்லது நான் மட்டும் தனியாகவோ, அவர் மட்டும் தனியாகவோ போவோம். 

எங்களுக்குள் சண்டைனு வந்தால் அது அவர் காய்கறி மார்க்கெட் போயிட்டு வந்தால் தான். கருகப்பிலை மட்டும் இரண்டு மூன்று கட்டு, கொத்துமல்லிக்கட்டு  தினுசு தினுசாகனு வாங்குவார். பாத்திரக்கடைனு போனால் நான் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்துடுவேன். அவர் தான் ஆசை ஆசையாக எல்லாமும் பார்த்து வாங்குவார். அதிகமாக வாங்கினால் டிஷும் டிஷும் தான். ஆனாலும் கண்டுக்க மாட்டார். அக்கம்பக்கம் எல்லாம் நான் சத்தம் போடுவதைப் பார்த்துட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னாடி அவர் குணம் புரிந்து நான் கடிவாளாம் போடுவதைப் புரிஞ்சுண்டாங்க. இதுக்காக அவர் கை ஓங்கியது என்றோ என்னோட கை ஓங்கியது என்றோ பொருள் இல்லை. நவராத்திரிக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் மட்டும் எப்போவுமே என்னோட தேர்வாக இருக்கும்.

இப்போ உடல்நிலை சரியில்லாது போனாதில் இருந்து அவருக்குள் ஒரு ஏக்கம். வீட்டில் தான் தன்னுடைய அதிகாரத்தோடு பழைய மாதிரி இருக்க முடியலை என்னும் ஏக்கம். ஒவ்வொரு பொருளும் நான் வாங்குகையில் முகத்தில் குற்ற உணர்வு இருக்கும். நீ வீட்டையும் பார்த்துண்டு வெளி வேலைகளும் பார்க்க வேண்டி இருக்கே என்பார். நீ படுத்துட்டா நான் என்ன செய்வேன்? உன் உடம்பையும் பார்த்துக்கோ. எனக்கு முன்னாடி போயிட்டியானா நான் தான் கஷ்டப்படுவேன். என்னை யார் கவனிச்சாலும் எனக்குச் சரியா வராது. நீ மட்டும் என்னை விட்டுட்டுப் போயிடாதே என்பார். இதான் அவர் கடைசியாக என்னிடம் சொன்னதும். என்னோட இரண்டு கைகளையும் பிடிச்சு அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, நீ எங்கேயும் போயிடாதே. என்னை ஏமாத்திடாதே! என்றே திங்கட்கிழமை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் தான் பைத்தியம் பனிரண்டு மணிக்கு மேல் தூஙிட்டாரேனு வந்து படுத்துக் கொண்டது தப்பாகி விட்டது. நான் இல்லைனு தெரிஞ்சதும் அந்த ப்யத்திலேயே போயிட்டாரோனு குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று கொண்டு இருக்கிறது. என்ன செய்ய முடியும்?


இதோடு புலம்பலை நிறுத்திக்கப் பார்க்கிறேன்f. எல்லோருக்கும் அலுப்புத் தட்டிடும் இல்லையா?  _/|_

Tuesday, June 24, 2025

இன்ஸ்டா மார்ட்டின் பித்தலாட்டம்!

 இவ்வளவு நாட்களாகச் சாப்பாடு வந்து கொண்டிருந்ததால் காய்கறி ஏதும் வாங்கவே இல்லை. இப்போப் பொண்ணும் அம்பேரிக்கா கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதால் எனக்கு மட்டும் அவ்வளவு சாப்பாடு தேவை இல்லை என்பதால் இன்ஸ்டா மார்ட் மூலம் காய்கள் வாங்கினேன். வாசலிலேயே காய்க்கார அம்மா வருகிறார். அதைத் தவிர்த்தும் வேலை செய்யும் அம்மாவிடம் சொன்னாலும் காய்கள் கிடைக்கும். ஆனால் பெண், பையர் எல்லாம் வசதி, வாய்ப்பு இருந்தும் ஆன்லைன் வியாபாரம் செய்வதில்லை எனப் புகார் சொன்னதால்/ சொல்லிக்கொண்டே இருப்பதால் வாங்கலாம்னு முடிவு எடுத்தேன். ஞாயிறன்று காய்கள் வாங்கினதில் 174 ரூ ஆச்சு. அதில் 164 ரூபாய்கள் காய்க்காகவும் பத்து ரூபாய் டிப்ஸாகவும் வந்தது. காய்கள் பட்டியலோடு விலைப்பட்டியலும் ஒத்து வந்தது. ஆகவே கேள்வி கேட்காமல் பணம் கொடுத்துவிட்டு வாங்கினேன். இன்னிக்குக் கருகப்பிலை, இஞ்சி, வெண்டைக்காய், பாகல்காய் தேவை என்பதால் வாங்கினேன். கருகப்பிலை 11 ரூ, இஞ்சி, 15 ரூ, வெண்டைக்காய் 23 ரூ, பாகல்காய் 25 ரூ மொத்தம் 74 ரூபாய்கள் மட்டுமே.




