இவங்கல்லாம் யாருனு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது 93-/94 ஆம் ஆண்டில் நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ எடுத்த படம். அந்த அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி பிக்னிக் போவோம். அப்படி ஒரு பிக்னிக்கில் சுத்திட்டு வந்தப்போ யாரோ அலுவலக நண்பர் இந்தப் படத்தை எடுத்திருக்கார்.. அப்போ மாமியார் எங்களோடு தான் இருந்தார். அவங்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துட்டுப் போவோம். அது ஒரு பொற்காலம்.
பார்க்கப் போனால் எங்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் குஜராத் பிடிக்கலை.. முக்கியமா ஜாம்நகர் பிடிக்கவே இல்லை. ராஜஸ்தானை விட்டுட்டு வந்ததுக்கு அழுதுட்டே இருப்போம். பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் பழகியது. ஆனாலும் ராஜஸ்தான் வாழ்க்கை சொர்க்கம் தான். மயிலும், குயிலும், கிளியும் கொஞ்சும். கொத்துக் கொத்தாகக் கிளிகள் வீட்டுக் கூரையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கும். மயில்கள் இஷ்டம் போல் கத்திக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கும். தோட்டத்தில் நடுவே பெரிய லான். சுற்றிலும் பூச்செடிகள். சமையலறை ஓரமாகக் காய்கறித் தோட்டம்.பட்டாணிக்கும், காலி ஃப்ளவருக்கும், மொச்சைக்கும் கொத்தித் தின்னக் குருவிகள். நாங்க போய் வாழை, முருங்கை, மஞ்சள் எல்லாம் போட்டோம், தை மாதப் பிறப்புக்குத் தமிழர்களுக்கெல்லாம் மஞ்சள் கொத்து விநியோகம் செய்வோம். கரும்பும் தோட்டத்துக் கரும்பு.
ஜாம்நகரிலும் காய்கறித்தோட்டம், வாழை, முருங்கை, மஞ்சள் போட்டோம் என்றாலும் ராஜஸ்தான் அளவுக்குச் செழிப்பெல்லாம் இல்லை. ஏதோ ஓடியது. நம்ம ரங்க்ஸுக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் கட்சில் புஜ்ஜுக்குப் போகணும் ஆடிட்டிற்கு. சமயங்களில் எல்லையோரங்களுக்கெல்லாம் போக வேண்டி இருக்கும். அப்போத் தொட்ர்பு கொள்ள முடியாது. எங்கே இருக்கார்னே தெரியாது. எந்த யூனிட்டிற்குப் போயிருக்கார் என்பதெல்லாம் கூட ரகசியமா இருக்கும். அலுவலகம் மூலமாகத் தகவல்கள் முக்கியமானது இருந்தால் கொடுப்போம். இங்கே ஜாம்நகரில் நாங்க மூணு பேரும் மாமியாரும் தான். நடந்தே போய்க் காய்கறிச் சந்தையில் காய்கள், பழங்கள் வாங்குவேன். பேரிச்சைப் பருவத்தில் கொத்துக் கொத்தாகப் பேரிச்சம்பழங்கள் செக்கச் செவேல்னு வரும். வாங்கிக் காய வைச்சுப்போம். காலிஃப்ளவர் எல்லாம் பெரிது பெரிதாக, ஒரு கத்திரிக்காய் ஒரு கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். அதிலே பைங்கன் பர்த்தா பண்ணினால் நாலைந்து பேர் சாப்பிடலாம். ஆகவே நடுத்தர அளவுக் கத்திரியாகப் பார்த்து வாங்குவேன், வெண்டைக்காய்க் குட்டிக் குஞ்சுலுவின் விரல் அளவுக்கு அளந்து வைத்தால் போல் கிடைக்கும், அப்படியே வாங்கிக் கொண்டு வந்து அலம்பிக் காய வைச்சுட்டு நடுவில் கீறிக் காரப்பொடி கலந்த மசாலாவை அடைச்சுட்டு முழுதாகப் போட்டு வதக்குவோம். இப்போ வெண்டைக்காயே வாங்குவதில்லை. முத்தலாக இருக்கு.
முடிஞ்சால் மலரும் நினைவுகள் தொடரலாம்.
மலரும் நினைவுகளும், படமும் அருமை.
ReplyDeleteமுடிஞ்ச போது எல்லாம் எழுதுங்கள்.
ராஜஸ்தான், ஜாம்நகர் வாழ்க்கை ரசனையானது.
