நானும் அடிக்கடி வரதில்லையா! யாருக்கும் நினைப்பு இருக்காது. நம்மவர் சென்ற மாதம் 10 ஆம் தேதியன்று இரவில் கீழே விழுந்து செக்யூரிடி ஆட்களை வரவழைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டோம். பாதம் தரையில் பாவவே இல்லை. கவலையாகவே இருந்தது. இருந்தாலும் காட்டிக்காமல் சமையலறையை ஒழிக்காமல் அப்படியே மூடி வைச்சுட்டு வந்து நானும்படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் கழிவறை போகணும்னு சொல்லவே எழுப்பி விட்டுக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றேன். அப்போவே ஏதோ குதிக்கிறாப்போல் தான் நடந்தார். திரும்பி வரும்போது ஒரேயடியாய்த் தள்ளி விட்டது உடம்பை. நல்லவேளையாய்க் கட்டிலில் தான் விழுந்தார். உடனேயே ஏதோ பிரச்னை எனத் தெரியவே சர்க்கரை அளவைப் பார்த்தேன் 176 இருந்தது. சர்க்கரை இல்லை. பின்னே என்ன காரணம்? தாமதம் செய்யாமல் உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டு மருத்துவமனியிலும் எமர்ஜென்சியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லவும் வாங்க, ஆனால் உடனே இடம் கிடைப்பது கஷ்டம். ஒரு விபத்து நடந்து அதில் மாட்டிக் கொண்டவர்கள் வந்திருக்காங்க. ஆனாலும் உடனே கவனிப்போம் எனச் சொல்லவே, வந்தது வரட்டும்னு ஆம்புலன்சில் அவரை ஏற்றிவிட்டு நானும் முன்னால் ஏறிக் கொண்டேன்.
மருத்துவமனை போயாச்சு. உடனே ஸ்ட்ரெச்சர் வரலை. கொஞ்சம் தாமதம் ஆனது. அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் ட்ரைவர் ட்யூடி டாக்டரிடம் போய்ச் சொல்லவே அவர் வந்து பார்த்துவிட்டு உடனே ஸ்ட்ரெச்சர் வரவழைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். திடீர்னு அவருக்கு நம்பர் ஒன் போகாமல் தொந்திரவு பண்ண ஆரம்பிக்கவே வலியில் புலம்பினார். டாக்டர் ட்யூபெல்லாம் போடக் கூடாது, அவராகப் போகணும்னு சொல்லிட்டார் நம்பர் ஒன் போனப்புறமாத் தான் வந்திருக்கும் காரணத்துக்கான மருத்துவம் ஆரம்பிப்பாங்க போல. எனக்குக் கொஞ்சம் கோபம் வரவே இன்னும் எத்தனை நேரம் கவனிக்காமல் இருப்பீங்க எனக் கேட்கவே அவர் முதலில் நம்பர் ஒன் போகட்டும் என்றார்கள். ரொம்ப சிரமத்திற்குப் பின்னர் நம்பர் ஒன் போகவே உடனே ரத்தப் பரிசோதனை. கடவுளே அவருக்கு ரத்தம் எடுப்பவே கஷ்டம். குத்திக் குத்திப் புண்ணாக்கிடுவாங்க. ஒவ்வொரு இடமாஅப் பார்த்து ஒரு வ்ழியா ரத்தம் எடுத்து சோடிஉம் குறைச்சல்னு சொல்லிட்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பிச்சுட்டு, இவரைப் பார்க்கும் மருத்துவருக்கும், சிறுநீரக மருத்துவருக்கும் தகவல் அனுப்பி வைச்சாங்க.
பின்னர் ஒரு வழியாக் காலை நாலு மணி அளவில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டு அறைக்கு வந்தோம். தூக்கமா? இரண்டு பேருக்கும் தூக்கமே இல்லை. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மட்டும் தகவல் சொல்லி இருந்தேன். வேறே யாருக்கும் சொல்லவில்லை. பையர் வரட்டுமா எனக் கேட்க, வேண்டாம், நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். பின்னர் காலை விடிஞ்சதும் செவிலியர் வந்து ஏற்கெனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளைக் கேட்டாங்க. ஆஹா! தப்புப் பண்ணிட்டோமேனு நினைச்சேன். அது தேவை இல்லைனு நினைச்சு வீட்டிலேயே வைச்சிருந்தேன். அதை எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. இவரைப் பார்த்துக்க ஆளே இல்லையே! அவசரம் அவசரமாக அவரிடம் சொல்லிட்டு, ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக வாக்குக் கொடுத்துட்டு செவிலியர், வார்ட் பாய் ஆகியோரிடமும் சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். எப்போவும் போல் ரெட் டாக்சிக்குக் காத்திருக்காமல் ஆட்டோவிலேயே போயிட்டேன். பைசா ஜாஸ்தி தான். ஆனால் அவசரத்துக்கு என்ன செய்ய? விட்டுக்குப் போனதும் மருந்துகள், மற்றும் தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டு பையில் வைச்சுட்டு, குளித்து விட்டு உடனே கிளம்பிட்டேன். செக்யூரிடி மூலம் ஆட்டோ வரவழைத்துக் கொண்டு முக்கால் மணி நேரத்தில் திரும்ப மருத்துவமனை போயிட்டேன். நல்லவேளையாக் காலை ஆகாரம் வரலை. போனதும் காலை ஆகாரத்துக்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை அவங்க அப்போப் புதுசாக் கொடுத்த மாத்திரைகளோடு சேர்த்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு உட்கார்ந்தேன்.
கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மும்பையில் இருக்கும் மைத்துனரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் வரட்டுமானு கேட்டதுக்கு வேண்டாம் தகவலுக்காகத்க் தான் சொன்னேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவர் அன்றிரவு விமானத்தில் கிளம்பி வந்தார். அன்று முழுவதும் உட்கார்ந்திருந்ததாலும் முதல் நாள் இரவிலும் உட்கார்ந்திருந்ததாலும் உடம்பு கெஞ்சியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரவு பனிரண்டு மணி அளவில் மைத்துனர் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் என்னைக் கீழே வரும்படியும் சொன்னார். அவர் வந்த வண்டியிலேயே என்னைக் கொண்டு விட்டு விட்டுத் திரும்ப அவர் மருத்துவமனை வருவதாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஆகவே சுமார் பனிரண்டரை மணி அளவில் நான் வீட்டுக்கு வர அவர் மருத்துவமனை போனால். மறுநாள் காலை வீட்டு வேலை செய்யும் பெண்ணை வரச் சொல்லி வீடு சுத்தம் செய்து பாத்திரங்களைக் கழுவி வைச்சுட்டு எட்டரைக்கெல்லாம் மறுபடி மருத்துவமனை போய் இரவு தூங்காமல் இருந்த மைத்துனரை விடுவித்தேன். அவர் வீட்டுக்குப் போய் விட்டார். அன்றே சிறுநீரக மருத்துவரும் வந்து பார்த்துட்டு பயப்பட வேண்டாம் சோடியம் லெவல் 130க்கு மேல் வந்தால் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று சொன்னார்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅடாடா...! எவ்வளவு கஸ்டங்கள் . சிரமங்கள். உங்களை நினைக்காத நாளில்லை...! அவருக்கு உதவியாகவும் தினமும் பல வேலைகளுடனும் நீங்கள் நலமாக இருந்து கொண்டு வருகிறீர்கள் என நினைத்தேன். அன்று கூட அவர் கொஞ்சம் நன்றாக உடல் தேறி இருந்து வருவதாக சொன்னீர்களே ..! தீடிரென எப்படி இந்த மாதிரி ஆகிறது.? படிக்கையிலேயே ஒவ்வொரு வரிகளும் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் ஒண்டிஆளாக எப்படியோ அன்று இரவு சமாளித்து விட்டீர்கள். உதவிக்கு அக்கம்பக்கம் யாரையாவது கூப்பிட்டு கொண்டுஇருக்க கூடாதா? முதல் தடவை உடம்பு முடியாமல் இருந்த போது எதிர் வீட்டு மாமா உதவிக்கு ஆஸ்பத்திரிக்கு கூட வந்ததாக கூறினீர்கள்.. அவரையாவது உதவிக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கலாமே...! கடவுள் ஏன் இன்னமும் சோதனைகளை தருகிறார்? இப்போது மாமா நலமாக உள்ளாரா? பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உறவில் உதவிக்கு யாரையேனும் அழைத்து வைத்து கொள்ளுங்கள். தங்கள் கணவர் இனி எவ்வித தொந்தரவுகளுமின்றி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும், திடீர்னு எது எங்கே இருந்து வரும்னு சொல்ல முடியலையே! இன்னமும் வயிற்றுப் பிரச்னை சரியாகலை. சில உணவுகள் ஒத்துக்கறதில்லை. வெறும் மோர்சாதமே எவ்வளவு நாட்களுக்குக் கொடுப்பது? என்னவோ போங்க. ரொம்பவே சோதனை! எதிர் வீட்டு மாமா/மாமி குடும்பத்தோடு வெளியூரில் ஒரு திருமணத்துக்குப் போயிருந்தாங்க நாங்க ஆம்புலன்சில் ஏற்ற மாமாவை அழைத்துப் போகும்போது அவங்க ஊரில் இருந்து திரும்பினாங்க. அப்போத் தான் வந்திருந்தாங்க.
