எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 27, 2026

ஒரு வருஷம் ஆகிவிட்டது! :(



ஆயிடுத்து. இன்னிக்கோட ஒரு வருஷம். ஆங்கிலத் தேதியைக் கணக்கில் எடுத்துண்டால் ஒரு வருஷம். தமிழ் மாசத்  திதியும் அமாவாசை அன்னிக்கு வந்தது தான். ஆனால் அது சூன்ய திதி என்பதால் பண்ணலை. அடுத்த வாரம் இந்தியா போகணும். கிட்டத்தட்டப் பத்தொன்பது வயதில் இருந்து பார்த்துப் பழகிய மனிதர். இப்போல்லாம் பத்தொன்பது வயசுக்குக் குழந்தை என்கின்றனர். சிலருக்குப் பள்ளிப் படிப்பே அப்போத் தான் முடியும். ஆனால் எனக்கோ கல்யாணமே ஆகி விட்டது. எங்க காலத்தில் என்னை விட இன்னும் சின்ன வயசில் கல்யாணம் ஆனவங்க உண்டு. அவ்வளவு ஏன் என்னோடு படிச்ச சில பெண்களும் எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். மிஞ்சிப் போனால் 16, 17 வயதுக்குள் தான் இருக்கும்.

இப்போவும் என்னால் இன்னமும் நம்ப முடியலை. இரவில் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறாப்போல் இருக்கும். திடீர்னு கூப்பிட்டாற்போல் தோன்றி முழிப்பு வரும். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து எப்படியும் ராத்திரி பனிரண்டு வரைக்கும் அவரோடத் தான் உட்கார்ந்து கொண்டு இருப்பேன். சில நாட்கள் தூங்கிடுவார். சில நாட்கள் சீக்கிரம் தூக்கம் வராது. அப்போ மட்டும் தூங்கறதுக்குனு ஒரு மாத்திரை கொடுக்கச் சொல்லி மருத்துவர் சிபாரிசு பண்ணி இருந்தார். அதைக் கொடுப்பேன். கொஞ்ச நேரம் புரண்டுவிட்டுப் பின் தூங்குவார். நான் என் படுக்கையில் வந்து படுத்துப்பேன்.

திடீர்னு ஹார்லிக்ஸ் கொடு பசிக்கிறது என்பார். ஒவ்வொரு சமயம் பசி தாங்கலை. சாதம் இருந்தால் நன்கு பிசைந்து மோர் விட்டுக் கரைச்சுக் கொடு என்பார். அந்த அகால வேளையில் சாதம் எப்படிக் கொடுப்பது? கொடுத்தாலும் ஒரு தம்பளர் சாப்பிட்டாலே அதிகம். பாதியில் திரும்பக் கொடுத்துடுவார். ஆனாலும் நல்ல நினைவுகள் இருந்தன. தானே எழுந்து நடமாட ஆரம்பிச்சப்புறமாப் பர்வாயில்லை. இனி ஆபத்து இருக்காது. மருந்துகள் மட்டும் தொடரணும் என்றே நினைச்சிருந்தோம். பிசியோ தெரபிஸ்டும் இனி தேவைன்னா கூப்பிடுங்க வந்து பார்க்கிறேன் என்று 2024 டிசம்பர் கடைசியில் விடை பெற்றார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நர்ஸ் பெண்களும் ஒவ்வொருவராக விடை பெற்றனர். இரவுக்கு மட்டும் யாரானும் வரட்டும் என்றால் அவரோ நான் இனி இந்தக் கட்டிலில் படுக்கப் போவதில்லை. நம்ம ரூமில் என்னோட கட்டிலில் என்னோட மெத்தையில் தான் படுத்துக்கப் போறேன்னு சொல்லிட்டு அங்கே வந்து படுக்க ஆரம்பிச்சார். இரவு கழிவறை போறச்சே மட்டும் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கணும். மற்றபடி பிரச்னை ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

திடீர்னு சர்க்கரை ஏறி, ஏறி, இறங்கி, இறங்கி நு விளையாட்டுக் காட்ட ஆரம்பிக்க எதுக்கும் காட்டிட்டு வந்துடலாம்னு தான் அன்னிக்கு மருத்துவமனைக்கே போனோம். திரும்பி வந்துடுவோம்னு நினைச்சோம். ஆனால் அங்கே போனப்போ சர்க்கரையை அதிகமாய்க் காட்ட மருத்துவர் உடனே எமர்ஜென்சியில் சேர்த்துவிட்டு எழுந்து நடமாடக் கூடாது என்பதால் கதீடரையும் போடச் சொல்லிட்டார். அவரோ எழுந்து கொண்டு டாய்லெட்டில் தான் போவேன்னு பிடிவாதம். எப்படியோ சமாளிச்சேன். நர்ஸ் பெண் ஒருத்தரை இரவுக்குத் துணைக்கு வரச் சொல்லி இருந்தேன். அவரும் இருந்தார். நானும் இருந்தேன். அன்னிக்கெல்லாம் தூங்கிட்டார். பின்னர்மறுநாள் வந்த ஒரு மருத்துவர் திடீர்னு வயிறு பெரிசா இருக்குனு சொல்லிட்டு என் ஜி ட்யூப் மூக்குவழியாப் போட்டு வயிற்றில் என்ன இருக்கோ அதை வெளியேத்தணும்னு சொல்ல, நான் கடுமையாக எதிர்த்தேன். ஆகவே காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து பார்க்கச் சொன்னார்கள். அவரும்   வந்து பார்த்துட்டு ஒண்ணும் தேவையில்லை. அசிடிடி மாத்திரை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டார். 

