எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 06, 2020

தேன் சிட்டும், வடமொழி கற்றலும்!

 தேன்சிட்டு2.gif

Heritage Wiki

படங்களுக்கு நன்றி மரபு விக்கி! நடராஜன் கல்பட்டு "இறைவனைக் காண்போம்!"

பிர்ட் 2 முதல்.gif


இந்தத் தேன்சிட்டு கூடு கட்டினால் அணிலனுக்கும், அணிலளுக்கும் என்ன வந்ததுனு தெரியலை! மூன்று நாட்களாக அங்குமிங்கும் சுற்றி அலைந்துத் தேன் சிட்டு (சாதாரணமான குருவி நிறத்தில் குட்டியாய் இருக்குமே அது) கூடு கட்டப் புற்களையும், தென்னங்கீற்றில் இருந்தோ அல்லது செடிகளிலிருந்தோ ரிப்பன் மாதிரி இலைக்கிழிசல்களையும் கொண்டு வந்து எதிரே இருக்கும் குடியிருப்பின் குளியலறை ஜன்னலில் எக்ஸ்ஹாஸ்ட் மின் விசிறி வைக்கும் இடத்தில் கட்ட ஆரம்பித்தது, அவ்வப்போது எங்க பால்கனிக் கம்பியில் வந்து வாயில் புல்லையோ அல்லது நீண்ட பச்சை நிற ரிப்பனையோ வைத்துக் கௌவிக்கொண்டு உட்கார்ந்து ஓய்வெடுக்கும். சரினு காமிராவைத் தூக்கிண்டு வரதுக்குள்ளே ஓடிடும் உள்ளே. அங்கிருந்து சின்னத் தலையை நீட்டி எட்டி எட்டிப் பார்க்கும். எதிரே இருக்கும் சுவர்! எதிரே குடித்தனம் இருக்காங்க. ஏற்கெனவே நாங்க அந்தப் பக்கமே பார்ப்பதைப் பார்த்து என்ன நினைப்பாங்களோனு தோணும். இப்போ அங்கே படம் எல்லாம் எடுத்தால் என்ன சொல்லுவாங்களோனு படம் எல்லாம் எடுக்கவில்லை. நம்ம பக்கம் வந்தால் எடுக்கலாம்னா ஓடிப் போயிடுதுங்க.


நேத்திக்கு இப்படித்தான் எல்லாவற்றையும் இரண்டுமாக விர் விர் விர் விர்ருனு பறந்து பறந்து கொண்டு வைத்துவிட்டுச் சாப்பிடவோ எங்கேயோ போயிருக்குங்க. நான் சமையல் செய்ய சமையலறைக்கு வந்துட்டேன்.  தற்செயலாக ஏதோ மனதில் பட நிமிர்ந்து பார்த்தேன். ஜன்னலில் இருந்து அந்தச் சுவரும் அந்த வட்ட வடிவனமான காற்றுப் போக்கியும் நல்லாவே தெரியும். அங்கிருந்து பார்த்தால் இந்த அணிலன் வந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறான். உள்ளே பார்த்துட்டுச் சுற்றும் முற்றும் ஒரு திருட்டுப் பார்வை. எனக்கு உடனேயே திக்கென்றது. உஷ், உஷ் எனச் சத்தம் கொடுத்தேன். ம்ஹூம், அணிலனுக்கு லக்ஷியமே இல்லை. உள்ளே சொருகி வைத்திருந்த பச்சைப் புல்லை எல்லாம் வெளியே இழுத்துத் தள்ளி விட்டது. எல்லாம் கீழே போய் விழுந்தது. இன்று வேலை செய்யும் பெண் வந்தப்போ கீழெல்லாம் அந்தப் புல் கிடந்தது என்று சொன்னார். எல்லாம் அணிலன் வேலை என்று நான் சொன்னேன். அது எப்படியோ தெரியலை தேன் சிட்டுக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பக்கமே அப்புறமாப் போகலை. வேறே எங்கேயோ புதுசா இடம் பிடித்திருக்கிறது. இன்னிக்கெல்லாம் அங்கே தான் போய்க் கொண்டிருக்கு. எனக்கு ரொம்பவே வருத்தமாப் போச்சு! 

