எச்சரிக்கை
Have a great day.
Tuesday, November 28, 2023
கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!
Monday, November 13, 2023
உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி!
குளிக்கப் போகும் முன்னர் எல்லாம் எடுத்து வைச்சிருந்த படம். சம்புடங்களில் பக்ஷணங்கள். ரிப்பன் பகோடா, மிக்சர், பாதுஷா, லட்டு ஆகியவை மட்டும். வீட்டில் நான் செய்த பாதம் பர்ஃபி அல்வா, என்னும் பெயரில். மருந்துப் பொடி கடையில் வாங்கியது இந்த வருஷம் அதைக் கிளறினால் கமர்கட் மாதிரி வந்திருக்கு. என்னோட தீபாவளி மருந்துக்கு ரசிகர்கள் நிறைய உண்டு ஒரு காலத்தில் பாராட்டினவங்க எல்லோரும் இதைப் பார்த்தால் நீயா செய்தது எனக் கேட்டு வியப்பார்கள். :( வயசாச்சு/அதான் உனக்கு முடியலைனு எல்லோரும் சொன்னாலும் அது நொண்டிச்சாக்கு என எனக்குத் தோணும்.
எல்லோரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க. இங்கேயும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சது. ஒரு வாரமாகவே வெடிச் சப்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பயங்கரமான வெடிச் சப்தம். நேற்று மத்தியானமெல்லாம் படுக்கவே முடியலை. சாயந்திரமாக் குஞ்சுலு வந்தப்போப் பேசவே முடியலை. அதுக்கும் வெடிச் சப்தம் கேட்கணும்னு இருந்ததாலே கேட்டுட்டு இருந்தது. இரண்டு, மூன்று நாட்களாகவே தீபாவளி பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தது குஞ்சுலு. என்னிடம் பாட்டி, தீபாவளி கொண்டாடியதும் எனக்குப் படம் எடுத்து அனுப்பு என்றது.
நான் இந்த வருஷம் எந்த பக்ஷணமும் பண்ணவில்லை. போன வருஷம் தேன்குழல் மட்டும் பண்ணிட்டு லாடு ஏதோ பிடித்தேன். இந்த வருஷம் பாதம் பர்ஃபி பண்ணலாம்னு பண்ணினால் அது பாதாம் அல்வாவாக வந்திருக்கு. சரினு பெயரை மாத்திட்டு அதையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நம்ம ரங்க்ஸ் நீ தேன்குழலெல்லாம் பண்ணாதேனு திட்டவட்டமாகச் சொல்லிட்டார். அதை மீறிட்டு என்ன செய்ய முடியும்? காடரர் கிட்டே ஆர்டர் செய்த பக்ஷணங்களையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு.
குட்டிப் பட்டுக் குஞ்சுலு நாங்கல்லாம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நேத்திக்கு அதுவாகவே சீக்கிரமாய் எழுந்து கொண்டு அவ அம்மாவிடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்லிக் குளித்துப் புது ட்ரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு எங்களிடம் காட்டியது. பாட்டி, நீ சொன்ன மாதிரி நானும் தீபாவளி கொண்டாடினேன் என்று சொன்னது. பட்டாஸுகள் வெடிப்பதைக் கேட்க வேண்டும்/பார்க்க வேண்டும் என்று ஆசை. நமக்கோ அந்தப் புகையே ஒத்துக்காது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ நம்ம வளாகத்தின் வெளியே மேற்குப் பக்கமாக வெடி வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாங்க. உள்ளே வெடிச்சால் கார் பார்க் நிரம்பி வழிஞ்சது. ஆகவே பாதுகாப்பைக் கருதி வெளியே வெடிச்சாங்க. அதை அசோசியேஷன் தலைவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்திருந்தார். சரினு குஞ்சுலுவுக்கு அதை அனுப்பிட்டேன். அதுவும் பார்த்து ரசிச்சது.
சென்னையை விட்டு வந்தப்புறமாச் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்ச மாதிரி தீபாவளி கலெக்ஷனும் குறைஞ்சு போச்சு. எதிர் வீடுங்க இரண்டு மட்டும் தான் கொடுக்கல்/வாங்கல். ஆகவே பக்ஷணங்களை என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சலும் இல்லை. காடரர் கொடுத்திருக்கும் பக்ஷணங்களை விநியோகம் போக மீதம் சாப்பிட்டாலே போதுமானதுனு ஆயிடுச்சு. இப்படியாக இந்த வருஷ தீபாவளியைக் கொண்டாடி முடிச்சாச்சு. எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..
நேத்திக்குக் காலம்பர 3 மணிக்கே எழுந்து கொண்டு வாசல் பெருக்கிக் கோலம் போட்டேன். பாரத்தவங்க எல்லாம் இத்தனை பெரிய கோலத்தை உங்களால் குனிஞ்சு போட முடிஞ்சுதானு ஆச்சரியப்பட்டாங்க. அந்த நேரம் பகவான் கொடுத்த தெம்பில் முடிஞ்சது. பின்னர் வீடு பெருக்கித்துடைச்சு, (வேலை செய்யும் பெண் தீபாவளிக்கு லீவு) இன்னிக்குத் தான் வந்திருக்காங்க. உம்மாச்சிக்கு எல்லாம் எடுத்து வைச்சு, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய் கரைச்சு மஞ்சள் பொடியோடு எடுத்து வைச்சுப் புடைவை வேஷ்டி எல்லாமும் எடுத்து வைச்சேன். இந்த வருஷ தீபாவளிப் புடைவைங்க எல்லாம் ஓ.சி. புடைவை தான். பையர் மைசூர் போனப்போ குஞ்சுலு செலக்ஷனில் ஒரு புடைவை வாங்கி வந்திருந்தார். அதைத் தான் கட்டிக் கொண்டேன். குஞ்சுலு பிங்க் கலரில் எடுத்திருக்கு. அதுவுமே நேத்திக்குப் பிங்க் கலர் ட்ரஸ் தான் போட்டுக் கொண்டிருந்தது. மும்பையிலிருந்து வந்த என் ஒண்ணு விட்ட ஓர்ப்படி ஒரு புடைவை கொடுத்தாங்க. அதை நவராத்திரிக்கே கட்டிண்டாச்சு. செப்டெம்பரில் நடந்த உறவினர் திருமணத்தில் ஒரு புடைவை, நவராத்திரியில் நாத்தனார் பெண் ஒரு புடைவையும் கொடுத்திருந்தாங்க. நான் பையர் வாங்கின புடைவையையே சிறிது நேரம் கட்டிக் கொண்டேன். நான் தீபாவளி ஜவுளி மட்டுமல்ல, பொதுவாகக் கடைகளுக்குப் போயே 3 வருஷங்கள் ஆகின்றன. எல்லாக் கடைகளிலும் சுமார் 15/20 படிகள் ஏறணும். பிடிச்சுக் கொள்ளப் பிடிமானமும் இல்லை. ரங்க்ஸ் முதலில் மேலே ஏறிக் கொண்டு பின்னர் என்னை மேலே ஏத்தணும். சுற்றிலும் உள்ளவங்க என்னையே பார்ப்பாங்க. சில கோபக்கார மாமிகள் அவரே முடியாமல் இருக்கார், நீ அவரைப் போய் ஏன் தொந்திரவு பண்ணறே? ஏன் வெளியே வாசல்லே வரேனு கேட்டுச் சத்தமும் போட்டிருக்காங்க. ஆகவே நான் மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்த்த மற்ற இடங்களுக்கு இப்போதெல்லாம் போவதில்லை.