எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 24, 2023

மாமியார் உடைத்தால்!

 போன பதிவில் குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து மனோஜ் வாஜ்பாய் நடிச்ச  ச்ரிஃப் ஏக் பண்டா காஃபி ஹை படமும் தி க்ரேட் இந்தியன் கிச்சன் படமும் பார்த்து விட்டேன். கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவராம். இவர் நடித்த படம் எதுவும் பார்த்தது இல்லை. இதான் முதல் படம். மிக இயல்பாய் நடிச்சிருந்தார். அவர் கணவர், மாமனார், மாமியாரெல்லாம் யாரெனத் தெரியலை. ஆனால் படம் மிக நன்றாக இயல்பாக எடுக்கப்பட்டிருந்தது என்பதோடு எனக்கு என்னோட கல்யாண வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்களையும் நினைவூட்டியது. இப்படித்தான் சமையலறையே கதியாக எனக்கும் இருக்க நேர்ந்தது. ஆனால் ஆரம்ப காலங்களில் வேலைக்குச் சென்றேன். பின்னரும் அவசரத்திற்காக வெளியே சென்றதுண்டு. எல் ஐசி முகவர், தபால் அலுவலக சிறு சேமிப்பு முகவர், புடைவை வியாபாரம், குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தல் எனச் செய்திருக்கேன். இதைப் பற்றி நிறைய எழுதியாச்சு என்பதால் நிறுத்திக்கறேன்.

எனக்கென்னமோ இந்தப் படம் முதலில் ஆங்கிலத்தில் வந்து  அம்பேரிக்காவில்  மட்டுமே வெளியிட்டதாக ஒரு நினைப்பு. ஆனால் இது முழுக்க முழுக்கத் தமிழ்ப்படம். நல்லவேளையாக வசனங்கள் புரிந்தன. சில படங்களில் என்ன மொழி என்றே தெரியாமல் வசனங்களை அரைக்குரலில் பேசுகின்றனர்.ஆனால் இது 2021 ஆம் ஆண்டில் முதலில் மலையாளத்தில் வந்து பின்னர் தமிழில் எடுத்திருக்காங்க. அதனால் சுவையோ, படத்தின் தரமோ குறையவில்லை. சாதாரணமாக வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றும்போது நடிக, நடிகையருக்கு ஏற்பக் காட்சிகள், வசனங்கள் என மாற்றுவது உண்டு. பல படங்களை அப்படி மாற்றி இருக்காங்க. ஆனால் நல்ல வேளையாக இதில் மாற்றவே இல்லை. சமையலறையையே திரும்பத் திரும்பப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாமல் பட ஓட்டம் நம்மை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. மலையாளத்திலும் கிடைக்குதானு பார்க்கணும். இப்போ ராக்கெட்ரி  படம் பார்த்துக் கொண்டு இருக்கேன். காலில் ஆங்காங்கே கோடையினால் ஏற்படும் புண்களால் அதிக நேரம் லாப்டாப்பை வைச்சுண்டு உட்கார முடியலை. அவ்வப்போது வந்து போகிறேன். மின் நூல்கள் வெளியிட வேண்டிப் பதிவுகளில் இருந்து தொகுத்து வைக்கணும். ஆனால் அதற்கு உட்கார முடியலை.

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மோதியின் பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை ஆச்சரியத்துடன் பார்த்தோம். இந்தியாவின் நிலைமை முன்னெப்போதையும் விட இப்போது மதிப்பும், மரியாதையும் கொண்டு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு இது இப்போதும் குற்றமாகவே தெரிவது ஏன் எனப் புரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையும் தலைகீழாக இருப்பதையும் காண முடிகிறது. ஆனாலும் அதைக் கண்டிப்போரும் இல்லை. எல்லோரும் மத்திய அரசின் நிலையையே முக்கியமாக மோதியையே குறை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்! இது பற்றி விரிவாக எழுதப் போனால் சர்ச்சைக்கு உரிய பதிவாகிவிடும். ஆகவே நிறுத்திக்கிறேன்.

