எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 30, 2019

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 14

திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு

திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு   திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


தாமரைப் பூக்கோலம் போடலாம். சங்கு, சக்கரம் இரண்டும் வரும்படியான கோலமும் போடலாம்.

தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு    தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு


தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு  தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு


தோழிப் பெண்ணை எழுப்பும் ஆண்டாள் அவள் முன்னர் சொன்ன வாக்கை நினைவூட்டுகிறாள்.  தானே சீக்கிரம் எழுந்து எல்லோரையும் அழைத்துச் செல்ல வருவதாய்க் கூறியவள் இப்போது அது குறித்த வெட்கமில்லாமல் தூங்குகிறாளே எனக் கூறும் ஆண்டாள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள் அனைவரையும் இங்கே மறைமுகமாய்க் கடிகிறாள்.

இறைவன் எண்ணத்தில் அவன் நாமத்தையே எந்நேரமும் பேசுவேன், கூறுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு இப்போது அந்த அறிகுறியே இல்லாமல் உலக வாழ்க்கையின் மாயா இன்பங்களில் மூழ்கி இருப்பவர்களை நினைத்து ஆண்டாள் வருந்துகிறாள்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!

அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.

இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது:

த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ:
டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!
************************************************





26 comments:

  1. சீக்கிரம் எழுந்து விடுகிறேன் என்று சொல்லி வாக்குத் தவறுவது ஆண்டாள் காலத்திலேயே இருந்திருக்கிறது!  இப்போதும் நம் வீட்டு இளைஞ இளைஞிகள் இதைத்தான் செய்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. சிலர் எப்போதுமே சூரியோதயத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். எனக்கெல்லாம் எப்படி அவங்களாலே எல்லாவற்றையும் நேரத்துக்குச் செய்ய முடியும் என்று தோன்றும். ஆனால் அவங்களுக்கும் வாழ்க்கை ஓடுது, எனக்கும் வாழ்க்கை ஓடுது. அவசரமாகச் செய்வதால் எனக்கு மட்டும் என்ன கிடைக்கிறது? தாமதத்தால் அவங்களுக்கு என்ன கிடைக்காமல் போகிறது?

      Delete
    2. கீசா மேடம்.. உங்கள் பின்னூட்டம் என்னைச் சிந்தனை கொள்ள வைக்கிறது.

      ஒழுக்கம், நேரம் தவறாமை, டிஸிப்பிளின் என்றெல்லாம் சொல்லி வாழ்க்கையில் நான் என்னத்தைக் கண்டேன். இதனைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்னத்தைக் காணலை?

      Delete
    3. அங்கே ஸ்ரீராமுக்கு எழுதி இருக்கேனே தவிர்த்து உண்மையில் இழப்பு அவர்களுக்குத் தான்! நமக்கில்லை. அன்றும், இன்றும், என்றும் நம்முடைய இந்த குணங்களுக்காகவே தனியான மரியாதை கொடுத்து வருபவர்கள் உண்டு. இது ஏதோ கணநேரச் சிந்தனையில் தோன்றியது!

      Delete
    4. நெல்லை சொல்வது போல எண்ணம் எனக்கு எழுந்ததில்லை.  தாமதமாக எழ மனம் உடன்படுவதுமில்லை.  தானாக விழிப்பு வந்து எழுந்து விடுவது வழக்கம்.

      Delete
    5. அவருக்குத் தானாகத் தோன்றவில்லையே! நான் எழுதி இருப்பதைப் பார்த்துட்டுச் சொல்கிறார். ஆனால் இப்போல்லாம் குழந்தைகள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பதன் காரணத்தால் காலை கொஞ்சம் மெதுவாகவே எழுந்திருக்கிறோம். சீக்கிரம் எழுந்து என்ன செய்யப்போறீங்கனு கோவிக்கிறாங்க! விழித்துக்கொண்டாலும் படுக்கையில் படுத்திருக்க வேண்டி இருக்கு! :)

      Delete
  2. தஞ்சையில் குளிக்கும் குளங்கள் நான் கண்டதில்லை.  ஆனால் ஒரு பாடலின் சரண வரிகள் நினைவுக்கு வருகின்றன.  "காலையில் மலரும் தாமரைப்பூ..   ஆதிக் கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ...   இரவில் மலரும் அல்லிப்பூ...  அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..."

