ஹாஹா! என்ன தலைப்புனு யோசிச்சு, உடம்பு வந்ததையும் கர்மா தொடர் பார்த்ததையும் சேர்த்து ஒரு பதிவாப் போட்டுட்டேன். இரண்டுமே கர்மா தானே!
கர்மா தொடர் பதினாறு பகுதிகள் பார்த்திருக்கேன். உட்கார வேண்டி இருப்பதால் அதிகம் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை அடுத்து என்ன ஆகுமோ என திக், திக், திக் தான். தஞ்சை ஜில்லாவின் அந்தக் கால கிராமம் ஆன ஶ்ரீகண்டபுரம்/பாலூரில் உள்ள ஓர் அக்ரஹாரத்தின் ஓர் குடும்பத்தின் கதை. கனபாடிகள் அந்த ஊரிலேயே பெரிய மனிதர். நாலும் தெரிந்தவர். அவர் சொன்னால் சொன்னது தான். அது தான் தீர்ப்பு! அந்த ஊரில் அதே அக்ரஹாரத்தில் வசிக்கும் சங்கர சாஸ்திரிகள் கனபாடிகளின் வீட்டுப் புரோகிதர். கனபாடிகளின் மூத்த இரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிக் குழந்தையே பிறக்காததால் சங்கர சாஸ்திரிகளின் ஏற்பாட்டில் சந்தான கோபால விரதம் ஏற்பாடு செய்து நடக்கிறது. சங்கர சாஸ்திரிகளுக்கு ஒரே பெண்/ தாயில்லாப் பெண்/ருக்கு. கதையின் நாயகி. அவளுக்கு கனபாடிகளின் மூன்றாவது பிள்ளை வெங்கிட்டுவின் மேல் ஒரு கண். அந்த வீட்டு மருமகளாக வர வேண்டும் என்னும் கனவில் இருக்கிறாள்.
கனபாடிகளின் கடைசிப் பெண்ணான காமுவுக்கு (கதைப்படி 12 வயசுச் சிறுமி. நடிப்பதும் சின்னஞ்சிறு பெண் தான்) அந்தக் கால வழக்கப்படி கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. கனபாடிகளின் வேண்டுகோளுக்கு இணங்கக் கோனேரிராஜபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் சம்பந்தி வீட்டாரைப் பார்த்துப் பேசச் செல்லும் சங்கர சாஸ்திரிகள் திரும்புகையில் புயல், மழையில் அகப்பட்டுக் கொண்டு இரவு நேரத்தில் அந்தப் பக்கத்தில் உள்ள ஓர் காட்டு ஓரத்தில் மயங்கி விழுகிறார். அந்த வழியாக வண்டியில் செல்லும் அந்த ஊரைச் சேர்ந்த தங்கம் என்னும் தேவதாசிப் பெண்மணி மயங்கி விழுந்திருக்கும் சங்கர சாஸ்திரியைப் பார்த்துவிட்டுத் தன் வண்டியில் அவரைத் தூக்கிப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு அவரை எடுத்துச் சென்று வைத்தியரை வரவழைத்து உடனடியாக மருந்துகளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறாள். அந்தக் கால வழக்கப்படி தாசிகளின் வீட்டுக்கோ வீடுகள் இருக்கும் தெருவுக்கோ பிராமணர்கள் செல்ல மாட்டார்கள். சங்கர சாஸ்திரிகளோ அங்கே போனதோடு அல்லாமல் ஒரு இரவு முழுவதும் அங்கே நினைவின்றிக் கிடக்கிறார். மறுநாள் உண்மை தெரிந்த அவருக்குக் கவலை/பயம்/ஊரில் யார் என்ன சொல்வார்களோ என்னும் அச்சம்! தைரியம் சொல்லி அவரை வீட்டின் பின் பக்கம் வழியாக அனுப்பி வைக்கிறாள் தங்கம். ஆனால் குற்ற உணர்விலும் அவமானத்திலும், அச்சத்திலும் குறுகிக் குன்றிப் போன சங்கர சாஸ்திரிகள் ஊர் திரும்புகையில் ஊர் எல்லைக் குளத்தில் தான் தாசி வீட்டில் தங்கிய தோஷத்தைக் கழிப்பதற்காகக் குளித்து முழுகி எழுந்திருக்கும்போது கனபாடிகளின் இரண்டாம் மாப்பிள்ளை (ஆராய்ச்சியாளன்) பார்த்து விடுகிறான். விஷயத்தை சாஸ்திரிகள் மூலம் தெரிந்து கொண்டு இதை ஒருத்தருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவன் சொல்லி சாஸ்திரிகளைச் சமாதானம் செய்கையில் மூத்த மாப்பிள்ளை சேஷு இதை ஒட்டுக் கேட்டுவிட்டு ஊரில் பரப்பி விடுகிறார். ஊரே பத்திக் கொண்டு எரிகிறது.