அது பாட்டுக்குக் கூடு கட்டினால் இந்த அணிலனுக்கு என்ன வந்ததாம்? அதுக்கோ அதனுள் நுழையவே முடியாது. அவ்வளவு சின்ன துவாரங்கள். இந்தச் சுண்டு விரல் நீளத் தேன் சிட்டு,  அதிலும் குட்டிக் குஞ்சுலுவின் சுண்டு விரல் நீளத்தில் உள்ள தேன்சிட்டுக் குருவி அங்கே கூடு கட்டினால் என்ன ஆகி விடும்? ஆனால் இதுக்கெல்லாம் தேன்சிட்டு அசைந்து கொடுக்கலை. இங்கே கூடாதா சரினு  எல்லாவற்றையும் எதிர்கொண்டு கொஞ்சமும் பயமில்லாமல் அது வேறிடத்தை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் புதுக்கூடு கட்டிக் கொண்டிருக்கு! ஆனால் மனிதர்களான நாமோ? உடனே மனச் சோர்வு அடைந்து விடுகிறோம். என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இதுங்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனையோ உள்ளன. ஆனாலும் குயிலம்மாவைப் பார்த்தெல்லாம் கத்துக்கக் கூடாது. சரியா? அது பாட்டுக்குக் காக்கைக் கூட்டில் முட்டையிட்டுவிட்டுக் கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். பொறுப்பே இல்லாத ஜன்மங்கள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடவுள் இதுக்கு மட்டும் ஏன் இப்படி புத்தியைக் கொடுத்தார்?

***********************************************************************************

முகநூல் முழுசாகச் சில நண்பர்கள், "நான் நாலைந்து மொழி கற்றிருக்கிறேன்; நாலைந்து மொழி பேசுவேன்!" என்றெல்லாம் பதிவுகள் போட்டிருக்கத் திடீர்னு என்ன வந்தது? அரசாங்கம் தான் இப்படி ஏதேனும் எதுக்கானும் கேட்டிருக்கோனு பார்த்தால் ஒரு பதிவில் சில இளைஞர்கள் அணிந்திருந்த டீ ஷர்ட்டில், "எனக்கு ஹிந்தி தெரியாது!" என்னும் வாசகங்கள்! சிரிப்புத் தான் வந்தது. இதைத் தமிழ்நாட்டில் சொல்லுவானேன். ஹிந்தி பேசும் மாநிலங்களில் சொன்னால் புரிஞ்சுக்கலாம். ஆனால் அதிலும் பாதி தமிழ், பாதி ஆங்கிலம்னு எழுதி இருப்பதால் தமிழ் தெரியாதவங்க புரிஞ்சுக்கறதும் கஷ்டம்.  இங்கே ஹிந்தி பேசுபவர்கள் குறைவு என்பதோடு வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்பிச் சென்றவர்கள் எல்லாம் மறுபடி தமிழ்நாடு வர யோசிக்கிறாங்களாம். அவங்க குடும்பமே அவங்க இப்படி வந்து வேலை செய்வதைத் தடுக்கிறதாம். ஒரு காரணம் டாஸ்மாக். இங்கே வந்தால் அது பழகிடும் என்பது. இரண்டாவது காரணம் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பது. இதை வேலைக்கு எடுக்கிறவங்க செய்து கொடுக்கணும். ஆனால் அவங்க வரைக்கும் குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என இருக்காங்க போல! இப்போதுகட்டுமான வேலைகள், தொழிற்சாலை வேலைகள்னு எல்லாவற்றிற்கும் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே முதலாளிகள், சின்னச் சின்னத் தொழிலதிபர்கள் புலம்பல்கள்! இன்னும் சொல்லப் போனால் அம்பத்தூரில் எங்க வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருக்கும் பில்டரும் ஆட்கள் சரியாக வருவதில்லை என்பதால் வீடு முடிய ரொம்பத் தாமதம் ஆகிறது என்கிறார்.  ஹிந்தி கற்றுக்கொண்டு என்ன செய்வது? பானி பூரியா விற்க முடியும் என்றவர்களுக்கு நல்ல வேலை கிடைத்ததோ இல்லையோ அந்த ஹிந்தி பேசும் ஆட்கள் இல்லாமல் இங்கே பல வேலைகள் தொங்கலில்!