ஆனாலும் இவங்க கேட்கலை. நான் இல்லாதப்போ ஊரில் இருந்து வந்திருந்த பையரிடம் கையெழுத்து வாங்கி என் ஜி ட்யூபைப் போட்டாங்க. அதில் வந்தது தான் பிரச்னை. சாப்பாடே கிடையாது. மூக்கு வழியாகச் செல்லும் ட்யூப் மூலம் ஆகாரம். அதுவும் சொட்டுச் சொட்டாக. அவரோ பசிக்கிறது என்பார். ஒரே வேதனை..வயிற்றிலிருந்தோ பைல் தண்ணீர் மட்டும் மஞ்சளாக வந்திருந்தது. 24 மணி நேரத்துக்கு அதக்கு மேல் வேறே ஏதும் வயிற்றில் இருந்து வரலை. மறுபடியும்  காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் பார்க்க வந்தப்போ அவரை எழுதிக் கொடுக்கச் சொல்லி ட்யூபை அகற்றச் சொல்லி அகற்றினோம். பின்னர் வீட்டுக்குப் போய்விடலாம் என்னும் எண்ணத்தில் மருத்துவரைப் பார்க்க அவங்களும் சர்க்கரை குறைஞ்சிருக்கு. வீட்டில் வைச்சுப் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு டிஸ்சார்ஜ் எழுதி கொடுத்தார். 

வீட்டுக்கு வந்ததில் இருந்து மருந்துகள் எல்லாமும் ஐவி வழியாகவே கொடுக்கச் சொன்னதால் தெரிந்த நர்ஸ் வீட்டுக்கே வந்து இரண்டு வேளையும் மருந்தை ஏற்றிவிட்டுப் போவார். இதில் வீசிங் இருந்ததால் நடு நடுவே நெபுலைசர் வேறே வைச்சோம். ஆனாலும் பிடிவாதமாக எழுந்து நடப்பேன்னு நடந்தே கழிவறை செல்வார். நாங்க பிடிச்சுப்போம். என்னோட பெட்டில் படுத்துக்கணும். அங்கே கூட்டிப் போ என்று சொல்லவும் சரினு எங்க ரூமுக்கு வந்து அங்கே அவரோட படுக்கையில் படுக்க வைச்சோம். ஆனால் இந்த பெட்டில் ஐவி ஏற்றும் வசதி இல்லை என்பதால் மறுபடி அந்த ரூமுக்கே போனோம். ஒரு வார விடுமுறையில் வந்திருந்த பையர் கிளம்பி சனிக்கிழமை போனார். ஆனால் அவருக்கு திடீரெனப் பிள்ளையை யார்னு தெரியலை. தன்னோட தம்பினு நினைச்சுட்டுப் பேசினார். அப்போவே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கு. என்றாலும் என்னிடம் முழு நினைவோடு பேசினதோடு இல்லாமல் திங்கட்கிழமை அமாவாசை, இந்தத் தரம் உட்கார்ந்து தர்ப்பணம் பண்ண முடியுமா தெரியலை என்று வேறே சொன்னார். அந்தத் தரம் எழுந்து தர்ப்பணம் பண்ண முடியலை. ஆனால் சாயங்காலம் பிசியோ தெரபிஸ்ட் வந்தப்போ அவரைப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு நடந்தே போனார் . பிசியோ தெரபி முடிஞ்சதும் பாத்ரூமுக்கு நர்ஸும் நானும் பிடிச்சுக்கப் போயிட்டு வந்தார். 

