போன பதிவில் குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து மனோஜ் வாஜ்பாய் நடிச்ச ச்ரிஃப் ஏக் பண்டா காஃபி ஹை படமும் தி க்ரேட் இந்தியன் கிச்சன் படமும் பார்த்து விட்டேன். கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவராம். இவர் நடித்த படம் எதுவும் பார்த்தது இல்லை. இதான் முதல் படம். மிக இயல்பாய் நடிச்சிருந்தார். அவர் கணவர், மாமனார், மாமியாரெல்லாம் யாரெனத் தெரியலை. ஆனால் படம் மிக நன்றாக இயல்பாக எடுக்கப்பட்டிருந்தது என்பதோடு எனக்கு என்னோட கல்யாண வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்களையும் நினைவூட்டியது. இப்படித்தான் சமையலறையே கதியாக எனக்கும் இருக்க நேர்ந்தது. ஆனால் ஆரம்ப காலங்களில் வேலைக்குச் சென்றேன். பின்னரும் அவசரத்திற்காக வெளியே சென்றதுண்டு. எல் ஐசி முகவர், தபால் அலுவலக சிறு சேமிப்பு முகவர், புடைவை வியாபாரம், குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தல் எனச் செய்திருக்கேன். இதைப் பற்றி நிறைய எழுதியாச்சு என்பதால் நிறுத்திக்கறேன்.
எனக்கென்னமோ இந்தப் படம் முதலில் ஆங்கிலத்தில் வந்து அம்பேரிக்காவில் மட்டுமே வெளியிட்டதாக ஒரு நினைப்பு. ஆனால் இது முழுக்க முழுக்கத் தமிழ்ப்படம். நல்லவேளையாக வசனங்கள் புரிந்தன. சில படங்களில் என்ன மொழி என்றே தெரியாமல் வசனங்களை அரைக்குரலில் பேசுகின்றனர்.ஆனால் இது 2021 ஆம் ஆண்டில் முதலில் மலையாளத்தில் வந்து பின்னர் தமிழில் எடுத்திருக்காங்க. அதனால் சுவையோ, படத்தின் தரமோ குறையவில்லை. சாதாரணமாக வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றும்போது நடிக, நடிகையருக்கு ஏற்பக் காட்சிகள், வசனங்கள் என மாற்றுவது உண்டு. பல படங்களை அப்படி மாற்றி இருக்காங்க. ஆனால் நல்ல வேளையாக இதில் மாற்றவே இல்லை. சமையலறையையே திரும்பத் திரும்பப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாமல் பட ஓட்டம் நம்மை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. மலையாளத்திலும் கிடைக்குதானு பார்க்கணும். இப்போ ராக்கெட்ரி படம் பார்த்துக் கொண்டு இருக்கேன். காலில் ஆங்காங்கே கோடையினால் ஏற்படும் புண்களால் அதிக நேரம் லாப்டாப்பை வைச்சுண்டு உட்கார முடியலை. அவ்வப்போது வந்து போகிறேன். மின் நூல்கள் வெளியிட வேண்டிப் பதிவுகளில் இருந்து தொகுத்து வைக்கணும். ஆனால் அதற்கு உட்கார முடியலை.
அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மோதியின் பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை ஆச்சரியத்துடன் பார்த்தோம். இந்தியாவின் நிலைமை முன்னெப்போதையும் விட இப்போது மதிப்பும், மரியாதையும் கொண்டு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு இது இப்போதும் குற்றமாகவே தெரிவது ஏன் எனப் புரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையும் தலைகீழாக இருப்பதையும் காண முடிகிறது. ஆனாலும் அதைக் கண்டிப்போரும் இல்லை. எல்லோரும் மத்திய அரசின் நிலையையே முக்கியமாக மோதியையே குறை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்! இது பற்றி விரிவாக எழுதப் போனால் சர்ச்சைக்கு உரிய பதிவாகிவிடும். ஆகவே நிறுத்திக்கிறேன்.