Deleteஉதவிக்கு ஆளை வைச்சுப்பது என்பது உபத்திரவமாகத் தான் இருக்கும் என்பதால் கூப்பிடவில்லை. அதோடு மாமா தானாகக் கழிவறை போய்விட்டு வருகிறார், குளிக்கையில் உதவி தேவை. மற்றபடி சாப்பாடெல்லாம் கொடுத்தால் தானாகச் சாப்பிட முடியும். சில நாளைக்குப் பிசைய முடியலைனா பிசைந்து கொடுப்பேன் அல்லது நன்கு கரைத்துக் கொடுத்துடுவேன்.
Deleteஇது என்னடா புதுச் சோதனை என்று நினைத்துக்கொண்டேன். தற்போது நல்லா இருப்பதை எண்ணி நிம்மதி.
ReplyDeleteசோடியம்னா கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா சாப்பிட்டா சரியாயினுமா? (ஷுகர் குறைந்தால் இனிப்பு கொடுப்பது போல)
உணவில் கொஞ்சம் உப்புக் கூடச் சேர்ப்பேன். அல்லது மோரில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொடுப்பேன். இப்போ ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மனோ திடம் வரலை.
Deleteஉணவில் கொஞ்சம் உப்புக் கூடச் சேர்ப்பேன். அல்லது மோரில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொடுப்பேன். இப்போ ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மனோ திடம் வரலை.
Deleteஇவை எல்லாம் அப்புறம் மறுபடி வந்த பிரச்னைகளா? அடடா... என்ன சோதனை.. அவ்வப்போது சாதாரண சுட்ட அப்பளம் தந்து வந்தாலே இந்த சோடியம் லெவலுக்கு உதவும்.
ReplyDeleteசுட்ட அப்பளம் அவ்வளவாய்ச் சாப்பிடுவதில்லை. நான் தான் அப்பளம் என்றாலே மிச்சமே வைக்காமல் சாப்பிடுவேன். கல்யாணங்களில் கூட இரண்டாவது அப்பளம் போடலைனா கஞ்சூஸ்னு மனசிலேயே திட்டுவேன்,
Deleteஉதவிக்கு வரும் ஆட்களை வேண்டாம் வேண்டாம் என்றால் எப்படி தனியாக சமாளிப்பீர்கள்? நல்லவேளை மைத்துனர் வந்தார்...
ReplyDeleteபையருக்கு நைஜீரியாவிலிருந்து அவ்வளவு;சுலபமாய்க் கிளம்ப முடியாது. மருமகள்/பேத்திக்கு செக்யூரிடி ஏற்பாடு செய்யணும். சும்மாச் சும்மாக் குழந்தை பள்ளிக்கு விடுமுறை எடுக்க முடியாது. எத்தனையோ இருக்கு. மைத்துனருக்கும் 70 வயது நேருங்குகிறது. மாமாவைத் தூக்கி எல்லாம் அவரால் செய்ய முடியாது. குனியக் கூடாது அவருக்கு. பலரும் பிரச்னைகளில் தான் இருக்காங்க. சம்பளம் கொடுத்து ஆள் போட்டால் படுக்கை அறையில் அவங்க இருவர் மட்டும் தான் இருக்க முடியும். நான் வெளியே வரணும். எல்லாமும் படுக்கை அறையில் இருக்கையில் புது ஆள்/தெரியாத நபரைப் படுக்கை அறையில் விட யோசனை. அவர் வெளியே படுத்தாலும் வேறே மாதிரி பிரச்னை. எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு தான் நர்சிங் கேர் ஆட்களைக் கூப்பிடவில்லை. பையரும்/பெண்ணும் ஹோமுக்குப் போகச் சொல்றாங்க. சொந்தக்காரங்க அனைவரும் வேண்டாம்னு சொல்றாங்க. எங்களுக்கும் அவ்வளவு இஷ்டம் இல்லை. ஆண்டவன் எண்ணம் என்னவோ அது போல் நடக்கட்டும்.
Deleteநாங்க தனியே இருப்பதாலும் நான் சமைப்பதாலும் மாமாவுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது செய்து கொடுக்க முடிகிறது. திடீர்னு பசிச்சால் உணவு கொடுக்க ஹோமில் எப்படி முடியும்? இங்கே சாதம்.மோர் எப்போவும் வைச்சிருப்பேன் அல்லது உப்புமா, ப்ரெட் டோஸ்ட் எனக் கொடுப்பேன். ஹோமில்?
