My thoughts எனக்குப் பிடித்தநாலு
எல்லாரும் நாலு நாலு என்று பதிவு போட்டார்கள். அந்த மாதிரி நானும் போட வேண்டாமா? அதற்குத் தான் இந்தப் பதிவு. ஆனால் ஒரு வித்தியாசம், என்னை யாரும் அழைக்கவில்லை. என் பதிவிற்கு வரும் அம்பி, மனு மற்றும் பொன்ஸ் போன்றோருக்கு இந்த விஷயம் புதியது.அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? எல்லாவற்றுக்கும் தான் இது.
முதலில் எனக்குப் பிடித்த ஊர் என்றால் நான் சிறு வயதிலே அதிகம் மதுரையை விட்டுப் போனதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் சுப்பிரமணிய புரத்திலோ அல்லது ஜெய்ஹிந்த் புரத்திலோ அப்போது இருந்த தாத்தா (அம்மாவின் அப்பா) வீடுதான் லீவுக்கு எல்லாம். அதையே மிகப் பெருமையாகத் தோழிகளிடம் ஊருக்குப் போவதாகச் சொல்லிக் கொள்வேன். தாத்தா வீட்டுக்கும் போவது என்பது மீனாக்ஷி கல்யாணம் முடிந்து அழகர் ஆற்றில் இறங்கிப்பின் வண்டியூர் போன பிறகு தான். அது வரை நாங்கள் இருந்த வீட்டு வாசம் தான். முதலில் நாங்கள் எனக்கு நினைவு தெரிந்தபோது இருந்த வீடு கழுதை அக்ரஹாரம் என்று அழைக்கப்பட்ட மேலப் பாண்டியன் அகழி வீதி தான். அங்கிருந்து திண்டுக்கல் ரோடு கொஞ்சம் தாண்டி ராஜா பார்லி (முன்னால் இருந்தது) பக்கத்தில் உள்ள மேல அல்லது கீழ அனுமந்தராயன் கோவில் தெரு வழியாக மேல ஆவணிமூலவீதி வந்துப் பின் வடக்காவணி மூல வீதியில் இருந்த ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். என்னுடைய கனவு எல்லாம் அந்த வயதில் மேல ஆவணி மூல வீதியில் இருப்பதுதான். அதற்குப் பின்னால் வடுகக் காவல் கூடத்தெரு (தானப்பமுதலி அக்ரஹாரம் ஜெமினி நாயுடு வீடு எதிரில்) வந்தோம். அதற்குப் பின்னாலே தான் மேல ஆவணி மூல வீதி வந்தோம். என் கனவுகளில் ஒன்றான மேல ஆவணி மூலவீதி வாசம் இது மாதிரி எதிர்பாராமல் கிடைத்தது. அந்த வீடும் அதன் மாடியும் அங்கிருந்த எங்கள் அறையும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.என் வீட்டில் உள்ள எல்லாருக்கும் அந்த அறை பொது என்றாலும் பெரும்பாலும் நான் மட்டுமே அங்கே இருப்பேன். அந்த மாடிக்குப் பின்னால் உள்ள வீட்டு மாடிகளும் தெரியும். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் மொட்டை கோபுரம், மேலக் கோபுரம் இரண்டும் தெரியும்.வீட்டிற்குப் பின்னால் தான் மதுரை சோமு வீடு இருந்தது. என் வீட்டிலிருந்து 6 வீடுகள் தள்ளி. இப்போது பிரபலமாக இருக்கும் ஜி.எஸ். மணி வீடு. கொஞ்சம் தள்ளி வடக்குக் கிருஷ்ணன் கோவிலில் இருந்து சங்கீத விநாயகர் கோவில் தெரு வந்தால் சேதுராமன், பொன்னுச்சாமி வீடு. போதாத குறைக்குக் கோவிலில் இருந்து வரும் கோடி அர்ச்சனை மற்ற வழிபாடுகள் காதில் கேட்டுக் கொண்டிருக்கும்.வீட்டில் நாலு போர்ஷன்கள் இருந்தாலும் நான் படிக்க மாடி அறை மிக உதவியாக இருந்தது. போதாக் குறைக்குக்கூடக் குடி இருந்தவர் வீட்டில் வாங்கும் பேப்பர், புத்தகம் முதலியன அங்கு தாராளமாகக் கிடைத்தது.ஆகவே என் மனதுக்குப் பிடித்தது அந்த வீடுதான். ஆகவே பிடித்த ஊர் என்றாலும் முதலில் மதுரை தான்.