ராத்திரியெல்லாம் பேசிண்டே இருந்தார். திடிர்னு என் கைகளைப் பிடிச்சுண்டு என்னை விட்டுட்டுப் போயிடாதே. நீ இல்லைனா நான் சோத்துக்குத் திண்டாடணும். என்னை யார் பார்த்துப்பாங்க? யார் பார்த்துண்டாலும் சரியா வராது. நு சொல்லிண்டே கைகளை இறுக்கிப் பிடிச்சுண்டார். விடவே இல்லை. சரினு நானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். சாதாரணமாகப் பேசிண்டே இருந்தார். நிகழ்காலம், இரவு என்பதெல்லாம் தெரிந்தது. ஆனால், பிள்ளை, பெண்ணைத் தெரியலை. பெண் கூப்பிட்டப்போ அவளைப் பேத்தினு நினைச்சுண்டார். அதொடு இல்லாமல் அவரோட அப்பா வந்திருப்பதாகவும் நினைச்சுண்டு இருந்தார். அப்பா சாப்பிட்டாரா? காஃபி குடிச்சாரானு எல்லாம் கேட்டார்.91 ஆம் ஆண்டிலேயே அவர் அப்பா (மாமனார்) இறந்துட்டார். ஆனால் அவருக்கு அப்பா இருக்கிறாப்போல் ஓர் எண்ணம் போல. பின்னர் அப்படியே தூங்கிப் போனார். சுமார் ஒன்றரை வரை அங்கே உட்கார்ந்துட்டு இரவுப்பணிக்கு வந்த நர்சிடம் கதீட்டர் பையை மாத்திக் கொட்டச் சொல்லிட்டுப் படுத்துக்கப் போனேன். தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துட்டு எப்போத் தூங்கினேனோ! திடீர்னு அவர் கூப்பிட்டாப்போல் இருக்கவே முழிச்சுண்டு மணியைப் பார்த்தால் வழக்கமா நான் எழுந்திருக்கும் நேரம் நாலரை மணி. சரி, பரவாயில்லைனு நினைச்சு எழுந்து கொண்டு வாசல் தெளிச்சுக் கோலம் போட்டு சாமி விளக்கேத்திட்டுக் காஃபி டிகாஷன் போட்டுப் பாலையும் அடுப்பில் வைச்சு அடுப்பைச் சின்னதாக்கிட்டு அவரை எழுப்பிப் பல் தேய்ச்சு விடலாம்னு போனால்............

அசையாமல் படுத்திருந்தது என்னமோ மனசை உறுத்தத் தொட்டுப் பார்த்தால் லேசாகச் சூடு இருந்தது. நேஞ்சில் கை வைச்சுப் பார்த்தாலும் மிக மிக லேசாக அடிச்சுண்டது. உடலில் சூடு இருந்ததால் உலுக்கினேன். ஆனாலும் எழுந்துக்கலை.  அபார்ட்மென்டில் கீழே இரண்டாம் தளத்தில் இருக்கும் மருத்துவருக்கு இன்டர்காம் மூலம் கூப்பிட்டால் பதிலே வரலை. சரினு எதிர்வீட்டு மாமா, அசோசியேஷன் தலைவர் ஆகியோரைக் கூப்பிட்டுவிட்டு ஆம்புலன்ஸுக்கும் தொலைபேசினேன். கீழே இருந்து வந்த மருத்துவருக்கும் உடலில் கொஞ்சம் சூடு இருப்பதாலும் நாடி மெலிதாக அடிப்பதாலும் முதல் சிகிச்சை செய்துடலாம்னு கீழே போய் உபகரணங்களை எடுத்து வந்தார். அதுக்குள்ளே 108 ஆம்புலன்ஸ் சகல ஏற்பாடுகளுடனும் மருத்துவருடனும் வந்து விட்டது. மருத்துவர் உதவி ஆட்களுடன் மேலே வந்தவர் அவரைப் பார்த்துட்டு உடனேயே உயிர் பிரிஞ்சாச்சு எனச் சொல்லிட்டார். பின்னர் இரு மருத்துவர்களும் சோதனை செய்துவிட்டு உறுதிப் படுத்தினார்கள்.  ராத்திரி எல்லாம் பேசிக்கொண்டு இருந்தாரே! எனக்கு அதுவே மனதில் ஓடியது. காதில் திரும்பத் திரும்ப அதுவே கேட்டுக் கொண்டிருந்தது. பண விவகாரங்களில் எல்லாம் நான் அதிகம் ஆர்வம் காட்டித் தெரிஞ்சுக்க விரும்பியதில்லை. அதெல்லாமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார்.  பிள்ளை, பெண்களிடமும் சொல்லுவார். எது எங்கே இருக்குனு தெரிஞ்சுக்காம இருக்காளே என்பார். அப்போவும் அதைப் பத்தித் தான் சொன்னார். இனிமேல் நீ என்ன பண்ணப் போறியோ, தெரியலை, உன்னைத் தனியா விட்டுட்டுப் போனேன்னா நீ என்ன செய்வே? என்றார். கடைசியில் அவர் முந்திண்டார். கொஞ்சம் முழிச்சுப் பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோனு நினைச்சுக்கறேன். 