    ReplyDelete
    Replies
    1. உள்ளே கிராமங்களில் நிறையக் குளங்களைப் பார்க்கலாம்.

      Delete
    2. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைப் போன்ற இடங்களில் கொல்லைப் புறத்தில் தடாகம் இருந்தது இயல்பானது. கேரளாவில் நிறைய இடங்களில் இதனைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் ஆழ்வார்திருநகரியில், வீடுகளுக்குப் பின்புறம் வாய்க்கால் (கிட்டத்தட்ட 20 மீட்டர் அகலம்) ஓடுவைதையும் அதற்குப் படித்துறைகள் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

      Delete
    3. தாமிரபரணித் தண்ணீர் அந்தக் "கனடியன் வாய்க்கால்" வழியாக எல்லாக் கிராமங்களுக்கும் செல்கிறது நெல்லைத் தமிழரே!

      Delete
    4. தஞ்சையில் சரபோஜி காலத்திலும், அதற்கு முந்தைய மன்னராட்சிக் காலங்களிலும் இருந்த நீர் மேலாண்மை பற்றி ஒரு கட்டுரை படித்து, எங்களிலும் பகிர்ந்த நினைவு!

      Delete
    5. அது பற்றி ஒரு புத்தகமே வந்து நானும் படிச்சிருக்கேன். ஆனால் சரஃபோஜி காலம் இல்லை. அதுக்கும் முன்னால் சோழர் காலம்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    இன்றைய 14 ஆம் பாசுரம், அதன் விளக்கங்கள் அனைத்தும் அருமை. ஒவ்வொரு வரிக்கும் தங்களது தெளிவான விமர்சனம் நன்றாக உள்ளது. சொன்ன சொல்லை மறக்க கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துவதாக ஸ்ரீ கோதை நாச்சியார் இயற்றியுள்ள பாடல் வரிகள் அற்புதம். தேர்ந்தெடுத்த பாசுர படங்கள் கோலங்கள் என பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. நாமும் ஆண்டாள் காட்டிய வழியில் ஸ்ரீமன்நாராயணனின் பாதம் பற்றி தினமும் தொழுவோம்.

    /எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!/

    ஆஹா.. இத்தகைய பக்தி மட்டும் வேண்டும் என்ற நாராயண பட்டத்திரியின் பாடல்கள் அதன் விளக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது..இந்த மாதிரி பக்திப்பதிவு காலையில் எழுந்ததும் படிக்க நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி. ஆழ்ந்து அனுபவித்துப் படித்துக் கருத்துச் சொல்வதற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. கடலூரில் சாரின் அண்ணா இருந்த போது விடுமுறைக்கு போவோம். அப்போது காலையில் (மார்கழி மாதம்) சங்கை ஊதிக் கொண்டு வருவார். அவரே வீட்டுக்கு வீடு பூசணி பூவும் போடுவார் கோலத்தில்.
    காலை 4.30க்கு வந்து விடுவார். எங்கள் வீட்டுக்கு வரும் போது 4.30 என்றால் இன்னும் அதிகாலையில் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவார். அவன் புகழை பாடிக் கொண்டே வருவார்.

