எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 25, 2018

கல்யாண சாப்பாடு சாப்பிடவா?

இப்போத் தான் சாப்பாடு பத்தி எழுதினேன்னா இன்னிக்கும் அதே தான்! போன வாரம் ஒரு கல்யாண வரவேற்புக்குப் போயிருந்தோம். திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி கரூர் பைபாஸ் சாலையில் இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மண்டபம். உள்ளே நுழையும்போதே வெளியே கூடாரம் போல் துணிகளால் அலங்கரிக்கப்பட்டித் தரை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கீழே இறங்கினதும் எனக்கே நான் ஏதோ ராணியோனு நினைப்பு வந்துவிட்டது! ஆனால் ராணி இல்லை என்பதைக் கீழே கம்பளம் தடுக்கியதும் மண்டையில் ஏறியது. உள்ளே நுழையும்போதே ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வரவேற்க இரு பெண்மணிகள். அதிலே ஒருத்தரோட பிள்ளைக்குத் தான் திருமண வரவேற்பு. ஜுஸ் குடிங்கனு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லிட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் ஹாலுக்குப் போனோம். ஹாலா அது! பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டம்! சென்னையில் கூட இத்தனை பெரிய ஹால் பார்த்ததில்லை. அப்போ என்ன நினைப்பு வந்ததுன்னா, அட நாம சென்னையை விட்டு வந்தப்போ திருச்சியிலே என்ன இருக்குனு அங்கே போறாங்கனு எல்லோரும் நம்மளைக் கேட்டாங்களே, இந்த ஹாலைப் பார்த்தா என்ன சொல்லுவாங்க என நினைத்துக் கொண்டேன். நுழையும் இடத்திலேயே பஞ்சு மிட்டாய் கொடுத்துட்டு இருந்தாங்க. சாப்பிட ஆசையா இருந்தாலும் நம்மவர் என்ன சொல்வாரோ என்னும் எண்ணத்தில் கண்ணையும், மனசையும் அங்கே விட்டுட்டு உள்ளே போனோம். ஏழு மணிக்கு வரவேற்பு ஆரம்பம்னு போட்டிருந்தது. ஏழு மணிக்கு மேல் ஆகியும் இன்னும் பெண்ணும், மாப்பிள்ளையும் வரவில்லை. சற்று நேரம் உட்கார்ந்திருந்தோம். தெரிந்தவர்கள் யாரும் இல்லை. போரடிச்சது. திடீர்னு நம்ம ரங்க்ஸ் பஞ்சு மிட்டாய் வேணுமானு கேட்டார். வேணும்னு சொன்னதும் போய் இரண்டு வாங்கி வந்தார். அதைக் கொஞ்ச நேரம் மெதுவாச் சாப்பிட ஆரம்பித்தேன்.

திடீர்னு தூக்கிவாரிப்போட என்ன சப்தம்னு பார்த்தால் லைட் ம்யூசிக் குழுவினர் தங்கள் கச்சேரியை ஆரம்பிச்சுட்டாங்க! ரங்க்ஸ் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல ஏதோ ஊமைப்படம் மாதிரி நடந்தது. அதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் வர அங்கே மேடையில் ஒரு ஃபோட்டோ செஷன் நடந்தது. அதைப் பார்க்கையிலேயே திடீர்னு எனக்கு ஏதோ தோன்ற நம்மவரைக் கிளப்பிக் கொண்டு மேடைக்கு அருகில் வந்து நின்றேன். ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும் முதல் ஆளாப் போய்ப் பரிசைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினோம். அதுக்குள்ளாக மேடைக்கு அருகே வரிசை கட்டி நிற்க ஆரம்பித்த விருந்தினர் கூட்டம் வால் போல் நீண்டு கொண்டிருந்தது. இதை நினைவில் வைத்துத் தான் அவசரம் அவசரமாப் போய் யாரும் வரும் முன்னே கொடுத்துட்டு வந்தோம்.

அப்புறமாச் சாப்பிடணுமே! அது எங்கேனு கேட்டதுக்குக் கீழேனு சொன்னாங்க. கீழே இறங்கி வந்தோம். சாப்பிடும் கூடமும் ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம். அப்போத் தான் ஒரு வரிசை உட்கார்ந்திருக்கிறது! கழிவறைக்குப் போய்விட்டுக் கைகளைக் கழுவிக்கலாம்னு போனோம். இருந்தது ஒன்றே ஒன்று! கண்ணே கண்ணு! ஏற்கெனவே ஒருத்தர் குடியிருக்க 2 பேர் சீனியாரிடியில் இருந்தனர். வேறே இல்லையானு கேட்டதுக்கு ஒரு வேளை மாடியில் இருக்கலாம். ஆனால் அங்கேயும் ஒன்று தான் இருந்தாப்போல் நினைவுனு சொல்லவும் ஙே என விழித்தோம். வேறு வழியில்லாமல் காத்திருக்க எங்களுக்குப் பின்னால் வரிசை நீண்டது. ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு சாப்பிட வந்தால் அதுக்குள்ளாக ஒரு வரிசையில் இரண்டு பந்தி முடிஞ்சு இரண்டாம் பந்திக்கு இலை போடறாங்க. எங்களை ஏற்கெனவே பரிமாறி வைச்சிருந்த ஒரு வரிசையிலே போய் உட்காரச் சொன்னாங்க.

சரினு போய் உட்கார்ந்தோம். ஓர் வட இந்திய பால் சேர்த்த ஸ்வீட். பார்க்க ஸ்டஃப்ட் ஜாமூன் மாதிரி இருந்தாலும் அது இல்லை. வெங்காயப் பச்சடி, சில துண்டுகள் உ.கி. வறுவல், ஊறுகாய்.  போய் உட்கார்ந்ததும் முதலில் இடியாப்பம்னு கொண்டு வந்தாங்க. அதுக்குத் தொட்டுக்கத் தண்ணியா ஒரு பூண்டுக் குழம்பு. அதான் பாயானு சொல்வாங்களோ! தெரியலை! அதைச் சாப்பிட ஆரம்பிப்பதற்குள்ளாக ஒருத்தர் வெஜிடபுள் புலவ், அதைத் தொடர்ந்து ஏதோ கூட்டு வர, இன்னொருவர் கேட்காமலேயே சாம்பார் சாதத்தைப் போட்டுக் கொண்டு போனார். அதற்கு ஏதோ ஒரு கறி.  பின்னாலேயே ஒருத்தர் அடை, அவியல் எனக் கொண்டு வர, ஒருத்தர் உ.கி. போண்டா என்ற ஒன்றைக் கொண்டு போட்டார்.  எதைச் சாப்பிடுவது என யோசிப்பதற்குள்ளாகச் சப்பாத்தியும், சனாவும் வர ஒண்ணுமே புரியலை!

மெதுவாக உ.கி. போண்டாவைப் பிய்த்தால் அதிலே உ.கி.யே வைக்க மறந்திருக்காங்க போல! நம்ம ரங்க்ஸைக் கேட்டால் அவருக்கும் அப்படியே. அதை அப்படியே வைச்சுட்டு இடியாப்பத்தைப் பிய்க்கலாம்னு பார்த்தால் ரப்பர் மாதிரி இழுக்குது! அதை ஒருவழியாப் பிய்ச்சு ஒருவாய் போட்டுக்கலாம்னு நினைப்பதற்குள்ளாக ஒருத்தர் வந்து ரொம்பவே வினயமாகத் தயிர்சாதம்போடவானு கேட்டார். நம்ம ரங்க்ஸிடம் கேட்டார் முதல்லே. அவர் தான் காந்தியோட மறு அவதாரம் ஆச்சே! ஆகவே பொறுமை காத்தார். நமக்கெல்லாம் பொறுமை என்பதே இல்லை என்பதால் நான் அவரிடம் இதை எல்லாம் நாங்க சாப்பிட வேண்டாமா? இப்போ இலையிலே எங்கே தயிர்சாதத்தைப் போடுவீங்க? னு கோபமாக் கேட்டேன். மறைமுகமா எங்க தலையிலானு நினைச்சுண்டேன்.

