ஒரு நல்ல ஹிந்திப்படம் பார்த்தேன். ஒரு மாதத்துக்கும் மேலாக அது அமேசான் பிரைமில் இருந்தாலும் நேத்திக்குத் தான் திடீர்னு அதைப்பார்க்கணும்னு நினைச்சேன். முதலில் ஏதோ மாநில கவர்னர் பத்தின கதைனு தான் நினைச்சேன். ஆனால் இல்லை. இது இந்தியாவின் பொருளாதார வரலாறு. அதுக்காக அறுவை எல்லாம் போடவில்லை. த்ரில்லிங்காக எடுத்திருக்காங்க. இது 1990 ஆம் ஆண்டில் திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தப்போ, அதாவது வி.பி. சிங்கிற்குப் பின்னர் கொஞ்ச காலமே சந்திரசேகர் பிரதமராக இருந்தார். யஷ்வந்த் சின்கா தான் அப்போ நிதி மந்திரினு நினைவு. அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் தோன்றிய நிதி நெருக்கடியையும் அதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த திரு வெங்கிட ரமணன் அந்த நிதி நெருக்கடியை எப்படிச் சமாளித்தார் என்பதையும் திரைப்படமாக எடுத்திருக்காங்க.
ஓர் தமிழரான வெங்கிடரமணன் இதிலும் கிட்டத்தட்ட அந்தப் பெயரிலேயே ராமன் என்று அழைக்கப்படுகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் ராமனாக நடித்திருப்பவர் மனோஜ் வாஜ்பாய். இவர் ஆரம்ப காலத்துப் படங்கள் அதிகம் பார்த்திருக்கேன். இப்போதைய படங்கள் பார்க்கவில்லை. இதில் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதலில் தன்னை விட சீனியரான டெபுடி கவர்னர் சி.ஆர். இருக்கையில் தன்னை கவர்னராகப் போட்டதையே ஏற்க முடியாமல் இருந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல சமாளித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் இருந்தாலும் மெல்ல மெல்ல அவர்கள் அபிமானத்தைப் பெறுகிறார். இவர் நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சொல்லும் ஒவ்வொரு யோசனையும் தோற்றுப் போகக் கடைசியில் அரசியல் நெருக்கடி காரணமாகச் சந்திரசேகர் காபந்து சர்க்காரின் பிரதமராக இருக்கையில் தான் இந்தத் தங்கத்தை வைத்துப் பணம் வாங்கும் சூழ்நிலையை ராமன் அவர்கள் நிதி மந்திரியிடமும், பின்னர் பிரதமரிடமும் சொல்ல இருவரும் கடுமையாக ஆக்ஷேபிக்கின்றனர். ஆனால் இப்போது ராமனின் தேசத்தின் மீதுள்ள பற்றும் எப்படியாயினும் தேசத்தைக் காக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சாக இயங்குவதையும் பார்த்த சி.ஆர். டெபுடி கவர்னர் அவருடன் ஒத்துழைத்துப் பிடிவாதமாக நிதி மந்திரியிடமும், பிரதமரிடமும் தங்கத்தை வைக்க ஒப்புதல் பெற்று விடுகிறார்.
அலுவலகச் சூழ்நிலையும் திருப்தியாக இல்லாத சமயத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் நிதானமாகக் கையாண்டு நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கத்தை வைக்க வேண்டும் என்னும் முடிவுக்குப் பிரதமரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். அந்தத் தங்கத்தை விமானம் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அவர் படும் பாடு. கடைசி நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் பிரச்னை பண்ண அதுவும் பிரச்னை தீர்ந்து போய்த் தங்கம் அனைத்தும் மூன்று ராணுவ வான்களில் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதை சாதாரணமான வான் எனக் காட்டிக் கொண்டு எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் எடுத்துப் போனாலும் ஓர் பத்திரிகை நிருபியான அதிதி வர்மா என்னும் பெண் அதைப் பார்த்து விடுகிறாள்.
