எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 02, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33

வால்மீகி ராமாயணம், "இதி ஹாசஹ:" என்று சொல்லப் படுகின்றது. இது இப்படித் தான் நடந்தது என்று அதன் அர்த்தம். ஆகவே வால்மீகியின் படி சீதை ராவணனால் தூக்கித் தான் செல்லப் பட்டாள். அவளோ வரமாட்டேனெனப் பிடிவாதம் பிடிப்பதோடல்லாமல், அவனைத் தூற்றியும், பழித்தும் பேசுகின்றாள். இப்படிப் பட்ட முரட்டுப் பெண்(?)ணைக் கவர்ந்து தான் செல்லவேண்டுமென ராவணன் நினைத்ததில் தவறு இல்லை. தூக்கிச் சென்றான் என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை. ஆனால் கம்பர் அப்படிச் சொல்லவில்லை என்பதால் சிலருக்குச் சந்தேகம் வருகின்றது. ராவணன், சீதையுடன் வாக்குவாதம் நடத்திய பின்னர் , சீதை தனக்கு இணங்க மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட ராவணன், அவளைத் தொடாமலேயே ஒரு காத தூரத்திற்குப் பூமியைப் பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்ததாய்ச் சொல்லுகின்றார். துளசிதாசர் இன்னும் ஒரு படி மேலே போய் கவர்ந்து சென்றது, இந்த சீதையே அல்ல. ராமன் மாரீசன் வருமுன்னரே, நடக்கப் போவதை ஊகித்துக் கொண்டு சீதையை அக்னிக்குள் ஒளிந்திருக்கச் சொல்கின்றார், அவளின் மாய உரு மட்டும் பர்ணசாலையில் தங்குகின்றது, என்றும், லட்சுமணன் கூட இதை அறிய மாட்டான் எனவும், ராவணன் அபகரித்தது அந்த மாய சீதைதான் எனவும் சொல்கின்றார். வால்மீகிக்குப் பல வருஷங்கள் பின்னர் இவை வந்தவை என்பதால் அதற்குள் ராமரை ஒரு அவதாரம் என மக்கள் மனதில் அழுத்தமான கருத்து விழுந்து விட்டபடியால் அதை ஒட்டியவை இவை இரண்டுமே! லட்சுமண் ரேகா என்னும் லட்சுமணன் கோடு, லட்சுமணனால் பர்ணசாலையைச் சுற்றிப் போடப்பட்டு, பின்னர் சீதை அதைத் தாண்டியது போன்ற விபரங்கள் வால்மீகியிலோ, கம்பனிலோ, துளசிதாசரிலோ இல்லை. வழக்கில் இருக்கும் பல ராமாயணங்களில் ஒன்றான "ஆனந்த ராமாயண"த்தில் இது பற்றிக் குறிப்பிடுவதாய்க் "காமகோடி" என்னும் புத்தகத்தில் படித்தேன். இனி நம் கதைக்குத் திரும்பச் செல்லலாமா?
*************************************************************************************
ராவணனால் கவர்ந்து செல்லப் பட்ட சீதை கதறினாள், பதறினாள், துடித்தாள், அழுதாள், விம்மினாள். "லட்சுமணா, பெரும்புத்தி கொண்டவனே! உன்னை நான் தவறாய்ப் பேசியதால் அன்றோ எனக்கு இந்நிலைமை? நீ ராமரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவன் என்பதை நான் உணராமல் போனேனே? உன் உயிரையே அவருக்காகப் பணயம் வைத்துள்ளாய்! நான் அறியாமல் போனேனே? இதெல்லாம் அரக்கர் வேலை என்று நீ எச்சரித்தும் உணராமல் போனேனே? உடனே வா, வந்து இந்த ராவணன் என்னும் அரக்கனைத் தண்டிப்பாய்!" என்று லட்சுமணனைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கதறுகின்றாள். லட்சுமணா, எங்கே காட்டில் அலைகின்றாயோ அண்ணனைத் தேடி! :( பின்னர் ராவணனைப் பார்த்துச் சொல்லுவாள்: "தீய காரியங்களின் பலன் உடனே கண்ணுக்குத் தெரியவில்லை எனத் தைரியமாய் இருக்காதே! உரிய காலத்தில் இதன் பலனை நீ அனுபவிப்பாய்! என் பதியான ராமன் கையில் தான் உன் உயிர் முடியப் போகின்றது!" என்று சொல்கின்றாள். தன் நிலையை நினைத்து, நினைத்து மனம் வருந்தினாள் சீதை! "என் இந்த நிலை ஒருவேளை என் மாமியாரில் ஒருவள் ஆன கைகேயிக்கு மன ஆறுதலாய் இருக்குமோ? ஏ, மரங்களே, ராமனிடம் சென்று சொல்லுங்கள், ராவணன் என்னைத் தூக்கிச் செல்வதை! தாயே, கோதாவரி அம்மா, நீ போய் உன் பிரவாகத்துடன் ஓடிச் சென்று ராமனிடம் சொல்லமாட்டாயா? வன தேவதைகளே! என்ன செய்கின்றீர்கள்? எங்கே என் ராமன்? ஏன் இன்னும் வரவில்லை? மிருகங்களே, என்னைக் காவல் காக்க மாட்டீர்களா? பறவைகளே, துணைக்கு வாருங்கள், எமன் கொண்டு போனால் கூட ராமன் என்னைப் பாதுகாப்பதில் இருந்து வல்லமை கொண்டவன் ஆயிற்றே! அவனிடம் போய்ச் சொல்லுங்கள்!" என்று கதறிக் கொண்டு போன சீதை ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஜடாயுவைப் பார்க்கின்றாள்.