Deleteஎத்தனை எத்தனை பிரச்னைகள்...
ReplyDeleteஇறைவன் துணையிருக்க பிரார்த்தனைகள்..
வாழ்க நலம்..
அவன் துணையை ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்து கொண்டே இருக்கேன் தம்பி. அவனின்றி இவ்வளவு தூரம் என்னால் என்ன செய்திருக்க முடியும்? எல்லாம் அவன் அருள்.
Deleteகடல் அலை போல ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கு. அக்கா மறக்கறதாவது? நிச்சயமா இல்லை. உங்களுக்கு இந்த முறை நான் மெசேஜ் கொடுக்கலையே தவிர....தினமும் பிரார்த்தனையில் நீங்க மாமா உண்டு! உண்மையாக. நம் மற்ற நட்புகளும் உட்பட.
ReplyDeleteஅன்று நீங்க இம்ப்ரூவாகி வரார் கொஞ்சம் மெதுவாதான் ஆகும் என்று சொன்னீங்க அதன் பின் இது நடந்திருக்கு. ஆ அப்ப உங்களுக்கு மெசேஜ் கொடுத்து நாளாச்சா...
தனியாகவே சமாளிச்சிருக்கீங்க அக்கா. நிஜமாகவே நான் ரொம்ப ஃபீல் பண்ணினே இதை வாசிச்சதும்.
கீதா
தி.கீதா, அம்மாவோட கான்சர் ஆபரேஷன் 80களிலே, அதன் பின்னர் நாத்தனாருக்கு அடுத்தடுத்து நடந்த கருச்சிதைவுகள், ஃபெலோப்பியன் ட்யூபில் ஆபரேஷன் என 80 ஆம் வருஷம் ஆரம்பிச்சு 88 வரை மருத்துவமனைகளில் அடிக்கடி வாசம். நடுவில் என் அப்பாவுக்குச் சர்க்கரை ஏறி அதுக்கு மருத்துவமனியில் சேர்த்து அவரோடு பத்து நாட்கள் இரவும்/பகலும் நான் மட்டுமே தங்கினேன். பின்னர் மாமனார், அதன் பின்னர் ஹிஸ்டீரியா வந்து மாமியார் என இருந்திருக்கேன். அப்போல்லாம் டயபர் கிடையாது. பெட்பான் தான் வைக்கணும். வைச்சிருக்கேன்.பின்னரும் அப்பாவைக் கடைசிக்காலத்தில் சுமார் ஆறுமாதங்களுக்கு மேல் நாங்க தான் பார்த்துக் கொண்டோம். ஆகவே தனியாகச் சமாளிப்பதுனு எல்லாம் இல்லை. எல்லாமே பழக்கம் தான்.
Deleteஅப்புறம் என்னாச்சுக்கா? வீட்டுக்கு வந்தாச்சுன்னு நினைக்கிறேன். க்ரூப்ல உங்க மெசேஜ் பார்த்து ஓகே என்று நினைத்தேன் இப்பதான் இத்தனை நடந்திருக்கு என்று தெரிகிறது. என்ன சொல்ல என்று தெரியலை கீதாக்கா....பார்த்துக்கோங்க, சரியாகிடும் என்று சும்மா வார்த்தைகள் சொல்ல ஏனோ மனம் வரமாட்டேங்குது. யதார்த்தத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையில்...பிரார்த்திக்கிறேன் தீவிரமாக! இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியலையே கீதாக்கா.
ReplyDeleteஎன்னவோ விருச்சிகத்துக்கு ரொம்ப நல்லகாலம் என்னவெல்லாமோ சாதிக்கப் போறாங்க என்று சொல்லியிருப்பதாக என் தங்கை சொன்னாள். எங்க வீட்டுல மூணு பேர் விருச்சிகம்....நான் இல்லை... ஆனா விருச்சிகத்துக்கு எந்த ஒன்னும் நடக்கலை..பின்ன இத்தனை வருஷமும் ஏற்றம் இறக்கம்னா அதள பாதாளம் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கு. .என் தங்கைகிட்ட அட போ குட்டி....எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்! எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை.....அந்த சக்திய மிஞ்சி எதுவும் இல்லை...அது போதும் னு .....
அடுத்து என்ன நடந்தது சோடியம் கூடியிருக்கும் என்று நம்புகிறேன். இப்போ வீட்டில்தானே?