நம்ம தமிழர்கள் இல்லாத இடம் எங்கே? இதில் மட்டும் நாம் பெருமை பீற்றிக்  கொள்வோம். ஆனால் வெளி மாநிலம் போய் அங்குள்ள மொழியையும் அவங்க கற்றுக்கொண்டு நிபுணர்களாய் இருப்பதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டோம். இதை நான் கர்நாடகத்திலேயே பார்த்தேன். ஆட்டோ ஓட்டும் தமிழர் கூட உள்ளூர் மக்களோடு கன்னடத்திலும், தமிழர்களைப் பார்த்தால் தமிழிலும், வெளிநாட்டுப் பயணிகளிடம் ஆங்கிலத்திலும், வடமாநிலப் பயணிகளிடம் ஹிந்தியிலும் பேசுகின்றனர்.  அநேகமாக இவர்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு,திருப்பூர், கோவைப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.  இன்றைய தினசரியில் பர்மாவில் இருந்து 60களில் அகதிகளாக வந்த தமிழர்களில் பலரும் இங்கிருக்கப்பிடிக்காமல் மீண்டும் பர்மா போனப்போ அங்கே ஏற்பட்டிருந்த ராணுவ ஆட்சி அவர்களை ஏற்காமல் திருப்பி அனுப்ப, அவங்க தமிழகம் வரப்பிடிக்காமல் அங்கேயே எல்லைப்பக்கமே தங்கி தங்களுக்குத் தெரிந்த வியாபாரத்தில் ஈடுபட்டு இப்போது அங்கே கோயில்கள், வர்த்தகத்தில் முதன்மை என அங்கிருந்த பூர்வகுடிகளை விட முன்னேறி இருக்கிறார்களாம். தமிழகத்தை விட்டு வெளியே சென்று சில காலம் வாழ்க்கை நடத்திய தமிழர்களால் நிச்சயம் மீண்டும் தமிழகம் வந்து வாழ்க்கை நடத்துவது இயலாத ஒன்று. அந்த பர்மிய அகதிகளான தமிழர்கள் பர்மிய மொழி, ஹிந்தி, வங்காளம், தமிழ், ஆங்கிலம் என சுமார் ஐந்து மொழிகள் பேசுகின்றனராம்.


நாம இன்னமும் தமிழ் மட்டும் பேசுவோம்; படிப்போம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கோம். அப்படியானும் தமிழை உருப்படியாகக் கற்றிருக்கோமா என்றால் அதுவும் இல்லை. பழங்காலத் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணங்களையும் கற்பதே இல்லை. பேசும் தமிழோ கொடுமையிலும் கொடுமை! தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள், தமிழில் இருக்கும் கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற பக்தி இலக்கியங்களையும் கற்க வேண்டும். கூடவே ஐம்பெரும் காப்பியங்களையும் கற்க வேண்டும்.  ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள் அநேகமாக வடமொழியில் இருப்பதைக் கண்டாலே போதும். இப்போதுள்ள வடமொழி வெறுப்புக் குறையும். பௌத்த, சமண சமயங்களைச் சேர்த்த காப்பியங்களாகக் கருதப்படும் இவற்றில் வடமொழி ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் சீவக சிந்தாமணி வடமொழிக்காப்பியங்களான கத்திய சூடாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகியவற்றைத் தழுவி முழுப் பெரும் காப்பியமாக எழுதப் பட்டதாகும். திருத்தக்க தேவருக்கு வடமொழிப் புலமை இருந்ததால் அல்லவோ இது சாத்தியம் ஆனது! இப்படித் தமிழில் இருந்து வடமொழிக்கும், வடமொழியிலிருந்து தமிழுக்கும் அந்தக் கால கட்டங்களில் போக்குவரத்து இருந்து கொண்டிருந்திருக்கிறது.