40 comments:

  1. யார் எங்கு பேசி பயன் ?
    ஏழைகளுக்கு அரிசி விலை குறையுமா ?
    நடுத்தர வர்க்கத்தினருக்கு பெட்ரோல் விலை குறையுமா ?

    ReplyDelete
    Replies
    1. ஏழைகளுக்கான அரிசி குறைந்த விலையில் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு தன் தொகுப்பில் இருந்து கொடுத்து வருகிறதே கில்லர்ஜி! இந்த ரேஷன் விஷயமே மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாநில அரசு ஒண்ணும் பெரிசாச் செய்யலை. இப்போக் கொடுக்கும் அரிசியைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுமானால் எல்லோருமாகக் கேட்கலாம். ஏனெனில் வியாபாரிகளுக்குக் குறைந்த விலையில் விற்கப் போவதாக மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கு. அதுவும் வேண்டும் தான். கூடவே இதுவும்.

      Delete
  2. நீங்கள் சொன்ன இரண்டு படங்களும் நானும் பார்த்து விட்டேன்.  கிச்சன் படத்தில் மாமனார் பாத்திரமெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது.  மேலும், நீங்கள் அயோத்தி படத்தில் சொன்ன சில 'குறியீடுகள்; சம்பந்தமே இல்லாமல் இந்தப் படத்திலும் வரும்.  கவனிக்கவில்லையா?  அதேபோல படத்தைப் பார்க்கும் வெளிநாட்டவர் எல்லா இந்திய கிச்சனும் இப்படிதான் இருக்கும் என்று நினைக்கவும் கூடும்.  இன்றைய இந்திய கிச்சன் நிலைமை அப்படியா இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், பெரிய பெரிய உயர் மத்தியதரக் குடும்பங்களில் வேண்டுமானால் சமையலறையில் அதிகம் வேலை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் பல வீடுகளின் சமையலறையும் இப்படித்தான் ஸ்ரீராம். நம்ம தில்லையகத்து சகோதரர் கூட சாதம் மட்டும் மண்பானையில் விறகு அடுப்பில் வைப்போம் என ஒரு முறை சொன்ன நினைவும் இருக்கு. மாறியது 50 சதம் எனில் மாறாதவர்கள் 50 சதம். எனக்கு இப்போக் கூடச் சில நாட்கள் காலை எழுந்ததில் இருந்து பனிரண்டு மணி வரை தொடர்ந்து வேலை இருக்கத் தான் செய்கிறது. பார்த்தால் தான் புரியும்.

      Delete
  3. ராக்கெட்ரி வந்தபோதே படம் பார்க்க ஆரம்பித்து ஏனோ போர் அடித்து நிறுத்தி  விட்டேன்.  பார்க்கவில்லை! நேற்று OTT மேய்ந்தபோது கேரளா பைல்ஸ் கண்ணில் பட்டது.  வாடகைக்காம்.  இன்னும் ஓரிரு வாரம் பொறுத்திருந்தால் எல்லோரும் பார்க்கும் வண்ணம் கிடைக்கும்.  அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. அகிலன் படம் அப்படி போர் அடிச்சு நானும் நிறுத்திட்டேன். ராக்கெட்ரி இப்போ 2,3 நாட்களாக வேலை ஜாஸ்தி என்பதால் பார்க்க உட்காரலை. எனக்கு த்ருஷ்யம் 2 படமே இன்னமும் இலவசத்திற்கு வரலை. வாடகைக்கு என்பதோடு எக்ஸிஸ்டிங் சப்க்ரிப்ஷனில் பார்க்கலாம் என்றார்கள். பார்க்கலை.