இதை எதிர்கொள்ளும் சங்கரசாஸ்திரிகளை கனபாடிகள் ஊரிலிருந்து பிரஷ்டம் செய்து விட, அவமானம் தாங்க முடியாமல் சங்கர சாஸ்திரிகள் ஊர்க்குளத்தில் விழுந்து உயிரை விடுகிறார். ருக்குவுக்கு ஏற்கெனவே அம்மா இல்லை. இப்போது அப்பாவும் போய்விடத் தாய்மாமன் கிச்சாமி பக்கத்தில் இருந்தாலும் அவர் துணையுடன் கனபாடிகளைப் பழி வாங்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள் ருக்கு. ஏற்கெனவே கிச்சாமிக்கும் கனபாடிகளுக்கும் கொஞ்சம் விரோதம் இருக்கிறது. ருக்குவோ எப்படியேனும் கனபாடிகளைப் பழி வாங்கித் தன் தகப்பன் இறந்த அதே குளத்தில் கனபாடிகளும் மூழ்கி இறக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள். இதற்காக அவள் செய்யும் சாகசங்கள்! அவை தான் மீதிக்கதை! ஒவ்வொன்றாய்ப் பார்த்து வருகிறேன். அந்தக் காலத்து அக்ரஹார வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் பாம்பே சாணக்யா. நடிக நடிகையர் தேர்வில் இருந்து அவர்களிடமிருந்து சற்றும் மிகையில்லா யதார்த்தமான நடிப்பை வாங்கி இருக்கிறார். ஒரு காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாமல் அப்படியே இருக்கும். அதைக் காட்சிப் படுத்தியதோடு இல்லாமல் இந்தக்குறிப்பிட்ட காட்சியில் ருக்குவின் கண் இமைகள் மூடாது என்னும் அறிவிப்பும் கொடுத்து நம்மைக் கவனிக்க வைக்கிறார். தேர்ந்தெடுத்திருக்கும் ஊரும், அங்குள்ள வீடுகளும் நம்மை 1930 ஆம் ஆண்டுகளுக்கே அழைத்துச் செல்கிறது. இதெல்லாம் தான் நம் மனதைக் கவர்ந்து இழுக்கிறது. நல்லவேளையாகப் பிரபலமான நடிகர்களோ/நடிகைகளோ இதில் நடிக்கவில்லை. இருந்திருந்தால் முகத்தின் அஷ்டகோணல்களால் கெடுத்திருப்பார்கள். யதார்த்தம்/இயல்பான நடிப்பு என்றால் என்னவென்று இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு நடுவில் தான் ஊர்ப் பிரஷ்டம் செய்ததால் தந்தை இறந்து அநாதை ஆன ருக்குவைத் தன் பிள்ளைக்கே மணம் முடிக்க நினைக்கிறார் கனபாடிகள். கல்யாணங்களும் நடக்கின்றன. ருக்குவின் கல்யாணத்தோடு சேர்ந்து காமுவுக்கும் கல்யாணம். சின்னப்பிள்ளை/சின்னப் பெண். பார்க்கக் கண்ணுக்கு அழகான ஜோடி. அவர்களை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பும் ருக்குவின் வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது. வீட்டில் எல்லோரும் அவளுடன் எப்படிப் பழகினார்கள்? ருக்குவின் திட்டம் என்ன? ஒவ்வொன்றாய் விரிகிறது "கர்மா" கனபாடிகள் செய்த இந்தத் தவறு அவர் குடும்பத்தை நான்கு தலைமுறைகளுக்குப் பிடித்து ஆட்டக்குடும்பம் பிரிந்து பின்னர் ஐந்தாம் தலைமுறையில் ஒன்று சேரும் என்பது ஆரூடம். இன்னும் இந்தத் தலைமுறையில் பிரிவே ஆரம்பிக்கலை. இனி போகப் போக மற்றவை.
*********************************************************************************
பேருந்துகள் இயங்காததால் சரிவர மருந்துகள் வராமல் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதமாகக் கரூரில் வெங்கட்ரமணா மருத்துவசாலையில் இருந்து ஆயுர்வேத மருந்துகள் வரவே இல்லை. நமக்கோ இப்போப் பார்த்து மருந்துகள் தீர்ந்து போக! எல்லாம் சேர்ந்து பதினைந்து நாட்களுக்கும் மேல் படாத பாடு பட்டாச்சு. ஒரு வழியா இன்னிக்குத் தான் கரூரில் இருந்து ஆயுர்வேத மருந்துகளும் மருந்துக்கடைக்கு வந்து சேர்ந்தன. தேவையான மருந்துகளை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இனி கால் பிரச்னைகள் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும் சமையல் செய்ய ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் ஆகலாமோ எனத் தோன்றுகிறது. காலை ஊன்றி நிற்க முடிந்தால் பின்னர் ஆரம்பித்து விடுவேன். இந்த உஷா மாமி சமையல் பரவாயில்லை. ஆனால் இட்லி, தோசை,உப்புமா என பயமுறுத்துகிறார். தோசை எல்லாம் கறுப்பாகக் கையில் ஒட்டிக் கொள்கிறது. இட்லி என்பது இரண்டு இட்லிகளை ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வைச்சாப்போல் உள்ளே முடிச்சாக இருக்கு. உப்புமா என்னும் பெயரில் நேற்று சாதத்தைத் தாளித்துக் கொடுத்து விட்டார். நொய்யில் பண்ணி இருக்கார் என நம்ம ரங்க்ஸ் சொன்னாலும் நானும் மாமியார் வீட்டில் கருவிலியில் பச்சரிசி நொய்யில் பண்ணின அரிசி உப்புமா சாப்பிட்டிருக்கேன். தேங்காய்ச் சாதம் போல அவ்வளவு ருசியாக இருக்கும். நேத்திக்குச் சாப்பிடவே முடியலை. ஒரு மாதிரியா உள்ளே தள்ளினோம். இன்னிக்கு அடைனு சொல்லி இருக்காங்க! ஆஹா! என்ன அழகு! அடையைச் சாப்பிட்டுப் பழகு! என வைகோ சொன்னாப்போல் அடை இருந்துட்டால் நல்லது. பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! உம்மாச்சி, காப்பாத்துங்கப்பா!