அவர் என்ன நினைச்சுண்டாரோ போயிட்டார். அப்புறமா எங்க பக்கம் யாருமே வரலை. அப்பாடி கொஞ்சம் நிம்மதினு சாப்பிட முடிந்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தோம். சப்பாத்தி தென்னிந்திய முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததால் விரட்டி மாதிரி இருந்தது. ஆகவே அதையும் இடியாப்பத்தையும் ஒதுக்கிட்டு அடையைச் சாப்பிட்டால் முழுதும் கடலை மாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போண்டாமாவிலேயே அடைனு வார்த்திருப்பாங்க போல! சரினு வெஜிடபுள் புலவை வெங்காயப் பச்சடியோட சாப்பிட்டுட்டு, சாம்பார் சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு மற்றவற்றை ஒதுக்கிட்டுத் தயிர்சாதம் கேட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட்டோம். பின்னர் கைகழுவிக் கொண்டு வெளியே வந்தால் பாதாம் பால்! அதில் பாதாமைத் தேட வேண்டி இருந்தது. கடைசியில் எல்லாம் முடிந்து வெளியே வந்தால் ஐஸ்க்ரீம், குலாப்ஜாமூனுடன். நாம தான் இதுக்கெல்லாம் பக்கியாட்டமாப் பறப்போமே! உடனே போய் ஐஸ்க்ரீமையும் ஜாமூனையும் வாங்கிக் கொண்டேன். ஜாமூன் கடலை எண்ணெய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஐஸ்க்ரீம் நல்லா இருந்தது. அதைச் சாப்பிட்டுட்டு இன்னொரு கோர்ஸ் போகலாமானு யோசிச்சால் பக்கத்தில் ரங்க்ஸைக்காணோம். திடுக்கிட்டுப் பார்த்தால் வெளியே ஆட்டோவைத் தேடிக் கொண்டு நிக்கறார். அது சரியாப் போச்சு போ! என நினைத்துக் கொண்டு அரை மனசாகக் கிளம்பி வந்தேன். ஆட்டோ பிடித்து வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தோம்.வந்ததும் பசித்தது! :))))))))))

91 comments:

  1. //ராணி இல்லை என்பதைக் கீழே கம்பளம் தடுக்கியதும் மண்டையில் ஏறியது.// - இப்போதான் வாசிக்க ஆரம்பிக்கிறேன். நல்ல நகைச்சுவையா எழுதறீங்க.

    ReplyDelete
    Replies
    1. //கீழே இறங்கினதும் எனக்கே நான் ஏதோ ராணியோனு நினைப்பு வந்துவிட்டது! ஆனால் ராணி இல்லை என்பதைக் கீழே கம்பளம் தடுக்கியதும் மண்டையில் ஏறியது.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாமே:))

      Delete
    2. ஏதோ ராணியோனு நினைப்பு வந்துவிட்டது! ஆனால் ராணி இல்லை என்பதைக் கீழே கம்பளம் தடுக்கியதும் மண்டையில் ஏறியது//

      பாருங்க நானும் இதைக் கோட் செய்தேன் பார்த்தால் நெல்லை அதிரா கொடுத்தது பார்த்ததும் இங்க போட்டுட்டேன்...
      நானும் சிரிச்சுட்டேன்...

      நேத்து ராத்திரி வந்துச்சோ பதிவு...பார்ககாம விட்டுட்டேன்...இதோ முழுசும் பார்த்துட்டு வரேன்...இப்பல்லாம் கல்யாணம் ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு அக்கா

      கீதா

      Delete
    3. நெல்லைத்தமிழரே, மொக்கைப் பதிவு போட்டுட்டு இருந்த காலங்களிலே எல்லாம் கொஞ்சமானும் சிரிக்கட்டுமேனு நகைச்சுவையைத் தூவுவேன். இப்போ என்னமோ முன்னை மாதிரி வரதில்லைதான்! அதான் உங்களுக்குப் புதுசாத் தெரிஞ்சிருக்கு! ))))

      Delete
    4. அதிரடி, ஞானி, அதானே, நினைப்புத் தானே பொழைப்பைக் கெடுக்கும்! ))))

      Delete
    5. தி/கீதா, பதிவை எழுதி ஒரு வாரம் ஆச்சு. கொஞ்சம் எடிட் செய்து நேற்று மாலை வெளியிட்டேன். இதிலே பொடி இட்லினு ஒரு ஐடம் விட்டுட்டேன். தூள் தூளாக இட்லி! பரவாயில்லைனு அதைக் கொஞ்சம் சாப்பிட்டேன். அதிலே தான் பூண்டு இல்லைனு நினைக்கிறேன். :)

      Delete
    6. என்னாது போனவாரம் நடந்ததா? நான் நேற்றைக்கு முந்தைய தினம் என்று நினைத்துக்கொண்டு, அதனால்தான் நீங்க இன்னும் பின்னூட்டங்கள் ரிலீஸ் பண்ணலை, மறுமொழி கொடுக்கலைன்னு நினைத்தேன்.

      Delete
    7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட்டிருக்கேன். உங்க மெயில் பாக்ஸுக்கு ஏதும் வந்திருக்காது! பதில் சொல்லத் தான் தாமதம். முந்தாநாள் விருந்தினர், அப்புறமா ராத்திரிக் குஞ்சுலு வந்தது. நேத்திக்கும் கொஞ்சம் வேலைனு! இந்த ரிசப்ஷன் போனது டிசம்பர் பத்துப் பதினைந்து தேதிகளில்! :))))

      Delete
  2. ஹாஹா.... நல்ல அனுபவம்! இந்த மாதிரி வரவேற்பு, திருமணங்களில் கிடைக்கும் உணவு நன்றாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. சமீபத்தில் நானும் ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். தமிழரின் திருமணம் தான் - சமையல், வடக்கு தெற்கு என இரண்டும் இணைந்து! நமக்கு வடக்கு தான் ஒத்துக்கொள்ளும்! தெற்கு பக்கமே போகல!

    சாப்பாடு ஓகே ரகம். அதிக மசாலா இல்லாமல் நன்றாக இருந்தது. தென்னிந்திய உணவுகளை மட்டும் சாப்பிட்ட நண்பருக்கு அஜீரணம், வாந்தி என இரண்டு நாட்கள் அவஸ்தைப் பட்டார்.... பாவம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இந்த விஷயத்தில் ராஜஸ்தான், குஜராத் காரங்க பரவாயில்லைனு சொல்லலாம். நாங்க எங்க ராஜஸ்தான் நண்பர்கள் வீட்டுத் திருமணங்கள் பலவும் ராணி மெய்யம்மை ஹாலில் (சென்னை) கலந்து கொண்டிருக்கேன். பஃபே முறை தான். ஆனால் ஆங்காங்கு அமர நாற்காலிகளும் இருக்கும். எத்தனை தட்டுக்கள் வேணாலும் எடுத்துக்கலாம். ரொட்டி வகைகளே ஐந்தாறு இருக்கும். ருமாலி ரொட்டி, சப்பாத்தி, ஃபுல்கா, தவா ரொட்டி என! அதைத் தவிரவும் நான், பராந்தா வகைகள்! ஒரு பக்கம் தென்னிந்திய இட்லி, தோசை சூடாக நமக்கெதிரே போட்டுக் கொடுப்பார்கள். நாம் வேணும்னா அவங்க கிட்டேச் சொல்லிட்டு வந்தால் போதும் போட்டு நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டு வந்து தருவாங்க. அதே போல் பாதாம் பாலும்! ம்ஹூம்! இங்கே!

      Delete
    2. இதுக்காகவே யாரானும் ராஜஸ்தான் காரங்களை ஃப்ரண்டு பிடிச்சிருக்கணுமோ? :))))

      Delete
    3. ராஜஸ்தான் காரங்களை ஃப்ரெண்டு பிடிப்பதற்கு முன்னால், நமக்கு எப்போதும் சுகரோ இல்லை கொலஸ்டிராலோ வரவே கூடாது என்று முதலில் வேண்டி முடிஞ்சுக்கணும்.

