எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 18, 2006

112. நடந்தாய் வாழி, காவேரி!

காவேரி நதியைப் பத்தி நான் சொல்லி யாரும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை. ஆனால் நான் முதலில் பார்த்த காவேரிக்கும், இப்போது பார்க்கிற காவேரிக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்கிறேன். நாங்க பங்களூரில் இருந்து மைசூர் போனது பஸ்ஸில் தான். கர்நாடக அரசு பஸ் என்றாலும் VOLVO பஸ் என்பதாலும் முற்றிலும் குளிரூட்டப் பட்டது என்பதாலும் பஸ்ஸில் போவது போலவே இல்லை. நல்ல தரமான ரோடும் கூட. பஸ்ஸில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு டிரைவர் பக்கத்தில் பொத்தான் உள்ளது. நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் ஒருவரே. நல்ல திறமையான நிர்வாகம். கட்டாயம் பாராட்டுக்குரியது.

போகும் வழியில் சன்னப்பட்டினம் தாண்டியதுமே காவேரியின் சிறப்புக்கள் தெரிய ஆரம்பித்தன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவேரியைக் கடக்கும்போது பார்த்தேன். தலைக்காவேரியிலிருந்து தவழ்ந்து வரும் காவேரி, நடக்க ஆரம்பித்த குழந்தை போல வேகமாக வருகிறாள். செல்லும் வழி எங்கும் பசுமை, குளிர்ச்சி. மைசூரில் இருந்து கிளம்பி திருச்சி வரும் வழியில் இரவாகி விட்டதால் நடுவில் கடந்த காவேரியைப் பார்க்க முடியவில்லை. திருச்சியில் காலை எழுந்து குணசீலம் போகும் வழியில் முக்கொம்பில் ஆட்டோ பாதை மாறியது. ஆகவே முக்கொம்பை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டே போனோம். அகண்டு விரிந்த தன் கரங்களால் ஊருக்குள் வர முடியுமா என்பது போல வேகம் எடுத்துப் போக வேண்டியவள், இப்போது அடக்க ஒடுக்கமாக இரு கரையும் தொட்டுக் கொண்டு நிதானமாக ஓடுகிறாள்.முக்கொம்பிலேதான் கொள்ளிடம் பிரிகிறது. அங்கே தன் ஆற்றலில் ஒரு சிறிய பங்கு தான் கொடுத்திருக்கிறாள். முதன் முதல் திருமணம் ஆகிக் கணவன் வீடு வரும் மனைவி போல் இல்லாமல் வெகு நாட்கள் கணவனைப் பிரிந்திருந்து விட்டு இப்போது பயமும், தயக்கமுமாகக் கணவன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்ணைப் போல மிக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் செல்லும் வழியெங்கும் தன் வளத்தைக் காட்டத் தவறவில்லை. கடமையில் சிறிதும் தவறாத மனைவியைப் போல அங்கங்கே பாசனம் செய்திருந்த நிலங்களைச் செழிப்புறச் செய்திருந்தாள்.

பச்சையில் தான் எத்தனை வகை? நிலத்தில் விதை விதைத்தவுடன் முளை கிளம்பியதும் தெரிகிற மஞ்சள் கலந்த பச்சை, நாற்று சிறிது வளர்ந்ததும் தெரிகிற கிளிப்பச்சை, நாற்று பிடுங்கி நடுகிற பக்குவத்திற்கு வந்தது தெரிகிற கரும்பச்சை, நட்ட நாற்றுக்கள் பயிராக வளர்ந்த இடங்களில் தெரிகிற இலைப்பச்சை என்றும் எங்கும் எதிலும் பச்சை மயம். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாகக் ,காற்றும் குளிர்ந்து வீசியது. நாற்றுக்கள் பிடுங்கி அங்கங்கே மாலை போலக் கட்டப்பட்டிருகின்றன. பார்க்கவே கண்ணுக்கு ரம்மியமான காட்சி. முன்பெல்லாம் என் புக்ககமான கிராமத்திற்குப் போகும் வழியில் இம்மாதிரி நிறைய நாற்று மாலையைக் காணலாம். சிலர் வாய்க்காலில் கூட விடுவார்கள். நாற்று மிதந்து போகும் காட்சி கண்ணுக்கு அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும். இப்போது என்னதான் தண்ணீர் இருந்தாலும் இம்மாதிரி அதிகம் பார்க்க முடியவில்லை. சில நிலங்கள் தரிசாகவும் கிடக்கின்றன. உழுது போட்டிருக்கும் நிலங்களின் பழுப்பு நிறமும், தண்ணீர் கட்டி வைத்துள்ள நிலங்களின் நிறமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம் அளிக்கிறது.தன் புகுந்த வீட்டுக்கு எவ்விதக் குறையும் அளிக்க விரும்பாத ஒரு பெண்தான் அவள் என்று புரிகிறது. ஆனால் நாம்? அவள் வரும் வழியை எப்படி வைத்திருக்கிறோம்?


திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓரளவு நல்ல மாதிரியாகப் பார்க்க முடிகிறது. ஆனால் கும்பகோணத்திலும், மாயவரத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பாசனம் நடைபெறுகிறது. அதுவும் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமிமலை போகும் வழி எங்கும் முன்னர் பார்த்த வயல்கள் எங்கே? தெரியவில்லை. எல்லாம் வீடு மயம். மடத்துத் தெரு காவேரிப் படித்துறையில் காவேரி சற்று வேகமாகப் போகிறாள். திருவலஞ்சுழியில் அவளில் இருந்து பிரிந்து வந்த அரசலாறோ பார்த்தாலே கண்ணீர் வரும் நிலைமையில் இருக்கிறது. அரசலாறு ஒரு அமைதியான நதி. காவேரியைப் போல ஆரவாரம் இருக்காது.

கும்பகோணத்தில் இருந்து எங்கள் ஊர் செல்லும் சாலையில் சாக்கோட்டையில் ஆரம்பித்து சாலையை விரிவாக்கம் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு பழைய மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப் படுகிறது. அந்தப் பக்கம் போனாலே குளிர்ச்சியாக இருக்கும். இப்போது அரசலாறு இரு கையும் இழந்த பெண்ணைப் போல ஒரு மெளன சாட்சியாக வாயைத் திறக்காமல் தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் மேனி எல்லாம் ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமும். தன் உடலில் இத்தனை வியாதி எப்படி வந்தது என்பதே புரியாமல் திகைப்புடன் தனக்கு என்ன ஆச்சு என்று பார்த்துக் கொண்டே போகிறாள். இத்தனை நாள் ஊர்ப்பக்கம் போகும் போது எல்லாம் தண்ணீர் வரவில்லை அதான் இப்படி என்று சொன்னார்கள். இப்போது நாட்டான் வாய்க்காலில் இருந்து ஆரம்பித்துக் காவேரியில் இருந்து பிரியும் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் போய்க் கொண்டிருந்தும் அரசலாற்றின் துயரம் தீரவே இல்லை. ரொம்ப மன வருத்தத்துடன் ஓடுகிறாள். இங்கே எல்லாம் பாசனமும் அவ்வளவாக நடைபெறவில்லை. எல்லாரும் பணப்பயிரான பாமாயில் கன்றுகள், கரும்பு என்று ஏதேதோ போடுகிறார்கள். மொத்தத்தில் இத்தனை நாளாக வறண்ட ஊரைப் பார்த்து வந்த எங்களுக்கு இப்போது தண்ணீர் வந்தும் ஏமாற்றமாக இருந்தது.

நடந்தாய் வாழி காவேரி!
"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி! "

14 comments:

  1. VOLVO A/C bus ல ஊருக்கு போனோம்னு சொல்றதுக்கு...எப்படி எல்லாம் ஒரு பில்டப் பாருங்க, நிர்வாகத்தை பாராட்டனும், காவிரி ஓடுது ஆடுதுனு :-)

    ReplyDelete
  2. ரொம்ப வருடங்களுக்கு பிறகு திருச்சியில் காவேரியில் தண்ணீர்...nice writing.