நேத்திக்கு ராத்திரி கூடத் தூக்கமே வராமல் புரண்டு கொண்டிருந்தப்போப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டாப்போலயும், கீதா, கீதானு கூப்பிட்டாப்போலயும் ஓர் எண்ணம்.அவர் எப்படி மூச்சு விடுவாரொ அதே போல மூச்சுக்காற்று தான் எனக்குத் துல்லியமாக அவர் இருப்பைக் காட்டியது. ஒருவேளை இங்கே புது இடத்தில் நான் இருப்பதால் எனக்குத் துணையாக வராரோ என்னமோ!  சண்டைனு பெரிசாப் போட்டதில்லை. ஆனாலும் தினமும் சண்டை வரும். காய்கறி வாங்குவதில் சண்டை வரும். கால் கிலோ பீன்ஸோ, கொத்தவரையோ செலவழிக்க முடியாமல் செலவு செய்கையில் ஒரு கிலோ, அரை கிலோனு வாங்கிடுவார். கொத்துமல்லியா 3 கட்டு, புதினா இரண்டு கட்டு. தினுசு தினுசாகப் பச்சை மிளகாய்கள்னு வாங்குவார். அதை எல்லாம் செலவழிக்கத் திண்டாடுவேன். கோபம் வரும் சத்தம் போடுவேன். மற்றபடிப் பெரிய அளவில் சண்டையோ கருத்து வேறுபாடோ இல்லை. யாரானும் ஒருத்தர் இன்னொருத்தர் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவிடுவோம்.  

கூட்டுக் குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள். ஆனாலும் நான் அவரிடம் வருத்தத்தை மட்டும் காட்டிப்பேன். மற்றபடி புகார் சொன்னதில்லை. அவரும் எதுவுமே கேட்டுக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அமைதிதான். எவ்வளவோ பிரச்னைகள். பணத்தேவைகள்! நாங்க இருவருமே சமாளிச்சோம். வேலை செய்வதில், அது வீட்டு வேலையானாலும் சரி, சாமான்கள் வாங்க வெளியே போக வேண்டி இருந்தாலும் சரி, நான் விட்டுக் கொடுக்காமல் முன்னே நின்று எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன். எந்தவிதமான உதவியும் யாரும் செய்ய மாட்டாங்க. அதை எல்லாம் பொருட்படுத்தியதே இல்லை. அதே போல் பண விஷயத்திலும். அவர் மட்டும் தான் எல்லாவற்றையும் பார்த்துப்பார். பெரிய அளவிலோ சின்ன அளவிலோ யாருமே எந்தவிதமான உதவியும் செய்தது இல்லை. ஆனாலும் சமாளிச்சோம்.

 ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இருந்ததால் இது சாத்தியம் ஆனது. எப்படியோ 55 வருஷங்கள் ஓடிவிட்டன. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் தான். பார்க்கப் போனால் என்னை விட அவர் ஸ்ட்ராங். வலு உள்ளவர். அவரே இதைப் பெருமையாகச் சொல்லிப்பார். உன்னை விட ஏழெட்டு வயசு பெரியவன். ஆனால் உன்னை மாதிரி நான் சோப்ளாங்கி இல்லை என்பார். இந்த விஷயத்தில் நான் நிறைய மருந்து, மாத்திரை சாப்பிடுவதைக் கேலி செய்திருக்கார். ஆனால் கடைசியில் அவருக்கு இப்படி ஓர் உடல்நலக் கோளாறு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்றாலும் ரொம்பவே படுக்கையில் போடாமல் நடமாடிக் கொண்டு தன் நினைவு இருக்கிறச்சே தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.  இது தான் அவர் விரும்பியதும். விரும்பிய வண்ணம் கடவுள் அருள் செய்துவிட்டார். எனக்குத் தான் இனி எப்படியோ? எத்தனை காலமோ? காத்துட்டு இருக்கேன்.  என்னென்னவெல்லாமோ எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போ சுயப் புலம்பல்கள் எழுதும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கு. என்ன செய்ய முடியும்?

25 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஆம். ஒரு வருடமும் சுலபமாக கடந்து விட்டது. எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது நகர்வது இந்த காலம் ஒன்றுதானே..! வாழ்வில் சம்சார பந்தத்தில் சுக துக்கங்களில் சமபங்கேற்று கூடவே வந்தவர் இன்று இல்லையென்றால், அந்த வலி தரும் வேதனையில் மனது புலம்பத்தான் தோன்றும். சுயபுலம்பல்கள் என நீங்கள் கூறி விட்டீர்கள். அப்படியெல்லாம் இல்லை. உங்கள் மன வேதனையை நாங்கள் அறிவோம். உங்களுக்கும் அடிக்கடி இப்படி மனசு விட்டு பாரத்தை இறக்கினால்தான் மனம் சிறிதாவது அமைதி கொள்ளும். தைரியமாக இருங்கள். நீங்கள் தைரியமானவர்தான். இருப்பினும் சொல்கிறேன்.