கீதா
எனக்குத் தெரிஞ்சு விருச்சிக ராசி தான் உழைச்சுட்டுப் பெயரும் வாங்கிக் கட்டிக்கிறது. :D என்ன செய்யலாம்? பிறந்த நேரம் அப்படி!
Deleteதனி மனிஷியாக எத்தனை துன்பத்தை எதிர் கொண்டு இருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்போது சொல்வது பிள்ளைகள் எல்லோரும் வந்து விட்டு போனபின் நடந்ததா?
வாக்கர் வைத்து கொண்டு நடந்தார் இல்லையா சார்?
அடிக்கடி உங்களை தொந்திரவு செய்ய வேண்டாமே, என்று தான் போன் செய்யவில்லை. சாருக்கு விரைவில் நலமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
உதவிக்கு ஒரு ஆள் வைத்து கொள்ளுங்கள் . இப்போது எப்படி இருக்கிறார் சார்? உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.
இது எல்லோரும் ஊருக்குப் போனதும் ஃபெப்ரவரி பத்து தேதிக்குப் பின்னர் நடந்தது. உதவிக்கு ஆள் வைச்சுப்பதில் பிரச்னைகள் நிறைய இருக்கு. அதோடு நான் இப்போ அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதையே சாப்பிட்டுப்பேன். வரவங்களுக்கு அப்படிப் போட முடியாது அல்லவா? காஃபி எல்லாம் மறந்தாச்சு. என்னிக்காவது போடுவேன். அந்த டிகாக்ஷனே 3 நாள் வரும். இப்போத் தான் வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிக் காஃபி போடறேன். காய்கறினு வாங்கறேன்,.
Deleteநேரம் சரியாகும் நம்பிக்கையோடு இருங்கள்.
ReplyDeleteநம்பிக்கை தான் காப்பாற்றி வருகிறது.
Deleteஅடடா... பிரச்சனைகள் சரியாகட்டும். சோடியம் குறைபாடு பிரச்சனை தான். 10-ஆம் தேதி காலை தான் அங்கிருந்து புறப்பட்டேன். இல்லை என்றால் என்னை அழைத்திருக்கலாம்.
ReplyDeleteவிரைவில் நலமாக எனது பிரார்த்தனைகள்.
உங்களுக்கில்லாத பிரச்னையா வெங்கட்! அதனால் என்ன! பரவாயில்லை. விரைவில் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும்படியான நிலைமை வரட்டும். பிரார்த்தனைகள்.
Deleteநேரம் நல்ல நேரம் விரைவில் வந்துவிடும். தனியாகக் கையாண்டுயிருக்கிறீர்கள்.
ReplyDeleteகையில் வாக்கர் பிடித்துக் கொண்டு நடந்தார் என்று சொல்லியிருந்த நினைவு. அப்படியும் இப்படி நிகழ்ந்ததா?
விரைவில் நலமாகிட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
துளசிதரன்
கொஞ்சம் தலையைக் கீழே சாய்த்தாலே குப்பு/ற விழுந்துடறார் துளசிதரன். அந்தச் சமயங்களில் வாக்கர் எல்லாம் மண்டையில் குத்திடுமோனு பயமாவே இருக்கு
Deleteஅடடா! படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. தனியாக சமாளித்திருக்கிறீர்கள். நல்லவேளையாக உங்கள் மைத்துனர் வந்தாரே. இத்தனை நாட்களாக உங்களுக்கு சில உடல் பிரச்சனைகள் இருந்தன. இப்போது உங்கள் கணவருக்கு.. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎன் பிரச்னைகள் தீராத பிரச்னை பானுமதி =, அதோடு தான் மருந்துகளின் உதவியோடும் தைலங்களின் உதவியோடும் நடமாடி வருகிறேன். ஏதோ அனைவரின் பிரார்த்தனைகளினாலும் விரைவில் சரியாகட்டும்.
Delete//நானும் அடிக்கடி வருவதில்லையா? யாருக்கும் நினைவு இருக்காது// என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? நீங்கள் எப்போதும் எங்கள் மனதிலும், நினைவிலும் இருப்பீர்கள்.
ReplyDeleteOh! Thank You, Thank You. _/\_
Deleteஇப்பொழூதுதான் படிக்க நேர்ந்தது மன்னியுங்கள். உங்கள் கணவர் நலமின்றி இருக்கிறார் என ப்ளாக் வாயிலாக அறிந்திருந்தேன்.
ReplyDeleteஇவ்வளவு சிரமத்தின் மத்தியில் தனியே நீங்கள் சமாளித்து இருந்தது பாராட்டுக்குரியது. இப்போது ஆண்டவன் அருளால் நலமாக இருப்பார் என நம்புகிறேன்.