 இதன் காலம் சரிவரத் தெரியவில்லை என்றாலும் சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலைக்குப் பின்னர் சோழர் காலத்தில் எழுதப் பட்டதாகச் சொல்கின்றனர். சுமார் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில்  வளையாபதியும், பத்தாம் நூற்றாண்டில் குண்டலகேசியும் எழுதப்பட்டிருப்பதால் இது அதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம். அப்போதெல்லாம் வடமொழிக்கு எந்தவிதமான எதிர்ப்புக்களும் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது தான் கடந்த நூறாண்டுகளாக எதிர்ப்புத் தோன்றி வளர்ந்து வருகிறது. எனினும் விரைவில் நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்போம்.

தலைப்பைப் பார்த்துட்டுத் தேன் சிட்டுக்கும், வடமொழிக்கும் என்ன சம்பந்தம்னு மண்டையை உடைச்சுக்க வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்பைப் பார்த்துட்டு வருவீங்க இல்ல, அதுக்குத் தான்.

மேலே போட்டிருக்கும் தேன்சிட்டுப் படங்கள் சொந்தம்தான் ஒரு வகையில். நடராஜன் கல்பட்டு ஐயா உயிருடன் இருந்தப்போ அவர் எழுதித் தொகுத்தப் பறவைகள் பற்றிய தொடரை மரபு விக்கியில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தப்போ இந்தப் படங்களையும் அங்கே ஏற்றினேன். அதிலிருந்து தான் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். சுட்டியும் கொடுத்திருக்கேன். முடிஞ்சா மரபு விக்கியையும் எட்டிப் பாருங்க. அநேகமாக எல்லாத் தலைப்புக்களிலும் நம்ம கைவண்ணம் கொஞ்சமானும் இருக்கும். ஒரு காலத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலராக  முழு நேர வேலையாகச் செய்துட்டு இருந்தேன். இப்போ எல்லாவற்றையும் நிறுத்தியாச்சு.

26 comments:

  1. முன்பு ஒரு காணொளியில் - ஒரே கூட்டுக்குள் முதலில் வெளி வந்த குஞ்சு மற்ர முட்டைகளை வெளியே தள்ளி விடுவதாகக் கண்டேன்...

    வில்லனுக்கு வில்லன் எங்கும் உண்டு போல!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நீங்க சொன்னாப்போல் ஒரு பறவைக்குஞ்சு பண்ணும் என நானும் கேள்விப் பட்டிருக்கேன். இந்தக் கதைக்கருவை வைத்து ஓர் ஆங்கிலக் கதை படிச்சு அதைத் தமிழிலும் மூலக்கருவை மாற்றாமல் எழுதினேன். என்னவோ சிலவற்றிற்கு இப்படி ஒரு குணம்.

      Delete
  2. இனிமேல் தமிழகத்தில் பெரும்பாலோர் உயிரெடுக்கும் சாராயத்தைத் தேடி நடப்பார்களே அன்றி உடல் உழைப்பின் வேலையைத் தேடி அல்ல!...

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அப்புறமா எல்லாவற்றிற்கும் அரசைக் குற்றம் சொல்லுவார்கள். ஏற்கெனவே படிப்பில் தேர்வே வேண்டாம்னு ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக மருத்துவத் தேர்வில் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கவில்லை. பொறியியலோடு நிறுத்திக் கொண்டார்கள்! :( மக்களைச் சோம்பேறி ஆக்கிய அரசுகள்! மாணவர்களைக் கோழை ஆக்கிய அரசுகள்! :(((((

      Delete
  3. அணிலன் அணிலள் - இந்த வார்த்தையைப் பார்த்துட்டு நாம தவறான பிளாக்ஸ்பாட்டுக்கு வந்துட்டோமா என்று யோசித்தேன். இந்த வார்த்தைகளை ஏஞ்சலின் பயன்படுத்துவார்.

    ReplyDelete
    Replies
    1. அட! நாங்களும் "அணிலம்மா" "அணிலப்பா" எனச் சொல்லுவோமே. இதுக்கு ஏஞ்சலின் காப்பிரைட் எல்லாம் கேட்கப் போவதில்லை. கண்டுக்காதீங்க! :)))))

      Delete
  4. தேன் சிட்டு பார்ப்பதற்கே அழகு. அது உங்க வீட்டுல கூடு கட்ட முயற்சித்ததா? ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஏன், கட்டக்கூடாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க அம்பத்தூர் வீட்டிலே வந்து பார்த்திருக்கணும். வாசல்லே தென்னை மரத்தடியிலே நாய் குட்டி போடப் பந்தல் எல்லாம் போட்டு வைத்திருப்போம். கொல்லையிலே பூனைங்க! மரங்களிலே அணிலார், மைனாக்கள், தவிட்டுக்குருவி, மீன் கொத்தி, காக்கை, குருவிகள், கு;யில்கள் எனப் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டே இருக்கும். விட்டுக்குள்ளே சுப்புக்குட்டியார்! நினைச்சால் வருவார், நினைச்சால் போவார். விதம் விதமான சட்டைகள் உரிக்கப்பட்டுத் தோட்டத்தில் கிடக்கும்.

      Delete
    2. தேன் சிட்டு எங்க பார்த்திருக்கேன்னு நினைவே இல்லை. வீட்டருகில் வசிக்குதா? அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு.

      இங்க கறுப்பா சின்னக் குருவிகள் பறப்பதைப் பார்க்கிறேன். அவை பறந்தால் அன்று மழை வருவதையும் பார்க்கிறேன். 4 பச்சைக் கிளிகள் பார்க்கிறேன். செம்போத்து, பருந்து போன்றவையும். ஆனால் தேன் சிட்டு பார்க்கவே இல்லை. அதுதான் ஆச்சர்யம். (எப்போதும் கலாய்ச்சா, நிஜமாவே ஆச்சர்யப் பட்டா அதுவும் கலாய்க்கற மாதிரி தெரியுது)

      Delete
    3. நல்ல கறுப்புன்னா அவை தேன்சிட்டு இல்லை. தேன் சிட்டு சிட்டுக்குருவியைப் போல ஆனால் அதைவிடச் சின்னதாகச் சுண்டுவிரல் நீளத்தில் ஒரு இனம் உண்டு. அடிவயிற்றில் நல்ல மஞ்சளாக ஒரு இனம் உண்டு. அதே போல் ஆழ்ந்த பச்சை நிறத்தில் ஒரு இனம் உண்டு. ஆனால் அதிகம் காண்பது நான் முதலில் சொன்னவை தான். பறக்கையில் கொஞ்சம் கறுப்பு அடிக்கும். ஆனால் நல்ல கறுப்பெல்லாம் இல்லை. கத்தினால் உச்சி மண்டையில் அடிக்கிறாப்போல் பெரிய குரலாக இருக்கும்.