      நான் ராஜதானி தாலி என்று உணவு சென்னையில் ஒரு மாலில் சாப்பிட்டேன். எவ்வளவு நெய்... எவ்வளவு இனிப்பு.... உடம்புக்கு மிகக் கெடுதல் என்று தோன்றியது. நீங்க சொன்ன மாதிரி ஃபுல்காலாம் பரவாயில்லை.

      Delete
    4. நெல்லை, எனக்குக் கொலஸ்ட்ரால் இல்லை! :))) 200க்கும் கீழே தான்! இஃகி, இஃகி! நான் மாலுக்கு எல்லாம் போனதில்லை. அம்பேரிக்காவில் ஒரு முறை போனதைத் தவிர்த்து. பின்னால் பையரோ, பெண்ணோ கூப்பிட்டால் வரலைனு சொல்லிடுவேன். ஆனால் நீங்க தி.நகரில் போக் ரோடுனு நினைக்கிறேன், அங்கே ஆம்டாவாடி ஓட்டலில் குஜராத்தி உணவு (குஜராத்தி தாலி) சாப்பிட்டுப் பாருங்க! எண்ணெய் மிதக்கும். அதுக்கு ராஜஸ்தான் நெய் பரவாயில்லையோ? இஃகி, இஃகி, ஆனால் எனக்கு இரண்டு வகை உணவும் பிடிக்கும். இதே போல் சென்னையில் எங்கேயோ காட்யாவாட்(நாம் கத்தியவார்னு சொல்லுவோம்) சாப்பாடும் கிடைக்கும். புஜ் எல்லாம் காட்யாவாடில் வருது. ராஜஸ்தான் கலாசாரத்தோடக் கலந்து இருக்கும். முழுக்க முழுக்க குஜராத்தி கலாசாரமா இருக்காது. ஆகவே அங்கே உணவுகளில் கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கும். அண்ணா நகர் சுக் சாகரில் ஒரு முறை சாப்பிடுங்க! சாஓஆடே நல்லா இருக்கும் என்றாலும் குல்ஃபி ரொம்பவே நல்லா இருக்கும். புஜ் நகரில் டபேலி ரொம்பப் பிரசித்தம் ஆனது. மகாராஷ்ட்ரா பாவ் பாஜி மாதிரி! ஆனால் தயாரிப்பு முறை மாறுபடும். அது சென்னையில் கிடைக்குமானு தெரியலை!

      Delete
    5. நான் ஏற்கெனவே பலமுறை எழுதி உள்ளேன். சென்னையில் என்.எஸ்.சி. சாலையில் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அம்பீஸ் கஃபே, பாலிமர் ஓட்டல் (அர்மெனியன் வீதியில் இருந்தது) ஆகிய இடங்களில் டிஃபன் சாப்பாடு நல்லா இருந்தது ஒரு காலத்தில். ஹைகோர்ட்டுக்கு எதிர் வரிசையில் காதி பவனில் முன்னெல்லாம் கொண்டைக்கடலைச் சுண்டல் (காரமாக) விற்பார்கள். கூடவே சுக்குமல்லிக் காஃபி. அந்த ருசியில் எல்லாம் இப்போவும் கிடைப்பதாகத் தெரியலை.

      Delete
    6. நான் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமை பலமுறை பார்த்திருக்கேன். சாப்பிட சந்தர்ப்பம் இல்லை. வரும் 5 அல்லது 6ம்தேதி ப்ரேக்பாஸ்ட் அங்க சாப்பிட்டுப் பார்க்கறேன்

      Delete
    7. நல்லா இல்லைனா என் மண்டையை உருட்டாதீங்க! :)))) நான் சமீபத்தில் (சுமார் பத்து வருடங்கள்) அங்கே சாப்பிடவில்லை. பாலிமர் ஓட்டலில் இப்போவும் நன்றாகவே இருப்பதாகச் சொன்னார்கள். அம்பீஸ் கஃபே மானேஜ்மென்ட் மாறிவிட்டது. கீதா கஃபே ஓட்டல்களைப் போல! மவுன்ட்ரோடு தபால் அலுவலகம் அருகே இருந்த கீதா கஃபே ஓட்டலிலும் சரி, தி.நகர் கீதா கஃபே ஓட்டலிலும் சரி, எல்லாமே நன்றாக இருக்கும். அதே போல தி.நகர் பட்ஸ் ஓட்டல், (ஸ்டேஷனில் இருந்து கீழே இறங்கியதும் இடப்புறமாக இருந்தது) உஸ்மான் ரோடு பட்ஸ் ஓட்டல், தாம்பரம் பட்ஸ் ஓட்டல், பெரம்பூர் பட்ஸ் ஓட்டல் இங்கெல்லாம் நல்ல சுவையான டிஃபன்கள் கிடைத்தன! இப்போ பட்ஸ் ஓட்டல்களே இல்லை. பழைய பெயரைச் சொல்லிக் கொண்டு கீதா கஃபே மட்டும் ஏதோ ஓட்டுக்கிறார்கள் என நினைக்கிறேன். கீதாஞ்சலி இப்போவும் இருக்கு. ஆனால் சொல்லிக்கிறாப்போல் இல்லை.

      Delete
  3. சாப்பிட வருவதற்கு முந்தியே பரிமாறும் முறை எனக்கு பிடிப்பதே இல்லம்மா. ஆறி அவலா போய் இருக்கும். ஈக்கள் மொய்க்க வாய்ப்புண்டு. எல்லாத்துக்கும் மேல பிடிக்காத பதார்த்தம் இருக்கும். ஒன்னு அது வேஸ்டாக்கனும் இல்லன்னா விதியேன்னு உடம்புக்கும், மனசுக்கும் பிடிக்காததை சாப்பிடனும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜி. எங்களுக்கும் பிடிக்காது. ஆனால் சுமார் ஐம்பது இலைகளிலாவது பரிமாறி விடுகிறார்கள். அதிலே காலியாக இருப்பதில் தான் உட்காரச் சொல்றாங்க! :(

      Delete
  4. ஹாஹாஹா! எங்களுக்கும் சமீபத்தில் இதே அனுபவம். தமிழ் பையன், கன்னட பெண்ணை மணந்து கொண்ட திருமணம். மாப்பிள்ளை வீட்டார் மதராஸ் சமையல் வேண்டும் எனறு கேட்டு, ஆந்திர சமையல்காரர் சமைத்திருந்தார். பூரி, உ.கி.காஆஆஆரக்கறி, பகாரா பைங்கன், காஆஆஆரமான வெஜிடபிள் புலாவ்.. ஐஸ் க்ரீம்தான் ஒரே ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இம்முறை சீக்கிரமே வந்துட்டீங்க! அக்கா பெண் நலமா? கன்னட சமையலே போட்டிருக்கலாம். நல்லா இருந்திருக்கும். நாங்க ஒருமுறை "பெண்"களூரில் எங்க பையரின் நண்பர் கல்யாண ரிசப்ஷன் ஹரே ராமா கோயிலின் ஹாலில் நடந்தப்போ கலந்து கொண்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது. இலை போட்டுப் பரிமாறினார்கள். கேட்டுக் கேட்டு! ஆனால் அதெல்லாம் பதினைந்து வருஷங்கள் முன்னால்!

      Delete
  5. ஹாஹாஹா! எங்களுக்கும் சமீபத்தில் இதே அனுபவம். தமிழ் பையன், கன்னட பெண்ணை மணந்து கொண்ட திருமணம். மாப்பிள்ளை வீட்டார் மதராஸ் சமையல் வேண்டும் எனறு கேட்டு, ஆந்திர சமையல்காரர் சமைத்திருந்தார். பூரி, உ.கி.காஆஆஆரக்கறி, பகாரா பைங்கன், காஆஆஆரமான வெஜிடபிள் புலாவ்.. ஐஸ் க்ரீம்தான் ஒரே ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. இதைக் கவனிக்காமல் விட்டிருக்கேன். பானுமதி. ஆனால் பதிலை வேறே எங்கோ கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். :)))) கர்நாடகாவில் "பெண்"களூரில் நாங்களும் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிருக்கோம். தமிழ்க்காரப் பையர் ஆந்திரா பூர்விகத்தைக் கொண்ட கர்நாடகத்தில் வசிக்கும் பெண் வீடு, சமையல், சாப்பாடு நன்றாகவே இருந்தது.