ஜடாயு தூங்கிக்கொண்டிருந்தது. சீதையின் கதறல் கேட்டுக் கண்விழித்துப் பார்த்தது. சீதையை ராவணன் கவர்ந்து செல்வதைக் கண்டது. உடனே, "ராவணா, நான் கழுகரசன், என் பெயர் ஜடாயு. இந்தக் காடே ராமனின் பாதுகாப்பில் உள்ளது. அவன் மனைவியை நீ அபகரித்துச் செல்கின்றாய்! மாற்றான் மனைவியை அபகரித்துச் செல்பவனுக்குக் கேடுகள் விளையும் எனத் தெரியாதா? மற்ற மனிதர்களால் இகழத் தக்க ஒரு காரியத்தை எந்த ஒரு மனிதனும் செய்யக் கூடாது. ராவணா! நீ ஒரு அரசன்!அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள். நீ இத்தகைய ஒரு துர் நோக்கத்துடனான காரியத்தைச் செய்தாயானால் உன் மக்களும், அவ்வகை நெறுமுறைகளையே பின்பற்றுவார்கள். நீ எப்படியும் ராமனால் அழியப் போகின்றாய்! அதில் அச்சம் ஏதும் எனக்கில்லை. எனினும் இது நடக்க என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ இளைஞன், நான் வயோதிகன்! என்றாலும் நீ சுத்த வீரனாக இருப்பதால் என்னுடன் போரிட்டு என்னை வென்றுவிடு, பார்க்கலாம், இப்போதே ராம, லட்சுமணர்கள் இருக்குமிடம் பறந்து சென்று தெரிவிக்கலாம் என்றால் அதற்குள் நீ சீதையை அபகரித்துக்கொண்டு வெகு தூரம் சென்று விடுவாய். உன்னுடன் சண்டை போட்டு உன்னை வீழ்த்துவதே என் முதல் கடமை!" என்று சொல்லிவிட்டு ஜடாயு போருக்குத் தயார் ஆனது.

