வர வர எழுதுவதில் மனம் பதிவது இல்லை. ஏனோ தெரியலை. கணினியில் உட்காரும் நேரமும் குறைஞ்சிருக்கு. வழக்கம் போல் இம்முறையும் வயிறு சரியாக நாட்கள் எடுத்து விட்டன. அதோடு வீட்டிலும் வேலைப் பளு அதிகம். குட்டிக் குஞ்சுலுவும் அவ பெற்றோருடன் நைஜீரியாவுக்குப் போய்ச் சேர்ந்து அவங்க இருக்கப் போகும் ஊருக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். குஞ்சுலு முகத்தில் இனம் தெரியாத சோகம் இருப்பதாய் எனக்கும் அவருக்கும் தெரிகிறது. ஆனால் பையர் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். அவங்க மூன்று பேரும் கம்பெனியின் விருந்தினர் விடுதியில் பதினைந்து நாட்கள் க்வாரன்டைனில் இருக்காங்க. அது முடிஞ்சு கொரோனா பரிசோதனை எல்லாம் ஆகிப் பின்னர் தாற்காலிக வீட்டிற்குப் போகணும். இன்னமும் சாமான்கள் எல்லாம் வந்து சேரவில்லை. குஞ்சுலு ஏற்கெனவே சாப்பிடாது. இங்கே அதுக்கு எல்லாம் பிடிக்கணும். நாங்க பார்க்கையில் விளையாடிக் கொண்டிருந்தது. தானாகவே விளையாடிக்கும். நல்லவேளையா அதோடப் பத்துப் பதினைந்து பேபீஸ்களில் முக்கியமான சில பேபீஸ் கூடவே வந்து சேர்ந்து விட்டன. இல்லைனா ஏங்கிப் போயிருக்கும். எல்லா பேபீஸும் படுக்கையில் அதோடு படுத்துக்கொள்ளணும். இப்போ நாலைந்து பேபீஸ் மட்டும் தான் இருக்கின்றன.
அம்பேரிக்காவில் சென்ட்ரலைஸ்ட் ஏசி. வீடு முழுக்க எப்போதும் இருக்கும். இங்கே நம்ம ஊர் மாதிரி ஸ்ப்லிட் ஏசி எல்லா அறைகளிலும் போட்டிருக்காங்க. பையர் இப்போவே வியர்க்கிறது என்றார். அங்கேயும் இந்தியாவுக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம். இப்போ இங்கே மாலை ஆறு மணி எனில் அங்கே மதியம் ஒன்றரை மணி. மாலை நான்கு மணிக்குப் பையர் கூப்பிட்டால் அங்கே நண்பகலுக்கு அரை மணி முன்னதாக பதினொன்றரை ஆகிறது. ஒரு விதத்தில் வசதி. இன்னொரு விதத்தில் வசதி இல்லை. நாளையிலிருந்து பையருக்கு அலுவலக வேலையை இந்த விருந்தினர் விடுதியில் இருந்தே செய்யும்படி இருக்கும். அப்போ அவருக்கு வர முடியாது. அவங்க இரவு ஆரம்பிக்கையில் நமக்கு நடு இரவு ஆகி இருக்கும். நம்ம காலைஆறு மணி எனில் அவங்களுக்கு நடு இரவு ஒன்றரை மணி. ஆகவே பையருக்கு அலுவலகம் விடுமுறை என்றால் தான் குழந்தையைப் பார்க்க முடியும். அம்பேரிக்காவில் எனில் ராத்திரி படுக்கும்போது எப்படியும் பார்த்துடலாம். இது கொஞ்சம் கஷ்டம் தான்.
********************************************************************************
கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதிலும் கணவன், மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும், பெண் பெற்றோரைக் கொல்வதும், மகன் பெற்றோரைக் கொல்வதுமாக அதிகரித்து வருகின்றன கொலைகள். எல்லாம் பணத்தாசை/ குடியில் ஆசை! மக்களுக்குப் பணத்தின் தேவை இருக்க வேண்டும் தான். ஆசையும் இருக்கத்தான் செய்யும். அதுக்காகப் பெற்றோரைக் கொல்லும் அளவுக்கா? அதுவும் குடித்துவிட்டு! என்னவோ தமிழகம் ஒருக்காலும் திருந்தப் போவதில்லை. வீண் பெருமை பேசிக்க மட்டும் பேசிப்பாங்க! நாங்கள் தனித் தமிழர்கள் என்று!