      Delete
  6. என்னாது... மைசூர் போண்டால, உருளைக்கிழங்கைத் தேடியிருக்கீங்க.

    பெரிய திருமணமண்டபம் பிடித்தவங்க, சமையலுக்கு நல்ல ஆளைத் தேர்ந்தெடுக்கலையோ என்னவோ. எனக்கென்னவோ இடியாப்பம், 'அரிசி ரெடிமேட் இடியாப்பத்தை' வெந்நீரில் கொதிக்கவைத்துச் செய்ததாக இருக்கும்னு தோணுது (அதாவது அனில் பிராண்ட் மாதிரி). அதுகள்தான் இப்படி ரப்பர் மாதிரி இருக்கும். புதுசா பண்ணினா (அதெல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணமாட்டாங்க) ஜம்முனுதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, மைசூர் போண்டோவே சாப்பிட்டதில்லையா? அது சிவப்பு நிறத்தில் இருக்காதே! இஃகி, இஃகி! இது கடலைமாவு போட்ட போண்டோ தான்! என்ன ஒண்ணு! உ.கி. மசாலா வைக்கலை! அம்புடுதேன்! :)))) அது ரெடிமேட் இடியாப்பமா? இருக்கும். நான் அதிகம் இடியாப்பம் சாப்பிட்டதில்லை. இடியாப்ப மாவு வாங்கி வீட்டில் செய்து சாப்பிட்டது தான். அதுக்கும் ஓட்டு விழலைனு பண்ணுவதே இல்லை. ஒரு முறை இடியாப்பத்துக்குப் பிசைந்த மாவைப் புளி உப்புமாவாக மாற்றினேன். அதுக்கப்புறமா அந்த இடியாப்ப நாழியையே தானம் செய்துட்டேன். சேவை தான்! அடிக்கடி!

      Delete
  7. பெரிய திருமண மண்டபங்களில், ரெஸ்ட்ரூம்லதான் கோட்டை விட்டுடறாங்க. தரைத் தளத்தில், முதல் தளத்தில், அதிலும் உணவு பரிமாறும் மண்டபம் அருகில் என்று குறைந்தது 5 ஆவது இருக்கவேண்டாமா (அவ்வளவு பெரிய மண்டபத்துக்கு). இதைமட்டும் ஏன் யோசிக்க விட்டுவிடுகிறார்கள் என்று தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லைத் தமிழரே, எங்க குட்டிக்குஞ்சுலுவுக்குக் காது குத்து நடந்தப்போ விழாவைத் திநகர் மத்ஸ்யாஸ் ஓட்டல் ஹாலில் வைத்திருந்தோம். அங்கேயும் இதே கழிவறைப் பிரச்னை! அதோடு இல்லாமல் விருந்தினர் எல்லாம் வந்து காலை டிஃபன் ஆரம்பிக்கும் நேரம் வரை கழிவறைகளைத் திறக்கவும் இல்லை. அவங்களிடம் சண்டை போட்டுத் திறக்க வைச்சேன். அதுவும் திறக்க வராமல்! போதும் போதும்னு ஆயிடுச்சு! அவங்களும் ரோஸ் மில்க் கலந்த பாலை ஃப்ரீசரில் வைத்து ராஸ்பெரி ஐஸ்க்ரீம்னு நாமகரணம் சூட்டிக் கொடுத்துட்டாங்க! :))))

      Delete
  8. மாமாவுக்கு ஒருவேளை உணவு பிடிக்காததால், சீக்கிரம் வீட்டுக்குப் போனால் ஏதாவது தயார் பண்ணச் சொல்லலாம் என்று நினைத்துத்தான் வேகவேகமா ஆட்டோ பிடிக்கப் போய்ட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை. அவருக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட முடியலைனு வருத்தமாய் இருந்திருக்கும்! ) நான் பரவாயில்லை, சாப்பிடுங்கனு தான் சொன்னேன். பயம்! :)

      Delete
  9. எத்தனை வசதிகள் இருந்தாலும் கல்யாண கூடத்தில் கழிவறை வசதி இருக்க வேண்டாமோ விருந்து சப்பாட்டுக்குப் போனாலும்போய் வந்தபின் எனக்கும்பசிக்கும் சிலருக்கு அவர்கள் சமையலுக்குப் பின் தான் மற்றதெல்லாம் ....!

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் நானும் நினைத்தேன் இவ்ளோ பெரிய கம்பள வரவேற்பெல்லாம் கொடுத்துப் போட்டு ஒரே ஒரு ரொயிலெட் வச்சிருந்தால் எப்பூடி?:).. அந்த மண்டப கோஸ்டிக்கு ஒரு லெட்டர் போடுங்கோ கீசாக்கா இன்னும் நிறையக் கட்டி விடச் சொல்லி.

      Delete
    2. வாங்க ஜிஎம்பி ஐயா, வீட்டில் இதெல்லாம் ஒரே நாளைக்குச் செய்ய மாட்டோமே! ஆகவே நம்ம சமையல் தான் ஒசத்தினு எல்லாம் இல்லை.

      Delete
    3. அப்பாவி, எங்க சொந்தம், அவரோட சொந்தம் எல்லாம் சென்னைவாசிகள். ஆகவே கல்யாணங்களுக்குச் சென்றால் நாங்க சென்னை தானே செல்வோம். ஆகவே இங்கே எப்படி இருந்தால் என்ன? எப்போதேனும் ஓர் முறை போவோம்!

      Delete
  10. அவ்வளவு பிரமாண்டமான மண்டபத்தில் கழிவறை வசதிகள் வேண்டாமா ?

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, அவங்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லையோ? நாம் தான் சராசரி ஜீவராசியோ? இப்படி எல்லாம் எண்ணம் எனக்கு அங்கே நிற்கும்போது தோணிச்சு.

      Delete
  11. இங்கு கேரளத்தில் சத்ய எனப்படும் கல்யாண சாப்பாடு மட்டும்தான். அது எந்த நேரமானாலும் சரி. அதாவது 21 வகை ஐட்டம்கள் இருக்கும். பெண்வீட்டார் கல்யாணத்திற்கு முதல் நாள் அவர்களுடைய வீட்டில் பரிசு கொண்டு வருபவர்களுக்கு சின்னதாக 3 ஐட்டம் + பழம் விருந்திடுவார்கள். பையர் வீடென்றால் கல்யாணம் முடிந்து பையர் வீட்டிற்கு வந்தவுடன் வருபவர்களுக்கு வீட்டிலோ அல்லது வீட்டின் பக்கம் உள்ள சிறு கல்யாண மண்டபத்திலோ விருந்தளிப்பார்கள். 5 முதல் 7 அயிட்டம் வரை இருக்கும்.

    கேரள கல்யாணங்கள் 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனால் ஒரு கல்யாணத்திற்கு 1000 முதல் 2000 பேர் வரை வருவார்கள்.

    திருச்சியில் ஆட்டோவில் போனால் கல்யாண சாப்பாடும் செரித்து விடும் போல!!!

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா யெஸ் யெஸூஊஉ....அங்கு இன்னும் இப்படியான சாப்பாடு வரவில்லை என்றே நான் அறிந்தவரை...ஆனால் அங்கு இருக்கும் பிராமணர்கள் நடத்தும் கல்யாணம் எனில் தமிழ்நாட்டைப் போல மெனு மண்டப்பத்தில்...வந்துவிட்டது. நான் அட்டென்ட் செய்த கல்யாணம் ஒன்றில் அப்படி ஆனால் சப்பாத்தி இருந்தாலும் மற்றொரு பக்கம், ஆப்பம், இடியாப்பம், புட்டு வெரைட்டிஸ், வட்டையப்பம், என்று கேரளத்து டிஷஸ் ஸ்டால்....சாட் ஸ்டால். நார்த்த் கம் சௌத் பஃபே எல்லாம் ...சிலர் ஹோட்டலில் ரிசெப்ஷன் அரேஞ்ச் செய்வதும் உண்டு...மெனு இதேதான்...