      Delete
  4. அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது.  இதைப் பிடித்து மேலே வரலாம் என்று கையை நீட்டி கிடைத்ததை எல்லாம் பற்றிக் கொள்ள பறக்கிறார்கள்.  நம் தமிழ்நாட்டு நிலைமையும் அப்படிதானிருக்கிறது. நான் வாங்க வேண்டிய கடன் தொகையை மீறி விட்டோம் என்று நினைக்கிறேன்.  அநியாய இலவசங்கள்.  டாஸ்மாக் வருமானத்தை வைத்து ஓட்டலாம் என்று பார்த்தால் அது அவர்கள் பாக்கெட்டுக்கே போதவில்லை.  சீக்கிரமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே பணமில்லை என்று சொன்னாலும் சொல்லும் திராவிட மாடல் விடியல் ஆட்சி.

    ReplyDelete
    Replies
    1. இந்த விடியா அரசுக்கு அதெல்லாம் புரியுமா என்ன? தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கணுமே என்னும் பதட்டம் தான் இருக்கு.

      Delete
  5. //இதைப் பிடித்து மேலே வரலாம் என்று//

    'எதைப் பிடித்து மேலே வரலாம்' என்று படிக்கவும்!

    ReplyDelete
  6. தலைப்பு பதிவுக்கு எந்த விதத்தில் நியாயம் செய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  7. The great Indian kitchen, எனக்கு மிகவும் பிடித்த படம். ஒன்றே ஒன்றைத் தவிர. இடையில் ஐயப்ப மலை பிரச்சனையைக் கொண்டு வந்திருப்பாங்க. அந்த விஷயம் அதாவது வீட்டு விலக்கல் பற்றி சொல்வதை அப்படித்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. மதம் எதுவும் இணைக்காமல் வேறு விதத்தில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. மற்றபடி படம் நம்மைப் போன்ற பல பெண்களுக்கும் பொருந்திப் போகும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இங்கேயும் ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்வது எல்லாம் உண்டு. கடைசியில் இருமுடி பூஜையின் போது தானே கதாநாயகி சாக்கடை நீரால் கணவனையும், மாமனாரையும் அபிஷேஹம் செய்துட்டுப் பிறந்த வீடு செல்கிறாள்.

      Delete
  8. எனக்கு மத்திய அரசு வேலை கிடைத்தும் சரியாக கல்யாணம் அதே சமயத்தில் நிச்சயம் செய்யப்பட்டதும் வேலைக்கான ஆணை கல்யாணத்திற்குப் பிறகு வரவும், வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொன்னதும் மனம் கொஞ்சம் அல்ல நிறையவே சங்கடப்பட்டதுதான். பிறந்த வீட்டில் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க அம்மா அப்பாவுக்கு நான் சம்பாதித்து உதவலாமே என்று இருந்தேன் கல்யாணம் கூடச் செய்துக்காம இருக்க வேண்டும் என்றும் இருந்தேன். கல்யாணத்தில் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் பல கட்டாயங்கள் குடும்பத்தில்.

    ஆனால் அதன் பின் வாழ்க்கை வேறு விதமாக, எனக்குப் பொதுவாக எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை என்றாலும் அந்த எதிர்பார்ப்புகள் இல்லாத லிஸ்டில் சுத்தமாகக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வாழ்க்கை...சம்பவங்கள். இடையில் சிறு சிறு வேலைகள் அவ்வப்போது....ஆனால் சில வருடங்களுக்கு முன் நம்ம வயசுக்கு, காது குறைபாடு என்பதால் அலுவலக வேலைகள் கிடைக்க சிரமம் என்ற நிலையில் வெளியில் சென்று வீட்டு வேலைகள், சமையல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது...இப்போது அதெல்லாம் மாறி வீட்டிலிருந்து அவ்வப்போது ஏதோ சின்ன வேலைகள் கணினி வழி என்று ஓடுகிறது.

    மகனின் கற்றல் குறைபாடு அதைச் சமாளித்து ..இன்று அவன் தன் காலில் நிற்கும்படியாக.....இப்போது திரும்பிப் பார்த்த போது வேலைக்குச் செல்லாதது எல்லாம் நமக்கு எது நடக்க வேண்டுமோ அது நல்லபடியாக நடக்கத்தான் என்ற சமாதானம்.