      Delete
  5. ஹிந்தி கற்றுக்கொண்டு என்ன செய்வது? என்று கேட்கிறவங்க எல்லாருமே தமிழக பார்டர் தாண்டி ஹிந்தி உடனே கத்துக்கிடறாங்க. அவங்களுக்கு மத்தவங்க கத்துக்கக்கூடாதே என்றுதான் பயம் போல.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, தனியார் பள்ளிகள் 80 சதவீதம் திராவிடக் கட்சியினரின் குடும்பங்களாலேயே நடத்தப்படுகின்றன. எல்லாவற்றிலும் மும்மொழித் திட்டம். சிபிஎஸ்சி. ஹிந்தி கட்டாயம். குழந்தைகள் தமிழில் பேசக் கூடாது. பேசினால் அபராதம்! எதிர்ப்பவங்க இங்கே போயல்லவோ எதிர்க்கணும்! தனியார் பள்ளிகள் கற்பிக்கலாம் சுயலாபத்துக்காக. மக்கள் மேன்மைக்காக அரசு கற்பிக்கக் கூடாதா? பட்டி, தொட்டியிலுள்ள மாணவன் கூட நல்லறிவு பெறலாமே! நவோதயா பள்ளிகளை இந்தக் காரணத்துக்காகவே வர விட மாட்டேன் என்கிறார்கள். அண்டை மாநிலங்களில் எல்லாம் நவோதயா பள்ளிகள் சிறப்பாகக் கற்பிப்பதைப் பெருமையாகச் சொல்கின்றனர். தமிழகத்து மாணவர்களுக்கு இந்த வசதிகளை மறுப்பதன் மூலம் அவர்களுக்குச் செய்யப்படும் அநியாயத்தை யார் எடுத்துச் சொல்வார்கள்?

      Delete
  6. ஒரு மொழி இன்னொரு மொழியை அழிக்கும் என்றிருந்தால், ஆங்கிலம் தமிழ் மொழியை முற்றிலுமாக அழித்துவிட்டது என்பதௌ ஒத்துக்கொள்ளவேண்டும்.

    கல்வெட்டுகளிலும் மொழிக்கலப்பு நிறைய உண்டு. எல்லா மொழிகளிலும் இலக்கியங்களும் உண்டு (தமிழகத்தில் எழுதப்பட்டவை).

    தமிழ் மொழி தமிழ் மொழின்னு பேசறவங்க யாருக்குமே தமிழ் எண்கள் எழுதத் தெரியாது. இதுல என்ன மொழிப் பீற்றல் வேண்டிக்கிடக்கு?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, பெரும்பாலான கல்வெட்டுக்கள் கிரந்தம் கலந்தே வடிக்கப்பட்டவை. பெரும்பாலான அரசர்கள் தமிழோடு வடமொழி, பாலி, சம்ஸ்கிருதம் போன்ற பாஷைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். வடக்கே படையெடுத்துச் சென்றாலோ, கீழை நாடுகளுக்குச் சென்றாலோ அந்த மொழியில் பேசும் வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். காஞ்சியிலும், மதுரையிலும் கடிகைகள் பல மொழி வல்லுனர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வந்திருக்கின்றன. இப்போதைப் போல் மொழி வெறுப்போ, மொழிப்போரோ அப்போதெல்லாம் இருந்ததாய்த் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் அரங்கநாதரைத் திரும்பக் கொண்டு வந்து சேர்த்த கம்பண்ண உடையாரின் மனைவி கங்கா தேவி வடமொழிப் புலமை பெற்றவளாக இருந்திருக்கிறாள். அவள் வடமொழியில் எழுதிய "மதுரா விஜயம்" மூலம் தான் ஸ்ரீரங்கத்தின் மறைக்கப்பட்ட சரித்திரங்கள் வெளியே தெரிய வந்திருக்கிறது. அரங்கன் எப்போது திரும்பி அரங்கம் வந்து சேர்ந்தான் என்பதும் அவளால் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. வடமொழிப் புலமை, தமிழ்ப் புலமை இருந்தால் அல்லவோ இதைப் புரிந்து கொண்டிருக்க முடியும்!

      Delete
  7. அணிலார் துரத்தி விட்டாரா தேன்சிட்டை அவைகளுக்கு தான் எத்தனை கஷ்டங்கள்!
    மீண்டும் வேறு இடத்தில் கூடு கட்டும் இருந்தாலும் இத்தனை நாள் உழைப்பு வீணாகி விட்டதே .