      மலையாளக் கல்யாணங்கள் நீங்கள் சொன்னது போல....சத்யா மட்டும் தான்...அங்கு மலையாளக் கல்யாணங்களில் மொய் கூட யாரும் வைப்பதாகத் தெரியலை...அதாவது டிப்பிக்கல் மலயாளக் கல்யாணத்தில்...

      கீதா

      Delete
    2. வாங்க ஜேகே அண்ணா, நேத்திக்கு நீங்க கூப்பிட்டப்போ நாங்களும் கேபிளில் வேடுபறி தான் பார்த்துட்டு இருந்தோம். அதிலே கவனிக்கலை. நான்/நாங்க கேரளச் சாப்பாடுனு தனியாச் சாப்பிட்டதில்லை. ஒரு சில பாலக்காட்டுக்காரங்க சாப்பாடு சாப்பிட்டிருக்கோம். குருவாயூர் போனப்போ அங்கே ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் சாப்பிட்டதே நல்லா இல்லை. 2 வருடம் முன்னர் திருவனந்தபுரம் போனப்போ அங்கே சஷ்டி அப்த பூர்த்தியில் சமையலுக்கு எங்க ஊர்க்காரங்களையே வரவழைச்சிருந்தாங்க. அருமையான சமையல்! :)))) நாங்க ரிசப்ஷனுக்குப் போனப்போ ரெட் டாக்சியில் புக் செய்து கொண்டு போனோம். திரும்பி வர புக் செய்துக்கலாம்னு போயிட்டுப் பாதி வழியில் தான் செல்லை எடுத்து வர மறந்தது புரிந்தது. அந்த டாக்சிக்காரரே நான் கட் பண்ணிட்டு வெயிட் பண்ணறேன்னு சொன்னார். ஆனால் அங்கே அவர் இல்லை. 2 மணி நேரம் ஆனதில் போயிட்டார் போல! திரும்பி வரச்சே ஓலா ஆட்டோ! அதிகம் வாங்கலை! அவங்க கிட்டே ஃபோன் செய்து கேட்டுக் கொண்டு வாங்கினார். ஏனெனில் நாங்க புக் செய்யலையே!

      Delete
    3. தி/கீதா,சென்னையில் தி.நகர் கீதாஞ்சலி ஓட்டல், அசோகா ஓட்டல் போன்றவற்றில் ரிசப்ஷன் சாப்பாடு சாப்பிட்டிருக்கோம். சப்பாத்தின்னா இங்கே எல்லாம் என்னனு தெரியலைனே சொல்லணும்! ( சாப்பிட முடியாமல் விறைப்பாகப் பண்ணிடறாங்க!

      Delete
    4. ஆலையில்லா ஊருக்கு என்பதுபோல, 1988-90களில் கீதாஞ்சலியில் நார்த் இண்டியன் உணவு சாப்பிட்டு, அடாடா அருமை என்று வியந்திருக்கேன். பிறகு 2008ல் மும்பை, தில்லியில் சாப்பிட்டபோதுதான் தெரிந்தது, 'வட இந்திய உணவை' வட இந்தியர்கள் செய்துதான் சாப்பிடணும்னு. நிறைய ஹோட்டல்கள்ல (இப்போவும்) ஒரே மசலா பேஸ் வைத்துக்கொண்டு, எதைக் கேட்டாலும் அதில் கலந்துபோட்டுடறாங்க (கடாய் வெஜ், மட்டர் பனீர் போன்றவை).

      சென்னையில் என் பெண் திநகரில் ஒரு உணவகத்துக்கு வட இந்திய உணவுக்குக் கூட்டிச்சென்றிருந்தாள். அது மிக அருமையா இருந்தது (பணம் அதிகம் என்றபோதும்)

      Delete
    5. எந்த ஓட்டல்? பெயர் என்ன? தி.நகரில் இப்போல்லாம் ருசியான உணவு கிடைப்பதே குதிரைக்கொம்பு!

      Delete
    6. பாம்பே ஹல்வா ஹவுஸ். தி நகர். அங்க நாங்க வட இந்திய உணவு வகைகளைச் சாப்பிட்டோம் (ஒரு சில வருடங்களுக்கு முன்பு). மிக நன்றாக இருந்தது.

      Delete
  12. இந்த மாதிரி ஹாஆஆஆஆல் நானும் போயிருக்கேன். ஆர்ப்பாட்டமா இருக்கும். அந்நியமாவும் இருக்கும். பஞ்சுமிட்டாய் மட்டுமா, பாப்கார்ன் ஜூஸ், சூப் எல்லாம் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே ஸ்ரீராம்.....ஹையோ இப்பல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஆர்பாட்டமா இருக்கு...கல்யாணங்கள் ரிசப்ஷன்...என்னவோ எங்கேயோ இருக்கறமாதிரி இருக்கும்...ரொம்ப நெருங்கிய உறவுன்னா ஓகே இல்லைனா ரொம்பக் கஷ்டம்....

      கீதா

      Delete
    2. இது எவ்வளவு தூரம் சமூகத்துக்கு நல்லது? ரிசப்ஷன்னா, சாட் ஸ்டால், மேஜிக் ஷோ....... என்று. திருமணமும் வெகு ஆடம்பரமாகிவிட்டது.

      Delete
    3. ஶ்ரீராம், இப்போ ஹால் பிரம்மாண்டமா இல்லைனாலும் ரிசப்ஷனில் ஒவ்வொரு ஐடத்துக்கும் ஸ்டால் போட்டுடறாங்க. சில இடங்களில் வளையல்கள் ஸ்டால், மெஹந்தி ஸ்டால், பஞ்சு மிட்டாய் ஸ்டால், ஜூஸ் ஸ்டால், பாப்கார்ன் ஸ்டால் தவிர்த்து மற்ற சாட் ஐடங்களுக்குத் தனி ஸ்டால், குழந்தைகளைக் கவரப் பல்வேறு விளையாட்டுகள், தின்பண்டங்கள்! அதுக்குத் தனியா இருவர் மிக்கி மவுஸ் மாதிரியும் டெடி மாதிரியும் அலங்கரித்துக் கொண்டு முகமூடி போட்டுக் கொண்டு வராங்க! :))) எனக்குத் தெரிந்த ஒரு கல்யாணத்தில் மதியச் சாப்பாட்டில் குழந்தைகளுக்குனுத் தனியாப் பருப்பு சாதம், ரசம் சாதம் பிசைந்தது வைத்திருந்தாங்க. காரம் அதிகம் இல்லாக் காய்கள், முட்டைக்கோஸ், காரட், பீன்ஸ் போன்றவை

      Delete
    4. இப்போது எவ்வளவு ஆடம்பரமாகச் செய்யறோமோ அவ்வளவுக்குப் பெருமை கொள்கின்றனர். தி.கீதா! ஆகவே கல்யாணங்களில் முஹூர்த்தத்துக்குப் போனால் கூட நாங்க காலை டிஃபனோடு நிறுத்திக் கொண்டு முஹூர்த்தம் ஆனதும் கிளம்பி வந்துடுவோம்.

      Delete
  13. நானும் சட்டுபுட்டுனு மொய் கொடுக்க வரிசையில் சென்று நின்று விடுவேன். இல்லாவிட்டால் பயங்கரமா நேரம் ஆகிவிடும். பாஸ் 'ஆ' ன்னு மேடையைப் பார்த்துகிட்டு இருப்பாங்க... மேடையில் அவங்களா...., விதம் விதமா போட்டோ ஷூட் பண்ணிக்கிட்டிருப்பாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஸ்ரீராம் நான் சொல்ல வந்ததெல்லாம் சொல்லிட்டீங்க எனக்கு வேலை மிச்சம்...அதே அதே...எனக்கு இப்பல்லாம் கல்யாணங்களுக்குப் போகவே தயக்கமா இருக்கு...ரொம்ப யோசிக்கிறேன். தவிர்க்க முடியாது என்றால் மட்டுமே செல்கிறேன்..