    அந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை கிடைச்சது. வேலையில் சேரும் தினம் அன்று கல்யாணம். பின்னால் போகலாம் என்றால் வங்கியில் ஒத்துக்கலை. திரும்ப ஒரு முறை இன்டர்வியூ எடுப்பது கஷ்டம்னு சொல்லிட்டாங்க/ இப்போவும் நினைச்சுப்பேன். வங்கி வேலையில் இருந்திருந்தால் ஒரு வேளை நான் வேலையையே விட்டிருக்க மாட்டேன். வாழ்க்கைப்பாதையே முற்றிலும் மாறி இருக்கும் இல்லையா?

      Delete
    2. நானும் குடும்பத்தை ஓட்டுவதற்குச் சின்னச் சின்ன வேலைகள் பார்த்தேன்.

      Delete
  9. நான் மலையாளத்தில்தான் பார்த்தேன். தமிழில் அப்ப அந்தப் பகுதி இல்லையோ சபரிமலை அந்த விவகாரப் பகுதி இல்லையோ?

    கீதா

    ReplyDelete
  10. ராக்கெட்ரி - நிச்சயமாக அவர் தவறு செய்யவில்லை. ஆனால் மற்றபடி நோ கமென்ட்ஸ்

    கீதா

    ReplyDelete
  11. உங்கள் உடல் நிலை இப்போ தேவலாமா? புண்கள் ஆறிவருகின்றனவா, கீதாக்கா?

    இது முதலில் போட்ட கமென்ட் போகவில்லை எரர் எரர் என்று வந்தது...இப்போது போட்டால் போகும் என்று நினைக்கிறேன் ஏற்கனவே 2, 3 போய்விட்டதே

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வந்திருக்கு.

      Delete
  12. அம்பேரிக்காக்காரன் எது சொன்னாலும் சொல்லட்டும்.. நாங்க ஒத்துக்கவே மாட்டோம்... அவன் சுயநலக் காரன்... அவனோட பிசினசுக்காக எதை வேணாலும் சொல்லுவான்!..

    நாங்க அப்படியா?..

    கள்ள நோட்டு அடிக்க முடியலே.. கஞ்சா கடத்த முடியலே.. இன்னும் எத்தனயோ முடியலே..

    அதுனால - மோடீய்.. ஒயிக!.. தான்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், முன்னாள் அதிபர் என்பதால் ஒபாமா சொன்னதையே பெரிசு பண்ணிப் பார்க்கும் ஊடகங்கள் மோதி தொடர்ந்து பல இஸ்லாமிய அரசுகளால் கௌரவிக்கப்படுவதைச் சொல்வதே இல்லை. அதனால் இதை எல்லாம் பெரிசாக்க வேண்டாம். மோதியைத் திட்டறவங்க திட்டிட்டுப் போகட்டும். எம்.ஜி.ஆர். திருப்பதி போனதையும் கொல்லூர் முகாம்பிகையைப் பார்த்ததையும் வாள் கொடுத்ததையும் பெருமையாகக் கருதுபவர்கள் தாம் மோதி கடவுளரை வணங்குவதையும் நவராத்திரி விரதம் இருப்பதையும் இந்துக்கடவுள்களுக்கும் இந்து மதப் புண்ணியத் தலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் விமரிசிக்கின்றனர்.

      Delete
  13. சீரியல்கள் பிற்பாடுதான். அதற்கு இப்போ நேரமில்லை.

    பிரதமரின் பயணம் சிறப்பாக அமைந்தது. அவருக்கு சமாதானத்திற்கான நோபல் கிடைக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சீரியலா? என்ன சீரியல்? காலம்பரச் சாப்பிடத்தானே? அதை ஏன் தள்ளிப் போடணும்? நான் பார்த்தது/பார்க்கப் போவது எல்லாம் திரைப்படங்கள். இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  14. த கிரேட் இந்தியன்கிச்சன் படம் நானும் பார்த்தேன் பரிதாபம்தான்.
    ஐஸ்வர்யா ராஜேஸ் இயல்பாக நடிப்பார் வேறுபடங்களும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நான் தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லை. ஏனெனில் கூச்சலும் சப்தமும் ரத்தமுமாக இருக்கிறது. பார்க்கப் பிடிக்கவில்லை. ஆகவே ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை.

      Delete
  15. Replies
    1. என்ன சொல்லி இருந்தீங்களோ? எந்த மெயிலும் வரலை. ட்ராஷில் கூடத் தேடிட்டேன். ஸ்பாமில் இருக்கானு பார்க்கிறேன்.

      Delete
  16. வணக்கம் சகோதரி

    நலமா? அக்கியின் சிரமங்கள் குறைந்துள்ளதா? நீங்கள் பார்த்த படங்களின் விமர்சனங்கள் நன்றாக இருந்தன. சிலசமயம் படங்களின் கதைகள் நம் வாழ்விலும் ஒத்துப் போனவையாக இருந்து விடுவதுண்டு. நீங்களும் இளவயதில் மிகவும் தைரியமான பெண்ணாக நின்று நிறைய சாதித்துள்ளீர்கள். இப்போதும், உடல் நலத்தில் ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் வீட்டு நிர்வாகத்தை சரிவர செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

    இந்த மாதிரி படங்கள் வேலைகளுக்கு நடுநடுவே பார்ப்பது நல்ல விஷயம். நமக்கும் ஒரு மனது சந்தோஷத்தை, மாறுதலை தரும்.நான் முன்பெல்லாம் இப்படி பழைய படங்களை தொ. காட்சியில் எப்போதாவது பார்ப்பேன். அப்போது இந்த மாதிரி புதுப்படங்களை நம் விருப்பப்படி எப்போதும் பார்க்கும் வசதிகள் இருந்ததில்லை. இப்போது இருந்தும் ஏனோ, பார்ப்பதில்லை. இப்போது மகள் சொல்லி முழுதுமாக ஒரு படம் பார்த்தேன். அதிலும் நீங்கள் சொன்ன அந்த நடிகைதான் நடித்திருந்தார்.

    அரசியல்... அவ்வளவாக தெரியாது. ஆனால், நமது பிரதமரை உயர்வாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
    இரண்டொரு நாட்கள் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, அக்கி முழுதுமாக மறைந்து தழும்புகள் மட்டுமே இருக்கின்றன. காலப்போக்கில் அதுவும் மறையும் என நினைக்கிறேன். குப்பைமேனியோடு வேப்பிலை, மஞ்சள் வைத்து அரைத்துத் தேய்ச்சுக்கிறேன். ஆகவே தழும்புகள் மறைந்து விடும். நானும் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது இல்லை. எங்க வீட்டில் ஸ்மார்ட் டிவி எனப்படும் தற்காலத்திய தொலைக்காட்சிப் பெட்டியும் இல்லை. 2000 ஆவது ஆண்டில் வாங்கிய ஃபிலிப்ஸ் தொலைக்காட்சிப் பெட்டி தான். 23 வருடங்கள் ஆகின்றன. படம் நல்ல தெளிவாகவும் வண்ணப்படங்களின் வண்ணம் நன்றாகவும் தெரிகிறது. ஒரு தரம் ஐசி மாற்றினப்போப் பார்த்துவிட்டு மெகானிக் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி மாதிரி இப்போக் கிடைக்காது சார் என்றார். குழந்தைகள் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் இதை மாற்றச் சம்மதிக்கவில்லை.