    ReplyDelete
  3. அட்டகாசம்! அருமையான் பதிவு! வெகு நாள் கழித்து கணவன் வீடு திரும்பும் மனைவி போல பயந்து மெதுவாக ஓடும் நதி - என்கிற உவமை ரொம்ப அருமை! இப்படி ஒரு அழகான தமிழ் நடையை படித்து ரொம்ப நாளாகியது! வியந்து 3 முறை தங்கள் பதிவை படித்தேன்! உங்களோட எழுத்து நடை"அருணாசல மகிமை" - பரணீதரன்(எழுதியதுன்னு நினைக்கறேன்!) போல இருக்கு! தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி! :)

    ReplyDelete
  4. ஹி,ஹி,ஹி,ஹி, ச்யாம் இப்படி சங்கத் தொண்டரா இருந்துக்கிட்டுத் தலைவியோட மானத்தை வாங்கறீங்களே! :D

    (ச்யாம், நிஜமாவே பேருந்து சேவை நன்றாக இருந்தது. நம்ம ஊரில் இப்படி இல்லையே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்.)

    ReplyDelete
  5. அனேகமாக வருஷத்துக்கு 2 முறையாவது திருச்சி போகிறேன். அப்போதெல்லாம் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எழுதி உள்ளேன். திருச்சியில் கரை புரண்டு ஓடிய காவேரியைப் பார்த்தவர்களுக்கு நான் எழுதியது புரியும். மற்றபடி உங்கள் பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

    ReplyDelete
  6. இந்தியத் தேவதையே,
    உங்கள் பெயரை விடவா நான் எழுதுவது நன்றாக உள்ளது? அருமையான கவித்துவம் நிறைந்த பெயர். பாராட்டுக்கு நன்றி. திரு பரணீதரன் அவர்கள் ஒரு ராஜரிஷி. நான் ஒரு சாதாரணப் பெண். என்னையும் அவரையும் ஒப்பிடாதீர்கள். அவர் ஆத்மார்த்தமாக எழுதுகிறார்.

    ReplyDelete
  7. மற்றும் ஒர் அருமையான சொல்வளமிக்க பதிவு! அருமையான எழுத்து நடை, எங்கள் தாமிர பரணி நதியை போல! (விட்டு குடுக்க மாட்டோம் இல்ல!)

    //எப்படி எல்லாம் ஒரு பில்டப் பாருங்க,//
    @syam, ஹி, ஹி, அப்படி போடு அருவாள!

    ReplyDelete
  8. ஆப்பு அம்பி,
    தாமிரபரணியாம் தாமிரபரணி, படு கிராமம் உங்க ஊரும், நதியும், இது ஒண்ணும் பில்டப் இல்லை. ஒரு பதிவு எழுதத் தெரியலை. என்னைச் சொல்றீங்க, இத்தனை துணை இருந்தும் என்னை எதிர்த்து எழுத பயம்.

    @ச்யாம், நீங்க ஏன் துணைக்குப் போறீங்க? அப்புறம், உங்க புதரகப் பதவி காலி.

    ReplyDelete
  9. அப்படி கேளுங்க கீதாக்கா, தாமிரபரணியாம் தாமிரபரணி. நம்ம காவேரிகிட்ட நெருங்க முடியுமா என்ன........

    ReplyDelete
  10. it is really good to see more water flowing in the cauvery without having to beg from karnataka. hopefully it will continue in the following years :)

    ReplyDelete
  11. ஹி,ஹி,ஹி, சிவா, அப்படி வாங்க வழிக்கு, நீங்க அந்த அம்பி கூடச் சேர்ந்து என்னைக் கலாய்க்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். (நீங்களே தனியாக் கலாய்க்கற அளவு தெரியும்னு சொல்றது காதிலே விழுது) :D

    ReplyDelete
  12. ஸ்மைலி, உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Dear Geetha.. I am just amazed the way you have written about Cauvery. yes I lived there for ten years and Aadi perukku used to be a great time for us.. we from our hospital(as a group) used to go to Ammamandapam and dip our legs and enjoy those tiny little fishes biting our toes.. Have you enjoyed? it s sooo nice.. Thanks for bringing back those lovely memories..

    ReplyDelete
  14. Hello Delphine,
    Thank You for the first coming. We were in Tiruchi on Aadiperukku day but there was so much crowd in Ammamandapam. So we went to Kaveri River in Thiruvaiyaaru Padithurai, the next day and enjoyed it.I saw your comments in Mr.TRC's blog once and came to your blog and read them also. Thank you for visiting my blog. Make it convenience whenever you find time. Bye for now.

    ReplyDelete