அட! படங்களை வெகு எளிதாக இணைத்துவிட்டேனே! வெற்றி! வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!
கிழங்கு பண்ணும் முறை எப்போவும் போல் தான். உருளைக்கிழங்கைக் குக்கரில் போட்டு (நான் இம்மாதிரிச் சமைக்க மட்டும் குக்கர் பயன்படுத்துகிறேன்.) வேக வைத்துக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புப் போட்டுத் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் வரிசையாகப் போட்டு வதக்கிக் கொண்டு உருளைக்கிழங்கை உதிர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரைக்கரண்டி ஜலத்தில் நன்கு கலந்து வெங்காய வதக்கலில் சேர்த்துக் கிளற வேண்டியது தான். இதுவே பூரிக்கான கிழங்கு எனில் அது வேறே மாதிரி! பின்னர் ஒரு முறை செய்முறையோடு போடறேன். இது கெட்டியாக இருக்கணும். அது கொஞ்சம் தளர்வாக இருக்கலாம். ஆச்சா! இப்படியாக மசால் தோசைப் புராணம் முடிந்தது. இனி ரேவதி கேட்டிருந்த இரு மருந்து வகைகளின் செய்முறைக்குறிப்புக் கீழே!
**********************************************************************************
ஹை! ஜாலியா இருக்கு! ஸ்டாரை அழுத்தியதும் இரண்டு பக்கமும் தானாகவே போகுதே! இஃகி, இஃகி, இஃகி,
நாங்க நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிந்ததுமே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடுகிறோம். அப்போல்லாம் எனக்குச் சர்க்கரை என்பதே இல்லை. ஆனாலும் அவர் என்னல்லாம் சாப்பிடுகிறாரோ எல்லாம் நானும் சாப்பிடுவேன், மாத்திரைகள் தவிர்த்து. ஆகவே நெல்லிக்காய் மட்டும் போட்டுச் சாறு எடுத்துச் சாப்பிட்டது இப்போக் கொரோனாக் காலத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாகச் சாப்பிடுகிறோம். அது எப்படி எனில் இரண்டு பேருக்கு நான்கு நெல்லிக்காய்கள், ஒரு அங்குலத்துண்டு இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம், பாகல்காய் இரண்டு அங்குலத் துண்டு எல்லாம் எடுத்துக் கொண்டு நன்கு பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு மஞ்சள் பொடி (நினைவாக) சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வைத்துப்பேன். சின்னத் தம்பளரால் ஆளுக்கு ஒரு தம்பளர் காலை எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துப் பின்னர் இதைக் குடித்துவிடுவோம். அதன் பின்னர் சுமார் 45 நிமிஷம் கழித்தே காஃபி எல்லாம். அதுவரைக்கும் நோ காஃபி.
அதற்குப் பின்னர் முருங்கைக்கீரை இப்போ நிறையக் கிடைப்பதால் வாரம் ஒரு கட்டு வாங்கி விடுவார். யாருக்கு நேரம் இருக்கோ அவங்க அதை ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்வோம்.
அந்த முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி (இருவருக்கு), சின்ன வெங்காயம் சுமார் பத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளி நல்ல சாறுள்ளதாக இருந்தால் இரண்டு போதும். இவற்றைத் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தைப் போட்டு நெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றிக் கொண்டு மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு வறுத்துக் கொண்டு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். வெங்காயமும் வதங்கும் சூப்பிலும் சுவை கூடும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கிப் பின் முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். ஒவ்வொன்றாக வதக்கினாலே நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு இரண்டு கிண்ணம் நீரை விட்டு உப்புப் போட்டுக் குக்கர் எனில் மூடி நாலைந்து விசில் கொடுக்கவும். இல்லை எனில் பத்து நிமிஷம் நன்றாகக் கொதிக்கவிடவும். கொதித்துக் கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு நல்ல வடிகட்டியில் வடிகட்டி சூப்பை மட்டும் தனியாக எடுக்கவும். பாத்திரத்தில் இருக்கும் சக்கையைப் பிழிந்தாலும் சூப் வரும். ஒட்ட எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து மிளகு பொடி மட்டும் போட்டுக் கொஞ்சம் வெண்ணெய்(இருந்தால், இல்லைனா நெய் போதும்.) போட்டுக் கொதித்ததும் சூடாகக் குடிக்கக் கொடுக்கவும். நீங்களும் மறக்காமல் குடிக்கவும்.