ராவணன் கோபம் கொண்டு ஜடாயுவுடன் போருக்குத் தயார் ஆனான். இருவரும் மோதிக் கொண்டது,ஊழிக்காலத்து நீருடன் கூடிய இரு பெரும் கருமேகங்கள் மோதிக்கொள்வது போல் இருந்தது. ராவணன் அம்புமாரி பொழிந்தான். ஆனால் ஜடாயுவோ வீரத்துடன் மோதி ராவணனின் வில்லை ஒடித்தது. ராவணனின் தேரோட்டியை வீழ்த்திக் கொன்றது. என்றால்லும் வயதின் காரணமாய்க் களைப்பும் அடைந்தது. ராவணனுக்கு அதைக் கண்டதும் மகிழ்ச்சி தோன்றியது. என்றாலும் ஜடாயு விடவில்லை, ராவணனைத் துரத்தியது. தாக்கியது வீரத்துடன். சீதையைத் தன் இடது தொடையில் வைத்துக் கொண்டு ஒரு கையால் அவளை அழுத்திப் பிடித்துக் கொண்டே ராவணன் தன் இன்னொரு கையால் ஜடாயுவுடன் போரிட்டான். ஜடாயு, ராவணனின் பத்து இடக்கைகளை வெட்ட, அவை மீண்டும், மீண்டும் அவன் பெற்ற வரத்தினால் முளைத்து வந்தன. கடைசியில் ராவணன், பெருங்கோபத்துடன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான். கழுகரசன் தரையில் வீழ்ந்தான்.
சீதை பதறித் துடித்துக் கொண்டு ஜடாயுவின் அருகே ஓடினாள். "என்னைக் காக்க வந்த உனக்கு இந்தக் கதியா? ஏ, ராமா, லட்சுமணா, ஓடிவந்து என்னைக் காக்க மாட்டீர்களா?" எனக் கதறினாள். அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து ராவணன் அவளைப் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு விண்ணிலே பறந்தான். பார்த்துக் கொண்டிருந்த ரிஷிகள் அனைவரும் மனம் துன்புற்றனர். எனினும் இதனால் ராவணன் அழியப் போவது உறுதி எனத் தெரிந்து கொண்டனர். பிரம்மாவோ எனில் தேவ காரியம் இனிமேல் நிறைவேற ஆரம்பிக்கும் என உவகை கொண்டார்.

ராவணன் மடியில் கிடத்தப் பட்டிருந்த சீதையோ துயரத்தால் கலங்கி அழ, அவள் காலில் இருந்த நகை ஒன்றும், அவள் கழுத்தில் பூண்டிருந்த முத்துக்கள் பதித்த நகை ஒன்றும் விண்ணில் இருந்து கங்கையோ, நர்மதையோ வீழ்வது போல் வீழ்ந்தன. காட்டு மிருகங்கள் ஆன புலி, சிங்கங்கள் கூட இந்தக்கொடிய காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தின, கோபமுற்று ராவணன் சென்ற புஷ்பக விமானத்தின் நிழலைப் பின் தொடர்ந்து சென்றன. சூரியன் ஒளி இழந்தான்.