நூறு ரூபாய்க்கு மேலே தான் இலவசமாக டெலிவரினு சொல்லி இருந்ததால் டிப்ஸ் பத்து ரூபாய், டெலிவரி சார்ஜஸ் 20 ரூ இருக்கும்னு நினைச்சேன். எப்படியும் நூறு, நூற்றுப் பத்துக்குள் தான் எதிர்பார்த்தேன். ஆனால் அப்போவே பில் தொகை 143 எனக் காட்டியது. காஷ் ஆன் டெலிவரி தான் என்பதால் கான்சல் பண்ணவும் நினைச்சேன். ஆனால் பாகல்காய் கட்டாயம் தேவை என்பதால் இருக்கட்டும், பார்த்துக்கலாம்னு விட்டேன். டெலிவரி ஆள் கொண்டு வந்து 143 ரூபாய் கேட்கவும் எப்படி அவ்வளவு ஆச்சு எனக் கேட்டால் அவர் திருதிரு    டெலிவரி சார்ஜஸாக இருக்கலாம் என்றார். ஆனாலும் 69 ரூபாயா டெலிவரி சார்ஜஸ்?அப்போவுமே இடிக்குதே, 74 ரூபாய்ப்  பொருளுக்கு 90 சதவீதமா? நான் அவ்வளவு பணம் எனில் எனக்குக் காய்களே வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள்னு சொல்லவே அவர் தயக்கத்துடன் தன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அவங்க என்னிடம் பேசணும்னு சொல்ல, எனக்கு அழைப்பு வந்தது. தேன் போன்ற இனிமையான குரலில் கொஞ்சினாள் ஓர் இளம்பெண்/ அவளிடம் காரணம் கேட்டால், உங்கள் "ஆப்"பைச் சரியாக நிறுவுங்கள்னு பதில் வந்தது. மற்றபடி எதனால் இவ்வளவு சார்ஜஸ்னு விபரங்கள் கொடுக்கலை. நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.

காலை வேளை, சத்தமாக இருப்பதைப் பார்த்துட்டு யாரும் ஏதும் நினைச்சால்.! நம்ம குரலோ பெரிய குரல். ஆகவே   . பில் விபரங்களைப் பார்ப்போம் என்று மறுபடி அவற்றைத் தோண்டிப் பார்த்தால் ஹான்ட்லிங்க் சார்ஜஸ் மட்டுமே கிட்டத்தட்டப் பத்து ரூபாய்  டெலிவரி பார்ட்னருக்கு மட்டும் 30 ரூபாய், இதைத் தவிர்த்து டிப்ஸ் 10 ரூபாய்  காய்களைக் கொண்டு வரும் சின்னக் கார்ட்டிற்கு வாடகை மட்டும் 15/20 ரூபாய். இதில் ஜிஎஸ்டி மட்டுமே 4 ரூ 80 பைசா, மற்றவை எல்லாம் குறைந்த பக்ஷமாகப் பத்து ரூபாய்கள். இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். நான் வழக்கமாக வாங்கும் பழமுதிர்ச்சோலையில் காய்களைமலிவாகக் கொடுப்பதோடு அல்லாமல் இலவசமாகக் கருகப்பிலை, கொ.மல்லி, புதினாக்கட்டுகள் கொடுப்பாங்க. செர்வீஸ் சார்ஜ் எல்லாம் இல்லை. அதை விடவும் வாசலில் தூக்கிக் கொண்டு வந்து விற்கும் அம்மாவிடம் இந்தப் பணத்தைக் கொடுத்தால் இரு வேளை சாப்பாடுக்கு ஆகும். இனிமேல் இந்த ஆன்லைன் வியாபாரம் காய்கள் விஷயத்தில் வேண்டாம்னு முடிவு கட்டிட்டேன்.. இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். 

