ஆயிடுத்து. இன்னிக்கோட ஒரு வருஷம். ஆங்கிலத் தேதியைக் கணக்கில் எடுத்துண்டால் ஒரு வருஷம். தமிழ் மாசத் திதியும் அமாவாசை அன்னிக்கு வந்தது தான். ஆனால் அது சூன்ய திதி என்பதால் பண்ணலை. அடுத்த வாரம் இந்தியா போகணும். கிட்டத்தட்டப் பத்தொன்பது வயதில் இருந்து பார்த்துப் பழகிய மனிதர். இப்போல்லாம் பத்தொன்பது வயசுக்குக் குழந்தை என்கின்றனர். சிலருக்குப் பள்ளிப் படிப்பே அப்போத் தான் முடியும். ஆனால் எனக்கோ கல்யாணமே ஆகி விட்டது. எங்க காலத்தில் என்னை விட இன்னும் சின்ன வயசில் கல்யாணம் ஆனவங்க உண்டு. அவ்வளவு ஏன் என்னோடு படிச்ச சில பெண்களும் எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். மிஞ்சிப் போனால் 16, 17 வயதுக்குள் தான் இருக்கும்.
இப்போவும் என்னால் இன்னமும் நம்ப முடியலை. இரவில் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறாப்போல் இருக்கும். திடீர்னு கூப்பிட்டாற்போல் தோன்றி முழிப்பு வரும். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து எப்படியும் ராத்திரி பனிரண்டு வரைக்கும் அவரோடத் தான் உட்கார்ந்து கொண்டு இருப்பேன். சில நாட்கள் தூங்கிடுவார். சில நாட்கள் சீக்கிரம் தூக்கம் வராது. அப்போ மட்டும் தூங்கறதுக்குனு ஒரு மாத்திரை கொடுக்கச் சொல்லி மருத்துவர் சிபாரிசு பண்ணி இருந்தார். அதைக் கொடுப்பேன். கொஞ்ச நேரம் புரண்டுவிட்டுப் பின் தூங்குவார். நான் என் படுக்கையில் வந்து படுத்துப்பேன்.
திடீர்னு ஹார்லிக்ஸ் கொடு பசிக்கிறது என்பார். ஒவ்வொரு சமயம் பசி தாங்கலை. சாதம் இருந்தால் நன்கு பிசைந்து மோர் விட்டுக் கரைச்சுக் கொடு என்பார். அந்த அகால வேளையில் சாதம் எப்படிக் கொடுப்பது? கொடுத்தாலும் ஒரு தம்பளர் சாப்பிட்டாலே அதிகம். பாதியில் திரும்பக் கொடுத்துடுவார். ஆனாலும் நல்ல நினைவுகள் இருந்தன. தானே எழுந்து நடமாட ஆரம்பிச்சப்புறமாப் பர்வாயில்லை. இனி ஆபத்து இருக்காது. மருந்துகள் மட்டும் தொடரணும் என்றே நினைச்சிருந்தோம். பிசியோ தெரபிஸ்டும் இனி தேவைன்னா கூப்பிடுங்க வந்து பார்க்கிறேன் என்று 2024 டிசம்பர் கடைசியில் விடை பெற்றார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நர்ஸ் பெண்களும் ஒவ்வொருவராக விடை பெற்றனர். இரவுக்கு மட்டும் யாரானும் வரட்டும் என்றால் அவரோ நான் இனி இந்தக் கட்டிலில் படுக்கப் போவதில்லை. நம்ம ரூமில் என்னோட கட்டிலில் என்னோட மெத்தையில் தான் படுத்துக்கப் போறேன்னு சொல்லிட்டு அங்கே வந்து படுக்க ஆரம்பிச்சார். இரவு கழிவறை போறச்சே மட்டும் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கணும். மற்றபடி பிரச்னை ஏதும் இல்லாமல் தான் இருந்தது.