      கீதா

      Delete
    2. ஶ்ரீராம், ஆமாம், இந்த வரிசை எங்கேயோ போய் முடியும். மேடையிலேயே சுமார் பத்துப் பேருக்கு மேலாக நெருக்கி அடித்துக் கொண்டு நிற்பார்கள்.

      Delete
    3. கல்யாணங்களுக்குச் செல்லும் குதூகலம் இப்போதெல்லாம் இருப்பதில்லை!

      Delete
  14. 7 மணிக்கு ரிசப்ஷன் என்று போட்டாலும் எந்த பொண்ணு மாப்பிள்ளையும் எட்டு மணிக்குக் குறைஞ்சு மேடைக்கு வந்ததா சரித்திரம், பூகோளம் எதுவும் கிடையாது! பொண்ணுக்கு மேக்கப்புக்கு நேரமாயிட்டே இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், 3 மணியிலே இருந்து ஆரம்பிச்சு மேக்கப் பண்ணிட்டே இருப்பாங்க! ஏன் அத்தனை நேரத்தை வீணடிக்கிறாங்கனு தோணும்.

      Delete
  15. இது மாதிரி ரிஸப்ஷன் விருந்துகள் ஸ்டாண்டர்டா ஒரு மெனு வைத்திருப்பார்கள். இப்படி வேகம் வேகமாக பரிமாறிக்கொண்டு வந்தால் சமயங்களில் விருந்தை மேற்பார்வை பார்ப்பவர்களே பரிமாறுபவர்களை டோஸ் விடுவார்கள்.

    நான் ஐஸ்க்ரீம் பக்கம் போகமாட்டேன். பிடிக்காது கேட்டேளா....

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா.....இப்படி வேக வேகமா பரிமாறிக் கொண்டுப் போவது எனக்குச் சுத்தமா பிடிப்பதில்லை. அதனாலேயே நான் ரிசப்ஷனை அவாய்ட் பண்ண முயற்சிப்பேன். இல்லைனா பரிமாறாத இலைக்குப் போய்ட்டு ஒரே ஒரு ஐட்டம் மட்டும் சாப்பிட்டுவிட்டு விட்டு வந்துடுவேன் நம்மால அனைத்தும் சாப்பிடவும் முடியாது வேஸ்ட் ஆக்குவது மனதிற்குப் பிடிக்காது எனவே...

      கீதா

      Delete
    2. நான் ஒரு கல்யாணத்தில் சொல்லவே சொல்லிவிட்டேன். நெருங்கிய உறவினர் என்பதால் பரிமாறுபவர்களிடமும், உறவினரிடமும் சொல்லி மெதுவாகப் பரிமாறச் சொல்லிவிட்டு வந்தேன்...

      கீதா

      Delete
    3. நேக்கு ஐஸ்க்ரீம் பிடிக்குமாக்கும் கேட்டேளா ஸ்ரீராம் ஆனா நேக்கு ஒத்துக்காதே அதனால அப்படியே பாத்துட்டு வந்துடுவேனாக்கும் கேட்டேளா..ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    4. ஐஸ்க்ரீம் பிடிக்காதா ஶ்ரீராம்? ஆச்சரியம் தான்!

      Delete
    5. பரிமாறாத இலையில் எல்லாம் உட்கார அனுமதிப்பதில்லை. எழுந்து இடம் மாறச் சொல்றாங்க! :(

      Delete
  16. நல்ல கொண்டாட்டம்தான்.. நிறைய ஐட்டங்கள் செய்து தந்திருக்கிறார்கள்.. அதை மளமளவெனச் சாப்பிடுவதை விட்ட்டுப்போட்டு சேஃப் பண்ணுபவரை முறைச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. நாங்கள் பெரும்பாலும் இப்படிக் கொண்டாட்டங்களில் முந்தி அடிச்சுப் போய் வாழ்த்தி கிஃப்ட் ஐக் கொடுத்து விட்டு பந்திக்கு முந்தி விடுவோம். இல்லை எனில் வீட்டுக்கு வந்து சேர ரொம்ம்ப லேட்டாகிடும்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, எல்லாத்தையும் ஒரே வாயில் போட்டு முழுங்க நாங்க என்ன மாயா பஜார், கடோத்கஜனா? நாங்களும் முதல் ஆளாகப் போய்ப் பரிசைக் கொடுத்துட்டுப் பந்திக்கும் முந்தினோம். எல்லாம் இந்தக் கழிவறை இல்லாததால் வந்தது! :)

      Delete
  17. இதே போல அனுபவம் நிறைய உண்டு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி, பலரும் எழுதுகின்றனர்.

      Delete
  18. கீதாக்கா ஸ்ரீராம் சொல்லிருப்பது போள பெண்ணும் மாப்பிள்ளையும் சொல்ற டயத்துக்கு வந்துருவாங்களா என்ன..பெரும்பாலும் லேட்டுத்தான்.அப்புறம் சில ரிசப்ஷன் 11 மணி வரைக்கும் நீளும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரியலை. அவ்வளவு தாமதமாக ரிசப்ஷன் முடிஞ்சு பனிரண்டு மணிக்கா சாப்பிடுவாங்க? அவங்க எப்போ சமைச்சாங்களோ தெரியாது! கல்யாண வீட்டுக்காரங்க போறச்சே எல்லாம் விறைச்சுப் போயிடும்.

      Delete
  19. ஹப்பா எங்கடா நீங்க பஞ்சு மிட்டாய் ஆசைப்பட்டுட்டு சாப்பிடாம வந்துருவீங்களோன்னு நினைச்சேன் நல்ல காலம் சாப்டுட்டுட்டீங்க அதுவும் மாமாவே வாங்கிக் கொண்டு வந்து...ஜூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானே எழுந்து பஞ்சு மிட்டாய் வாங்கப் போகலாமானு யோசனையில் இருந்தேன். அவருக்கே வேண்டி இருந்தது போல! :))))

      Delete
  20. திடீர்னு ஏன் உங்கள் தளம் நாட் செக்யூர்ட்னு வருது அக்கா?!!! எபி யோ இல்லை வெங்கட்ஜியோடதோ அப்படி வரலை...பூஸார் ப்ளாக் கூட அப்படி வரலையே....உங்க தளத்துல என்னவோ புகுந்துருச்சு!!! ஹா ஹா ஹா அலல்து எனக்கு மட்டும் தான் இப்படிப் பேய்க்காட்டுதா...ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தெரியலை கீதா. எனக்கு யாரும் சொல்லலை. ஆனால் எ.பி. எனக்கு எப்போதுமே நாட் செக்யூர்ட் என்று தான் வரும். நான் அதை எல்லாம் பொருட்படுத்தறதில்லை.

      Delete
    2. எனக்கும் தான். க்ரோமில் வருகிறது. firefox இல் வருவதில்லை.

      Delete
    3. ஆமாம், எ.பி. உட்படச் சில வலைத்தளங்கள் நாட் செக்யூர்ட் என்றே காட்டுகிறது.

      Delete
  21. நான் பெரும்பாலும் மேடைக்குச் செல்வதே இல்லை ஃபோட்டோ புடிப்பாங்களே! அதனால...பெண்ணோ புள்ளையோ அவங்க அம்மா அப்பா அல்லது யார் மேடைக்குப் போவாங்களோ அவங்ககிட்ட கொடுத்துட்டு நேரா பந்திக்குப் போய்டுவேன்...

    இந்தப் பந்தி இருக்கே அது இன்னொரு சங்கடம்...

    ஸ்ரீராமே சொல்லிருக்கார் அதை...இருங்க நீங்க என்ன சொல்லிருக்கீங்கன்னு பார்த்துட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, பெண்ணோட அப்பா, அம்மாவோ, பிள்ளையோட அப்பா, அம்மாவோ மேடையில் தானே மாத்தி மாத்தி ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருப்பாங்க! ஆகவே மொய் கொடுக்க மேடை ஏறித்தான் ஆகவேண்டி இருக்கு.

      Delete
  22. இடியாப்பத்தைப் பிய்க்கலாம்னு பார்த்தால் ரப்பர் மாதிரி இழுக்குது! //

    ஹா ஹா ஹா ஹா அக்கா இடியாப்பம் எல்லாம் ஃப்ரெஷ்ஷா செஞ்சு போடுவாங்களா என்ன...எல்லாம் ரெடிமேட்தான் அதுதான் இப்படி....