 எப்போவுமே காய்கள் 100 ரூபாய்க்கு மேல் வாங்கவா முடியும்? நூறு ரூபாய்க்கு மேல் வாங்கினால் தான்  சலுகை எனில் வாசலிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்குத் தேவை 100 அல்லது 200 கிராமுக்குள் தான், அதை ஏன் இவங்க கிட்ட வாங்கிட்டு இரட்டிப்புப் பணம் கொடுக்கணும். பொதுவாக ஸ்விகியே கொஞ்சம் அப்படி, இப்படித் தான். சாப்பாடு வாங்கினாலும் நாம் கேட்டது வராது. வேறே ஒண்ணைக் கொடுப்பாங்க. எங்க பொண்ணு அவங்க கிட்டே சண்டை போட்டு சுமார் 110ரூ பணம் அவங்களைக் கொடுக்கும்படி செய்தாள். அவங்கல்லாம் அம்பேரிகாவில் இத்தகையயே ஏமாற்றும் குணம் இல்லை எனச் சொல்கின்றனர். என்னதான் அரசு எல்லாவற்றையும் டிஜிடல்ல் மயமாக ஆக்கி இருந்தாலும் அதிலும் தகிடுதத்தம் பண்ணுவார்கள் நம்மவர்கள். திருந்துவது என்பது வேப்பங்காய் சாப்பிடுகிறாப்போல். ஆகவே நாம் தான் பார்த்து உஷாராக நடந்துக்கணும்.

Thursday, June 19, 2025

திருமணம் ஆக வேண்டி பிரமசாரிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

 இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய

புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.

----

விரைவில் திருமணம் நடக்க ஸ்வயம்வர கலா மந்திரம்:


இதற்கு த்யானம் நியாஸம் எல்லாம் உண்டு. குரு மூலமாகவே உபதேசம் ஆகி ஜபம் செய்ய வேண்டும்.

அதனால் இங்கே இரண்டாம் பட்ச த்யான ஸ்லோகம் மட்டுமே தரப்படுகிறது.

தேவையானவர்கள் குரு முகமாக உபதேசம் பெறுக.


த்யானம்:


சம்பு4ம் ஜக3ந் மோஹன ரூப பூர்ணம்


விலோக்ய லஜ்ஜாகுலிதாம் ஸ்மிதாட்4யாம்


மதூ4கமாலாம் ஸ்வஸகீ2 கராப்4யாம்


ஸம்பிப்ரதீ4ம் அத்3ரி ஸுதாம்ப4 ஹேஜம்



மூல மந்த்ரம்:


 குரு முகமாக உபதேசம் பெற்றே ஜபிக்க வேன்டும். அப்படி உபதேசம் கிடைக்காவிடில் கீழ் காணும் த்யான மந்திரத்தை ஜபிக்கவும்.


ஸ்மர மதன வரணலோலா மந்மத ஹேலா விலாஸ மணிசாலா |


கனகருசி சௌர்ய சீலா த்வமம்பக பா3லா கராப்3ஜ த்ருத4 மாலா ||


மன்மதனை சிக்ஷித்த சிவனை வரிக்க ஆசை உள்ளவளும் மன்மத லீலைக்கு மணிமயமான சாலையாக இருப்பவளும் ஸ்வர்ண வர்ணமானவளும் கையில் ஸ்வயம்வர மாலையுடையவளுமாக இருக்கிறாய். ஓ அன்னையே! எனக்கும் விரைவில் விவாஹமாகும்படிச்செய்.


[நித்யம் காலை 108 முறை ஜபிக்கவும்]

Tuesday, June 17, 2025

என்னவோ எண்ணங்கள்!