திடீர்னு சர்க்கரை ஏறி, ஏறி, இறங்கி, இறங்கி நு விளையாட்டுக் காட்ட ஆரம்பிக்க எதுக்கும் காட்டிட்டு வந்துடலாம்னு தான் அன்னிக்கு மருத்துவமனைக்கே போனோம். திரும்பி வந்துடுவோம்னு நினைச்சோம். ஆனால் அங்கே போனப்போ சர்க்கரையை அதிகமாய்க் காட்ட மருத்துவர் உடனே எமர்ஜென்சியில் சேர்த்துவிட்டு எழுந்து நடமாடக் கூடாது என்பதால் கதீடரையும் போடச் சொல்லிட்டார். அவரோ எழுந்து கொண்டு டாய்லெட்டில் தான் போவேன்னு பிடிவாதம். எப்படியோ சமாளிச்சேன். நர்ஸ் பெண் ஒருத்தரை இரவுக்குத் துணைக்கு வரச் சொல்லி இருந்தேன். அவரும் இருந்தார். நானும் இருந்தேன். அன்னிக்கெல்லாம் தூங்கிட்டார். பின்னர்மறுநாள் வந்த ஒரு மருத்துவர் திடீர்னு வயிறு பெரிசா இருக்குனு சொல்லிட்டு என் ஜி ட்யூப் மூக்குவழியாப் போட்டு வயிற்றில் என்ன இருக்கோ அதை வெளியேத்தணும்னு சொல்ல, நான் கடுமையாக எதிர்த்தேன். ஆகவே காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து பார்க்கச் சொன்னார்கள். அவரும் வந்து பார்த்துட்டு ஒண்ணும் தேவையில்லை. அசிடிடி மாத்திரை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டார்.
ஆனாலும் இவங்க கேட்கலை. நான் இல்லாதப்போ ஊரில் இருந்து வந்திருந்த பையரிடம் கையெழுத்து வாங்கி என் ஜி ட்யூபைப் போட்டாங்க. அதில் வந்தது தான் பிரச்னை. சாப்பாடே கிடையாது. மூக்கு வழியாகச் செல்லும் ட்யூப் மூலம் ஆகாரம். அதுவும் சொட்டுச் சொட்டாக. அவரோ பசிக்கிறது என்பார். ஒரே வேதனை..வயிற்றிலிருந்தோ பைல் தண்ணீர் மட்டும் மஞ்சளாக வந்திருந்தது. 24 மணி நேரத்துக்கு அதக்கு மேல் வேறே ஏதும் வயிற்றில் இருந்து வரலை. மறுபடியும் காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் பார்க்க வந்தப்போ அவரை எழுதிக் கொடுக்கச் சொல்லி ட்யூபை அகற்றச் சொல்லி அகற்றினோம். பின்னர் வீட்டுக்குப் போய்விடலாம் என்னும் எண்ணத்தில் மருத்துவரைப் பார்க்க அவங்களும் சர்க்கரை குறைஞ்சிருக்கு. வீட்டில் வைச்சுப் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு டிஸ்சார்ஜ் எழுதி கொடுத்தார்.
வீட்டுக்கு வந்ததில் இருந்து மருந்துகள் எல்லாமும் ஐவி வழியாகவே கொடுக்கச் சொன்னதால் தெரிந்த நர்ஸ் வீட்டுக்கே வந்து இரண்டு வேளையும் மருந்தை ஏற்றிவிட்டுப் போவார். இதில் வீசிங் இருந்ததால் நடு நடுவே நெபுலைசர் வேறே வைச்சோம். ஆனாலும் பிடிவாதமாக எழுந்து நடப்பேன்னு நடந்தே கழிவறை செல்வார். நாங்க பிடிச்சுப்போம். என்னோட பெட்டில் படுத்துக்கணும். அங்கே கூட்டிப் போ என்று சொல்லவும் சரினு எங்க ரூமுக்கு வந்து அங்கே அவரோட படுக்கையில் படுக்க வைச்சோம். ஆனால் இந்த பெட்டில் ஐவி ஏற்றும் வசதி இல்லை என்பதால் மறுபடி அந்த ரூமுக்கே போனோம். ஒரு வார விடுமுறையில் வந்திருந்த பையர் கிளம்பி சனிக்கிழமை போனார். ஆனால் அவருக்கு திடீரெனப் பிள்ளையை யார்னு தெரியலை. தன்னோட தம்பினு நினைச்சுட்டுப் பேசினார். அப்போவே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கு. என்றாலும் என்னிடம் முழு நினைவோடு பேசினதோடு இல்லாமல் திங்கட்கிழமை அமாவாசை, இந்தத் தரம் உட்கார்ந்து தர்ப்பணம் பண்ண முடியுமா தெரியலை என்று வேறே சொன்னார். அந்தத் தரம் எழுந்து தர்ப்பணம் பண்ண முடியலை. ஆனால் சாயங்காலம் பிசியோ தெரபிஸ்ட் வந்தப்போ அவரைப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு நடந்தே போனார் . பிசியோ தெரபி முடிஞ்சதும் பாத்ரூமுக்கு நர்ஸும் நானும் பிடிச்சுக்கப் போயிட்டு வந்தார்.