      Delete
    2. ஜியோ இணையச் சேவையிலும், பிஎஸ் என் எல் ஃபைபர்நெட் சேவையிலும் இலவசமாய்ப் படங்கள் பார்க்கலாம். அதிலும் சில குறிப்பிட்ட படங்களுக்குப் பணம் உண்டு. ஆகவே இலவசம் எனப் போட்டிருக்கும் படங்கள் மட்டுமே அவ்வப்போது பார்ப்பேன். பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில் பார்ப்பேன். நான் பார்த்த படங்கள் அனைத்துமே இலவசத்தில் வந்தவை தான். இந்த வாரம் சன் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் முதல் பகுதி காட்டினாங்க. பார்க்க உட்கார்ந்தால் அன்னிக்குனு பார்த்துப் படம் வருது, குரல்கள், இசை ஏதும் வரலை. சரினு சானலை மாத்தி மறுபடி கொண்டு வரப் போனால் சுத்தம்! எல்லாமும் போய் விட்டது. மறுநாள் தான் நம்ம ரங்க்ஸ் அதைச் சரி பண்ணினார். முதல்நாள் ஏன் வேலை செய்யலைனு புரியலை! :(

      Delete
  17. ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நடிகை, ஆனால் கிளாமர் கோஷண்ட் குறைவாக இருப்பதாலோ என்னவோ கமர்ஷியல் படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. காக்கா முட்டை படத்தில்(அப்படி ஒரு படம் வந்ததா? என்று கேட்கக்கூடாது, நிறைய விருதுகள் வாங்கிய படம். நல்ல படமும் கூட, பார்க்கா விட்டால் உடனே பாருங்கள்) அந்தப் பையன்களின் தாயாக வருவார். அனால் சின்ன வயதில் அப்படி அம்மாவாக நடித்தது தவறு என்று கூறியிருந்தார். செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜெய்க்கு ஜோடியாக இலங்கைத் தமிழ் பேசும் பெண்ணாக வருவார். ஆனால் பெரிய ரோல் கிடையாது. ஐஸ்வர்யா ராஜேஷை விட்டு விட்டு கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு வருகிறேன்.
    கி.இ.கி. மலையாளம் படத்தை கீதா ரங்கனும், ஆன்சிலாவும் ரெகமண்ட் பண்ணியதால் பார்த்தேன். எனக்கு பிடித்தது. என்னோடு பார்க்க ஆரம்பித்த என் மகன், "போம்மா, கிச்சனையே காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று எழுந்து போய் விட்டான். கடைசியில் ஐயப்ப பக்தர்கள் மீது சாக்கடை தண்ணீரை ஊற்றுவதுதான் இயக்குனரின்(கிருத்தவர்) நோக்கம் என்று தோன்றியது. சபரி மலையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு எதிர்ப்பு. இதன் தமிழாக்கத்தை மத்யமரில் கழுவி ஊற்றி விட்டார்கள்.
    கேரளாவைப் பற்றி தெரியாது, தமிழகத்தில் இப்படிப்பட்ட வீடுகள் கிராமங்களில் கூட இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கிராமங்களில் நீங்கள் பார்க்கலையோ என நினைக்கிறேன். இங்கே சுமார் இருபது வருடங்கள் முன்னர் வரை கூட நான் இப்படித்தான் சமையலறையே கதியாக இருக்க நேர்ந்தது. சிலவற்றை வெளிப்படையாய்ச் சொல்ல முடியாது. ஆனால் ஐயப்ப பக்தர்களை அவமானம் செய்தது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. அதை இங்கே கொண்டு வந்தது தான் இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் போல!

      Delete
  18. நான் இந்த படங்கள் பார்க்கவில்லை.
    உடல்நிலை சரியாகி வரும் என்று நினைக்கிறேன்.
    வெயில் அதிகமாக இருந்தால் கஷ்டமே, உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்குக் கொஞ்சம் காற்று அடிக்கிறது. என்றாலும் வெயிலும் இருப்பதால் சூடும் இருக்கு. ஏதோ நாட்கள் ஓடுகின்றன.

      Delete