 விதியை வெல்ல யாராலும் முடியாது தான். ஆனாலும் வென்று கொண்டிருக்கோம்னு நினைச்சேன். திடீரென வந்த சர்க்கரை அளவு எல்லாவற்றையும் தூக்கி அடித்து விட்டது. என்ன காரணம்? விடாமல் பிசியோதெரபி செய்து கொண்டிருந்திருக்கலாமோ? நடைப்பயிற்சிக்குக் கூப்பிட்டால் வரலைனுடுவார். ஹீமோக்ளோபின் குறைவால் நடக்க முடியலைனு நினைச்சேன். அது தப்போ? மருத்துவமனைக்குச் செல்லும் முன்னர் தானாகவே கரைத்த ரசம் சாதம், மோர் சாதம் பாத்திரத்தில் இருந்து தம்பளரில் விட்டுக் கொண்டு சாப்பிட்டதைப் பார்த்தால் நம்பிக்கை அதிகமாய்த் தான் இருந்தது. ஆனால் இம்முறை மருத்துவமனையில் வற்புறுத்திச் செய்யப்பட்ட என்.ஜி ட்யூப் மூக்குத்துவாரத்து வழியாக வயிற்றுக்குள் செலுத்தியதில் பேச முடியாமல், சாப்பிடமுடியாமல் போனது என்னமோ நிஜம், இத்தனைக்கும் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து அதை எடுக்கச் சொல்லியும் மேலும் ஆறு மணி நேரம் நீட்டித்து வைத்து 30 மில்லி திரவ ஆகாரத்தோடூ பசியும் பட்டினியுமாய்ப் போட்டதில் வந்ததா? எது?  ட்யூபை எடுத்ததும் ஆகாரம் கொடுத்தால் முழுங்க முடியலை. என்றாலும் நினைவு தெளிவாக இருந்தது. ஆனால் அவருக்கு இருக்க வேண்டும், அதுக்காகப் போராடணும் என்னும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. ஏதோ ஒரு காரணம். போக வேண்டிய வேளையை விதி நிர்ணயித்து விட்டது. 

ஆனால் ஒரு விதத்தில் நான் முன்னால் போயிருந்தால் அவர் தடுமாறிப் போயிருப்பார். யாருக்கும் தொலைபேசியில் அழைப்பதுன்னாக் கூட நான் தான் நம்பர் போட்டுத் தரணும். கத்துக்கோங்க, கத்துக்கோங்கனு எத்தனை முறை சொன்னாலும் அலட்சியமாகப் போடி என்பார். நான் விளையாட்டாச் சொல்லுவேன். திடீர்னு ஒரு நாள் நான் மண்டையைப் போட்டால் நீங்க யாரையும் கூப்பிட முடியாமல் திகைச்சுப் போய் நிப்பீங்க என்பேன். நீ எங்கே பார்த்துண்டா இருக்கப் போறே என்று வம்பிழுப்பார். ஆனால் நல்லவேளையாக அவர் அந்தக் கஷ்டம் எல்லாம் படவில்லை. கடவுள் என்னை நீ இருந்து எல்லாவற்றையும் அனுபவினு சொல்லிட்டு அவரை மட்டும் கூட்டிக் கொண்டு போய் விட்டார். கடைசியில் ராகவேந்திரர் பிரசாதம் மானசிகமாகக் கிடைச்சிருக்கு. அந்தத் திருப்தியோடு போயிட்டார். கொடுத்து வைத்த ஆன்மா.  கடவுளைச் சிந்தித்த வண்ணமே போயிருக்கு. எனக்கும் உடனே உயிர் போயிடாதானு தான் இருந்தது. ஆவால் பாவப்பட்ட ஜன்மமான எனக்கு அதெல்லாம் எப்படிக் கிடைக்கும்?   

யாரும் படிச்சுட்டு மனசு வருந்த வேண்டாம். தனிமரமாக நிக்கணும்னு எனக்கு விதி. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றையும் அவரிடம் மானசிகமாகச் சொல்லிட்டுத் தான் செய்யறேன். ஆனால் உயிரும், ரத்தமும், சதையுமாக இருப்பது போல் வருமா என்ன? ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை. 

Monday, April 28, 2025

தாழ்மையான நமஸ்காரங்கள்!

 


உ.வே.சா. ”அரியலூரிலிருந்து இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார்.

அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உ.வே.சா.வின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்குப் புறம் போயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.

பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

Tuesday, April 22, 2025

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நாட்டிலே! இந்த நாட்டிலே!

