எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 24, 2025

மலரும் நினைவுகள்

 



இவங்கல்லாம் யாருனு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது 93-/94 ஆம் ஆண்டில் நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ எடுத்த படம். அந்த அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி பிக்னிக் போவோம். அப்படி ஒரு பிக்னிக்கில் சுத்திட்டு வந்தப்போ யாரோ அலுவலக நண்பர் இந்தப் படத்தை எடுத்திருக்கார்.. அப்போ மாமியார் எங்களோடு தான் இருந்தார். அவங்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துட்டுப் போவோம். அது ஒரு பொற்காலம்.

பார்க்கப் போனால் எங்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் குஜராத் பிடிக்கலை.. முக்கியமா ஜாம்நகர் பிடிக்கவே இல்லை. ராஜஸ்தானை விட்டுட்டு வந்ததுக்கு அழுதுட்டே இருப்போம். பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் பழகியது. ஆனாலும் ராஜஸ்தான் வாழ்க்கை சொர்க்கம் தான். மயிலும், குயிலும், கிளியும் கொஞ்சும். கொத்துக் கொத்தாகக் கிளிகள் வீட்டுக் கூரையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கும். மயில்கள் இஷ்டம் போல் கத்திக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கும். தோட்டத்தில் நடுவே பெரிய லான். சுற்றிலும் பூச்செடிகள். சமையலறை ஓரமாகக் காய்கறித் தோட்டம்.பட்டாணிக்கும், காலி ஃப்ளவருக்கும், மொச்சைக்கும் கொத்தித் தின்னக் குருவிகள். நாங்க போய் வாழை, முருங்கை, மஞ்சள் எல்லாம் போட்டோம், தை மாதப் பிறப்புக்குத் தமிழர்களுக்கெல்லாம் மஞ்சள் கொத்து விநியோகம் செய்வோம். கரும்பும் தோட்டத்துக் கரும்பு.    

ஜாம்நகரிலும் காய்கறித்தோட்டம், வாழை, முருங்கை, மஞ்சள் போட்டோம் என்றாலும் ராஜஸ்தான் அளவுக்குச் செழிப்பெல்லாம் இல்லை. ஏதோ ஓடியது. நம்ம ரங்க்ஸுக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் கட்சில் புஜ்ஜுக்குப் போகணும் ஆடிட்டிற்கு. சமயங்களில் எல்லையோரங்களுக்கெல்லாம் போக வேண்டி இருக்கும். அப்போத் தொட்ர்பு கொள்ள முடியாது. எங்கே இருக்கார்னே தெரியாது.  எந்த யூனிட்டிற்குப் போயிருக்கார் என்பதெல்லாம் கூட ரகசியமா இருக்கும். அலுவலகம் மூலமாகத் தகவல்கள் முக்கியமானது இருந்தால் கொடுப்போம். இங்கே ஜாம்நகரில் நாங்க மூணு பேரும் மாமியாரும் தான். நடந்தே போய்க் காய்கறிச் சந்தையில் காய்கள், பழங்கள் வாங்குவேன். பேரிச்சைப் பருவத்தில் கொத்துக் கொத்தாகப் பேரிச்சம்பழங்கள் செக்கச் செவேல்னு வரும். வாங்கிக் காய வைச்சுப்போம். காலிஃப்ளவர் எல்லாம் பெரிது பெரிதாக, ஒரு கத்திரிக்காய் ஒரு கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். அதிலே பைங்கன் பர்த்தா பண்ணினால் நாலைந்து பேர் சாப்பிடலாம். ஆகவே நடுத்தர அளவுக் கத்திரியாகப் பார்த்து வாங்குவேன், வெண்டைக்காய்க் குட்டிக் குஞ்சுலுவின் விரல் அளவுக்கு அளந்து வைத்தால் போல் கிடைக்கும், அப்படியே வாங்கிக் கொண்டு வந்து அலம்பிக் காய வைச்சுட்டு நடுவில் கீறிக் காரப்பொடி கலந்த மசாலாவை அடைச்சுட்டு முழுதாகப் போட்டு வதக்குவோம். இப்போ வெண்டைக்காயே வாங்குவதில்லை. முத்தலாக இருக்கு.


முடிஞ்சால் மலரும் நினைவுகள் தொடரலாம்.