    மாமா எங்கும் செல்லவில்லை. உங்களோடுதான் வாழ்ந்து கொண்டிருப்பார் . இறுதி வரை அவரது விருப்பமும் அதுதானே..! அதனால் அவர் என்றும் உங்களோடுதான் இருப்பார்.

    நானும் பதிவை படிக்கும் போதே கண்ணீருடன்தான் படித்தேன். ஒருவருக்கான இறுதி நேரத்தை அந்த இறைவன்தானே கணிக்கிறான். அது எப்போதென யாராலும் சொல்ல இயலாமல் போகிறது..! இந்த இடத்தில் விஞ்ஞானம் எத்தனை முன்னேறினாலும், இந்தப்புதிரை கண்டுணர நம்மால் இயலவில்லையே..! தைரியமாக இருங்கள். மகன், மகளுடன் பேசி சற்று மனம் விட்டுப் மன ஆறுதலை அடையுங்கள். என கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் உங்களுக்கு எப்போதும் ஆறுதலாக இருப்போம். நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா. ஆமாம், நீங்க சொல்வதைப் போலவே அவர் என்னோடு தான் இருக்கார் என்னும் நினைவு/எண்ணம் என்னை விட்டு இன்னும் போகலை. இன்னும் சொல்லப் போனால் சில பிரச்னைகளின் போது எப்போவும் அவர்கிட்டே சொல்றாப்போல் நானாகச் சொல்லிக்கிறேன். அப்புறமாத் தான் உறைக்கும், அவர் எங்கே இருக்கார்னு. நல்லவேளையா பிள்ளையோ/மாட்டுப்பெண்ணோ அந்தச் சமயம் என்னைப் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் இது என்ன பைத்தியம்னு தோணி இருக்கும். :(

      Delete
  2. கீதா சாம்பசிவம் மேடம்.. படித்தேன். உங்கள் எண்ணங்களை கோர்வையா எழுதியிருக்கீங்க.

    நிறைய என்னால் ரிலேட் செய்ய முடிந்தது

    நானும் ஒவ்வொரு தடவையும் நிறைய காய்கறிகள் வாங்கிவந்து மனைவியின் கர்ர்ர்ர்ஐ சம்பாதிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. முன்னும் பின்னுமாகத் தான் தோணினபடி எழுதி இருந்தேன். பப்ளிஷ் கொடுக்கும் முன்னர் ஒருதரம் படிச்சப்போத் தான் சரியா இல்லைனு தோணித் திருத்தினேன். என் மனதில் எழுந்த எண்ணங்களை எல்லாம் சொல்லி இருந்தேன். பதிவைத் திருத்தியதால் கோர்வையாக வந்திருக்கு. இப்போ இங்கே பையரும் இப்படித் தான் காய்கள் வாங்கறார். வாழைக்காய், பாகல்காய், புடலங்காய் போன்ற நாட்டுக்காய்கள் நான் மட்டுமே சாப்பிடுவதால் ஒரே ஒரு வாழைக்காய், ஒரு பாகல், ஒரு புடலை போதும்னு எத்தனையோ தரம் சொல்லியும் பையர் ஒரு கட்டு வாங்கி வந்துடறார். :( பீன்ஸ் மட்டும் 3 ரகம். உருண்டை, தட்டை, மெலிதான பீன்ஸ் என. எல்லாமும் தனித்தனியாக ஒரு கிலோவாவது இருக்கும். :(

      Delete
  3. ரொம்ப கஷ்டப்பட்டு நம்மால பாத்துக்க முடியாம, அவங்களுக்கும் பொறுத்துக்க முடியாமல் இருந்தால் ரொம்ப கஷ்டம் இல்லையா?