    இங்கும் எங்கள் வீட்டுக்கு பின் பக்கம் இருக்கும் ஒரு வீட்டில் ஏசி அவுட்லெட் மாட்டி இருக்கும் கம்பியின் இடையில் இரண்டு நாளாக புள்ளிசில்லை குருவி கூடு அமைத்தது(முன்பு எங்கள் வீட்டில் கூடு கட்டிய பதிவு போட்டு இருக்கிறேன்) பசும் தளைகளை, புற்களை கொண்டு வந்து வைத்து. இன்று அந்த வீட்டினர் வீட்டை காலி செய்து விட்டார்கள் வேறு எங்கோ போகிறார்கள், ஏசி அவுட்லெட்டை கழற்றிய போது குருவி கூடு கட்டிய புற்கள் கீழே விழுந்தது பார்க்கவே மனது வேதனை அடைந்தது. மாலை வேறு எங்கோ கூடு கட்ட புற்களை எடுத்து செல்கிறது.

    மரபு விக்கியை எட்டிப்பார்த்தேன், படித்தேன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
    ராமலக்ஷ்மி நடராஜன் ஐயா அவர்களை பேட்டி எடுத்து இருக்கிறார்.நான் அவர் எடுக்கும் படங்களின் ரசிகை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அந்த இடம் இரண்டுக்கும் பிடிக்கலை போல! மறுபடி பழைய இடத்துக்கே வந்திருக்குங்க. ஆனால் வெளியே தெரியறாப்போல் கட்டாமல் நல்லா உள்ளே தள்ளிக் கட்டிட்டு இருக்குங்க! காலை வேளையில் தான் என்ன சுறுசுறுப்பு! அதைப் பார்க்கையில் எனக்கு வெட்கமாக இருக்கும். நாம வேலையைச் சுறுசுறுப்பாய்ச் செய்யலையேனு! உங்க பக்கம் பறவைக்கூடு கலைந்து போனது மனதுக்கு வருத்தமாய் உள்ளது. :(

      Delete
    2. கல்பட்டு ஐயாவை இணையம் மூலமே அறிமுகம் என்றாலும் மிக நெருங்கிய பழக்கம். குரோம்பேட்டையில் சொந்த வீட்டில் இருந்தப்போ 2,3 முறை போயிருக்கோம். பின்னர் வயது அதிகம் ஆனதால் "பெண்"களூரில் உள்ள பெண்ணிடம் போய்விட்டார். அங்கே தான் இறந்தும் போனார். அவருடைய பேட்டியை ராமலக்ஷ்மி எடுத்ததும், பத்திரிகையில் போட்டதும் நன்கு தெரியும். மரபு விக்கியில் இவற்றைத் தவிர்த்தும் பல கட்டுரைகளை வலை ஏற்றி இருக்கிறேன். சைவ மடங்களின் வரலாறு, சைவம் பற்றிய கட்டுரைகள், உ.வே.சா.வின் கட்டுரைகள், நளபாகம் என்னும் பெயரில் சமையல் குறிப்புகள், சித்தர்கள் பற்றி எனப் பல்வேறுவிதமான கட்டுரைகளைப் பார்க்கலாம். தொழில் நுட்பம் தெரியாத பெரியோர்களின் பல கட்டுரைகளையும் வலை ஏற்றிக் கொண்டிருந்தேன்.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    தேன்சிட்டு முதல் படம் அருமையாக உள்ளது. அது பேசாமல் தன் கூட்டைக் கட்டிக் கொண்டால் இந்த அணிலுக்கு என்ன வந்தது? மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் பொறாமை குணம் கூட இவைகளுக்கும் உண்டோ என சிந்திக்க வைக்கிறது? ஆனால் இந்த அணிலும் தன் தேவைக்காக சணல் மாதிரி பொருளை பிய்த்து உருண்டையாக்கி தன் வாயில் கவ்விக் கொண்டு கூடு கட்ட செல்வதை பார்த்திருக்கிறேன். பாவம்..! விட்டுத் தரும் சுபாவத்தினால் அந்தச் சிட்டு வேறு எங்கு சென்றதோ? எங்கு சென்றாலும் நலமாக அங்காவது நிம்மதியாக இருக்கட்டும்.