 அனுபவங்கள் எல்லாம் நமக்குனு தேடிட்டு வருது. புதுசு புதுசா. வழக்கமா மத்தியானம் படுத்ததும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அல்லது ஸ்ரீராம் கம்பெனியின் முதலீடுகள், ஸ்டாக் மார்க்கெட் பத்தித் தான் யாரேனும் கூப்பிட்டுப் படுத்துவாங்க. திட்டிட்டுத் தொலைபேசியை வைப்போம். நேற்றுக் காலை என் தங்கை (ஹிஹி)சித்தி பெண்ணு தான். எங்களைப் பார்க்க வந்திருந்ததால். அவளோடு பேசிப் பொழுது போக்கிட்டு படுக்கவே ஒரு மணியாச்சு. யாரு கூப்பிடறாங்களோனு பயந்துட்டே படுத்தேன். ஆனால் இப்போக் கொஞ்ச நாட்களா அந்தத் தொந்திரவு இல்லையேனு சந்தோஷமா இருந்தது. நேற்று மாலை ஆறரை மணி சுமாருக்குக் கேழ்வரகு வெல்ல தோசை வார்த்துட்டு இருந்தேன். மொபைல் அடித்தது,. ரங்க்ஸிடமே வைச்சிருந்ததால் எடுத்துப் பேசினார். அவர் பேச்சிலிருந்து ஏதோ பணத்தை அவருக்கு அனுப்பச் சொல்றார்னு மட்டும் புரிஞ்சது. சாயங்காலம் தான் ஊசி போட வந்த நர்ஸுக்கு ஜிபேயில் பணம் கொடுத்திருந்தேன். அதில் ஏதாவது கூடியோ குறைஞ்சோ போயிடுத்தோ? தோசையை எடுத்துக் கொண்டு அவர் தட்டில் போட்டேன். ஃபோனை என் கையில் கொடுத்து நீயே பேசுனு சொன்னார் ரங்க்ஸ்.

தொலைபேசியில் ஒரு நபர் தன் பெயர் இன்னார் எனச் சொல்லி அவர் என்னோட மொபைல் எண் போலவே இன்னொரு எண்ணிற்குக் கடைசி எண் மட்டும் மாற்றம் ஜிபே அனுப்பியதாகவும் கவனக்குறைவால் ஒரு எண்ணை மாத்திப் போட்டுட்டதால் எங்களுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்து அதை உடனே அவருடைய எண்ணிற்கு அனுப்பச் சொன்னார். நானோ சும்மாவே சந்தேகப் பேர்வழி. இப்போ இன்னமும் ஜந்தேகம். ஏன் அவர் வங்கிக்கு முதலில் ஸ்டாப் பேமென்ட் கொடுக்காமல் நம்மைக் கூப்பிட்டார் என்பது தான். என் மொபைலில் அதுவரை க்ரெடிட் மெசேஜ் எதுவும் வந்திருக்கலை. ஆகவே நான் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு மறுபடி தோசை வார்க்கப் போனேன்.. அவர் விடாமல் ரங்க்ஸைக் கேட்க சரினு நானும் மெசேஜ் ஏதேனும் அந்தக் கொஞ்ச நேரத்தில் வந்திருக்கானு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட பெயருள்ள நபரிடமிருந்து பணம் நம்ம ரங்க்ஸோட பெயருக்கு அவர் அக்கவுன்டில் வந்திருந்தது. 

இப்போ என்ன செய்யலாம்னு யோசிச்சால் ரங்க்ஸ் லாப்டாபைத் திற்ந்து அக்கவுன்டில்  பணம் வந்திருப்பதைப் பார்க்கச் சொல்ல அந்த ஆளும் அதையே வற்புறுத்தவே எனக்கு மண்டையில் குடைச்சல். ஏன் அக்கவுன்டைத் திறந்து பார்த்துப் பணத்தை அவனுக்கு அனுப்ப ஜிபேயைத் திறந்தால் நம்ம கணக்கு விபரங்கள் எல்லாம் அந்த ஆளுக்குத் தெரிய வாய்ப்பிருக்கேனு யோசிச்சுட்டு கணக்கைத் திறந்து பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணீட்டு ரங்க்ஸிடமும் அதைச் சொல்லிட்டு வங்கியில் எங்களுக்கு எப்போவும் உதவி செய்யும் நபர் ஏழு மணிக்குத் தான் வீட்டுக்குப் போவேன் என ஏற்கெனவே சொல்லி இருந்தார். அவரை அழைத்தேன், விபரங்களைத் தொலைபேசியில் சொல்ல முடியாது. ஆகவே வீட்டுக்கு வாங்கனு சொல்லி வரச் சொல்லி எல்லாவற்றையும் சொல்ல அவரும் வங்கிக்கணக்கைத் திறந்து பார்க்க வேண்டாம் எனச் சொல்லிட்டு அந்த ஆள் அனுப்பி இருந்த விபரங்களையும் பார்த்துட்டு நீங்க  இப்போதைக்குச் சும்மா இருங்க அதான் நல்லது, அப்படி அந்த ஆள் தொடர்பு கொண்டால் பேச வேண்டாம்னு சொன்னார்.