    உங்களை மாதிரி நான் பண விஷயத்தைத் தெரிந்துகொள்ளவில்லை. அதில் என்னவோ இஷ்டமில்லை

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்கும் என்றாலும் அதான் நிஜம் நெல்லை. என் அம்மாவும் நடமாடிண்டு இருந்தவரைக்கும் பிரச்னை இல்லை. நடமாட்டம் நின்னப்புறமாத் தூக்கி உட்கார்த்தி வைத்து இயற்கை உபாதைகளைக் கழிக்க வைத்துக் குளிப்பாட்டித் துணி மாற்றி என எல்லாத்தையும் முறை போட்டுக் கொண்டு செய்தோம். இதில் என் மன்னி வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டதால் அவரைக் கூப்பிடுவதில்லை. நான், என் தம்பி மனைவி, என் தம்பி, அண்ணா ஆகியோர் செய்வோம். நான் அடுத்த தெருவில் இருந்த எங்க வீட்டில் இருந்து வேலைகளை முடித்துக் கொண்டு பதினோரு மணிக்குத் தான் போவேன். திரும்ப 3 மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பணும். அப்போல்லாம் இப்போ மாதிரி நர்ஸ் துணைக்கு வைக்கும் வழக்கமெல்லாம் தெரியாது. ஊசி ஏதானும் போடணும்னா பக்கத்தில் யாரானும் கம்பவுண்டர் இருந்தாலோ நர்ஸ் இருந்தாலோ அல்லது டாக்டரையே கூடக் கூப்பிட்டுப் போடச் சொல்லுவது தான். இப்போத் தான் முதியோர் பராமரிப்புக்குனு இல்லாமல் உடல் நலம் இல்லாமல் எழுந்துக்க முடியாமல் இருப்பவங்களுக்குச் சேவை செய்யவென மனிதர்கள் கிடைக்கிறார்கள். ஆகவே எனக்கும் மாத்திரை கொடுப்பது, உணவு கொடுப்பது, துணி மாத்துவது, நர்ஸ் வர நேரம் ஆச்சுன்னா கழிவுகளை அகற்றுவதுனு வேலைகள் இருக்கும். அவற்றைச் செய்வேன். உணவு மட்டும் யாரிடமும் விட்டதில்லை. மருந்துகளும் அப்படியே. நானே பார்த்துப்பேன். முக்கியமா அவர் ரொம்பவும் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்துட்டார். என் நிலைமைதான் எப்படியோனு கவலை. என்ன வந்தால் தான் என்ன செய்ய முடியும்?

      Delete
  4. கடைசியில் மற்றவர்களை நினைவில் இல்லாதது ஆச்சர்யம்

    அதன் காரணம் என்னவா இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. அதான் தெரியலை நெல்லை. வெள்ளியன்று மே 16 ஆம் தேதி சேர்த்து நானும் அட்டென்டர் பெண்ணுமாகத் தான் பார்த்துக் கொண்டோம். நன்றாகவே பேசினார். பையர் கிளம்பி வருவதைத் தொலைபேசியில் சொன்னப்போக் கூட நீ வரவேண்டாம். எனக்கு ஒண்ணும் இல்லை. சர்க்கரை கட்டுப்பட்டால் கிளம்ப வேண்டியது தான். அநேகமாக்த் திங்களன்று வீட்டுக்குப் போயிடுவோம்னு நம்பிக்கையாச் சொன்னார். பையர் மறுநாள் வந்து பேச்சுக் கொடுத்து அப்பாவுக்கு எல்லாம் சரியா இருக்குனு தான் சொன்னார். மருத்துவரும் அதையே உறுதி செய்தார். இந்த என் ஜி ட்யூப் வைச்சதுக்குப் பின்னரே நிலைமை மாறியது. :( ஆஸ்பத்திரியிலேயே எங்க பையரை அவர் கடைசித் தம்பினு நினைச்சுண்டு பேசி இருக்கார். பையர் என்னிடம் பிறகு தான் சொன்னார். நான் வீட்டுக்கு வந்தப்போ இது நடந்திருக்கு. என் ஜி ட்யூப் போட்டப்போத் தான் சாப்பாடு இல்லை. மற்ற நாட்களில் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் சமைச்சுத் தான் கொண்டு வந்து கொடுத்துட்டு இருந்தேன். ஆஸ்பத்திரிச் சாப்பாடு அவருக்குப் பிடிக்கலை. ஆகவே மத்தியானத்தில் நான் வீட்டுக்கு வரும்படியாகவே இருந்தது.

      Delete
  5. அன்பு கீதாமா, மனசு ரொம்பக் கஷ்தப் படுகிறது. முக நூலில் மெமரீஸ்ல் வந்தது. இங்கே வந்தால் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள். நாட்கள் ஓடலாம். மனம் அங்கேயே நிற்கிறது. மாமாவுக்கு நமஸ்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. மீனாவும் எழுதி இருக்கா. முகநூலில் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். என்னவோ பொம்மையைத் தொலைத்த குழந்தை மாதிரி நினைச்சு நினைச்சு அழுதுட்டு இருக்கேன். திடீர் திடீர்னு குரல் கேட்கும். நிற்கிறாப்போல் இருக்கும். தூக்கிவாரிப் போடும். பின் சுதாரிச்சுப்பேன்.