ராத்திரியெல்லாம் பேசிண்டே இருந்தார். திடிர்னு என் கைகளைப் பிடிச்சுண்டு என்னை விட்டுட்டுப் போயிடாதே. நீ இல்லைனா நான் சோத்துக்குத் திண்டாடணும். என்னை யார் பார்த்துப்பாங்க? யார் பார்த்துண்டாலும் சரியா வராது. நு சொல்லிண்டே கைகளை இறுக்கிப் பிடிச்சுண்டார். விடவே இல்லை. சரினு நானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். சாதாரணமாகப் பேசிண்டே இருந்தார். நிகழ்காலம், இரவு என்பதெல்லாம் தெரிந்தது. ஆனால், பிள்ளை, பெண்ணைத் தெரியலை. பெண் கூப்பிட்டப்போ அவளைப் பேத்தினு நினைச்சுண்டார். அதொடு இல்லாமல் அவரோட அப்பா வந்திருப்பதாகவும் நினைச்சுண்டு இருந்தார். அப்பா சாப்பிட்டாரா? காஃபி குடிச்சாரானு எல்லாம் கேட்டார்.91 ஆம் ஆண்டிலேயே அவர் அப்பா (மாமனார்) இறந்துட்டார். ஆனால் அவருக்கு அப்பா இருக்கிறாப்போல் ஓர் எண்ணம் போல. பின்னர் அப்படியே தூங்கிப் போனார். சுமார் ஒன்றரை வரை அங்கே உட்கார்ந்துட்டு இரவுப்பணிக்கு வந்த நர்சிடம் கதீட்டர் பையை மாத்திக் கொட்டச் சொல்லிட்டுப் படுத்துக்கப் போனேன். தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துட்டு எப்போத் தூங்கினேனோ! திடீர்னு அவர் கூப்பிட்டாப்போல் இருக்கவே முழிச்சுண்டு மணியைப் பார்த்தால் வழக்கமா நான் எழுந்திருக்கும் நேரம் நாலரை மணி. சரி, பரவாயில்லைனு நினைச்சு எழுந்து கொண்டு வாசல் தெளிச்சுக் கோலம் போட்டு சாமி விளக்கேத்திட்டுக் காஃபி டிகாஷன் போட்டுப் பாலையும் அடுப்பில் வைச்சு அடுப்பைச் சின்னதாக்கிட்டு அவரை எழுப்பிப் பல் தேய்ச்சு விடலாம்னு போனால்............
அசையாமல் படுத்திருந்தது என்னமோ மனசை உறுத்தத் தொட்டுப் பார்த்தால் லேசாகச் சூடு இருந்தது. நேஞ்சில் கை வைச்சுப் பார்த்தாலும் மிக மிக லேசாக அடிச்சுண்டது. உடலில் சூடு இருந்ததால் உலுக்கினேன். ஆனாலும் எழுந்துக்கலை. அபார்ட்மென்டில் கீழே இரண்டாம் தளத்தில் இருக்கும் மருத்துவருக்கு இன்டர்காம் மூலம் கூப்பிட்டால் பதிலே வரலை. சரினு எதிர்வீட்டு மாமா, அசோசியேஷன் தலைவர் ஆகியோரைக் கூப்பிட்டுவிட்டு ஆம்புலன்ஸுக்கும் தொலைபேசினேன். கீழே இருந்து வந்த மருத்துவருக்கும் உடலில் கொஞ்சம் சூடு இருப்பதாலும் நாடி மெலிதாக அடிப்பதாலும் முதல் சிகிச்சை செய்துடலாம்னு கீழே போய் உபகரணங்களை எடுத்து வந்தார். அதுக்குள்ளே 108 ஆம்புலன்ஸ் சகல ஏற்பாடுகளுடனும் மருத்துவருடனும் வந்து விட்டது. மருத்துவர் உதவி ஆட்களுடன் மேலே வந்தவர் அவரைப் பார்த்துட்டு உடனேயே உயிர் பிரிஞ்சாச்சு எனச் சொல்லிட்டார். பின்னர் இரு மருத்துவர்களும் சோதனை செய்துவிட்டு உறுதிப் படுத்தினார்கள். ராத்திரி எல்லாம் பேசிக்கொண்டு இருந்தாரே! எனக்கு அதுவே மனதில் ஓடியது. காதில் திரும்பத் திரும்ப அதுவே கேட்டுக் கொண்டிருந்தது. பண விவகாரங்களில் எல்லாம் நான் அதிகம் ஆர்வம் காட்டித் தெரிஞ்சுக்க விரும்பியதில்லை. அதெல்லாமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார். பிள்ளை, பெண்களிடமும் சொல்லுவார். எது எங்கே இருக்குனு தெரிஞ்சுக்காம இருக்காளே என்பார். அப்போவும் அதைப் பத்தித் தான் சொன்னார். இனிமேல் நீ என்ன பண்ணப் போறியோ, தெரியலை, உன்னைத் தனியா விட்டுட்டுப் போனேன்னா நீ என்ன செய்வே? என்றார். கடைசியில் அவர் முந்திண்டார். கொஞ்சம் முழிச்சுப் பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோனு நினைச்சுக்கறேன்.