நான் ஏற்கெனவே அந்த ஆளிடம் எங்க வங்கிக்குச் செய்தி கொடுத்திருக்கேன். மானேஜர் வரார்னு சொல்லி இருந்ததாலோ என்னமோ அவர் அப்புறமாக் கூப்பிடவே இல்லை. நானும் அவர் கொடுத்த வாட்சப்பையும் அவரோட எண்ணையும் தேவையற்றது என நீக்கிவிட்டுப் பின்னர் சாப்பிட்டுப் படுத்தோம். இரவு வேறொரு எண்ணில் ஒரு அழைப்பு வர இவராக இருக்கலாம்னு அதை எடுக்காமல் அதையும் நீக்கிட்டு தொலைபேசியை ம்யூட்டில் போட்டுட்டுப் படுத்தேன். இன்னிக்கு வங்கியில் கேட்டதில் வங்கி மூலமாகவே இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பார்ப்பதாகச் சொல்லி இருக்காங்க. அந்த ஆளிடமிருந்து பின்னர் அழைப்பு வரலை. ஒருவேளை நிஜமாகக் கூட இருக்கலாம். என்றாலும் அந்த ஆள் அவர் வங்கி மூலமாகவே இதைச் சரி செய்து இருக்கலாம். சாதாரணமாக வங்கிக்குச் செல்பவர்கள் இதைத் தான் செய்வார்கள். என்ன ஒரு நாள் முன்னே பின்னே ஆகலாம். எங்கள் வரை வந்திருக்கவே வேண்டாம். ஏன் இப்படிச் செய்தார்? இந்தக் கேள்விகள் தான் மனதில். இறை அருளால் இத்தோடு இது தீர்ந்துடும்னு நம்பறேன்.

Friday, April 04, 2025

பல்லைப் பிடுங்கிட்டாங்க!

 வண்டியை விட்டு இறங்கும்போதே அதிர்ச்சி. அத்தனை படிகள். மருத்துவ சாலை மாடியில் இருந்தது. பையர்  என்னிடம் டாக்டர் சொல்லலையானு கேட்க நான் திரு திரு. இதை அவர் சொன்னதாக நினைவில் இல்லை. வந்தாச்சு, நான் மட்டும் மேலே போய்க் கேட்டுட்டு வரேன்னு பையர் போனார். டாக்டர் அவரிடம் நான் தான் அவங்களை வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே எனக் கேட்கப் பையர் அவங்க சரியாப் புரிஞ்சுக்கலைனு சொல்லி இருக்கார். சரி கீழே வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு மருத்துவர் கீழே வந்தார். அங்கிருந்த நரசை ஒரு நாற்காலி கொண்டு வந்து கீழே போடச் சொல்லிட்டு மருத்துவர் என்னை அதில் உட்காரச் சொல்லிட்டுப் பார்த்தார்.. ஒண்ணும் சொல்லலை. பையர் பின் தொடர மேலே சென்றார். மேலே போனதும் ஒரு வாரத்துக்கான மாத்திரைகள் நான்கு விதங்கள் எழுதிட்டுக் கூடவே பத்தாவது க்ராஸில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்குப் போய் ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்லிக் கொண்டு காட்டச் சொல்லி இருக்கார். பையர் கீழே வந்து வண்டி பிடித்துக் கொண்டு என்னையும் மெதுவாக வண்டியில் ஏற்றிக் கொண்டு ஸ்கேன் சென்டருக்குப் போனோம். அங்கே கூட்டமெல்லாம் இல்லை. போன உடனே நகைகளைக் கழட்டிட்டு ஸ்கேனுக்கு வரச் சொல்லிட்டாங்க. ஸ்கேன் எடுத்து முடித்ததும் சிறிது நேரத்தில் ரிப்போர்ட் கொடுக்க மறுபடி டாக்டரிடம் போனோம். நான் வண்டியிலேயே உட்கார்ந்திருக்கப் பையர் மட்டும் மேலே சென்று டாக்டரிடம் காட்டிவிட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார்.  அவர் சொன்னது விஸ்டம் பல் தான் பிரச்னை அதை எடுப்பது கஷ்டம், முடிஞ்சால் எடுக்கலாம் அல்லது ரூட் கானல் போட்டுக் காப் வைக்கலாம்னு சொல்லி இருக்கார். சரினு மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

