மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.
உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.
பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன்.
மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.
எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம்.
சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும். கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((
மலரும் நினைவுகள் துயர் போக்கும் மருந்து. பழைய கீசாக்காவைக் காண்கிறேன்.
ReplyDeleteவாங்க ஜேகேசி சார், இது புதுசா எழுதலை. பத்துப் பதினைந்து வருடங்கள் முன்னர் "மதுரை மாநகரம்"ங்கற பெயரிலே நாங்க மதுரைக்காரங்களாச் சேர்ந்து ஆரம்பிச்ச வலைப் பூவிலே எழுதினது இது. அதை இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணினேன், இப்போவும் பொருந்தும் என்பதால்.
Deleteநீங்கள் கோவிலுக்கு அருகிலேயே குடி இருந்திருக்கிறீர்கள். எனவே கோவிலில் போடும் பாடும் பாடல்கள் உங்களுக்கு கேட்டிருக்கிறது. நாங்கள் புதூரிலும், நாராயணபுரத்திலும் இருந்தால் எப்படி கேட்கும்! எங்கே கோவிலுக்கு வருவது?
ReplyDeleteநாங்க இருக்கையில் நாராயணபுரமெல்லாம் வர ஆரம்பிக்கலை. அப்பா/அம்மாவானும் எண்பதுகள் வரையும் அதன் பின்னர் அம்மா போனப்புறமா அப்பாவாவது மதுரைப் பெரியப்பா வீட்டுக்குப் போயிண்டு இருந்தார். எனக்கு 76 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரையில் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால் போய் வந்து கொண்டிருந்தோம். அதுவும் ஸ்ரீர்ங்கம் வந்தப்புறமா நின்னு போச்சு. ஏனெனில் பெரியப்பா பிள்ளை (அண்ணா) பெண்களூரில் பிள்ளையோடு போய் இருக்க ஆரம்பிச்சுட்டார்.
Deleteகச்சேரிகள் பற்றிய தகவல்கள் கிடைச்சிருந்தால் நீங்க கோயிலுக்குச் சாயங்காலமா வந்து கச்சேரிகளைக் கேட்டிருக்கலாம். நாங்க ஹரிதாஸ் பஜனை மட்டும் முழுசும் உட்கார்ந்து கேட்போம். கச்சேரிகளுக்கெல்லாம் போயிட்டுப் பின்னர் எட்டரை மணி அளவில் வீடு திரும்பிடுவோம்.
Deleteஇப்போதெல்லாம் எந்தக் கோவிலுக்கும் முன்மாதிரி சுலபமாக சென்று தரிசித்து வரமுடிவதில்லை. அறமில்லாதுறையின் கட்டுப்பாடுகள் எரிச்சலைத் தருகின்றன.
ReplyDeleteஏதேனும் சட்டாம் அல்லது சட்டத்திருத்தம் கொண்டு வந்து இவற்றை எல்லாம் ஒரேயடியாக நீக்கினால் ஒழிய பழைய நிலை வரப்போவதில்லை.
Deleteஇதில் வேதனை என்னவென்றால், கோயிலை சுற்றுலாத் தலமாக ஆக்கிவிட்டார்கள். நான் எல்லாக் கோயில்களையும் சொல்கிறேன் (சில தவிர). இன்னும் காபி டீ, பொறை பிஸ்கெட் மாத்திரம் விற்க ஆரம்பிக்கலை. இதுபற்றி படங்களுடன் எழுதினால் வம்பாப் போயிடும். எதையாவது செய்து அதில் காசு பார்க்கணும் என்று நினைக்கறாங்க. பெயிண்ட் அடித்துவிட்டு, கோயில் புனருத்தாரணம் என்று கோடிகளைச் சுருட்டறாங்க. பணம் கையாடல் செய்தால் உடனேயே தெய்வம் கண்ணைப் பிடிங்கினால் ஒழிய, பயம் போய்விட்டது (எல்லாருக்குமே)
Deleteஎன் மகன்களிடம் இப்போதும் அவர்கள் என்னை இத்தனை மணிக்கு எழுப்பு என்று சொல்லும்போது இதைதான் சொல்கிறேன். 'ஏன், நீயே எழுந்திரிக்க மாட்டாயா? அதுதான் நல்ல பழக்கம் என்பேன். செய்ய மாட்டார்கள்.
ReplyDeleteஆமாம், இங்கே என்னோட புக்ககத்திலும் தினம் தினம் எழுப்பி விடணும். இல்லைனா எழுந்திருக்க மாட்டாங்க. கல்யாணம் ஆன புதுசில் நான் மட்டும் நாலு/நாலரைக்கு முழிச்சிண்டு கொட்டு கொட்டுனு உட்கார்ந்திருப்பேன். மாமியார்/மாமனார்/நாத்தனார்கள்/மைத்துனர்கள்னு எல்லோரும் இரவெல்லாம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுப் பனிரண்டு மணிக்கு மேல் தூங்கப் போவார்கள். ஆகவே காலை எழுந்துக்க தாமதம் ஆயிடும்.
