இன்னிக்குக் குளிக்கும்போது நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்துட்டார். தினம் தினம் தானே குளிப்பதால் இப்போக் கொஞ்ச நாட்களாகக் கிட்டே இருப்பதில்லை; அவரும் வேண்டாம், நீ போய் சமையலைப் பார் என்பார். ஆனால் கதவை உள்ளே தாழ் போட்டுப்பார்னு நினைக்கலை. இன்னிக்குச் சாதம் வைச்சுட்டு ஏற்கெனவே வேக வைச்சிருந்த குட்டி உருளையை எடுத்துக் கொண்டு தோல் உரிக்க வந்து உட்காரும் முன்னரே கீதா, கீதா எனக் கூப்பிடுகிறாபோல் இருந்தது. நிஜமா, அல்லது என்னோட பிரமையானு சுதாரிக்கும் முன்னர் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கூவல். என்னால் என்னதான் வேகமாய்ப் போனாலும் உடனே போக முடியாதே! இப்போத் தானே நடை பயிலும் குழந்தை போல் நடக்கிறேனே! ஆகவே நானும் பதிலுக்குக் கத்திக் கொண்டே போனேன்,. போனால் உள்ளே இருந்து ரங்க்ஸ் சத்தம் போடுகிறார், கீழே விழுந்துட்டேன் என்று. கடவுளே! என்னோட கை, கால்கள் இயங்காது போல் பின்னிக்கொண்டன. கதவைத் திறக்க முயன்றால் உள்ளே தாழ் போட்டிருக்கார்.
கடவுளே இப்போ என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து வேலை செய்யும் பெண் தாமதமாக ஒன்பதரைக்கு வந்திருந்தார். என்னோட கூச்சல், அவரோட கூக்குரல் எல்லாம் கேட்டுட்டு அவங்க வீடு சுத்தம் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுட்டு அங்கே வந்தார். கதவைத் திறக்க முயன்றார், அதுக்குள்ளே உள்ளே இருந்து ரங்க்ஸும் நல்ல வேளையாக் கைக் கம்பு உள்ளே எடுத்துப் போயிருந்ததால் அதன் உதவியோடு கதவுத் தாளைத் தள்ள ஆரம்பிச்சார். இங்கேயும், உள்ளே இருந்தும் முயன்றதில் கதவு தாழ் திறந்து கொண்டது.எக்கச்சக்கமான நிலையில் கீழே விழுந்திருந்தார். ஆனால் மெதுவாக எழுந்து எப்படியோ உட்கார்ந்து விட்டார். வேலை செய்யும் அம்மா உள்ளே போய்த் தூக்க முயல, அவரும் எழுந்திருக்க முயல வழுக்கிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் இன்டர்காம் மூலம் செக்யூரிடியை அழைத்து யார் இருந்தாலும் உடனே வரச் சொன்னேன். அப்போது ட்யூடியில் இருந்தவர் உடனே மேலே வர, வேலை செய்யும் பெண்ணும் அவருமாகத் தூக்கிக் குளிக்கும் நாற்காலியில் உட்கார்த்தி வைத்தனர்.
பின்னர் வாளியை ஸ்டூலில் வைத்து விட்டுத் தண்ணீர் நிரப்பி இருந்ததால் கிட்டே வைத்துக் குளிக்க வைத்துவிட்டுப் பின்னர் வெளியே வந்தார், செக்யூரிடி அவர் வேலையைக் கவனிக்கப் போக வேலை செய்யும் அம்மா வேலையைத் தொடர நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தேன்.
எல்லோரும் துணைக்கு ஒருத்தர் வேண்டும் என்கின்றனர். ஆனால் வரவங்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சொல்றாங்க. ஒரு அம்மா வீட்டோடு இருந்து பார்த்துக் கொண்டு சமைத்துப் போடுவேன் என தினசரியில் விளம்பரம் கொடுக்க அவங்களை அழைத்துப் பேசினால் காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்து காலை ஆகாரம், மதியம் சாப்பாடு முதலியன பண்ணி வைச்சுட்டுப் பத்துமணிக்குள் போயிடுவாராம். அவருக்கு காலை பத்தில் இருந்து மாலை நாலு, ஐந்து, சில நாட்கள் ஆறு மணி வரை அரசுக் காய்கறிப் பண்ணையில் வேலையாம். அதை முடிச்சுட்டு நேரம் இருந்தால் வந்து இரவு உணவு தயாரிப்பாராம். அப்படி வந்தால் இரவு இங்கேயே தங்கிப்பாராம். அதைத் தான் வீட்டோடு இருந்துனு சொல்லி இருக்கார் போல. வர முடியலைனா நாமே ஏதானும் பண்ணிக்கணுமாம். இல்லைனா ஓட்டலில் வாங்கிக்கோங்கனு புத்திமதி. அவங்க டிஃபன் செய்தாலும் இட்லி மட்டும் தான் பண்ண முடியுமாம். எண்ணெய் விட்டு தோசை, அடை, சப்பாத்தி எல்லாம் பண்ணினால் உங்களுக்கு ஜீரணமே ஆகாது என்றார். இங்கே நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவில் சப்பாத்தி அல்லது தோசை தான் பண்ணறேன்.