சாயந்;திரமெல்லாம் ஒண்ணுமே இல்லை. ரன்க்ஸுக்கு தோசை கூட வார்த்துக் கொடுத்தேன். நானும் சாப்பிட்டுவிட்டு ஏழேகால் மணிக்கெல்லாம் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தால் படுக்கை கொள்ளவில்லை. எழுவதும் உடகாருவதும் படுப்பதுமாக அவதிப் பட்டேன். திடீரென வலி அதிகமாகிக் கண்ணுக்கும் கீழிருந்து தாடை வரை வீக்கம் பெரிசாக ஆகி ஒரு ஆப்பிள் பழம் அளவுக்குச் சிவந்து தொங்கியது. உதடெல்லாம் கோணிக்கொண்டு விட்டது. முகப் பக்கவாதமோ எனச் சோதனைகள் செய்து பார்த்தேன். வாயெல்லாம் நேராகவே இருந்தது. எதிர் வீட்டு மாமி சிஎம்சியில் ஸ்டாஃப் நர்சாக இருந்தவ்ர். அவரிடம் காட்டினேன். அவரும் முகப்பக்கவாதமோ, பொன்னுக்கு வீங்கி என்னும் மம்ப்ஸோ இல்லைனு சொல்லிட்டார். அதுக்குள்ளே பையர் வந்து என்ன ஆச்சுனு கேட்டுவிட்டு முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டார். மணியோ ஒன்பதுக்கு மேல் ஆகிக் கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியலை, த்லையைக் கீழேயே போட முடியலை. நான் வழக்கமாய் மருந்துகள் வாங்கும் மெடிகல் ஷாப்காரரான பார்மசிஸ்டை அழைத்து நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே நான் வலி குறைந்து ;தூங்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரேன், உங்க பையரைக் கீழே செக்யூரிடி இருக்கும்  இடத்துக்கு வரச் சொல்லுங்கனு சொன்னார். பையர் கிளம்புவதற்குள்ளாக அவரே வந்துட்டு என்னையும் பார்த்துட்டு மாத்திரைகளைக் கொடுத்துட்டு பல் மருத்துவர் கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சிலவற்றைச் சாப்பிடாதே என்றார்.

அவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தேன், அரைமணியில் வலி குறைய ஆரம்பித்தது. ஆனால் வீக்கம் வடியலை. என்றாலும் தூங்கினேன்னு தான் சொல்லணும் காலையில் எல்லோரும் பார்த்துட்டு வேறே மருத்துவர் கிட்டேப் போகச் சொல்ல எங்க வீட்டில் உதவிகள் செய்யும் பெண் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகேயே ஒரு மருத்துவமனையைச் சொன்னார். சரினு சாப்பாடு வந்ததும் ரங்க்ஸைச் சாப்பிடச் சொல்லிட்டு நாங்க மருத்துவமனை போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் பார்க்க அழைக்க, அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் என்னையும் மாற்றி மாற்றிப் பல்வேறு கோணங்களில் பார்த்துவிட்டு என்ன நடந்ததுனு கேட்டார். நான் ஏற்கெனவே ஒரு பல் உடைந்திருந்ததையும் உடைந்த பாகத்தை ஒரு மருத்துவர் எடுத்துட்டார்னும் சொன்னார். உடனே இந்த மருத்துவர் அதில் தான் பிரச்னையே. அந்தப் பல் ஏற்கெனவே இன்ஃபெக்ஷன் ஆகி உடைஞ்சிருக்கு. ஆகவே மொத்தப் பல்லையும் எடுத்திருக்கணும் அப்படி எடுக்காததால் பக்கத்தில் உள்ள பல்லும்/பற்களும் பாதிப்படைஞ்சிருக்குனு சொல்லிட்டு விஸ்டம் பல்லைத் தவிர்த்து மற்ற இரு பற்களை உடனே எடுக்கணும்னு சொல்லிட்டு அவரே செவ்வாய்க்கிழமை சாயங்காலமா வாங்கனு சொல்லிட்டார். எனக்குச் செவ்வாய்க்கிழமை ஒத்துக்கொள்ளாதே என்னும் கவலையில் நான் புதனன்று வரேனேனு சொன்னதைக் காதிலேயே போட்டுக்கலை. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஐந்தரைக்கு வந்துடுங்கனு சொல்லிட்டார்.