      Delete
  6. என்ன சொல்வது என்று தெரியவில்லை.  அன்று நடந்ததை விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.  ஓரளவு முன்னரே சொல்லியும் இருந்தீர்கள்.  அவர் உங்களுடனேயே இருப்பதாக உணர்கிறீர்கள் ஏன்பது உங்கள் இருவரின் புரிதலை, மன நெருக்கத்தைக் காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம். யார்தான் என்ன சொல்ல முடியும்? இது அவரவர் கர்ம வினை. அனுபவிக்கணும் இல்லையா? ஒரு சமயம் நினைச்சுக்கறேன். நான் போகாமல் அவர் போனது நல்லதாச்சு என. ஆனால் சில மனிதர்கள் நடந்துக்கும் முறையை நினைச்சா மனது ரொம்பவே வேதனைப்படுகிறது. எங்கள் தளத்தில் உள்ள சில பெண்கள் அவர் போனப்போ வந்து என்னைப் பார்த்தது தான். பின்னர் நான் எப்போ வெளியே வந்தாலும் என்னைப் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்க்கிறார்கள். சுமார் பத்திருபது வருடங்களுக்கு முன்னெல்லாமும் இப்படி உண்டுன்னாலும் பத்து நாட்களுக்குள் முதலில் பார்த்துட்டால் பின்னர் அந்த சாஸ்திரமெல்லாம் வேண்டாம் என்பார்கள். பத்து நாளைக்குள் பார்க்கவே இல்லைனாத் தான் ஒரு வருஷம் வரை பார்க்கக் கூடாது என்பார்கள். அதுவும் ஒரு மழை பெய்துட்டால் பார்க்கலாம் என்றெல்லாம் இருக்கு. ஆனால் இப்போதைய கணினி யுகப் பெண்கள் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்காங்க. :))) அதை நினைச்சால் ஸ்ரீரங்கம் போனாலும் அங்கே போய் எதுக்குமே வெளியே வராமல் இருக்க முடியுமானு தோணுது. :))))) ஆனாலும் போய்த் தானே ஆகணும். நாம் இருக்கிறபடி இருப்போம். அவங்க வேணும்னா பார்க்காமல் தவிர்க்கட்டும்னு வைச்சுட்டேன். இதை எல்லாம் யாரிடமும் விண்டு விவரித்துப் பேச முடியாது. தனிப்பட்ட முறையில் எனக்கு வேதனை என்பதால் என் வேதனை என்னோடுனு இருந்தாகணும் இல்லையா? :)))

      Delete
  7. இதோ இப்போதுதான் அந்த செய்தியை கேட்டதுபோல இருக்கிறது.  mama is no more என்று உங்கள் வாட்ஸாப் செய்தியை இப்போதுதான் படித்தது மாதிரி இருக்கிறது.  அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது.  காலம் விரைந்து ஓடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த நாள் நினைவில் இருக்கு. ஏனோ அன்னிக்கு அதிசயமா நீங்க காலம்பர வந்தீங்க. இல்லைனா நானே அனவுன்ஸ் பண்ணும்படியா இருந்திருக்கும். :( உங்க செய்தியைப் பார்த்துட்டுத் தான் வெங்கட்டே வந்தார்னு நினைக்கிறேன். தெரியலை, அவருக்கு எப்படித் தெரியும்னு.

      Delete
    2. தி/கீதாவும் அன்னிக்குக் காலையிலே வந்தார். அவரிடமும் சொன்னேன். அவரும் எல்லோருக்கும் சொல்லலாமானு கேட்டுண்டார். சொல்லி இருப்பார்.

      Delete
  8. மாமாவை நான் நான்கு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.  பேசியது கொஞ்சம்தான்.  உங்கள் மூலம்தான் அவர்பற்றி அறிவேன்.  அவருடைய சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், உங்களை மாதிரி இன்னும் சிலர், என் சிநேகித வட்டாரத்தில் அவரைப் பார்த்து பயப்படுவார்கள். ஏனோ தெரியலை. சொல்லப் போனால் என் அண்ணா/தம்பி இருவருக்குமே உள்ளூர இவரிடம் பயம் உண்டு. அவங்களும் மனதளவில் நிறையப் பாதிக்கப்பட்டிருக்காங்க என்னோட இந்த இழப்பின் மூலம். அதுவும் இப்போத் தேர்தல் அன்னிக்குக் கல்யாணம் ஆகுமானு இருந்த தம்பியோட பெரிய பையர் கல்யாணம். நான் போகலை. இங்கேயே இருந்துட்டேன். எல்லோருமே அவரையும் என்னையும் தான் நினைச்சுண்டாங்க. ஏன்னா அந்த அளவுக்கு நாங்க இருவரும் அவனுக்காக அலைந்திருக்கோம். பெண்கள் ஜாதகம் நிறைய வாங்கி நாங்களே பொருத்தமெல்லாம் பார்த்துனு நிறையக் கஷ்டப்பட்டொம். :(

      Delete
  9. உங்களுடைய இந்த பதிவை படிக்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு, ஆனால் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை, என்ன வார்த்தைகள் ஆறுதல் தரும்!? உங்களுக்கு மன அமைதியைத் தர இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்க்ள் ம்ன உறுதி மிக்கவர் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, உங்களைத் தான் அன்னிக்கு நான் நினைச்சுண்டேன். உங்க கணவர் மருத்துவமனையில் சீரியஸா இருந்தப்போ தி/கீதா தான் எனக்கு அவ்வப்போது அப்டேட் பண்ணிட்டு இருந்தார். அப்போ உங்களைத் தான் நான் விசாரிச்சேன். கவனமாப் பார்த்துக்கணும்னு சொன்னதாக நினைவு. தி/கீதா உங்களை பானுக்கா தைரியமா இருப்பாங்க. நீங்க கவலைப்படாதீங்க என்று என்னிடம் சொன்னார். என்னவோ தைரியம் போங்க!
      ஒரு சமயம் நான் தற்கொலை பண்ணிக்கலாமாங்கற அளவுக்கு மனது வெறுத்துப் போயிருக்கேன். சொன்னால் நம்ப மாட்டீங்க. அந்த அளவுக்கு மனசு வெறுத்துப் போயிருந்தது. பெண்ணுக்குப் பதினைந்து வயசு. பிள்ளைக்குப்பதினோரு வயசு. மாமா புனாவில். நாங்க இங்கே சென்னை அம்பத்தூரில் மாமனார், மாமியாருடன். குழந்தைகளை நினைச்சு அவங்களுக்கு அம்மா இல்லைனா கஷ்டம் என்பதைப் புரிந்து கொண்டு என்னை நானே தேத்திண்டேன் அப்போல்லாம். பக்கத்து வீட்டு பாலக்காடு மாமிக்கு மட்டும் தெரியும். அப்புறமா மாமாவுக்குத் தெரியும். மாமி என்னைக் கண்காணிச்சுண்டே இருந்தார். அந்த மனோநிலையிலிருந்து நான் வெளியே வர ஒரு வாரம் ஆச்சு. அதன் பின்னர் வாழ்ந்து காட்டணும். இதே பெண்ணுக்கு நல்ல முறையில் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் கல்யாணம் செய்து காட்டணும் என்றெல்லாம் வைராக்கியம் கொண்டேன். இப்போக் கடமைகள் இல்லையே! அதனால் அதைரியம் வெளிப்படுகிறது போல! ஆனாலும் என்னை எல்லோருமே எங்க குடியிருப்பு வளாகத்திலும் சரி, அக்கம்பக்கமும் சரி எல்லொருமே தைரியம் ஜாஸ்தி என்றே இப்போவும் சொல்லுகிறார்கள். அதைக் காப்பாத்தவாவது தைரியமா இருக்க முயற்சி பண்ணணும். அதிசயமாக நீங்க என்னோட வலைப்பக்கம் வந்திருக்கிங்க. உங்களுக்கு இதென்னடா அறுவைனு தோணப் போறது. :)))) உங்கள் பிரார்த்தனைகளுக்கும் மற்றும் எல்லோருடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      Delete
  10. தாங்க முடியாத இழப்பு தான். என்ன சொல்லி தேற்ற முடியும். ஒரு வருடம் ஓடிவிட்டது...

    நானும் ஆதியும் பேசிக் கொண்டிருந்தோம் - ஒரு வருடம் ஆகிவிட்டது என... சில விஷயங்கள் மறக்கவும் முடிவதில்லை, நினைக்கவும் முடிவதில்லை.

    மாமா உங்களுடனேயே இருக்கிறார் என்ற எண்ணத்துடன் இருங்கள். நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்யணும் வெங்கட். நேத்திக்கு எல்லோருமே உங்களைத் தான் ஏன் வரலைனு கேட்டாங்க.

      Delete
  11. ஆமாம் இல்லையா ஒரு வருடம் ஓடியே போய்விட்டது.

    மாமா உங்களுடனேயே/ இருக்கிறார் அக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த உணர்வு இருக்கத் தான் செய்கிறது.

      Delete
  12. பதிவு வருத்தம் தந்தாலும், சில விஷயங்கள் நம் control ல் இல்லையே இல்லையாக்கா.. என்ன சொல்ல? இது தாங்க முடியாத ஒன்றுதான்...

    .நான் மாமாவை ஒரே ஒரு முறை ஏன் உங்களையுமே கூட ஒரே ஒரு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறென்.

    நீங்களும் மாமாவும் சமாளித்த விஷயங்கள் வாழ்க்கையை நடத்திச் சென்றவை, என்று பல விஷயங்கள் எல்லோருக்கும் கற்பதற்கானவையாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

    எனவே உங்கள் உணர்வுகள், ஆதங்கம் நன்றாகவே புரிகிறது கீதாக்கா.

    ஆனாலும்....யதார்த்தம் வேறாச்சே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இருவரையுமே இரு தடவைகள் பார்த்தீங்க. முதல்லே கு.கு.வின் பிறந்த நாள் காது குத்துவிழாவில். இரண்டாம் முறை வீட்டில்.

      Delete