Deleteசிலருக்கு எழுப்பிவிட ஆரம்பித்தால் அதுவே பழகிவிடும். நான் யாரையுமே என்னை எழுப்பச் சொல்ல மாட்டேன். அது கௌரவக் குறைச்சல் என்பது என் எண்ணம். என் பையன் அப்போப்போ சொல்லுவான் போலிருக்கு. (எழுப்பிவிடச் சொல்லி). எனக்கு எந்த நேரத்துக்கு எழுதுகொள்ளணும் என்றாலும் மனதில் அலார்ம் இருக்கும், அலாரமும் ஒன்றுக்கு இரண்டாக வைத்துவிடுவேன்
Deleteஇந்த மாதிரி பஜனைகள் நான் கண்ணால் கண்டதில்லை, காதால் கேட்டதில்லை. என் நேரம்! என் ஒன்று விட்ட தம்பியின் இரட்டை குழ்நதைகள் இப்போது அதிகாலையில் அருமையாக பஜனை பாடி வருகிறார்கள். காணொளி அனுப்புகிறான். பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteநினைவு தெரிஞ்சதிலே இருந்து இந்த மாதிரி பஜனைகள், பூஜைகள், சமாராதனைகள்னு தான் பொழுது கழிந்திருக்கு. பெரியப்பா வீட்டிலும், தாத்தா வீட்டிலும் பஜனைகள், போதாததுக்குப் பெரியப்பா வீட்டிலும் எங்க வீட்டிலும் புரட்டாசி சனிக்கிழமை சமாராதனை பெரிய அளவில் நடக்கும். அநேகமாகத் தெருவாசிகள் அனைவருக்கும் அன்னிக்குச் சாப்பாடு போடுவாங்க. அப்போவும் சமாராதனையில் தீபாராதனை எடுக்கும் முன்னர் குத்துவிளக்கை நடுவில் வைச்சுப் பெரியவங்க எல்லாம் (ஆண்கள் தான்) கும்மி அடிச்சு பஜனைப் பாட்டுப் பாடி ஆடுவாங்க. மார்கழி மாதம்னா கேட்கவே வேண்டாம். தினம் தினம் பஜனை கோஷ்டி, உஞ்சவிருத்தி கோஷ்டி வரும். அதைத் தவிர்த்துப் பெருமாள் கோயில் கோஷ்டியில் வேறே போய்ப் பாசுரம் சொல்லும்போது கேட்டுக் கொண்டு கூடவே சொல்லிப் பழகுவோம். அருமையான நாட்கள். குழந்தைகள் பஜனை பாடும் காணொளியைப் பகிரலாம் எனில் எனக்கும் அனுப்பி வைங்க. பார்த்து ரசிக்கலாம்.
Deleteஅண்ணனும் பாடுவாரா? அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது? விசாரித்தேன் என்று சொல்லவும். முன்பு முகநூலில் அடிக்கடி வருவார்.
ReplyDeleteஅண்ணா, தம்பி இருவருமே பிரமாதமான பாடகர்கள். அதிலும் அண்ணாவின் குரல் உச்சஸ்தாயிக்கு எல்லாம் சரளமாகப் போயிட்டு வரும். ஆனால் விருத்தி பண்ணிக்க முடியலை. வீட்டு நிலவரம் என்பதோடு இல்லாமல் அப்பா இதுக்கெல்லாம் ஒத்து வரவே மாட்டார் என்பதும் முக்கியக் காரணம். அண்ணா வயது ஆயிடுச்சே/ ஆகவே வாட்சப்பில் மட்டும் ஏதானும் போடுகிறார். அதோடு மன்னிக்கும் தசை இயக்கம் குறைஞ்ச பின்னால் மன்னியையும் பார்த்துக்க வேண்டி இருக்கே! வெங்கட் பார்த்தப்போ எல்லோரையும் பற்றிப் பேசிக் கொண்டார்கள். ஆதி தான் பார்க்கலை.
Deleteஎல்லோரையும் பற்றி என்றால்?
DeleteAll our group friends. You and Balaji Vasu and others.
Deleteஹரிதாஸ் ஸ்வாமிகள்பஜன் கேஸட்டோ, யு டியூபிலோ கொஞ்சம் பார்த்திருக்கேன். நீங்கள் சொல்லும் காட்சிகள் படிக்க கொஞ்சம் பொறாமையாய்க் கூட இருக்கு..
ReplyDeleteநாங்க நிறையவே ஹரிதாஸ்கிரி அவர்களின் பஜனை, சொற்பொழிவுனு கேட்டு ரசிச்சிருக்கோம். காலநிலை எப்படி இருந்தாலும் சரி அந்த நாலு முழத் துண்டு தான் உடலில். வேறே மேல் வேஷ்டி எல்லாம் கிடையாது. திறந்த மார்பிலேயே காற்று, மழை எல்லாத்திலும். மன உறுதி அதிகம். குருநாதர் ஞானானந்தகிரியைப் பற்றிப் பேச ஆரம்பிச்சாரெனில் அவ்வளவு சுவையாக இருக்கும். அவரின் சகோதரியும் இல்லறத்தில் இருந்தாரெனினும் இவர் மாதிரியே பாடி/ஆடி பஜனைகள் சிறப்பாகச் செய்வார். இவர் மாதிரியே தான் இருப்பார்.