    நாமும் அவர் புகழ்பாடி உய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க மாமனார் ஊரான பரவாக்கரை, கருவிலியிலும் மார்கழி மாதக் காலங்களில், சங்கு ஊதியும், பாசுரங்கள் பாடிக்கொண்டும் வருவார்கள். ஆனால் அங்கே கோயில்களுக்குக் காலை தனுர்மாத வழிபாட்டுக்குனு யாரும் போனதில்லை. ஆனால் 2,3 குளங்கள் உண்டு. தாமரைப்பூக்களால் நிறைந்திருக்கும். குளங்களின் மேல் மெல்லிய பனி படர்ந்திருக்கும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

      Delete
  5. அன்பு கீதாமா, சிறப்பான பாடல். கோதை நாச்சியாருக்கும் கோபம் வரும் என்று நினைத்தால், நாம் திருந்த வேண்டும் என்று நினைப்பதையே அவள் வலியுறுத்துகிறாள் என்று தோன்றுகிறது.
    தஞ்சை பாபனாசம், வயலூர் ஆகிய இடங்களில் இவர் தாத்தா கட்டிய வீடுகளில் குளம் இருக்குமாம்.
    படித்துறையோடு நன்றாக இருக்கும் என்று மாமியார் சொல்லி இருக்கிறார்.
    எனக்குக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கும்.

    வெண்பல் தவத்தவர், அருமை. புழக்கடை இன்னும்
    எனக்குப் பழக்கத்தில் இருக்கிறது.
    இந்தப் பசங்களுக்குப் புரியாத பாஷை அது.:)

    நல்ல விரிவான பொழிப்புரையுடன்
    மார்கழி நாட்கள் நல்லபடியாகக் கடக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. புழக்கடை எனக் கிராமங்களில் முக்கியமாய்ப் பெரிய கிராமம் எனப்படும் மதுரையில் அடிக்கடி சொல்லி நானும் கேட்டிருக்கேன். இப்போல்லாம் தெரியாது தான்! பல நல்ல அழகான தமிழ்ச் சொற்கள் காணாமல் போய்விட்டன. அல்லது மற்ற மொழிகளுக்குப் போய் விட்டன.

      Delete
    2. புழக்கடை நாங்க அடிக்கடி (சிறு வயதில்) உபயோகித்த வார்த்தை. அதைவிட்டால், 'கொல்லை' என்போம். 'கொல்லைக்குப் போய் பார்' என்பதுபோல. அனேகமா அந்தக் காலத்துல புழக்கடையில் கடைசிப் பகுதியில்தான் பாத்ரூம் செல்வதால் (ஓபன் பாத்ரூம்) 'கொல்லைக்குப் போவது' என்பதே பாத்ரூம் போனேன் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்துவோம். (இப்போவும் வீடுகளில் உபயோகப்படுத்தும் பதம் என நான் நினைக்கிறேன்)

      கிராமத்துத் தமிழ் உபயோகப்படுத்தினாலே நம் மரியாதையே போச்சு என்று நினைக்கும் வழக்கம்தாம் பல வருடங்களாக நம்மிடையே இருக்கிறதே. இப்போதெல்லாம் ரெஸ்ட் ரூம் என்று சொல்வதுதான் மரியாதை. ஹா ஹா

      Delete
    3. நாங்களும் "கொல்லை" "புழக்கடை" போன்றவற்றைப் புழங்கி இருக்கோம். இப்போல்லாம் யாருக்கும் தெரியாது! கிராமங்களிலேயே "பாத்ரூம்" என்றால் தான் புரிகிறது.

      Delete
  6. தொடர்கிறேன் நன்று...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து விடாமல் வருவதற்கு நன்றி கில்லர்ஜி!

      Delete
  7. பதிவும் விளக்கமும் சிறப்பு. தொடர்கிறேன் மா...

    ReplyDelete
  8. நல்லா எழுதியிருக்கீங்க. மிஸ்டேக் இருக்கான்னு கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுத் தேடினேன். ஹா ஹா.

    //வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. // - இங்க ஏன் தேவையில்லாமல் வெற்றிலையை இழுத்திருக்கீங்க? அதற்குத் தேவை இல்லையே. எல்லோருக்கும் வெண் பற்கள்தானே (தேவையில்லாமல் அதனைக் கெடுத்துக்கொள்பவரைத் தவிர)

    ReplyDelete
    Replies
    1. ஆண்டாள் சொல்லி இருப்பதைத் தான் நானும் சொல்லி இருக்கேன் நெல்லைத்தமிழரே!

      Delete