தெரியாத்தனமா ஜியோ மார்ட்டில் பழம் வாங்க ஆர்டர் கொடுக்கும்படி ஆச்சு. நம்ம ரங்க்ஸுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது தொண்டையில் மாட்டிக்கும். அதை உள்ளே தள்ள வாழைப்பழம் தேவைப்படும் சோதனையாக நான்கு நாட்களாக வாழைப்பழமே கிடைக்காமல் யாரைக் கேட்டாலும் காயாக இருக்குனே சொல்லவே ஜியோவில் ஏலக்கியும் ரொபஸ்டாவும் செவ்வாழையும் ஆர்டர் பண்ணினேன், பணம் 138 ரூபாய்க்குள் தான் வந்தது, ஜிபே பண்ணிடலாம்னு பார்த்தால் உங்க வீடு இந்த உலகில் இருக்கும் லொகேஷனை ஷேர் பண்ணுனு கேட்டது. சரினு சொல்லவே இது இல்லைனு ஒரே மறுப்பு, சரினு போட்டால் அதையும் ஒத்துக்கலை, மறுபடி அடியில் இருந்து ஆரம்பிச்சு வந்தால் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பழங்களே ஸ்டாக் இல்லையாம். எல்லாம் வித்துப் போச்சாம். இது என்னடா புதுசா இருக்கேனு மறுபடி போனால் ஜியோ வராமல் ஸ்மார்ட் பஜாரோ பிக்பஜாரோ ஏதோ ஒண்ணு வந்தது. இம்முறையும் 200 ரூபாய்க்குக் கீழே வந்தது. அப்போ பில்லை எடிட் செய்தால் தானாக இரண்டு இளநீரும் அதில் சேர்ந்து 228 காட்டியது, ஆனமட்டும் முயன்று அதை நீக்கப் பார்த்தால் போகவே இல்லை.
பேமென்டுக்கு போயிடுச்சு. தொலையட்டும் இளநீர் தானே ஆளுக்கு ஒண்ணாக் குடிச்சுத் தொலைக்கலாம்னு பேமென்ட் பண்ணிட்டு அன்னிக்குப் பூராப் பார்த்தால் ஒண்ணுமே வரலை. க்ர்ர்ர்ர்ர்னு எனக்கு நானே சொல்லிட்டு அவங்க மெசேஜைப் பார்த்தால் ட்ராக்கிங் லிங்க் இருந்தது. என்னோட மொபைலோ அதை ட்ராக் செய்யாதே ஏதோ புறம்போக்குப் போலத் தெரியுதுனு சொல்லுது. இருந்தாலும் தைரியமாப் போய்ப் பார்த்தால் 12 ஆம் தேதி ஆர்டரை 14 ஆம் தேதி தான் அனுப்புவாங்களாம். சரியாப் போச்சுனு நினைச்சேன். உள்ளூர் அண்ணாச்சி கடையிலேயே பார்த்த உடனே வாங்கிடலாமேனு நினைச்சேன். இனி ஒண்ணும் செய்ய முடியாதுனு காத்திருந்தேன். ரொம்பப் பெருமையா நேத்திச் சாயங்காலம் ஒரு பையர் வந்து ஓடிபி கேட்டுக்கொண்டு பழங்களைக் கொடுத்தார். ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டதுக்கு பதில் இல்லை. அதில் என்னமோ பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறாங்களாம். ஏன்னு புரியலை. அக்கவுன்டில் கிரெடிட் ஆகும்னு மெசேஜ் வந்தது.
இன்னிக்கு மத்தியானம் நோன்பு எல்லாம் ஆகி ரங்க்ஸுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு ஒன்றரை மணி அளவில் அப்பாடானு படுத்தால் உடனே ஃபோன். ஜியோவிலிருந்து ஒருத்தர் கீதா மேடம்னு கூப்பிடவே, சொல்லுங்கனு சொன்னேன். ஏன் 218 ரூபாய்க்குப் பொருள் வாங்கினீங்க? இது யார் சொல்லி ஆர்டர் கொடுத்தீங்க? நீங்களாக் கொடுத்தீங்களா? யாரானும் சொன்னாங்களானு எல்லாம் ஆராய்ச்சியை ஆரம்பிச்சார். எனக்கு வந்த கடுப்பில் நான் ஆர்டர் செய்தவை எனக்கு நேத்திக்கே வந்தாச்சு. அத்தோடு ஆளை விடுங்கனு சொல்லிட்டுத் தொலைபேசியை அணைச்சுட்டு மறுபடியும் படுத்துட்டேன். சரிதானே? என்னோட தேவை வாழைப்பழங்கள் மட்டும். அவங்க கிட்டே ஆயிரம் பொருட்கள் இருந்தால் எல்லாத்தையுமா வாங்க முடியும்? தேவையான வாழைப்பழங்களை மட்டும் யாரையும் கேட்டுக்காமல் நானாக ஆரடர் செய்தேன். இதுக்குப் போய் எம்புட்டு ஆராய்ச்சி? என்னவோ போங்க. இந்த பிக் பாஸ்கெட், பிக் பஜார், ஜியோ மார்ட், டி மார்ட் இதெல்லாமே ஏனோ எனக்கு அவ்வளவு உகந்ததாய்த் தெரியலை, நேத்திக்குப் பாருங்க காஃபி பவுடர் வேணும்னு எப்போவும் வாங்கற கடையிலே வாட்சப் மூலம் செய்தி கொடுத்ததும் சாயங்காலமே வந்துடுத்து.இதல்லவோ வியாபாரம்!