Delete//கால நிலை எப்படி இருந்தாலும், அந்த நாலு முழத் துண்டுதான்// மஸ்கட் வந்த பொழுதும் அப்படியேதான் வந்தார். ஆண்கள் வேட்டி, லுங்கி போன்றவற்றை மடித்துக் கட்டிக் கொண்டு பொது இடங்களுக்கு வர அனுமதிகாத நாட்டில் அவரை அனுமதித்தது ஆச்சர்யம். அங்கு வந்த பொழுது அவருக்கு 70 வயது ஆகி விட்டது ஆனாலும் என்னவொரு குரல்!
Deleteவடக்கு கிருஷ்ணன் கோவில் நான் பார்த்ததில்லை. நேரு விநாயகர் அறிவேன். அந்தந்தக் கோவிலின் பிரசாதங்கள்.. அப்போதைய சுவைகளே தனி.
ReplyDeleteஇங்கே எங்க வீட்டிலிருந்து சில கஜதூரத்தில் மேலாவணி மூலவீதி/வடக்காவணி மூலவீதி சேரும் முக்கில் பிரியும் தெரு தான் வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு. என் கல்யாணத்தின் போது அங்கே தான் ஆவணி வீதிகளின் ஆரம்பத்திலிருந்த வீட்டில் குடி இருந்தோம். அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் தெரு வடக்கு மாசி வீதியில் முடியும். நடுவில் சங்கீத விநாயகர் கோயில் தெரு வரும். சேதுராமன், பொன்னுச்சாமி இல்லம். தினம் தினம் நாதஸ்வர இசை கேட்கலாம். வடக்கு மாசி வீதியில் முழுக்க முழுக்க அப்போ யாதவர்கள் தான் குடி இருந்தனர். மதுரைப்பக்கம் கோனார்கள் என்போம். அநேகமாக அனைவர் வீட்டிலும் பசுமாடு இருக்கும். கிருஷ்ணன் கோயிலில் இருந்து கொஞ்சம் தள்ளிக் கிழக்கே போனால் ராமாயணச் சாவடி. கிருஷ்ணன் கோயிலைச் சேர்ந்தது தான். இங்குள்ள உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு ராமாயணச் சாவடியில் தான் வைக்கப்படுவார்கள். ராமாயணச் சாவடிக்கு நேர் எதிரே உள்ள ப்ளாட்ஃபார்மில் சிம்மக் கல் போகும் தெரு போகும். குறுக்கு வழி அதெல்லாம். பள்ளிக்குப்போகையில் நடந்து போகும்போதெல்லாம் அப்படி தான் போவேன்.
ReplyDeleteசேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களில், பொன்னுசாமி மகன் என்னுடைய வகுப்புத் தோழன்.
Deleteகோமதி அரசுவும் முதல் வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரியாதுனு சொன்னாங்க. பின்னர் புரிந்துகொண்டார்.
ReplyDeleteஇனிய நினைவலைகள்.
ReplyDeleteஇப்போதெல்லாம் ஆலயங்களில் இருக்கும் விஷயங்கள் புதியவை. போகப் பிடிப்பதில்லை. அமைதியை நாடி ஆலயத்திற்குச் செல்லலாம் என்றால் அங்கே அமைதி மட்டும் இல்லை... மற்ற எல்லாமும் இருக்கிறது.
ரொம்ப அருமையா உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கீங்க.
ReplyDeleteபழைய காலம் போல திரும்ப வருமா? கிராமத்து நினைவுகளை எனக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
கோவில் நினைவுகள்.... சமீபத்தில் மதுரைக்குச் சென்ற நினைவுகள் மீண்டெழுந்தன.
ReplyDeleteஒரு இடுக்கில் மிகப் பெரிய குளம் தென்பட்டது. அது கூடலழகர் கோயிலுக்குச் சொந்தமானதுன்னு சொன்னாங்க (ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்காங்க போலிருக்கு). அங்கிருந்து நடக்கும் தூரம்தான் மீனாட்சி கோயில்
அடுத்த முறை வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லவேண்டும்.
ReplyDeleteமதனகோபால ஸ்வாமி கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.
அந்தக் கால பிரசாதங்கள் அருமை என்பது நம் மனதில் உள்ள எண்ணம் என்று தோன்றுகிறது. இப்போல்லாம் பத்து கோயில் பிரசாதங்கள் சாப்பிட்டாலும் ஏதேனும் ஒன்று அருமையாக இருந்தாலே அதிகம்.
உங்கள் இளமைக்கால மார்கழி நினைவுகள் அருமை.
ReplyDeleteஎங்களுக்கும் சிறு வயதில் இருந்தது.அப்போது பாடசாலை லீக்கும் இருக்கும். நான்கு மணிக்கே எழுந்து அம்மம்மாவுடன் கோவில்கள் செல்வோம்.மூன்று கோவில்கள். இப்பொழுது நினைத்தாலும் இனிமை.