வாங்க கோமதி, நானும் முடிஞ்சப்போ எல்லாம் எழுதத் தான் நினைக்கிறேன். சில சமயங்கள் கை கூடி வருது. பல சமயங்களும் வெட்டியாகப் போகிறது. :(
Deleteபடிக்க ரசனையாகவே இருக்கிறது..... எப்படி இருந்த நாட்கள் அவை....
ReplyDeleteyessooo yessu
Deleteபடத்தில் மாமா ரொம்பவே உயரமாகத் தெரிகிறார்.
ReplyDeleteபடத்தில் பையர் பெண்ணா இல்லை மற்றவர்களா? (நாங்கள் மூணுபேரும் மாமியாரும் என்று எழுதியிருப்பதால் இந்தக் கேள்வி)
மாமா இப்போவும் அதே உயரம் தான். கொஞ்சம் தானாக கொஞ்சம் அதுவாகக் கூன் போட்டிருப்பதால் முன்னாடி நல்ல உயரமாய்த் தெரிகிறது. அது சரி, பெண்ணைப் பார்த்ததில்லை. ஓகே, பையரைப் பார்த்திருக்கீங்க, அடையாளம் தெரியலை?
Deleteநாங்க நாலு பேரும்னு வந்திருக்கணும் இல்லையா? ஏதோ கவனம். திருத்தறேன். நாங்க நாலு பேர், மாமியார்
Deleteமலரும் நினைவுகள் அருமை.
ReplyDeleteஅதானே.... குஜராத் பிடிக்காமல் போகுமா ?
ஸ்ரீகிருஷ்ணர் இருந்த துவாரகை, மற்றும் சரித்திரப் பிரசித்தி பெற்ற சோம்நாத், குசேலரின் போர்பந்தர் ஆகிய இடங்களைப் பார்த்தால் கட்டாயமாய் யாருக்குமே குஜராத் பிடிக்கத் தான் செய்யும். அதோடு கோயில்களில் வெளி மாநிலப் பயணிகளான நமக்கு முன்னுரிமை கொடுப்பாங்க. அதிலும் குஜராத்தில் பெண்களுக்குத் தனி வாயில். கர்நாடகாவிலும் இப்படி உண்டு. நிம்மதியாகவும் ஆற அமரவும் தரிசனம் கிட்டும். ஜரிகண்டியோ, பிடிச்சுத் தள்ளுவதோ இல்லை.
Deleteராஜஸ்தான் என்றாலே எனக்கு பாலைவனம்தான் நினைவுக்கு வரும்...
ReplyDeleteஹிஹிஹி நான் அங்கெல்லாம் போனதில்லை. சும்மா மனதில் தோன்றுவதுதான்.
அது தவிர மன்னவன் வந்தானடி படத்தில் வரும் 'ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன் ராஜாவாகப் பொறந்திருக்கானாம்' பாடல் நினைவுக்கு வரும்!!
வாங்க ஸ்ரீராம், பாலைவனம் இங்கே அதிகம் தான், அதாவது ராஜஸ்தானில். ஆனால் இன்னமும் மேற்கே, பாகிஸ்தான் எல்லைக்கருகே எல்லாம் பாலை வனம் தான். நான் ரொம்பப் பார்க்கலை, மாமா தான் போயிருக்கார் அடிக்கடி. மற்றபடி நாங்க இருந்த கன்டோன்மென்டில் இந்திரா காந்தி குடிநீர்த்திட்டத்தின் கீழ் நர்மதையிலிருந்து தண்ணீர் வரும்./ கொட்டும். அதிலும் நாங்க ஆர்மி கன்டோன்மென்டிலேயே ஆர்மி குடியிருப்பில் இருந்ததால் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. செழிப்பாக இருக்கும்.
Deleteவெண்டைக்காயை அப்படியே கீறி மசாலா சரி... உள்ளே இருக்கும் விதைகள்? கோடு போன்ற அமைப்புகள்?
ReplyDeleteஅப்புறம் மசாலா எதை வைத்து எப்படி தயார் செய்வீர்கள்?