    மொழிகள் பற்றி நன்றாக விளக்கத்துடன் எழுதி உள்ளீர்கள்.பாராட்டுக்கள். மொழிகள் பல சமயங்களில் மனிதர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றபடி அத்தியாவசியமாகின்றன என்பது உண்மையே. . இறுதியில் நீங்கள் சொன்ன இடத்திற்கும் (மரபு விக்கி) பிறகு சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அது மீண்டும் தன்னிடத்துக்கு வந்துவிட்டது கமலா. நல்லவேளையா எங்கேயும் போகலை! விர் விர் விர் எனப் பறந்து கொண்டும் இருக்கிறது. அணிலும் குளியலறையில் கட்ட வந்தது! அப்புறமா என்ன நினைச்சதோ போய்விட்டன. முடிஞ்சப்போ மரபு விக்கியில் போய்ப் பாருங்க. அநேகமாப் பல தலைப்புக்களிலும் கட்டுரைகள் பகிர்ந்திருப்பேன். அதெல்லாம் நாலைந்து வருடங்கள் முன்னர் வரை!

      Delete
  9. //தமிழகத்தை விட்டு வெளியே சென்று சில காலம் வாழ்க்கை நடத்திய தமிழர்களால் நிச்சயம் மீண்டும் தமிழகம் வந்து வாழ்க்கை நடத்துவது இயலாத ஒன்று//

    ஸூப்பர் உண்மையை சொன்னீர்கள்.

    தமிழையும் சரியாக கற்கவில்லை ஹா.. ஹா.. இதுவும் உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான செய்தி வாசிப்பவர்கள் கொடுக்கும் செய்திகளைக் கேட்கையில் தற்கொலை பண்ணிக்கொள்ளலாம் போல் இருக்கு! அத்தனை அழகாகச் செய்திகள் வாசிக்கின்றனர். "இப்ப வந்து" "பார்த்தீங்கன்னா" என்பதைக் குறைந்த பக்ஷமாக நூறு முறையானும் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்துகிறார்கள். யாருக்குமே கிழமைகள் தெரியவில்லை. :(

      Delete
  10. தேன்சிட்டு மட்டுமல்ல, பலவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எண்ணிலடங்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  11. இதைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிப்பவர்கள், ஒரு பாறாங்கல்லை எடுத்து தலையில் பலமாக அடித்துக் கொள்ள வேண்டும்... அப்போது என்ன "சத்தம்" வருகிறதோ, அதை முதலில் "சுத்தமாக" புலமை பெற முயற்சி செய்ய வேண்டும்...! பிறகு கவிதைகள் கட்டுரைகள் எனப் பலவற்றை படைக்க வேண்டும்... இல்லையெனில் அவ்வாறு இருப்பதை எல்லாம் கற்றுணர வேண்டும்... அதன்பின் சுயமாக ஆய்வுகள் பல செய்ய வேண்டும்... அதன்பின் அதன் சிறப்பை உணர்ந்து, மற்றவர்களிடம் சொல்வதற்கு ஒப்புதல் பெற வேண்டும்...

    ஒருத்தனை கெடுப்பதற்கு அவன் ஆசையை தூண்ட வேண்டும்... அவை நடந்து கொண்டிருக்கிறது...!

    ஒரு இனத்தை அழைப்பதற்கு ஒரு மொழியை அழிக்க வேண்டும்... அவை பல காலமாக செய்ய, முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது...!

    நம்மிடம் உள்ள கைப்பேசியில், நமக்குத் தெரிந்த மொழியில், எதிரில் உள்ளவர் பேசும் மொழியை மாற்றித் தரும் தொழினுட்பம் வந்தபின்...!

    முருகா...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  12. பறவைகள் படங்கள் அழகு. கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கற்றுக் கொள்வது நல்லது.

    மொழி - சிலவற்றை பேசாமல் இருப்பது நல்லது!

    ReplyDelete