    உங்களை மாதிரிதான் நானும் கொஞ்சம் கோபப்பட்டதுண்டு...ரொம்பவே வேகமாகப் பரிமாறிக் கொண்டு போய் நமக்கு வேண்டியதைப் பரிமாறாமல் போனதற்காக...சில சமயங்களில் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போட்டதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்ததும் உண்டு. மொத்தத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போய் வரும் சந்தோஷம், சாப்பிட்ட சந்தோஷம் இருப்பதில்லை. இதில் பலரும் இந்தப் பிரம்மாண்டத்தைப் பத்தித்தான் பேசிப்பாங்க...அந்தக் கல்யாணத்தில் சூப்பரா அலங்காரம், இந்தக் கல்யாணத்தில் சூப்பரா ஃபோட்டோ ஷூட் அது இது என்று...என்னவோ போங்கக்கா இப்போதெல்லாம் கல்யாணங்கள் மனதிற்கு இதமாக இல்லை....ஒரு பக்கம் பண வியரம் மற்றொரு பக்கம் உதட்டுப் பேச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் ரயிலில் கூட வாங்கும் காஃபி, தேநீர் போன்றவை அளவில் குறைஞ்சால் சண்டை போடுவேன். பேசாம வாங்கிக்க மாட்டேன். ஆனால் அவர் இதெல்லாம் கண்டுக்கக் கூடாது என்பார். ஆனால் எப்படிக் கொடுக்கறாங்க பாரு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் என்பார். ஒரு தேநீர் விநியோகஸ்தரிடம் சாதாரணமாப் பேசியதில் இப்படிக் கொஞ்சமாக் கொடுத்து மிஞ்சும் தேநீரை விற்று அவங்க தனியாக் காசு பார்ப்பாங்களாம். சொன்னார்.

      Delete
  23. ஜாமூன் கடலை எண்ணெய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். //

    பின்ன கீதாக்காவுக்குனு நெய்யில பொரிச்சா போடப் போறாங்க...ஹா ஹா ஹா இப்பல்லாம் அப்படித்தான் அக்கா...நான் அந்தப் பக்கமே போவதில்லை..ஜாமூன் எல்லாம் வீட்டில்தான்...பால்கோவா நெய் மணக்க ஹா ஹா ஹா...அக்கா கல்யாணங்களில் தவிர்க்க வேண்டிய மற்றொன்று சப்பாத்தி சனா...சனாவில் அதிகம் பூண்டு வாசனை அடிக்கும்...பனீர் பட்டர் மசாலாவாக இருந்தாலும் அப்படித்தான்..சாப்பாட்டை குற்றம் சொல்லாமல்...ஏனென்றால் எத்தனையோ பேர் இதுகூடக் கிடைக்காமல் தவிக்கிறார்களே...ஸோ..டிஃபனைப் பார்ப்பேன் ஒத்துவரும் என்றால் வாங்கிக் கொள்வது இல்லை என்றால்.நான் பெரும்பாலும் ரிசப்ஷனில் டிஃபனை தவிர்த்துடறேன்....சாம்பார் சாதம் கொஞ்சம்....தயிர்சாதம் கொஞ்சம் காய் அம்புட்டுத்தான்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இப்போ ஜாமூன் வீட்டிலே செய்வதே குறைஞ்சு போச்சு! நான் கல்யாணங்களில் கொடுக்கப்படும் சைட் டிஷைச் சாப்பிடுவதே இல்லை. பெரும்பாலும் தண்ணியாக இருக்கும். காய்களோ, சனாவோ தேடித் தான் கண்டு பிடிக்கணும். தயிர்சாதம் கூட அவங்க சாதத்தை மிக்சியிலே அல்லது கிரைண்டரிலோ போட்டு அரைப்பாங்க போல! அவ்வளவு நன்றாக இல்லை. குழைவாக சாதம் வடித்துக் கலப்பது என்பது வேறு! இப்படி அரைச்சுச் செய்யறது வேறே! நம்ம நாக்குத் தான் நாலு முழம் நீளமே! கண்டு பிடிச்சுடும்.

      Delete
  24. //அதைச் சாப்பிட்டுட்டு இன்னொரு கோர்ஸ் போகலாமானு யோசிச்சால் பக்கத்தில் ரங்க்ஸைக்காணோம். திடுக்கிட்டுப் பார்த்தால் வெளியே ஆட்டோவைத் தேடிக் கொண்டு நிக்கறார். அது சரியாப் போச்சு போ! என நினைத்துக் கொண்டு அரை மனசாகக் கிளம்பி வந்தேன். ஆட்டோ பிடித்து வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தோம்.வந்ததும் பசித்தது! :))))))))))//

    ஹையோ அக்கா சிரிச்சி முடியலை....விஷுவலைஸ் பண்ணிப் பார்த்துட்டு இன்னும் சிரிச்சு முடியலை...

    ரொம்ப அழகா கதை போலவே இருக்கு அக்கா...முடிவும்!!!!

    ரொம்ப ரசித்தேன் பதிவை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, ரொம்ப நன்றி ரசனைக்கும் கருத்துகளுக்கும்.

      Delete
    2. கீசா மேடம்... அப்போ எழுத விட்டுப்போயிடுத்து.

      எனக்கு இந்த மாதிரி விசேஷங்களுக்குச் சாப்பிடப் போனால், யாரோடும் போகக்கூடாது, பேசக்கூடாதுன்னு நினைப்பேன். இல்லைனா, பேச்சு சுவாரசியத்துல கவனித்து சாப்பிட முடியாது, எது வேணும்னு கேட்க முடியாது. இரண்டு மூன்று முறை அப்படி ஆகிட்டது. வீட்டுக்கு வந்தப்பறம்தான் இதைச் சாப்பிடலையே, அதை இன்னொரு தடவை கேட்டிருக்கலாமேன்னு தோணும்.

      Delete
    3. நெல்லைத்தமிழரே, யாரானும் பேச்சுக் கொடுத்தால் பேசாமல் என்ன செய்யறது? நானும் இம்மாதிரிச் சில நல்ல விருந்துகளில் என்ன சாப்பிட்டோம்னு தெரியாம ஏதோ சாப்பிட்டு வந்திருக்கேன்.

      Delete
  25. எளிமையான திருமணங்களைப் பார்க்க மாட்டோமான்னு இருக்கு. எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்.ஆடம்பரம்.

    நிறைய திருமணங்களுக்குப் போனால் நானும் இவரும் சாப்பிடாமல் கூட வந்து விடுவோம்.

    அவர்கள் இருக்கும் வேகத்தில் தலை கால் புரியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள்.
    ஓரிரு கல்யாணத்துக்குப் போய் பரிசைக் கொடுத்துவிட்டு
    சரவணபவனுக்குக் கூடப் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம்.

    அவ்வளவு பொறுமை இருவருக்கும்.ஹாஹா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, ரொம்ப நாளைக்கப்புறம் வந்ததுக்கு நன்றி. நாங்களும் சில சமயங்களில் ஓட்டல்களில் சாப்பிடும்படி நேர்ந்திருக்கு. காஞ்சிபுரத்தில் ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரச்சே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

      Delete
  26. நேத்து உங்களோட பதிவப் படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டு இருந்தேன்..

    தற்கால சூழ்நிலை கற்காலம் போல ஆகிடுச்சி..

    இங்கே யாருக்கும் உறவுமுறை என்றெல்லாம் ஏதும் இல்லை..

    இருந்தாலும் அவர்களை வட்டத்துக்குள் விடுவதுமில்லை...

    இந்த இடுக்குக்குள் தான் அநீதியும் அலட்சியமும் நுழைகின்றன...

    பெண் பார்த்து சம்பந்தம் பேசி
    மாங்கல்யதாரணம் நடத்தி
    பிள்ளை பெற்று பேர் வைத்துத் தரும்வரை எல்லாத்துக்கும் ஏஜன்சி....

    ஆனா, அழைப்பின் பேரில் வர்றவங்க முகம் பார்த்துப் பரிமாறுவதற்கு வக்கற்றுப் போனார்கள்...