மதுரை
நசிராபாத் (ராஜஸ்தான்)
சிக்கந்திராபாத்
அருவங்காடு (ஊட்டி)
ஊட்டியில் இருக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத ஆசை இன்னமும் உண்டு. பொதுவாக நம் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழகும் அந்த மலை அடிவாரங்களும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. என் அப்பாவின் பூர்வீகமான மேல் மங்கலம் ஊரும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஊர் மிகவும் நன்றாக இருக்கும். வராகநதிக் கரையோரம் அமைந்த அக்ரஹாரமும் அதன் நேர்த்தியும் என்னைக் கவர்ந்தது. பின் சின்னமனூர். என் அம்மாவின் தங்கை ஒருத்தர் இங்கே இருந்தார். சித்தப்பா பிரசித்தி பெற்ற டாக்டர். அங்கிருந்து திண்டுக்கல் போகும் வழியில் உள்ள தேவதானப்பட்டியில் இறங்கிக் கொஞ்ச தூரம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போனால் காமாட்சி அம்மன் கோவிலும் மஞ்சளாறும் அதன் கரையும் நேரில் சென்று பார்த்தால் தான் புரியும். அந்த மஞ்சளாற்றுத் தண்ணீர் குடித்தால் நாம் குடிக்கும் மினரல் வாட்டர் எல்லாம் ஒன்றுமே இல்லை. தண்ணீரின் அருமை அங்கு நன்றாகத் தெரியும்.
வெளிநாடு என்று பார்த்தால் நாங்கள் போனது U.S. மட்டும்தான். சாப்பாடுப் பிரச்னையால் முக்கியமாக வெளிநாட்டுப் பிரயாணங்கள் சரியாக வருவது இல்லை.
ஹூஸ்டன் மீனாக்ஷி கோவிலும் அதன் புத்தக சாலையும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.அதிலும் அந்தப்புத்தக சாலையில் இல்லாத புத்தகங்களே இல்லை.
டென்னிஸியில் Nashvelle பிள்ளையார் கோவிலும் Roobi Faalsம் பிடித்தது.
இந்தியாவில் பிடித்த இடங்கள் என்றால்
கோவாவில் பிரயாணம் செய்த ferry,
ஹரித்துவாரில் சண்டி மாதா கோவிலும், மானஸா மந்திரும்,
பத்ரிநாத் மற்றும்
கன்யாகுமரி விவேகானந்தா பாறை.
பிடித்த புத்தகங்கள்
தேவனின் எல்லாப் புத்தகங்கள்(அநேகமாக எல்லாம் படித்து இருப்பதாக நினைக்கிறேன்)
கல்கியின் அமரதாரா(கல்கி உயிருடன் இருந்து எழுதி முடித்திருந்தால் இன்னும் பேர் வாங்கி இருக்கும். ரொம்பப் பேருக்கு இது பற்றித் தெரியவில்லை.
நீல. பத்மநாபனின் தலைமுறைகள் (படித்து விட்டு ரொம்ப நாள் தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன்)
ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக. (இவர் கதையைப் படித்து விட்டுத் தான் எனக்கு ஊட்டி மேல் காணாமலே காதல் வந்து விட்டது).ஆனால் இவருடைய மலர்கள் தொடர் ராஜ் டி.வி.யில் வந்தபோது கதை அம்சமே கெட்டுப் போய்விட்டது. இவர் எப்படி சமரசம் செய்து கொண்டார் என்று இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான்.
ஆங்கிலத்தில்
sidney sheldon,
jeffrrey Archur,
Irwing Wallace,
Alistair Macleans என்று நிறைய எழுதுவேன் என்று பார்த்தீர்களா? அதுதான் இல்லை. நம் தமிழ்க் கதைகளும், மொழி பெயர்க்கப்பட்ட அதுவும் த.நா. குமாரசாமி. த.நா. சேனாபதி போன்றவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட வங்கக் கதைகளும் காண்டேகரின் கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் Archie comics & Agatha Christie இருவரும் விதிவிலக்கு. எத்தனை முறை வெண்டுமானாலும் படிப்பேன். Irwing Wallaceன் The Man என்ற நாவலும் பிடிக்கும்.
சினிமாவெல்லாம் ஜாஸ்தி பார்த்தது கிடையாது.வீட்டுக்கு எதிரே சித்ராலயா மூவீஸ் இருந்ததால் ஸ்ரீதரின் எல்லாப் படங்களுக்கும் பாஸ் கிடைக்கும். ஸ்ரீதர் படங்கள் மிகவும் பிடிக்கும் காரணமும் அதில் ஒன்று. மேலும் தங்கம் தியேட்டர் அதிபர் திரு. கண்ணாயிரம் அப்பாவிடம் தனிப்பட்ட முறையில் ஹிந்தி கற்றுக் கொண்டதால் தங்கம் தியேட்டரில் ரிலீசாகும் படங்களும் பட்டியலில் உண்டு.
பிடித்த நடிகர் என்றால்.
ஜெமினி கணேசன்
முத்துராமன்
சிவக்குமார்
சூர்யா
பிடித்த இயக்குனர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
ஸ்ரீதர்
பிடித்த தலைவர்கள்
லால்பஹதூர் சாஸ்திரி&வல்லபாய் படேல்
மொரார்ஜி தேசாய்
பி.வி.நரசிம்ம ராவ்
அடல் பிஹாரி வாஜ்பேயி
தமிழ்நாட்டில் காமராஜர் தவிர யாருமே இன்னும் மக்கள் தலைவர் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் இன்றைய கஷ்டங்களுக்குக் காரணமான ராஜாஜி என்றால் அலர்ஜி.(திரு.டோண்டு மன்னிக்கவும்).
