எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 09, 2011

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??


ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். வரும் ஞாயிறு அன்று இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: ஸ்ரீநியின் வேண்டுகோளை அடுத்து இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.


இங்கே

13 comments:

 1. தெய்வத்தின் குரலை ஒலிக்க வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. எப்போதோ படித்து மறந்து போன விஷயங்கள். இதெல்லாம் இப்போது ஒரு சம்பிரதாயமாக மட்டும் தொடரப் பட்டு வருகிறது. யார் வேதம் படிக்கப் பிரியப் படுகிறார்கள்? உபநயனம் கூட ஒரு சடங்குதான். யாரும் தொடர்ந்து சந்தி செய்வதில்லை. அவரவருக்கு ஆயிரம் காரணங்கள். பாவ மன்னிப்பு போல காயத்ரி ஜெபம் அன்று ஆயிரத்தெட்டு செய்து ஒரு வருடத்திற்கு சேமிப்பு....ஆவணி அவிட்டம் அன்று பூணூல் மாற்றுவதும் ஒரு கடமை போல தொடர்கிறது.

  ReplyDelete
 3. மிகச் சரியான நேரத்தில்
  மிகத் தரமான பதிவை கொடுத்துள்ளீர்கள்
  நன்றி. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கீதா அம்மா,

  ஆவணி மாதம் பெளர்ணமி (அ) திருவோண நட்சத்திரம் என்பது மாறவில்லை. இங்கே ஆவணி என்பது சந்திர (lunar) மாதத்தைக் குறிக்கும். பொதுவாக, நாம் கொண்டாடும் பண்டிகைகள் (சிலவற்றைத் தவிர) சந்திர மாதங்களைக் கொண்டே கணிக்கப் படுகின்றன. ஆவணி மாதத்திற்கு (வட இந்தியாவில்) பெயரே ச்ரவண மாதம் தான். பெள்ர்ணமியை அவர்கள் பூர்ண மாஸ் (அதாவது மாதம் பூர்த்தி அடைவது) என்றே அழைக்கிறார்கள். திருவோணத்திற்கு அடுத்தது அவிட்டம். அதனால் தான் அன்று (அனைவருக்கும் சாம வேதிகளாக இருந்தாலும்) காயத்ரி ஜபம்.

  நன்றி. தவறு இருந்தால் குறிப்பிடவும்.

  ReplyDelete
 5. ஆவணி அவிட்டம் நெருங்கும் நேரத்தில் சரியான விளக்கம். எவ்வளவு விஷயங்களை நாம் சரியாக தெரிந்து
  கொள்ளாமல் இருந்திருக்கிரோம் என்றே
  தோனரது. உங்க பதிவின் மூலமாக
  நிறைய விஷயம் தெர்ஞ்சுக்க முடிந்த்து
  நன்றி.

  ReplyDelete
 6. நன்றி ராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 7. நன்றி ராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்றாப்போல் தான் நடந்து வருகிறது என்றாலும் ஒரு சிலராவது புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. நன்றி ரமணி அவர்களே.

  ReplyDelete
 10. வேங்கட ஸ்ரீநிவாசன், நீங்கள் சொல்வது சரியே. ஆனால் இங்கே நான் ஆவணி அவிட்டம் என்னும் உபாகர்மா பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றி உங்கள் கருத்துக்கு, சாமவேதிகளான எங்களுக்கும் காயத்ரி ஜபம் எல்லோருடனும் சேர்ந்தே வரும்.

  ReplyDelete
 11. நன்றி லக்ஷ்மி.

  ReplyDelete
 12. மாமி
  உடனே போட்டதற்கு ரொம்ப நன்றி மாமி.
  உண்மை தான் - ஆவணி அவிட்டம் போது சதுர்வேதம் என்று கடைசியில் கொஞ்சம் வேத பாடம் சொல்லிவிட்டு விட்டு விடுகிறோம். காமோகார்ஷீத் ஜபம் போது இதுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு.

  ReplyDelete
 13. இத்தனை விவரங்களா! நன்றி.
  இதுவும் மறுநாள் காயத்ரி ஜெபமும் நல்ல சாப்பாடு. நான் பாசாங்கு ஜபம் செய்து முடிக்கும் வரை தானும் உட்கார்ந்திருப்பன் என் தம்பி (பாசாங்கு கூட கிடையாது).

  ReplyDelete