மிகுந்த துக்கத்துடன் சீதை அவனைப் பார்த்து,"உனக்கு வெட்கமாய் இல்லையா? இப்படி என்னை அபகரித்துக் கொண்டு ஒரு கோழை போல் செல்கின்றாயே? நீயும் ஒரு வீரனா? உன் படைகளைஅடியோடு அழிக்கும் வல்லமை பெற்றவர்கள் என் கணவனும், கொழுந்தன் ஆன லட்சுமணனும். அவர்களை எதிர்க்கும் வல்லமை இல்லாமல், நீ இப்படி அவர்கள் அறியாமல் என்னைக் கவர்ந்து செல்லலாமா? உன் அழிவு நிச்சயம்!" என்று சொல்ல மனம் துணுக்குற்ற இலங்கேஸ்வரன் பதில் ஏதும் பேசவில்லை. விமானம் காடுகள், நதிகள், மலைகள், ஏரிகள், நாடுகள் கடந்து பறந்து சென்று இலங்கையை அடைந்தது. அங்கே சென்றதும், ராவணன் சீதையை அந்தப் புரத்தில் உள்ள சில அரக்கிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைக் கேளாமல் யாரும் இவளைப் பார்க்கவோ, பேசவோ கூடாது எனவும், அவள் என்ன விரும்புகின்றாளோ அதை உடனே நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் உத்தரவிடுகின்றான். பின்னர் வலிமை வாய்ந்த எட்டு அரக்கர்களை அழைத்து, உடனே ஜனஸ்தானம் சென்று ராமனின் நடவடிக்கைகளைக் கண்காணித்துச் சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிடுகின்றான். பின்னர் மீண்டும் சீதையை அந்தப் புரம் சென்று கண்டு, அவளை ராமனை மறந்துவிடுமாறும், இந்த இடத்தை விட்டுச் செல்ல முடியாது எனவும், உடனேயே தன்னை ஏற்குமாறும் கேட்கின்றான். சீதை மறுக்கின்றாள். உன் மதி அழிந்ததால் ராவணா, உன் உயிர், உன் மனைவி, மக்கள், உன் அந்தப் புர ராணிகள், உன் குடிமக்கள், உன் படை வீரர்கள், உன் ஊர், உன் ராஜ்யம் என அனைத்தும் அழியப் போகின்றது. உன் அரக்கர் குலமே அழியப் போகின்றது." என்கின்றாள். சீதைக்குப் பனிரண்டு மாதம் அவகாசம் கொடுக்கின்றான் ராவணன். அதற்குள் அவள் மனம் மாறி ராவணனை ஏற்றுக் கொள்ளவில்லை எனில், சீதையைக் கண்டதுண்டமாய் வெட்டித் தான் உணவாய் உண்ணப் போவதாயும் சொல்கின்றான். பின்னர் அவளை அசோகவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கே பாதுகாப்பில் வைக்குமாறும் சொல்கின்றான். அரக்கிகளை அழித்து, இவளை மிரட்டியோ, கெஞ்சியோ, வழிக்குக் கொண்டு வருமாறு சொல்கின்றான். அசோகவனம் சென்ற சீதை அங்கேயும் நிம்மதி அடையாமல் துன்பம் தாங்க முடியாமல் மயக்க நிலையும், விழிப்பு நிலையுமாக மாறி, மாறி அடைகின்றாள். :(((((

4 comments:

  1. //என் இந்த நிலை ஒருவேளை என் மாமியாரில் ஒருவள் ஆன கைகேயிக்கு மன ஆறுதலாய் இருக்குமோ?//

    ஹிஹி, அப்பவே இந்த மாமியார் மருமகள் சண்டை எல்லாம் இருந்து இருக்கு போல. :p


    இந்த பதிவு ரொம்பவே விரீயம் மிக்க வரிகளாய் இருக்கு. உங்கள் எழுத்தின் தாக்கம் படிப்பவர்களையும் தொத்தி கொண்டு, மனம் பதைக்க செய்கிறது.


    ம்ம், ராமர் எப்படி மனம் பதைத்து இருப்பார்? :(

    ReplyDelete
  2. கண்டதை கண்டபடி வால்மீகி எளிதாக சொல்லிபோய் விட்டார். பூசி முழுகுவதானால் பல விஷயங்களை நம் முன்னோர்கள் விட்டு போயிருக்கலாம். (அப்ப பட்டி மன்றங்களுக்கு தலைப்பு பஞ்சம் வந்திருக்கும்.) அவர்கள் சத்தியத்தை கடை பிடித்ததற்கு வேறு ஆதாரமே வேண்டாம். ராமன் மனிதனாகவே நடந்து கொண்டான். வால்மீகியும் அப்படியே எழுதினார்.
    பின்னால் வந்தவர்களுக்கு அப்படி மனசு வரவில்லை. அவர்கள் ராமனை கடவுளாக பார்த்தனர். அதனால் சில விஷயங்களை மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. யார் வரைஞ்ச ஓவியங்கள் இது? சீதையின் பயமும்,இராவணனின் உக்கிரமும் தெளிவாய் வரைந்துள்ளார்:)

    ReplyDelete
  4. @ambi,
    @thivaa,
    @rasikan, Nanni,
    Rasikan these pictures are from Raja Raviverma's Picture Gallery. google/images.

    ReplyDelete