திரு எம்.ஜி.ஆர் இந்த வரிசையில் வரவில்லை. ஏனென்றால் அவர் நினைத்தது பாதி முடியும் முன்னே இறந்து விட்டார்.
பிடித்த நிதி மந்திரி என்றால் திரு ஹெச்.எம்.படேல் மட்டும் தான். அது போல மது தண்டவதே.மொரார்ஜி தேசாயின் மந்திரி சபையில் இவர்கள் ஆற்றிய பணி மறக்கமுடியாதது.
பிடித்த பாட்டு
மஹாராஜபுரம் சந்தானம் பாடிய"போ சம்போ" "சிவ சம்போ" மற்றும்
"ஆடாது அசங்காது வா"
மதுரை மணி அய்யரின் இங்கிலீஷ் நோட் மற்றும் "தாயே யசோதா"
ஜான் ஹிக்கின்ஸின் "கந்தா வா வா"
எம்.எஸ்ஸின் பாரதியார் பாட்டுக்கள்
பிடித்த சினிமாப் பாட்டுத் தமிழில் பழைய பாடல்கள் எல்லாமே பிடிக்கும். மற்றபடி "என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்" பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை சிட்டி ஆயி ஹை" எப்போது கேட்டாலும் என்னால் கண்ணீரை அடக்க முடியாது.மற்றபடி நான் குறிப்பாக நாலு பேரை மட்டும் அழைக்க விரும்பவில்லை. எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு உதவுகிறார்கள். யாரை வேண்டாம் என்பது?எல்லாரும் வருக. ஆதரவு தருக. (ஒரு செலவில்லாத விளம்பரம் தான்) அப்படியாவது போணி ஆகாதா என்று தான்)எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.
hello geetha, enakku E-kalappai load seyya mudiyavillai.something wrong in my cpu programme endru ninaikkiren. arumaiyaana padhivu.enn madhurai naatkalum INIMAIYAANAVAI.townhall road, thangam theater,railway station,Meenakshi amman gopuram,aadi maatha saaral,chithra pournami koottam.thank you thank you.
ReplyDeleteமனு நீங்கள் இந்தக் குறிப்பிட்ட உர்ல் முயலவும்.
ReplyDeletetamilinblogs.blogspot.com/2003_07_01_tamilinblogs-archive.html
or
www.higopi.com/downloads/ucedit.zip
இது இரண்டும் முயற்சி செய்யவும்.வராவிட்டால் www.yosinga.blogspot.comக்குப் போய் அவர் profileக்குக் கீழே தமிழில் எழுத என்று கொடுத்திருப்பார். அதை click செய்யவும். அநேகமாக எல்லருடைய ப்லொக்கிலும் தமிழில் எழுத உதவி வைத்திருக்கிறார்கள்.
என் அம்மாவுக்கும் மதுரை தான் சொந்த ஊர். கோபாலமுதலி தெரு என்று நினைவு. நாயக்கர் ஸ்டோர்ஸில் குடி இருந்ததாக பெருமையாக சொல்வார்கள். எம்.ஸ் அம்மாவின் குறையொன்றும் இல்லை கேட்டதில்லையா?(இயற்றியது ராஜாஜி என்பதால் அலர்ஜியா?)டுபுக்கு எனக்கு அண்ணா (பெரியப்பா பையன்).
ReplyDeleteஇதை போன்ற பதிவு ஏற்கனவே நான் போஸ்ட் பண்ணியாச்சு. see here http://ammanchi.blogspot.com/2006/03/blog-post_15.html
"தமிழ்நாட்டின் இன்றைய கஷ்டங்களுக்குக் காரணமான ராஜாஜி என்றால் அலர்ஜி.(திரு.டோண்டு மன்னிக்கவும்)."
ReplyDeleteமன்னித்தேன் சகோதரி.
"ஹிந்தியில் பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை சிட்டி ஆயி ஹை" எப்போது கேட்டாலும் என்னால் கண்ணீரை அடக்க முடியாது."
இவ்விடத்திலும் அதே கதைதான். அதுவும் இந்தப் பாட்டை குமார் கவுரவ் (ராஜேந்திர குமாரின் மகன்) மற்றும் சஞ்சய் தத் (சுனில் தத்தின் மகன்) இருவரும் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் திரையில் பார்த்து கேட்ட போது மிக அற்புதமாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அம்பி, ராஜாஜியிடம் எனக்குப் பிடித்த ஒரே விஷயம் "குறை ஒன்றுமில்லை" தான். அது யார் பாடினாலும் பிடிக்கும்.
ReplyDeleteவேதா, நான் உங்கள் வலைப்பதிவில் மார்ச் மாதம் தேடியும் நீங்கள் குறிப்பிட்ட பதிவு வரவில்லை.மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உர்ல் not found என்று வருகிறது.
ReplyDeleteVeda, both are the same urls. anyhow I'll come and try after my tour.
ReplyDelete