வலி வீக்கம் குறைய இந்தப் புது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு வந்தேன்,. வலி குறைந்தாலும் வீக்கம் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது. செவ்வாயன்று காலையிலிருந்தே திக் திக், திக் தான். மதியம் நெருங்க, நெருங்கக் கவலையும் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்னால் பல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்கேன் என்றாலும் அவை எல்லாம் ஆடிய பற்கள். இதுவோ ஸ்திரமாக கெட்டியாக ஊன்றி இருக்கு. வலி எப்படி இருக்குமோனு கவலை. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் அழைத்துப் பல் பிடுங்கும் ஆபரேஷன் தியேட்டரில் உட்கார வைத்து விட்டு மறுபடி பற்களை ஆய்வு செய்தார்,. விஸ்டம் பல்லுக்கு முந்தைய பற்களையே பிடுங்கணும்னு மறுபடி காட்டினார். பின்னர் என்னையும் சம்மதம் கேட்டுக் கொண்டு ரூட் கானல் வேண்டாம் என நான் உறுதியாகச் சொன்னதும் ஈறுகள் மரத்துப் போக ஊசியைச் செலுத்தினார். அந்த வீக்கம் இருக்கும் ஈறிலேயே ஊசியைச் செலுத்தியதால் அப்போவே வலி தாங்கலை. டாக்டர் ஒரு மாதிரி பேசி என்னைச் சமாதானம் செய்து கொண்டு ஊசியைப்போட்டுவிட்டுச் சற்று நேரம் உட்கார்ந்திருக்கும்படி சொல்லிப் போனார்.

இதற்கு நடுவில் நர்ஸ் வந்து என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுகிறேன் எனக் கேட்க நினைவிலிருந்தவற்றைச் சொன்னேன். மருத்துவர் முக்கியமாய் ஆர்த்தோ பிரச்னைக்கு என்ன சாப்பிடறேன்னு சொல்லச் சொன்னார். நினைவில் இருந்தவற்றைச் சொன்னேன். பின்னர் பையர் வீட்டில் ரங்க்ஸைக் கூப்பிட்டு என்னோட மருந்துகள் லிஸ்டை அனுப்பச் சொல்ல அவரும் மருமகள் உதவியோடு அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மருத்துவர் முன்னாடியே பார்த்திருக்கணும் என்றார். யாரும் என்னிடம் கேட்கலை என்றேன். இதுக்குள்ளே மரத்துப் போயிருக்கும்னு பல்லைப் பிடுங்க ஆயத்தமானார். என்ன செய்யப் போறோம் என்பதை மறுபடி ஒரு தரம் எனக்குச் சொல்லிட்டுப் பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். அதான் தெரியும். அடுத்த நிமிடம் நான் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியோ ஒரு பல்லைப் பிடுங்கிட்டார். என்றாலும் திரும்ப ஒரு தரம் ஊசி செலுத்தப்பட்டிருந்தது, இப்போது மூன்றாவது முறையாக மறுபடி கதறக் கதற ஊசி செலுத்திட்டு இன்னொரு பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். லேசில் வருவேனா என்றது அது. ஆழமாக வேரூன்றி இருந்திருக்கு. நான் கத்தவும் பிடுங்குவதை நிறுத்திட்டு இதோடு விட்டுடவா? இன்னொரு நாள் பிடுங்கலாமா என என்னிடம் கேட்டார். வேண்டாம், வேண்டாம் இன்னிக்கே ஒரு வழியா முடிச்சுடுங்கனு சொல்லிட்டு அடுத்த கத்தலுக்கு ஆயத்தமானேன். கதறக் கதறப் பல்லைப் பிடுங்கிட்டார். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் எடுக்க முடிஞ்சது. பல்லில் சீக்கோர்த்துக் கொண்டு வலியைக் கொடுத்த பாகத்தைக் காட்டினார். மற்றபடி பல் நன்றாகவே இருந்திருக்கு. முதலில் போன மருத்துவர் முறையாகச் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் இல்லை.

பல்லை ஒரு மாதிரி பிடுங்கிட்டாலும் அடுத்தடுத்து நான்கைந்து முறை மயக்க ஊசி போட்டதால் என்னால் எழுந்திருக்க முடியலை. அங்கேயே அப்படியே படுத்துட்டேன். மருத்துவரும் அரை மணி படுத்திருக்கட்டும். பின்னர் அழைத்துப் போங்க. நாளை வரை சூடு, காரம் இல்லாமல் திரவ உணவு தான். ஜூஸ், இளநீர் நிறையக் கொடுங்கனு சொல்லிட்டு அடுத்த பேஷன்டைப் பார்க்கப் போனார். பின்னர் கொஞ்சம் மயக்கம் சரியானதும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். இன்னிக்குத் தான் வலி, வீக்கம் இல்லாமல் சாப்பிட முடிஞ்சது. பேசவும் முடிஞ்சது.