சென்னைப் புறநகர் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு படுகொலை. காரணம் அதே ஒரு தலைக்காதல் தான். கொடூரமாகப் பெண்ணை ரயில் வரும்போது பிடிச்சுத் தள்ளி இருக்கான் படுபாவி. அந்த அதிர்ச்சியில் அந்தப் பெண்ணின் தந்தையும் விஷம் குடித்து இறந்திருக்கார். இத்தனைக்கும் காவல்துறையில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள். திருமணம் நிச்சயம் ஆகி இருந்த அந்தப் பெண் எத்தனை எத்தனை கனவுகளோடு இருந்திருப்பாள்? இப்போதெல்லாம் இளவயதுச் சாவுகள் அதிகம் ஆகிக் கொண்டிருக்கின்றன. காதல் தோல்வி, தேர்வில் தேர்ச்சி பெறாமை எனப் பல காரணங்கள் மொத்தத்தில் யாருக்கும் எதையும் எதிர்கொண்டு போராடி ஜெயிக்க வேண்டும் என்னும் எண்ணமே இல்லை. கிடைக்கலையா? உடனே உயிரை விடணும். அவ்வளவு தான்.
தன்னைப் பிடிக்காத பெண்ணை வற்புறுத்துவதே தப்பு எனத் தெரியலை அந்தக் கொலைகாரனுக்கு. தனக்குக் கிடைக்கலைனா யாருக்கு ம் கிடைக்கக் கூடாது என்னும் கெட்ட எண்ணமே! அப்படியே வற்புறுத்தித் திருமணம் செய்து கொண்டாலும் சந்தோஷமாக வாழ முடிந்திருக்குமா? இது ஏன் ஆண்கள் மனதில் இப்படி ஒரு கொலைவெறி வருகிறது? இரு மனங்களும் ஒத்து இருக்க வேண்டாமா? பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி அந்தப் பையனுக்குக் கட்டி வைத்தால் அவன் மனம் என்ன பாடு படும்? அது போலத்தானே அந்தப் பெண்ணிற்கும்? இவனைப் பிடிக்கலை. அவள் மனதிலும் ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா? இவன் வற்புறுத்தினால் உடனே சம்மதம் தான் சொல்லணுமா என்ன?
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சின்னஞ்சிறு சிறுவர்கள்/சிறுமிகள் நட்ட நடுச் சாலையில் பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில் தாலிகட்டித் திருமணம் செய்து கொள்வதும் அதை நண்பர்கள் படம் எடுத்து வாட்சப்பில் போடுவதும். திருமணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாத இளம் வயதில் இவங்க திருமணம் செய்து கொண்டு எங்கே/எப்படி வாழப் போகின்றனர்? இதை என்னமோ விளையாட்டு என நினைத்துவிட்டார்களா? நாள் பார்த்து நேரம் குறித்துப் பொருத்தங்கள் பார்த்துச் செய்யும் திருமணங்களே நிலைப்பதில்லை. இவங்க திருமணம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? அந்தப் பெண்ணிற்குத் திருமணம் பற்றியோ அதன் பொறுப்புக்கள் பற்றியோ என்ன தெரியும்? அடுத்த வேளைக் காஃபி அல்லது தேநீருக்குப் பெற்றோரைத் தேட வேண்டிய வயது.
திருமணத்தின் பொறுப்புக்கள் என்னவென்று இருவரும் அறிவார்களா? சும்மா இப்படி எல்லாம் செய்து தங்களைக் கதாநாயகன்/கதாநாயகி எனக் கருதிக்கொள்ளும் வெற்று வேட்டுத்தனம் தான். அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குக் கூடப் பெற்றோரை எதிர்பார்க்கும் வண்ணம் இருக்கும் அந்தச் சிறுவன் இதன் மூலம் தான் பெரிய திரைப்படக்கதாநாயகன் ஆகிவிட்டோம் என எண்ணிக் கொள்கிறானோ என்னமோ! நல்லவேளையாக அவனைக்கைது செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்லுகின்றன. மேலே என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாணவ மாணவியருக்குச் சிறு வயதில் இருந்தே நீதி, நேர்மை, தர்மம், நியாயம் எனச் சொல்லிக் கொடுக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதில் வரும் ஆடல்/பாடல்/கூத்துக்களையும் பார்க்க வைத்து இது தான் உலகம் என்று சொல்லிக் கொடுத்த பெற்றோரே இதற்குக் காரணமான குற்றவாளிகள். தொலைக்காட்சி ஊடகங்களின் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையே குழந்தைகள் மனதில் சின்ன வயசிலேயே நஞ்சை ஊட்டி விட்டு விடுகிறது. மின்மினியைப் போல் சில கண நேரமே ஒளி கொடுக்கும் இவை குழந்தைகள் மனதை அடியோடு கெடுத்து விடுகிறது. இவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பது எங்கனம் சாத்தியம்? வருங்காலம் என்பது இவர்களைப் போன்றவர்களால் எப்படி இருக்கும்? ஒரே ஆறுதல் இதை எல்லாம் பார்க்க நானெல்லாம் இருக்க மாட்டேன் என்பதே!
தொடரலாம்.