நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. எங்கேயோ திக்குத் தெரியாத காட்டில் சுத்திட்டு வந்தாப்போல் எண்ணம். பத்துநாட்களாகக் கடைசி மைத்துனரின் வருஷ ஆப்திக வேலைகள் நெட்டி வாங்கிற்று. அவருக்கு வெளியில் போல் வாங்கவேண்டிய வேலைகள் எனில் எனக்கு வீட்டிற்குள்ளேயே செய்ய வேண்டியவை. இந்தச் சூட்டோடு சூடாகக் கண் மருத்துவரிடமும் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தேதி கேட்டால் அவங்க இன்னும் முத்தட்டும், ஆறு மாசமாவது ஆகணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஒரு வழியாக அந்தப் பிரச்னை தீர்ந்தது என்றால் பெரிய மைத்துனரும் ஓரகத்தியும் மும்பையில் இருந்ததால் அவங்க ஆப்திகத்துக்கு வருவாங்களா இல்லையானு கவலை/ பிரச்னை. குடும்பப் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டு அப்படி அவங்க வர முடியாத பக்ஷத்தில் நாங்களே செய்வதற்கு இயலுமா எனக் கேட்டுச் சொல்லச் சொன்னோம். அவரும் தர்ம சாஸ்திரப் புத்தகங்கள்/ தன்னோட குரு எனக் கேட்டுவிட்டு பெரிய மைத்துனர் அனுமதி கொடுக்கணும், சாஸ்திர ரீதியாக எனச் சொன்னார்.
மும்பையில் ஊரடங்கு வரப் போவதாகச் சொன்னதால் அவரால் அங்கிருந்து கிளம்ப முடியுமா என்பதே பிரச்னையாக இருந்தது. ஆகவே அவரிடம் எதுக்கும் இருக்கட்டும் என வாட்சப், ஸ்கைப் மூலமாக இங்கிருந்து புரோகிதர் சொல்லி அங்கே மும்பையில் மைத்துனர் அனுமதி கொடுக்குமாறு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டாலும் எப்படியேனும் தான் கிளம்பி வரப் பார்ப்பதாகவும் உறுதி அளித்தார். நல்லவேளையாகப் போன ஞாயிறன்று அவங்க சென்னைக்குக் கிளம்பி வந்து பின்னர் சனியன்று இங்கே ஶ்ரீரங்கமும் வந்து விட்டார்கள். மற்ற நாத்தனார்களால் வர இயலவில்லை. வந்த வரைக்கும் போதும். இவர் தானே முக்கியம் என நாங்களும் பேசாமல் இருந்துட்டோம். சமையலுக்கும் மாமி கிடைத்து மூன்று நாட்கள் காரியங்களும் நல்லபடியாக நடந்து முடிந்தன. வந்தவங்களும் திரும்பச் சென்னை போய் விட்டார்கள். இந்தச் சமயம் பார்த்து மும்பை ஊரடங்கு அறிவிப்பால் அனைவரும் மும்பையிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மைத்துனரின் பிள்ளை அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இனி எப்போது மும்பை போக முடியும்னு தெரியலை.
நேற்று சுபம் முடிந்து அனைவரும் கிளம்பிப் போனதும் நாலரைக்கு மேல் நாங்க ஓட்டுச்சாவடிக்குப் போய் எங்க கடமையையும் ஆத்திவிட்டு வந்தோம். கூட்டமே இல்லை. மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டக் கையுறையை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டுச் சுத்தம்/சுகாதாரம் பேணி இருந்தார்கள். நம் மக்களுக்கு இந்தப் பழக்கம் போகவே போகாது. வாய் கிழியப் பேசுவார்கள். அங்கிருந்தவர்களும் இது குறித்த சிந்தனை இல்லாமலேயே இருந்தார்கள். நான் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் போட்டவர் பெயர் வருதானு பார்த்துட்டு இருந்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெளியே இருந்து ஒரு தேர்தல் அதிகாரி அம்மா, வெளியே வாம்மானு கத்தினார். ஆனாலும் நான் பார்த்துட்டுத் தானே வந்தேன். அப்புறமா எங்கானும் மாறிடுச்சுனா ஒரு ஓட்டு வீணாகிடாதோ? இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது தான்! :) இங்கேயும் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு எனச் சொன்னார்கள். இன்று வரை எதுவும் தெரியலை. ஆனால் மஹாராஷ்ட்ராவில் இருந்து சென்னை வர ஈ பாஸ் தேவை. மைத்துனர் பிள்ளை பாஸ் எடுத்துக் கொண்டே வந்திருக்கார். வெளி மாநிலங்கள் எனில் ஈ பாஸ் தேவை போல. பெருகி வருகிறது கொரோனா! விரைவில் அடங்கும் எனச் சொன்னாலும் கவலையும், பயமுமாகத் தான் இருக்கு.
ரஜினிகாந்துக்கு "தாதா சாஹேப் பால்கே" விருது கொடுத்திருக்காங்களாம். ஒரே அமர்க்களம். இதிலே சிலருக்கு ரஜினி தமிழர் இல்லைனும், (எனக்கும்) அதனால் நாம் குதிக்க வேண்டாம் எனவும் கருத்து. பொதுவாக ரஜினி தமிழ்ப்படங்கள் மூலமே பிரபலம் ஆனதால் அவருக்கு விருது கொடுத்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகையே கௌரவிச்ச மாதிரித் தான். இன்னும் சிலருக்குக் கமலஹாசன் /உல(க்)கை நாயகருக்குக் கொடுக்கலைனு வருத்தமாம். இப்போ அவர் தேர்தலில் நிற்பதால் இப்போ விருது கொடுத்தால்/அறிவித்தால் சரிப்படாது என நினைச்சிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒரு வழியாக மிரட்டிக் கொண்டிருந்த இரண்டு பிரச்னைகளுக்கு அதுவாகவே தீர்வு கிடைச்சிருக்கு. இதான் இறைவன் கருணை என்பது. இனி அடுத்தடுத்து வரும் பிரச்னைகளுக்கும் இப்படியே தீர்வைக் கொடுப்பான் என நம்புகிறேன்.
எங்க பெண்ணிற்கு ஒரு மாசமாக வயிற்றில் பிரச்னை. வாயுக் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்வதில்லை. மோர் குடித்தால் கூட ஜீரணம் ஆகாததோடு ஏப்பமாக வருகிறது. என்ன செய்யறதுனு புரியலை. அவளை இங்கே வா, வந்து மருத்துவம் பார்த்துக்கலாம்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா. நாங்க போகலாம்னா நேரடியாக விமானம் இருக்கானு தெரியலை. அவ இப்போ வராதீங்க என்கிறாள். என்ன செய்யறதுனே புரியாமல் ஒரே குழப்பம் ஒரு மாசமாக. விரைவில் இந்தப் பிரச்னையும் தீரணும்னு பிரார்த்தித்துக் கொண்டு இருக்கோம்.