நேத்திக்கு ராத்திரி கூடத் தூக்கமே வராமல் புரண்டு கொண்டிருந்தப்போப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டாப்போலயும், கீதா, கீதானு கூப்பிட்டாப்போலயும் ஓர் எண்ணம்.அவர் எப்படி மூச்சு விடுவாரொ அதே போல மூச்சுக்காற்று தான் எனக்குத் துல்லியமாக அவர் இருப்பைக் காட்டியது. ஒருவேளை இங்கே புது இடத்தில் நான் இருப்பதால் எனக்குத் துணையாக வராரோ என்னமோ! சண்டைனு பெரிசாப் போட்டதில்லை. ஆனாலும் தினமும் சண்டை வரும். காய்கறி வாங்குவதில் சண்டை வரும். கால் கிலோ பீன்ஸோ, கொத்தவரையோ செலவழிக்க முடியாமல் செலவு செய்கையில் ஒரு கிலோ, அரை கிலோனு வாங்கிடுவார். கொத்துமல்லியா 3 கட்டு, புதினா இரண்டு கட்டு. தினுசு தினுசாகப் பச்சை மிளகாய்கள்னு வாங்குவார். அதை எல்லாம் செலவழிக்கத் திண்டாடுவேன். கோபம் வரும் சத்தம் போடுவேன். மற்றபடிப் பெரிய அளவில் சண்டையோ கருத்து வேறுபாடோ இல்லை. யாரானும் ஒருத்தர் இன்னொருத்தர் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவிடுவோம்.
கூட்டுக் குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள். ஆனாலும் நான் அவரிடம் வருத்தத்தை மட்டும் காட்டிப்பேன். மற்றபடி புகார் சொன்னதில்லை. அவரும் எதுவுமே கேட்டுக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அமைதிதான். எவ்வளவோ பிரச்னைகள். பணத்தேவைகள்! நாங்க இருவருமே சமாளிச்சோம். வேலை செய்வதில், அது வீட்டு வேலையானாலும் சரி, சாமான்கள் வாங்க வெளியே போக வேண்டி இருந்தாலும் சரி, நான் விட்டுக் கொடுக்காமல் முன்னே நின்று எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன். எந்தவிதமான உதவியும் யாரும் செய்ய மாட்டாங்க. அதை எல்லாம் பொருட்படுத்தியதே இல்லை. அதே போல் பண விஷயத்திலும். அவர் மட்டும் தான் எல்லாவற்றையும் பார்த்துப்பார். பெரிய அளவிலோ சின்ன அளவிலோ யாருமே எந்தவிதமான உதவியும் செய்தது இல்லை. ஆனாலும் சமாளிச்சோம்.
ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இருந்ததால் இது சாத்தியம் ஆனது. எப்படியோ 55 வருஷங்கள் ஓடிவிட்டன. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் தான். பார்க்கப் போனால் என்னை விட அவர் ஸ்ட்ராங். வலு உள்ளவர். அவரே இதைப் பெருமையாகச் சொல்லிப்பார். உன்னை விட ஏழெட்டு வயசு பெரியவன். ஆனால் உன்னை மாதிரி நான் சோப்ளாங்கி இல்லை என்பார். இந்த விஷயத்தில் நான் நிறைய மருந்து, மாத்திரை சாப்பிடுவதைக் கேலி செய்திருக்கார். ஆனால் கடைசியில் அவருக்கு இப்படி ஓர் உடல்நலக் கோளாறு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்றாலும் ரொம்பவே படுக்கையில் போடாமல் நடமாடிக் கொண்டு தன் நினைவு இருக்கிறச்சே தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு. இது தான் அவர் விரும்பியதும். விரும்பிய வண்ணம் கடவுள் அருள் செய்துவிட்டார். எனக்குத் தான் இனி எப்படியோ? எத்தனை காலமோ? காத்துட்டு இருக்கேன். என்னென்னவெல்லாமோ எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போ சுயப் புலம்பல்கள் எழுதும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கு. என்ன செய்ய முடியும்?
No comments:
Post a Comment