இதுக்கு நடுவில் 3 வான்களில் மற்ற இரண்டும் விமானம் ஏறப் போய்ச் சேர்ந்து விட மூணாவது வான் மட்டும் விபத்தில் மாட்டிக் கொள்ள விபத்தில் மாட்டினவன் பேட்டை தாதா. மூணாவது வானுக்கு என்ன ஆச்சுனு பார்க்க வந்த மனோஜ் வாஜ்பாய் அந்த மனிதனைச் சமாளித்து மூணாவது வானையும் விமான நிலையம் அனுப்பி வைக்கும் வரை அனைவருக்கும் திக் திக் திக் தான்.அவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து வானுக்குப் பாதுகாப்பாக வந்த ரிசர்வ் வங்கி அலுவலரின் மேல் சந்தேகப்பட்டு வானைச் சோதனை போட வேண்டும் என்று தகராறு செய்து போலீசை அழைக்கச் சரியாக அந்த நேரத்தில் வானைத் தேடிக் கொண்டு வரும் ராமன் விஷயம் புரிந்து தாதாவைச் சமாளித்து வானை விமான நிலையம் கொண்டு செல்ல உதவுகிறார். அந்தச் சமயம் பார்த்து பத்திரிகை நிருபியான அதிதி வர்மா அவரிடம் தங்கத்தை அடகு வைப்பது குறித்து ஆக்ரோஷமாகச் சண்டை போட அவரோ தன் நிலையை விளக்குகிறார். அவர் சொல்வதைக் கேட்ட அதிதிக்கும் மனம் மாறி இந்த விஷயத்தை ஸ்கூப் செய்தியாகப் பத்திரிகைக்கு அனுப்பாமல் காத்திருந்து காரியம் முடிந்ததுமே பத்திரிகையில் வெளியிட வைக்கிறாள்.
ராமனின் மகள் ஐஏஎஸ். பாஸ் செய்த தகவல் வர அங்கே நினைத்தால் எல்லோரிடமும் கடன் வாங்கிப் பிழைக்கும் ப்யூன் படில் ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் மகள் பார்தியும் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல ஊழியர்கள் அனைவரிடமும் ஒரே உணர்ச்சி வெள்ளம்.ப்யூன் ஆன படில் ஸ்வீட் எடுத்து வந்து தன் மகள் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல அனைவரும் கண்ணீரோடு ஆசீர்வாதம் பண்ணப் பின்னர் தங்கம் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்குப் பணமும் வந்து சேருகிறது. நடுவில் ராஜிவ் காந்தி கொலை பத்தி எல்லாம் வந்தாலும் விரிவாக எல்லாம் சொல்லலை. பின்னர் நர்சிம்ம ராவ் பிரதமராக ஆவதும் மன்மோகன் சிங் நிதி மந்திரி ஆனதும் அவர் மூலம் இந்தியா திறந்த பொருளாதாரத்துக்குள் நுழைந்ததும் காட்டப்படுவதோடு இப்போது இந்தியா பொருளாதாரத்தில் வலிமை அடைந்திருப்பதையும் சிம்போலிக்காகக் காட்டுவதோடு படம் முடிகிறது.
இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. எந்தவிதமானக் காதல் காட்சிகளோ, அல்லது சண்டைக் காட்சிகளோ இல்லை. பாடல் கூட ஒரே ஒரு இடத்தில் பின்னணியில் வருகிறது. உண்மையில் அந்தக் கால கட்டத்தில் இந்திய அரசாங்கத்தில் என்ன நடந்திருக்குமோ அதை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்பதால் அதிகமாகக் கட்டுக்கதையோ மிகைப்படுத்தலோ இல்லை. எல்லோரும் நிஜமான உணர்வுகளோடு வருகிறர்கள். நடிச்சுட்டு இல்லை அந்த அந்தப் பாத்திரமாக வாழ்ந்துட்டுப் போயிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment