அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவினில் அவள் முகம் கண்டேன்
அங்கே தொலைந்தவன் நானே!"
காலம்பர ரயிலுக்குக் காத்துண்டு இருந்தப்போ யாரோட செல்லிலேயோ இந்தப் பாட்டுப் போட்டிருந்தாங்க ரிங்டோனாக. அப்போலேருந்து இந்தப் பாட்டுத் தான் சுத்திச் சுத்திவருது. படமோ, கதையோ, படத்தோட பேரோ அப்படி ஒண்ணும் என்னைக் கவரலைனாலும் பாடலும், பாடலில் வரும் சொற்களும், பாடிய குரலும் இனிமையோ இனிமை. கேட்கக் கேட்க நல்லா இருக்கு. சுகமான ராகம்.
அடுத்து நினைப்பு வந்தது, காப்டன், காப்டன் குஸ்தி கேர்ள் என்பது தான். ஹிஹி, இது நினைவிலே வந்ததே அங்கே சில குழந்தைங்க விளையாடிட்டு இருந்ததைப் பார்த்ததும். பள்ளியிலே படிக்கும்போது அஞ்சாப்பு வரைக்கும் (:P) தமிழிலே தான் படிச்சேன். என் தம்பிக்கு மூணாப்பிலே இருந்தே ஆங்கிலம் ஆரம்பிச்சது. எனக்கு அப்படி இல்லை. ஆறாப்பிலே தான் ஆங்கிலம் A,B,C னு கத்துக்க ஆரம்பிச்சதும், 'wind of the western sea! father will come to the baby in the nest," அப்படிங்கற lullaby யும், ஜாக் அண்ட் ஜில்லும் அப்போத் தான் படிச்சேன். (யாருப்பா அங்கே கேலி செய்யறது?? அப்போ நான் குழந்தையாக்கும்!சேச்சே, இந்த அநன்யாவாலே பாலக்காட்டுத் தமிழ் போகமாட்டேனு அடம்) அஞ்சாப்பு வரைக்கும் விளையாடின விளையாட்டிலே இந்த "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்!" என்பதும் ஒண்ணு.
இரண்டு செட் இருக்கும். எதிர் எதிர் அணி.வரிசையா நிப்பாங்க. இரண்டு கைகளையும் பின்னாடி கட்டிக்கணும். இரண்டு தலைவலிகள், சீச்சீ, தலைவிகள். ஒரு குழுவின் தலைவில் தன் அணியில் உள்ளவர்களில் யாரானும் ஒருத்தியிடம் ஒரு பொருளைக் கொடுத்து மறைத்து வைப்பாள். அது எதிரணியில் உள்ளவர்கள் கண்டு பிடிக்கணும். பொருள் எதுவா வேணுமானாலும் இருக்கலாம். அப்போ நாங்க மறைச்சு வச்சு விளையாடினது, பென்சில், சிலேட்டுக் குச்சி, சாக்பீஸ் போன்றவையே. தலைவி மறைச்சு வச்சதும் எதிர் அணித் தலைவியைப் பார்த்து, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு கேட்பா. அதாகப் பட்டது, ஆங்கிலம் தெரியும் வரைக்கும் நான் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன்,
ஆறாப்பிலே இந்த விளையாட்டை விளையாடினோமா? நாங்க ஆறாப்பிலே உள்ள சில மாணவிகள், ஏழாப்பா, எட்டாப்பா தெரியலை, பெரிய கிளாஸ் மாணவிகள் சிலர். இரண்டு அணியா விளையாடினோம். அன்னிக்குனு பார்த்து, என்னைத் தலைவியாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. (ஹிஹிஹி, அப்போவோ தலைவியா இருந்திருக்கேன், குழந்தையிலேயே, குழந்தை மேதைனு சொல்லிக்கலாம் இல்லை?) நானும் அப்பாவியாய், நிஜமாவே அப்பாவியாய், கையிலே கிடைச்ச ஒரு வஸ்துவை என் குழுவில் உள்ள ஒரு பொண்ணு கையிலே வச்சுட்டு, எதிரணித் தலைவியைப் பார்த்துப் பெருமையாக் கேட்டேன் பாருங்க, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு! கொல்லுனு சிரிப்புச் சப்தம். அங்கே இருந்த டீச்சர் எல்லாம் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கிறாங்க. எதிரணிப் பொண்ணுங்க எல்லாம் என்னமோ நாங்க தோத்துப் போயிட்டாப்போல் சிரிக்கிறாங்க. எனக்கா ரொம்ப அழுகையா வந்துடுச்சு. பேசாம எல்லாரோடயும், ஆனைமேலே, குதிரை மேலே டூ விட்டுடலாமானு யோசிச்சேன்.
அப்போத் தான் எதிரணியில் இருந்த ஒரு பொண்ணு சொன்னா, "அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹூ இஸ் த கேர்ள்) அப்படினு". ரொம்ப வெக்கமாப் போச்சு. அப்புறமா அந்த ஆட்டம் ஆடும்போதெல்லாம் இதை நினைச்சுச் சிரிச்சுப்பேன். இன்னிக்குச் சில பொண்ணுங்க ஆடிட்டு இருந்ததைப் பார்க்கும்போது இதெல்லாம் நினைப்பு வந்தது. மைலாப்பூர் போய் ஓசிச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, தெருவிலே இருக்கும் நண்பர் ஒருத்தர் அவங்க வண்டியிலே கூட்டிட்டு வந்தாங்களா, இன்னிக்கு வெயில் கொடுமையிலே இருந்து தப்பினேன். இல்லாட்டிக் கொடுமைதான். ஓசிச் சாப்பாடு வேண்டாம்னாலும் விட மாட்டேங்கறாங்க, என்ன கொடுமை போங்க! அப்புறம் நம்ம வெறும்(வெல்லம் போட்ட) அநன்யா என்னோட ஃபோட்டோ ஒண்ணு கேட்டிருக்காங்க. எதுக்குனு கேட்கிறீங்களா? லேட்டஸ்டா, அவங்க ரங்க்ஸ் நம்ம உளவுப் படையிலே குண்டர் படைத் தலைவராச் சேர்ந்திருக்கார். தக்குடு ரொம்பவே துரோகம் செய்யவே அவனை நீக்கிட்டேன். இவர் பாருங்க சேர்ந்ததுமே என் படத்தைக் கேட்டிருக்கார். பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச்சட்டியும் ஏந்தி, அடுத்து என்னனு கேட்டுட்டு இருக்கார். அதுக்காகப் போட்டிருக்கேன். பாருங்க. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

அநன்யா அக்கா, சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன் பாருங்க, இந்தப் படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா??