Heritage Wiki
படங்களுக்கு நன்றி மரபு விக்கி! நடராஜன் கல்பட்டு "இறைவனைக் காண்போம்!"
இந்தத் தேன்சிட்டு கூடு கட்டினால் அணிலனுக்கும், அணிலளுக்கும் என்ன வந்ததுனு தெரியலை! மூன்று நாட்களாக அங்குமிங்கும் சுற்றி அலைந்துத் தேன் சிட்டு (சாதாரணமான குருவி நிறத்தில் குட்டியாய் இருக்குமே அது) கூடு கட்டப் புற்களையும், தென்னங்கீற்றில் இருந்தோ அல்லது செடிகளிலிருந்தோ ரிப்பன் மாதிரி இலைக்கிழிசல்களையும் கொண்டு வந்து எதிரே இருக்கும் குடியிருப்பின் குளியலறை ஜன்னலில் எக்ஸ்ஹாஸ்ட் மின் விசிறி வைக்கும் இடத்தில் கட்ட ஆரம்பித்தது, அவ்வப்போது எங்க பால்கனிக் கம்பியில் வந்து வாயில் புல்லையோ அல்லது நீண்ட பச்சை நிற ரிப்பனையோ வைத்துக் கௌவிக்கொண்டு உட்கார்ந்து ஓய்வெடுக்கும். சரினு காமிராவைத் தூக்கிண்டு வரதுக்குள்ளே ஓடிடும் உள்ளே. அங்கிருந்து சின்னத் தலையை நீட்டி எட்டி எட்டிப் பார்க்கும். எதிரே இருக்கும் சுவர்! எதிரே குடித்தனம் இருக்காங்க. ஏற்கெனவே நாங்க அந்தப் பக்கமே பார்ப்பதைப் பார்த்து என்ன நினைப்பாங்களோனு தோணும். இப்போ அங்கே படம் எல்லாம் எடுத்தால் என்ன சொல்லுவாங்களோனு படம் எல்லாம் எடுக்கவில்லை. நம்ம பக்கம் வந்தால் எடுக்கலாம்னா ஓடிப் போயிடுதுங்க.
நேத்திக்கு இப்படித்தான் எல்லாவற்றையும் இரண்டுமாக விர் விர் விர் விர்ருனு பறந்து பறந்து கொண்டு வைத்துவிட்டுச் சாப்பிடவோ எங்கேயோ போயிருக்குங்க. நான் சமையல் செய்ய சமையலறைக்கு வந்துட்டேன். தற்செயலாக ஏதோ மனதில் பட நிமிர்ந்து பார்த்தேன். ஜன்னலில் இருந்து அந்தச் சுவரும் அந்த வட்ட வடிவனமான காற்றுப் போக்கியும் நல்லாவே தெரியும். அங்கிருந்து பார்த்தால் இந்த அணிலன் வந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறான். உள்ளே பார்த்துட்டுச் சுற்றும் முற்றும் ஒரு திருட்டுப் பார்வை. எனக்கு உடனேயே திக்கென்றது. உஷ், உஷ் எனச் சத்தம் கொடுத்தேன். ம்ஹூம், அணிலனுக்கு லக்ஷியமே இல்லை. உள்ளே சொருகி வைத்திருந்த பச்சைப் புல்லை எல்லாம் வெளியே இழுத்துத் தள்ளி விட்டது. எல்லாம் கீழே போய் விழுந்தது. இன்று வேலை செய்யும் பெண் வந்தப்போ கீழெல்லாம் அந்தப் புல் கிடந்தது என்று சொன்னார். எல்லாம் அணிலன் வேலை என்று நான் சொன்னேன். அது எப்படியோ தெரியலை தேன் சிட்டுக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பக்கமே அப்புறமாப் போகலை. வேறே எங்கேயோ புதுசா இடம் பிடித்திருக்கிறது. இன்னிக்கெல்லாம் அங்கே தான் போய்க் கொண்டிருக்கு. எனக்கு ரொம்பவே வருத்தமாப் போச்சு!
அது பாட்டுக்குக் கூடு கட்டினால் இந்த அணிலனுக்கு என்ன வந்ததாம்? அதுக்கோ அதனுள் நுழையவே முடியாது. அவ்வளவு சின்ன துவாரங்கள். இந்தச் சுண்டு விரல் நீளத் தேன் சிட்டு, அதிலும் குட்டிக் குஞ்சுலுவின் சுண்டு விரல் நீளத்தில் உள்ள தேன்சிட்டுக் குருவி அங்கே கூடு கட்டினால் என்ன ஆகி விடும்? ஆனால் இதுக்கெல்லாம் தேன்சிட்டு அசைந்து கொடுக்கலை. இங்கே கூடாதா சரினு எல்லாவற்றையும் எதிர்கொண்டு கொஞ்சமும் பயமில்லாமல் அது வேறிடத்தை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் புதுக்கூடு கட்டிக் கொண்டிருக்கு! ஆனால் மனிதர்களான நாமோ? உடனே மனச் சோர்வு அடைந்து விடுகிறோம். என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இதுங்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனையோ உள்ளன. ஆனாலும் குயிலம்மாவைப் பார்த்தெல்லாம் கத்துக்கக் கூடாது. சரியா? அது பாட்டுக்குக் காக்கைக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுக் கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். பொறுப்பே இல்லாத ஜன்மங்கள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடவுள் இதுக்கு மட்டும் ஏன் இப்படி புத்தியைக் கொடுத்தார்?
***********************************************************************************
முகநூல் முழுசாகச் சில நண்பர்கள், "நான் நாலைந்து மொழி கற்றிருக்கிறேன்; நாலைந்து மொழி பேசுவேன்!" என்றெல்லாம் பதிவுகள் போட்டிருக்கத் திடீர்னு என்ன வந்தது? அரசாங்கம் தான் இப்படி ஏதேனும் எதுக்கானும் கேட்டிருக்கோனு பார்த்தால் ஒரு பதிவில் சில இளைஞர்கள் அணிந்திருந்த டீ ஷர்ட்டில், "எனக்கு ஹிந்தி தெரியாது!" என்னும் வாசகங்கள்! சிரிப்புத் தான் வந்தது. இதைத் தமிழ்நாட்டில் சொல்லுவானேன். ஹிந்தி பேசும் மாநிலங்களில் சொன்னால் புரிஞ்சுக்கலாம். ஆனால் அதிலும் பாதி தமிழ், பாதி ஆங்கிலம்னு எழுதி இருப்பதால் தமிழ் தெரியாதவங்க புரிஞ்சுக்கறதும் கஷ்டம். இங்கே ஹிந்தி பேசுபவர்கள் குறைவு என்பதோடு வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்பிச் சென்றவர்கள் எல்லாம் மறுபடி தமிழ்நாடு வர யோசிக்கிறாங்களாம். அவங்க குடும்பமே அவங்க இப்படி வந்து வேலை செய்வதைத் தடுக்கிறதாம். ஒரு காரணம் டாஸ்மாக். இங்கே வந்தால் அது பழகிடும் என்பது. இரண்டாவது காரணம் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பது. இதை வேலைக்கு எடுக்கிறவங்க செய்து கொடுக்கணும். ஆனால் அவங்க வரைக்கும் குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என இருக்காங்க போல! இப்போதுகட்டுமான வேலைகள், தொழிற்சாலை வேலைகள்னு எல்லாவற்றிற்கும் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே முதலாளிகள், சின்னச் சின்னத் தொழிலதிபர்கள் புலம்பல்கள்! இன்னும் சொல்லப் போனால் அம்பத்தூரில் எங்க வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருக்கும் பில்டரும் ஆட்கள் சரியாக வருவதில்லை என்பதால் வீடு முடிய ரொம்பத் தாமதம் ஆகிறது என்கிறார். ஹிந்தி கற்றுக்கொண்டு என்ன செய்வது? பானி பூரியா விற்க முடியும் என்றவர்களுக்கு நல்ல வேலை கிடைத்ததோ இல்லையோ அந்த ஹிந்தி பேசும் ஆட்கள் இல்லாமல் இங்கே பல வேலைகள் தொங்கலில்!
நம்ம தமிழர்கள் இல்லாத இடம் எங்கே? இதில் மட்டும் நாம் பெருமை பீற்றிக் கொள்வோம். ஆனால் வெளி மாநிலம் போய் அங்குள்ள மொழியையும் அவங்க கற்றுக்கொண்டு நிபுணர்களாய் இருப்பதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டோம். இதை நான் கர்நாடகத்திலேயே பார்த்தேன். ஆட்டோ ஓட்டும் தமிழர் கூட உள்ளூர் மக்களோடு கன்னடத்திலும், தமிழர்களைப் பார்த்தால் தமிழிலும், வெளிநாட்டுப் பயணிகளிடம் ஆங்கிலத்திலும், வடமாநிலப் பயணிகளிடம் ஹிந்தியிலும் பேசுகின்றனர். அநேகமாக இவர்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு,திருப்பூர், கோவைப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைய தினசரியில் பர்மாவில் இருந்து 60களில் அகதிகளாக வந்த தமிழர்களில் பலரும் இங்கிருக்கப்பிடிக்காமல் மீண்டும் பர்மா போனப்போ அங்கே ஏற்பட்டிருந்த ராணுவ ஆட்சி அவர்களை ஏற்காமல் திருப்பி அனுப்ப, அவங்க தமிழகம் வரப்பிடிக்காமல் அங்கேயே எல்லைப்பக்கமே தங்கி தங்களுக்குத் தெரிந்த வியாபாரத்தில் ஈடுபட்டு இப்போது அங்கே கோயில்கள், வர்த்தகத்தில் முதன்மை என அங்கிருந்த பூர்வகுடிகளை விட முன்னேறி இருக்கிறார்களாம். தமிழகத்தை விட்டு வெளியே சென்று சில காலம் வாழ்க்கை நடத்திய தமிழர்களால் நிச்சயம் மீண்டும் தமிழகம் வந்து வாழ்க்கை நடத்துவது இயலாத ஒன்று. அந்த பர்மிய அகதிகளான தமிழர்கள் பர்மிய மொழி, ஹிந்தி, வங்காளம், தமிழ், ஆங்கிலம் என சுமார் ஐந்து மொழிகள் பேசுகின்றனராம்.
நாம இன்னமும் தமிழ் மட்டும் பேசுவோம்; படிப்போம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கோம். அப்படியானும் தமிழை உருப்படியாகக் கற்றிருக்கோமா என்றால் அதுவும் இல்லை. பழங்காலத் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணங்களையும் கற்பதே இல்லை. பேசும் தமிழோ கொடுமையிலும் கொடுமை! தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள், தமிழில் இருக்கும் கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற பக்தி இலக்கியங்களையும் கற்க வேண்டும். கூடவே ஐம்பெரும் காப்பியங்களையும் கற்க வேண்டும். ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள் அநேகமாக வடமொழியில் இருப்பதைக் கண்டாலே போதும். இப்போதுள்ள வடமொழி வெறுப்புக் குறையும். பௌத்த, சமண சமயங்களைச் சேர்த்த காப்பியங்களாகக் கருதப்படும் இவற்றில் வடமொழி ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் சீவக சிந்தாமணி வடமொழிக்காப்பியங்களான கத்திய சூடாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகியவற்றைத் தழுவி முழுப் பெரும் காப்பியமாக எழுதப் பட்டதாகும். திருத்தக்க தேவருக்கு வடமொழிப் புலமை இருந்ததால் அல்லவோ இது சாத்தியம் ஆனது! இப்படித் தமிழில் இருந்து வடமொழிக்கும், வடமொழியிலிருந்து தமிழுக்கும் அந்தக் கால கட்டங்களில் போக்குவரத்து இருந்து கொண்டிருந்திருக்கிறது.
இதன் காலம் சரிவரத் தெரியவில்லை என்றாலும் சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலைக்குப் பின்னர் சோழர் காலத்தில் எழுதப் பட்டதாகச் சொல்கின்றனர். சுமார் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் வளையாபதியும், பத்தாம் நூற்றாண்டில் குண்டலகேசியும் எழுதப்பட்டிருப்பதால் இது அதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம். அப்போதெல்லாம் வடமொழிக்கு எந்தவிதமான எதிர்ப்புக்களும் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது தான் கடந்த நூறாண்டுகளாக எதிர்ப்புத் தோன்றி வளர்ந்து வருகிறது. எனினும் விரைவில் நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்போம்.
தலைப்பைப் பார்த்துட்டுத் தேன் சிட்டுக்கும், வடமொழிக்கும் என்ன சம்பந்தம்னு மண்டையை உடைச்சுக்க வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்பைப் பார்த்துட்டு வருவீங்க இல்ல, அதுக்குத் தான்.
மேலே போட்டிருக்கும் தேன்சிட்டுப் படங்கள் சொந்தம்தான் ஒரு வகையில். நடராஜன் கல்பட்டு ஐயா உயிருடன் இருந்தப்போ அவர் எழுதித் தொகுத்தப் பறவைகள் பற்றிய தொடரை மரபு விக்கியில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தப்போ இந்தப் படங்களையும் அங்கே ஏற்றினேன். அதிலிருந்து தான் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். சுட்டியும் கொடுத்திருக்கேன். முடிஞ்சா மரபு விக்கியையும் எட்டிப் பாருங்க. அநேகமாக எல்லாத் தலைப்புக்களிலும் நம்ம கைவண்ணம் கொஞ்சமானும் இருக்கும். ஒரு காலத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலராக முழு நேர வேலையாகச் செய்துட்டு இருந்தேன். இப்போ எல்லாவற்றையும் நிறுத்தியாச்சு.