    யாரா இருந்தாலும்
    வந்தவங்க பசி தீர்க்கலை..ந்னா
    அது ஒரு விருந்தா?...

    அதுக்கு இத்தனை ஆடம்பரமா?...

    வந்தவங்க நூறு பேர்ல
    ஒருத்தர் வயிறார வாழ்த்துனா
    அதுபோதும் தம்பதியருக்கு...

    இதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?..

    இதுபத்தி மகாபாரதத்தில ஒருகதை இருக்கு...

    அப்புறமா நேரம் கெடைக்கிறப்ப சொல்றேன்...

    இல்லேன்னா தேடிக் கண்டுபுடிச்சி படிச்சுக்கோங்க....

    !?...

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் ஆடம்பரம் தான் முக்கியம்! உறவு முக்கியம் அல்ல. உறவும் அவங்க ஆடம்பரங்களோடு ஒத்துழைத்தால் கொஞ்சம் சேர்த்துப்பாங்க. மற்றபடி வாழ்த்துகளோ, ஆசிகளோ இக்காலத்தில் தேவை இல்லை. பெண் அனார்கலி டிரஸ் போட்டிருக்காளா? பிள்ளை ஜரிகைக் குர்த்தா போட்டு வட இந்திய பாணியில் டிரஸ் செய்திருக்காரா அதான் முக்கியம். அனார்கலியின் கதையும் அவள் முடிவும் தெரிந்தால் கல்யாணங்களுக்கு ஆயிரங்காலத்துப் பயிர் எனச் சொல்லும் திருமண நிகழ்வுகளுக்கு அனார்கலி டிரஸ்ஸைத் தேர்ந்தெடுப்பாங்களா? என்னமோ போங்க!

      Delete
  27. வணக்கம் சகோதரி

    உங்கள் அனுபவ பதிவு மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது. கல்யாண வீட்டுக்கு போனதிலிருந்து வரும் வரை ஒவ்வொன்றையும் ரசித்து எழுதிருக்கிறீர்கள்.
    ஆமாம்.. இப்பெல்லாம் பஞ்சு மிட்டாய் வேறு கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா? ஒரு காலத்தில் அதை எங்கு தேடினாலும் கிடைக்காத சூழல் இருந்தது.

    கல்யாண வீடுகளில் பரிமாறுபவர்களுக்கு இப்பெல்லாம் பொறுமையை இல்லை. அடுத்தடுத்து போட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறார்கள. அதனால்தான் தானே எடுத்துக்கொள்ளும் சிஸ்டம் வந்தது. இப்போது அதற்கும் போடுவதற்கு ஆட்கள் நிற்கிறார்கள். சங்கோஜபடாதவர்கள் நன்றாக வேண்டியதை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

    முடிவில் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் வந்தால், ஒரு விருந்துக்கு போன திருப்தி வருமோ? அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    சுவையான கல்யாண சாப்பாடுதான்.!
    நானும் உங்களுடன் மிக ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பஞ்சு மிட்டாய் எப்போவோ கொடுக்க ஆரம்பிச்சாச்சே கமலா ஹரிஹரன்! புதுசு இல்லை. ஸ்டால்களும் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷங்களாகப் போடுகின்றனர். பஃபே என்றால் நாமே தான் தேவையானதை மட்டும் எடுத்துச் சாப்பிடணும்! :) ஆனால் தமிழ்நாட்டில் பஃபே என்றால் என்னனு தெரியவே இல்லை. :))) ஐஸ்க்ரீம் உண்மையாகவே நன்றாக இருந்ததோடு அல்லாமல் சின்னக்கப்பிலும் கொடுக்கவில்லை. பெரிய பெரிய பாராக வைத்துக்கொண்டு தேவையானவற்றை அவ்வப்போது வெட்டித் தான் கொடுத்தார்கள். வட மாநிலங்களில் பார்ட்டி, கல்யாண விருந்துகளில் அப்படித் தான் கொடுப்பார்கள். அதே போல்! அங்கெல்லாம் வாடிலால் ஐஸ்க்ரீமும், அமுல் ஐஸ்க்ரீமும் ரொம்பப் பிரபலம். ஆனாலும் நான் அமுல் ஐஸ்க்ரீம் அம்பேரிக்கா போய்த் தான் சாப்பிட்டேன். :)

      Delete
  28. ஆவ் !! கல்யாணங்களில் பஞ்சு மிட்டாயலாம் தராங்களா !! ஆச்சர்யமா இருந்தாலும் மேலே பதிவை வாசித்து முடிச்சப்போ இவ்ளோ ஆடம்பர செய்து மனதுக்கு திருப்தியான உணவை தர்லைன்னா என்ன யூஸ் .
    ஒன்றிரண்டு வகை உணவாக இருந்தாலும் மனதுக்கு திருப்தியா இருக்கணும் ..திருமணத்துக்கு வரவங்க மனம் நிறைய வாழ்த்தணும்னு சொல்வாங்க பெரியவங்க .. அதோட அவ்ளோ பெரிய்ய ஹாலில் கைகழுவ இடமில்லை என்பதே எவ்வளவு கவனக்குறைவு ..

    // கடலை மாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போண்டாமாவிலேயே அடைனு வார்த்திருப்பாங்க போல!//
    ஹாஹா திப்பிசம் போஸ்டை படிச்சிருப்பாங்களோ :)

    இடியாப்பத்துக்கு சைட் டிஷ் காய்கறி STEW ??


    இங்கே வெளிநாடு வந்து இதுவரை மைத்துனர் திருமணம் தவிர வேறெங்கும் போகலை நான் ..அதிலும் எண்ணெய் ஊறிய பன்னீர் எல்லாம் பார்த்து சாப்பிடும் ஆசையே போச்சு :)

    ReplyDelete
    Replies
    1. பஞ்சு மிட்டாய் எல்லாம் வந்து பத்துப் பதினைந்து வருஷங்கள் ஆயிடுச்சு ஏஞ்சல்! எங்க வீட்டுக்கல்யாணங்களிலேயே ஸ்டால் எல்லாம் போட ஆரம்பிச்சிருந்தாங்க! உணவு பரிமாறியும் ரிசப்ஷன் நடந்தது. பஃபே முறைகளிலும் கொடுத்திருக்காங்க! என்றாலும் கூடியவரை இந்தத் திருமண ரிசப்ஷன்
      விருந்தைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் கருத்து!

      Delete
    2. / /கடலை மாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போண்டாமாவிலேயே அடைனு வார்த்திருப்பாங்க போல!//
      ஹாஹா திப்பிசம் போஸ்டை படிச்சிருப்பாங்களோ :)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் திப்பிசம் செய்தாலும் சுவையான திப்பிசமா இருக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))

      Delete
  29. அக்கா இந்த ஆர்டர் கொடுத்தோ இல்லை ஹோட்டலில் வாங்கும் சப்பாத்தி என்னிக்குமே வீட்டில் மகளுக்கு பிடிக்காது ..
    அம்மா தான் SOFT ஆ செய்விங்கனு சொல்லுவா ..அது ஏன் ஹோட்டல் சப்பாத்திகள் மரக்கட்டை தோல் போல் வறண்டு இருக்கு ?

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், நாங்க பொதுவாத் தமிழ்நாட்டு உணவகங்களில் சப்பாத்தி சாப்பிடுவதை விரும்புவதே இல்லை. ஒரு சில பெரிய உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பது வட இந்தியர் எனத் தெரிந்தால் ஆர்டர் செய்வோம். அதுவும் அவங்களைக் கூப்பிட்டு ஹிந்தியில் பேசி ஃபுல்கா, நான், பராட்டாவின் சரித்திரங்களைத் தெரியுமானு ஆராய்ச்சி எல்லாம் செய்துட்டுத் தான் ஆர்டர் கொடுப்போம். :)))) பொதுவா ஓட்டல்களில் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் கலந்த எண்ணெய் அல்லது டால்டாவில் தோசை மாதிரி வார்த்து எடுத்துடறாங்க! அதான் வறண்டு இருக்கு.

      Delete