குட்டிச் சுண்டு விரல் அளவுக்கு வெண்டைக்காயில் அடிக்காம்போ, மேல் காம்போ நீக்க மாட்டோம். அப்படியே நன்கு கழுவித் துடைத்து விட்டுப் பின்னர் நடுவே ஒரு கீறல். உப்பு, ம்ஞ்சள் பொடி போட்டுச் சற்று நேரம் வைச்சுட்டுப் பின்னர் மி.பொடி, தனியா பொடி, கரம் மசாலா, ஜீரகப் பொடி, மஞ்சள் பொடி, அம்சூர்ப் பொடி, தேவையான உப்பு ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து கொண்டு நறுக்கின வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து உள்ளே அடைக்கணும் விதையாவது ஒண்ணாவது. ஒண்ணும் இருக்காது. சற்று நேரம் வைச்சுட்டுப் பின்னர் எண்ணெய் கொஞ்சமாக வைத்துக் காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு எடுக்கணும்.
Deleteஇன்னொரு முறையில் தமிழக வழக்கப்படி பஜ்ஜி மாவு போல் கரைத்துக் கொண்டு இரண்டாகப் பிளந்த வெண்டைக்காயை அதில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கணும். சேப்பங்கிழங்கை, சி/ரு கிழாங்கைக் கூட இப்படிப் பண்ணலாம். ஆனாலும் ரோஸ்ட் தான் சுவை அதிகம்னு எனக்குத் தோணும்.
அவ்வளவு பெரிய கத்தரிக்காய் எல்லாம் நன்றாயிருக்குமா? எனக்கு பெரிய கத்தரிக்காயைப் பார்த்தாலே வாங்கத்தோன்றாது.
ReplyDeleteபஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானில் எல்லாம் குமுட்டி அடுப்பில், (பக்கெட் குமுட்டி) இப்படிப் பட்ட பெரிய கத்தரிக்காய்களை நான்கைந்து இடங்களில் கீறி உள்ளே பச்சை மிளகாய், பூண்டு போன்றவற்றை நிரப்பித் தணலில் போட்டுச் சுட்டு எடுப்பார்கள். சுட்டுத் தோலுரித்த கத்திரிக்காய் விழுதில், பச்சைமிளகாய்ம், பூண்டும் நன்கு வெந்து மசிஞ்சிருக்கும். அப்படியே பெரிய பாத்திரத்தில் போட்டு மத்தால் நன்கு மசிப்பார்கள். அந்தக்காரமெல்லாம் மசிச்ச கத்தரிக்காய் விழுதோடு கலந்து தனி ருசி என்பார்கள்.
Deleteமாமா நல்ல உயரம். அதுவும் உங்களோடு நிற்கும் போது இன்னும் உயரமாகத் தெரிகிறார். இருங்க.. அடிக்காதீங்க....அவர் அவருடைய அப்பா போல போலிருக்கு.
ReplyDeleteமாமா அவரோட அப்பாவை விடவும் உயரம் அதிகம். அவர் தம்பியை விடவும், எங்க பையரை விடவும் உயரம் அதிகம். பையர் ஜிம்முக்குப் போய் உயரத்தை நிறுத்திக் கொண்டார். பத்தாவது படிக்கையிலேயே ஒண்ணாம் வகுப்புகுழந்தைகள் எல்லாம் அங்கிள்னு கூப்பிட ஆரம்பிச்சுடுத்துங்க. :)
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்கல்லாம் வரலை. மாமாவுக்கு என்னைப் பெண் பார்க்க வரச்சேயே உயரம் குறைவுனு தெரியும். ஆனாலும் என்னைத் தான் பண்ணிப்பேன்னு பிடிவாதமாப் பண்ணிண்டார்னு ஏற்கெனவே என்னோட :கீதா கல்யாணமே வைபோகமே!" புத்தகத்தில் சொல்லி இருக்கேனே? நினைப்பில்லையா? ஆனால் என்னோட கடைசி நாத்தனார் தான். (நீங்க பார்த்திருக்கீங்க அவங்களை) இப்போவும் என்னைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பாள். எங்க அண்ணாவுக்குப் போய் நீங்க அமைஞ்சீக்களே என்பாள். :)))))
Deleteபழைய ஓர்மைகள் மற்றும் படம் சிறப்பு. அன்று இருவரும் நல்ல கனபாடிகளாக இருந்திருக்கிறீர்கள். மாமியாரின் நினைவு தினமா? அவர் இறந்தது 2017 என்று நினைக்கிறேன்.
ReplyDeleteதற்போது மாமாவுக்கு எப்படி உள்ளது?
Jayakumar
மாமியார் இறந்தது 2016 டிசம்பரில். மார்கழி மாதமே ச்ராத்தம் முடிந்து விட்டது. நினைவு நாளெல்லாம் இல்லை. இன்னொரு ஐடியில் இருக்கும்மெயில் பாக்சில் ட்ரைவில் உள்ள வேண்டாதவற்றை நீக்குகையில் இந்தப் படம் கண்களில் பட்டது, போட்டேன், மாமா இப்போப் பரவாயில்லை. கழிவறைக்குப் போவது, குளிப்பது போன்றவற்றைத் தானாகச் செய்து கொள்கிறார். என்றாலும் கண்காணிப்புத் தேவைப்படுகிறது. வெளியே எல்லாம் போகலை.
Deleteநல்ல குளிர் நாட்கள் என்பதால் மாமா உள்ளே இரண்டு ஸ்வெட்டர் போட்டிருப்பதால் குண்டாகத் தெரிகிறார், நான் எப்போவுமே பூசினால் போல் இருப்பேன் என்றாலும் இதில் அவ்வளவு குண்டெல்லாம் இல்லை. அதன் பின்னரே 20000 ஆம் அண்டிற்குப் பின்னர் அதிகம் எடை கூடியது.
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எப்படியிருக்கிறீர்கள்.? தங்கள் பதிவை கண்டதும் தங்களை நேரில் பார்த்த மகிழ்வு வருகிறது. மலர்ந்த நினைவுகளுடன் மலர்ந்த புகைப்படமும் நன்றாக உள்ளது. ராஜத்தின் வாழ்க்கை விபரங்கள் அறிந்து கொண்டேன். குடும்பத்துடன் தனியாக இருக்க வேண்டிய சமயங்களில் நீங்கள் தைரியமாக செயல்பட்டிர்க்கிறீர்கள் . பாராட்டுக்கள். மலரும் நினைவுகள் எப்போதுமே மகிழ்ச்சியை தருபவைதான். தொடர்ந்து மலரும் நினைவுகளோடு வாருங்கள். மலர்ந்த முகத்தோடு நானும் படித்துப் பார்க்க ஆவலாக உள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, என்னோட ஆரம்ப காலப் பதிவுகளில் குஜராத், ராஜஸ்தான், சிகந்திராபாத் நினைவுகள் தான் அதிகம் இருக்கும் சிகந்திராபாதும் எனக்குப் பிடித்த ஊர், வீட்டு வாசலில் பேருந்து நிறுத்தம், பேருந்தில் ஏறினால் சிஜி எச் எஸ் மருத்துவமனை வாசலில் இறங்கிக்கலாம், ரொம்ப வசதியான ஊர். மக்களும் நன்றாகப் பழகுவார்கள்.
Deleteமாமாவுடைய உத்தியோகத்தில் அடிக்கடி வெளியே ஆடிட் போக வேண்டி இருக்கும் என்பதால் நாங்கள் மூவராக மட்டுமே பல வருஷங்கள் இருந்திருக்கோம். சென்னையிலும் அது மாதிரியே மாமியார், மாமனார் நான், குழந்தைகள் மட்டும் இருந்திருக்கோம். என்ன ஒரு ஆறுதல் எனில் அக்கம்பக்கம் மனிதர்கள் உண்டு, ஆர்மி குடியிருப்பு மாதிரி அத்துவானமாக இருக்காது. பின்னடி தெருவில் என் அப்பா, அம்மா, அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி குழந்தைகளுடன் இருந்தார்கள். கடைசி நாத்தனாரும் இரண்டு மூன்று தெரு தள்ளி இருந்தார். உறவினர்கள் வருவதும் போவதுமாக இருக்கும். சமைச்சுச் சாப்பிட்டு ஒழிச்சுப் போட்டுட்டு உட்கார்ந்தால் அடுத்த நிமிஷமே நாலைந்து பேர் சாப்பிட வருவார்க்ள். திரும்பச் சமைக்கணும், சிலர் ரொம்ப அவசரத்தோடும் பசியோடும் வருவாங்க. அப்போ எங்க வீட்டில் குடி இருக்கும் வீட்டு மாமியின் சாப்பாடும், பக்கத்து அகத்து மாமியின் வீட்டுச் சாப்பாட்டையும் கொல்லை வழியாகப் போய் தூக்கிக் கொண்டு வருவேன் அவற்றைக் கொஞ்சம் புனர் பாகம் செய்து அப்பளம் பொரித்து வந்தவங்களுப் போட்டு விடுவேன்,
Delete