இதுக்கெல்லாம் நாங்க அட்ஜஸ்ட் செய்து கொள்ளணும் என்றும் சொன்னார். அதோடு குழம்போ, ரசமோ, சாம்பாரோ ஏதோ ஒண்ணு தான் பண்ணுவாராம். அதையே இரவு உணவுக்கும் வைச்சுக்கணுமாம். அவங்க இங்கேயே சாப்பிட்டுக்கறாங்களானு கேட்டதுக்கு எனக்கு இனிப்புப் பதார்த்தம் தான் ரொம்பப் பிடிக்கும். நான் ஏதாவது இனிப்புப் பண்ணிச் சாப்பிட்டுப்பேன். நான் சாதத்தில் குழம்பெல்லாம் உங்களைப் போல விட்டுக் குழைத்துச் சாப்பிட மாட்டேன் என்றார், இத்தனைக்கும் அவர் நாங்க சாப்பிடும்போது வரலை. சாப்பிடுவதைப் பார்த்ததும் இல்லை. சாப்பிட்ட பாத்திரங்களை ஒழிச்சுப் போடணுமேனு சொன்னதுக்கு அதுக்குத் தனியா ஆள் போட்டுக்கோங்க, என்னால் அதெல்லாம் இருந்து செய்ய முடியாது. அப்படி நான் தான் செய்யணும்னா சம்பளத்தில் கூடக் கொடுக்கணும் என்பதோடு பாத்திரங்களை இரவு நான் எப்போ வருவேனோ அப்போ ஒழிச்சுப் போடறேன். அது வரை டேபிள்ளேயே இருக்கட்டும் என்றார்.
எங்க வீட்டுக்கு வரவங்க யாரா இருந்தாலும் இவ்வளவு முடியாத சமயத்தில் கூட சமையலறை சுத்தமாக இருப்பதோடு வீட்டிலும் ஆங்காங்கே ஒட்டடை எல்லாம் தொங்காமல் கழிவறை, கை கழுவும் வாஷ் பேசின் எல்லாமும் சுத்தமாகப் பராமரிக்கிறீங்க என்பார்கள். இந்த அம்மாவை நான் வைத்துக் கொண்டால் வீடு அதோகதி தான். அதோடு இதை எல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்துக்கணும்னு வேறே சொல்றாங்க. என்னால் இதை எல்லாம் அட்ஜஸ்ட் செய்துக்க முடியாது என்பதால் பையர், பெண்ணிடம் பேசிட்டுச் சொல்றோம்னு சொல்லிட்டோம். அடுத்து நம்மவருக்கு திடீர்னு ஹோமுக்குப் போனால்னு ஒரு எண்ணம் தோன்ற பெருங்களத்தூரில் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர் திரு இன்னம்பூரார் இருந்த ஹோம் நன்றாக இருப்பதாக அவர் சொல்லிக் கொண்டே இருந்ததோடு என்னை அழைக்கவும் அழைத்தார். அவங்க விலாசத்தைக் கேட்டு வாங்கி அவங்களோடு பேசினதில் மனதில் அவ்வளவாய்த் திருப்தி வரலை. அபார்ட்மென்ட் தனியா இருக்காம். அதில் தங்கறவங்க டைனிங் ஹாலுக்குப் போய்ச் சாப்பிடணுமாம். எங்களைப் போல் முடியாதவங்களுக்கு ஒரு ஹால், ஒரு படுக்கை அறை என்றார். அழைப்பு மணியெல்லாம் பொருத்தி இருப்பதால் நீங்க எப்போக் கூப்பிட்டாலும் ஆட்கள் உடனே வருவாங்க என்றார். எல்லா வேலைகளும் செய்து கொடுக்கிறங்க தான். பணம் தான் அதிகம். மின்சாரக் கட்டணம் கூட ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய். தனியாக் கொடுக்கணும்.
எங்க உறவுப் பெண் ஒருத்தர் என் வயது கோவையில் பிரபலமான ஹோமில் தங்கிட்டு அங்கிருந்து வருவதற்கு முயற்சி பண்ணி மிகவும் கஷ்டத்தோடு நான்கு வருஷம் சிரமப்பட்டு இப்போத் தான் போன வருஷம் வந்து விட்டார். இன்னும் சிலர் ஹோமுக்குப் போன அன்றே இறைவன் அழைப்பில் போயிட்டாங்க. நல்ல ஹோமெல்லாம் இருக்குன்னாலும் நமக்கு மனது ஒத்துக்கணும்,. ஆகவே இப்போதைக்கு ஏதேனும் ஏஜென்சி மூலம் தங்க ஒரு ஆள் பகல் வேளை மட்டும் இருந்தாலும் போதும்னு பார்க்கிறேன். கிராமங்களிலும் விசாரிக்கிறேன். எனக்கு என்ன தான் உதவிக்கு ஆள் இருந்தாலும் என் வேலைகளை நானே செய்து கொண்டிருந்த/கொண்டிருப்பதால் மனம் சமாதானம் ஆகச் சில நாட்கள் ஆகும். பார்ப்போம். இறைவன் என்ன நினைக்கிறானோ அதுபடி. எங்கே போவது என்றாலும் அதற்கு முன்னால் சாமான்களை ஒழுங்கு செய்யணும், போகிற இடத்திற்கு என்னெல்லாம் கொண்டு போகலாம் என்பதை யோசிக்கணும். முக்கியமாய் ஸ்ரீராமர்! வேண்டாம் அழுதுடுவேன்.
இப்போ இங்கே இருப்பதால் என்னிக்கானும் மாறுதல் தேவைப்பட்டால் ஸ்விக்கி மூலம் உணவு வரவழைக்கிறேன். ஹோமில் அதெல்லாம் முடியாது. நமக்குத் தேவைக்கு ஒரு காஃபி கூடப் போட்டுக்க முடியலைனா ரொம்பக் கஷ்டம். யோசிக்கணும் விரைவில் ஆண்டவன் நல்லவழி காட்டுவான் என்னும் நம்பிக்கையோடு இருக்கேன்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை படிக்கையில் என் மனது மிகவும் கஸ்டப்பட்டு விட்டது. பதிவை படிக்கும் போதே எனக்கு திக்திக்கென்று இருந்தது. எப்படியோ கடவுள் அனுக்கிரஹத்தால் நல்லபடியாக சமாளித்து விட்டீர்கள். இனி உங்கள் கணவரை குளிக்கும் அறையில் உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ள விடாதீர்கள். நல்லவேளை..! அவர் எப்படியோ உட்பக்கமிருந்து தாழ்பாளை திறந்து விட்டார். எல்லாமே நல்லதாக நடந்துள்ளது. இனியும் நல்லதாகவே நடக்கும் கவலை வேண்டாம். கடவுள் துணையாக இருப்பார்.
நீங்கள் ராமரைப்பற்றிச் சொன்னதும் நானும் கண் கலங்கி விட்டேன். எவ்வளவு காலம் பரிச்சயமான பந்தம் அது. இறைவனும் அதை புரிந்து கொண்டு நல்ல வழியில் தங்களுடன் வருவான். கவலைப்படாதீர்கள். நல்லதே நடக்கும்.
விடுமுறை கிடைத்தால் தங்கள் பெண், பிள்ளை யாரையாவது ஒருவரை இரண்டு மாதங்கள் இங்கு வந்து தங்கச் சொல்லி அழைக்கலாம். உங்களுக்கும் மனதுக்கு கொஞ்சம் மகிழ்வாக இருக்கும். அவர்களின் கால சந்தர்ப்பங்கள் இதற்கு ஒத்துழைப்பை தருமா? பேசி பாருங்கள்.
நெருக்கமான உறவுகளில் யாரையேனும் உதவிக்கு அழைக்கலாம். ஆனால் நீங்கள் சொல்வது போல் உறவுகளும் இப்போது உதவிக்கென அழைத்தாலே உபத்திரவமாக கருதுகிறார்கள். உங்கள் நிலைமை புரிகிறது. நல்லதொரு உதவியை இறைவன் தர வேண்டுமாய் நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா, ரொம்பவே உங்களை எல்லாம் வருந்த வைச்சுட்டேன் போல! மன்னிச்சுக்கோங்க. நேத்திக்குக் கீழே விழுந்த பதட்டத்தில் ஒரே புலம்பலாகப் போட்டுட்டேன். :( இன்னிக்கு மனசு கொஞ்சம் தேறி இருக்கு. ஏஜென்சி மூலமாவும் ஆள் பார்க்கிறேன். ஹோம்கேரிலும் கேட்டுட்டு இருக்கேன். பார்ப்போம். பகல் ஒரு வேலைக்கு மட்டும் உதவிக்குத் தேவை. இரவில் தேவைப்படாது.
Deleteபடிக்கும்போது மனம் கனமாகி விட்டது. சாதாரணமாகவே பெரியவர்களை உள்ளே தாழ் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லித்தானே அனுப்புவோம்? மாமா இந்த நிலையில் ஏன் உள்ளே தாழிட்டுக் கொண்டார்? இனியாவது தாழிடாமல் சென்று வருகிறார் என்று நம்புகிறேன். மாமாவிடம் நான் விசாரித்தேன் என்று சொல்லவும்.
ReplyDeleteமாமா தாழ் போட்டுப்பதே எனக்கு நேத்திக்குத் தான் தெரியும். பொதுவா நான் குக்கர் வைச்சுட்டு அணைச்சதுக்கப்புறமாத் தான் குளிக்கப் போவார். நான் அங்கேயே உட்கார்ந்திருப்பேன். இப்போக் கொஞ்ச நாட்களாகச் சீக்கிரமே குளிக்கப் போகிறார் என்பதால் என்னால் போக முடியலை. :( இனி இன்னும் கவனமாக இருப்பேன்.
Deleteசென்னையில் ஒரு தம்பதி, இங்கு மனைவி வழி சொந்தத்தில் சிரமப்படுகிறார்கள். அவருக்கு வயது 78. மனைவிக்கு வயது 72.
ReplyDeleteஒரே பிள்ளை இருந்து, அவன் தனது 19 வது வயதில் சாதாரண ஜுரத்தில் போய்விட்டான். அவர் அடிக்கடி கீழே விழுந்து விடுவார். இப்பவும் அப்படி விழுந்து சர்ஜரி நடந்து, சிரமம்.. காசும் கிடையாது. ஹோம் எதற்காவது போகலாம் என்றால் அவர்கள் கேட்கும் கட்டணம் கட்டுப்படியாகவில்லை.
கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கு. இப்படிப் பலரைப் பற்றிக் கேள்விப் படுகிறேன். கடவுள் நல்ல வழி காட்டட்டும்.
Deleteநாள் முழுவதும் வீட்டில் இருந்து சமைத்துத் தருவேன் என்கிற விளம்பரப் பெண்ணின் சமத்காரமான பேச்சு எரிச்சல்தான் தருகிறது. எல்லாம் வியாபாரம்.
ReplyDeleteமனிதாபிமானத்தைக் கூட 'அர்பன் ஆப்'பில் ஸப்ளை செய்யும் காலம் இது.
இத்தனைக்கும் அந்தப் பெண்ணிற்கு யாரும் இல்லை. அப்பா, அம்மா எப்போவோ போயிட்டாங்களாம். கல்யாணம் ஆகலை. ஒரே தம்பியும் விஷக் காய்ச்சலில் போய்ச் சேர்ந்தாச்சு. சித்தி வீட்டிலோபெரியம்மா வீட்டிலோ இருக்கார். அரசு கொடுக்கும் ஆதரவுத் தொகை, இலவச ரேஷன், பெண்களுக்குக் கொடுக்கும் உதவித் தொகை, முதியோர் பென்ஷன் என எல்லாமும் வாங்கிக்கிறார். அது போக காய்கறிப் பண்ணையில் வேலை. இதுவும் அரசு வேலை தான்.
Deleteதவிக்கும் மனசு..
ReplyDeleteதலைப்பே நிலைமையைச் சொல்கிறது. சீக்கிரமே உதவிக்கு நல்ல நியாயமான, மனிதாபிமனம் மிக்க ஒரு ஆள் கிடைத்து சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி ஸ்ரீராம்.
Deleteஇன்றைய உங்கள் பதிவைப் படித்துவிட்டு மனம் டிப்ரெஸ் ஆகிறது. எல்லா இரவுக்கும் ஒரு பகல் உண்டு.
ReplyDeleteமன்னிப்பு நேல்லை பொதுவா நான் ரொம்ப வெளிக்காட்டிக்க மாட்டேன், புலம்பலும் இருக்காது, இப்படி எப்போவானும் மனம் தளர்ந்து போகும் சமயத்தில் வெளிப்பட்டு விடுகிறது. மன்னிப்பு மீண்டும் மீண்டும்.
ReplyDeleteபெங்களூரில் முதியோர்களுக்கான, வீடு, சிறிய குடியஇருப்பு வாங்கிக்கொண்டு காமன் கிச்சனில் உணவு, ப்ரார்த்தனைக்குக் கட்டிடம், அவசர உதவிக்கு நர்ஸ் என்றெல்லாம் வசதிகள் இருக்கு. நான் போய் பாத்திருக்கிறேன் (வேற வேலையாக அந்த ஏரியாக்குப் போனபோது). அவர்கள் வற்புறுத்தி எங்களை மதிய உணவு சாப்பிடச் சொன்னார்கள். நிறைய வெரைட்டி இருந்தாலும், உணவின் ருசி முதியோர்களுக்கானது (காரம் புளி குறைவு). ஒரு வேளை சாப்பிட்டே டிப்ரஸ் ஆயிட்டேன்.
ReplyDeleteஉங்க பதிவு, துளசி டீச்சர் பதிவுன்னு இரு பதிவுகளும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
பெங்களூர் மட்டுமில்லாமல், சென்னை, கோவை போன்ற ஊர்களிலும் நீங்க சொல்றாப்போல் முதியோர்களுக்கான ஹோம் நிறைய இருக்கின்றன. ஆனால் சிலருக்கே ஒத்து வருது, பலருக்கும் ஒத்து வரலை. இத்தனைக்கும் ஐந்து நட்சத்திர விடுதி போல வசதிகள்னு சொல்லிக்கிறாங்க. எல்லாத்தையும் இந்தச் சாப்பாடு வந்து அடிச்சுடறது போல இங்கே வீட்டில் திடீர்னு வேணும்னால் பஜ்ஜி, பகோடா போட்டுக்கலாம். முதியோர் இல்லத்தில் அதெல்லாம் கொடுப்பதில்லைனு நினைக்கிறேன்.
Deleteதுளசி கொண்டாட்டங்கள் பத்திச் சொல்லிட்டுத் திடீர்னு முழங்கால் வலிக்கு மருத்துவம் பற்றி ஆரம்பிக்கவும் என்னடா இதுனு கவலையும் பயமும் வந்தது. நானும் ஆயுர்வேத மருத்துவம் தான் செய்துக்கறேன். அலோபதிக்குப் போகவே இல்லை. எங்க மருத்துவர் என்னை அவ்வப்போது வந்து பார்ப்பவர் அலோபதி மருத்துவர் தான். ஆனால் ஆர்த்தோ மருத்துவரிடம் போகாதே, மூட்டு செயற்கை பொருத்தச் சொன்னால் பொருத்திக்காதே எனவே அறிவுறுத்துகிறார். எனக்கும் அந்த எண்ணமெல்லாம் இல்லை. பையர் கேரளா மருத்துவம் பார்த்துக்கச் சொல்றார். அது கொஞ்சம் முரட்டு வைத்தியம். கொதிக்கும் வெந்நீரை எடுத்து அப்படியே வலி இருக்கும் இடத்தில் ஊத்துவாங்களாம். பையரின் அனுபவம். ஆகவே நான் அதுக்கும் ஒத்துக்கலை. மெதுவாய் நடந்தாலும் இப்போதுள்ள மருத்துவமே போதும்னு இருக்கேன்.
Deleteஎனக்கு முந்தைய முந்தைய ஜெனரேஷன் பிறந்த ஊரைவிட்டு வெளியூர் வாழ்விடத்துக்குப் போனாங்க. அடுத்த ஜெனரேஷன்ல அடுத்த நாட்டுக்கு (அனேகமா யுஎஸ்) படிக்கப் போய் வாழ்க்கையையும் அங்கே ஆரம்பிச்சாங்க.காலம் மாறும்போது அது கஷ்டங்களையும் சேர்த்தே கொண்டுவருகிறது.
ReplyDeleteஎங்க குடியிருப்பு வளாகத்தில் அநேகமாய் எல்லா வீடுகளிலும் இரண்டே நபர் தான்.. கணவன், மனைவி. குழந்தைகள் வெளிநாடு அல்லது வெளியூர். எங்களையே எங்க மாமனார் குத்தம் சொல்லுவார் ஊரோடு இருக்காமல் வேலைக்குனு வடக்கே போயிட்டீங்கனு. எங்க குழந்தைகள் கேட்கவே வேண்டாம். :( என்ன ஒண்ணுனா பையர் இப்போ தோஹா வந்துட்டார். அங்கிருந்து இந்தியாவுக்குக் குறைவான நேரமே பயணம். ஆனால் நைஜீரியாவில் இருந்தாப்போல் நினைச்சால் லீவெல்லாம் கிடையாது. அங்கே எப்போ லீவோ அப்போத் தான் வரலாம் ஒரு வாரமோ பத்து நாட்களோஓ
Delete