எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 06, 2011

அடுப்புப் போட்டாச்சு, சமைக்க வாங்க! சாப்பிடலாம்!

Posted by Picasa
இந்த முறை ஊருக்குப் போனபோது மாரியம்மன் கோயிலில் பால் காய்ச்ச வேண்டி மடைப்பள்ளிக்குச் சென்றேன். அங்கே உள்ள மண் அடுப்பைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். இங்கே உள்ள இளம்பெண்களுக்கு இந்த அடுப்பைப் பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை. களிமண்ணைப் பிசைந்துக் கைகளால் போடப் பட்ட அடுப்பு இது. இம்மாதிரி அடுப்பைத் தான் எங்க மாமியார் வீட்டிலேயும் நானும், என் மாமியாருமாப் போடுவோம். ஹிஹிஹி, முக்கியமான இடங்களில் அவங்க தான் போடுவாங்க, நானும் கூடமாட உதவி செய்திருக்கேன். இங்கே பார்க்கும் இந்த அடுப்பில் இரண்டு முக்கிய அடுப்புகளும், நடுவில் ஒரு கொடி அடுப்பும் இருக்கின்றன. வலப்பக்கமும் இடப்பக்கமும் விறகுகளை நிறைய வைத்து எரித்துப் பெரிய அளவுச் சமையலைச் சமைக்க வேண்டியும், நடுவில் உள்ள துவாரத்தின் மூலம் வரும் வெப்பம் குறைவான ஜூவாலையின் மூலம் நிதானமாய்ச் சமைக்க வேண்டியவற்றையும் சமைக்கலாம். இதுவே இன்னும் கொஞ்சம் பெரிய வாய் உள்ளதும், பெரிய அடுப்புகளை வைக்கிறாப் போலவும், கொடியும் இன்னும் பெரிதாகவும் இருக்கும். கூடவே இன்னும் இரண்டொரு அடுப்புகளும் இருக்கும். அப்படி இருந்தால் அது கோட்டை அடுப்பு. ஒரே சமயம் வெண்கலப்பானைகளிலோ, அடுக்குகளிலோ, தவலைகளையோ வைத்துச் சமைக்கும்படி கல்யாணச் சமையல் செய்யப் பயன்படும் அடுப்பே கோட்டை அடுப்பு.

அநாயாசமாகப் பெரிய அடுக்குகளை வைத்துச் சமைத்து இறக்கலாம். இந்த அடுப்பிலும் மடைப்பள்ளியில் சமையல் சில நாட்கள் கூடச் சமைக்கும்படி இருக்கும். அதற்காகப் போடப் பட்டது. வீட்டில் எனில் ஒரு அடுப்பு முக்கியச் சமையலுக்கும், கொடி அடுப்பு ஒன்றுமாக இருக்கும். இந்த அடுப்பில் தான் தினசரி சமைப்போம். சமைத்ததும் அடுப்பைக் கழுவ முடியாது. விறகை இழுத்துத் தள்ளி அணைத்தாலும் உள்ளே இருக்கும் கரி கனன்று கொண்டிருக்கும். கரியை உடனே அணைக்க மாட்டார்கள். மேலும் அணைத்தாலும் மண் அடுப்பு சூடாகவே இருக்கும். ஆகவே விடிகாலையில் தான் அடுப்பை மெழுக வேண்டும். நீர் விட்டுக் கழுவ முடியாது. களிமண் இல்லையா? கரைஞ்சு போயிடுமே! பசுஞ்சாணியால் மெழுக வேண்டும். முதலில் உள்ளே இருக்கும் கரியையும் சாம்பலையும் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். கரியை வெளியே எடுத்துக் கழுவிக் காய வைத்துக் கொண்டால் கரி அடுப்புக்குப் பயனாகும். சாம்பலோ தோட்டத்தில் செடிகளுக்குப் போடலாம். அநேகமாய் அவரைக் கொடி, பாகல் கொடி, கீரைச் செடிகளுக்கு இந்தச் சாம்பலைப் போடுவார்கள். இத்தனையையும் சுத்தம் செய்தபின்னர் அடுப்பைச் சாணி போட்டு மெழுக வேண்டும். மெழுகாமல் மறுநாள் சமைக்கக் கூடாது. மெழுகினதும், சிலர் அக்ஷய என எழுதுவார்கள் என்கின்றனர். ஆனால் நாங்கள் கோலம் மட்டும் போடுவோம். அரிசி மாவினால் கோலம் போடுவது கட்டாயமாய்க் கருதப் படும். சிராத்தம் மற்றும் துக்க காரியங்கள் நடக்கையில் மட்டுமே அடுப்பில் கோலம் இருக்காது. மற்ற தினங்களில் கோலம் கட்டாயம். இப்போ இந்த அடுப்பும் இல்லை. அடுப்பில் கோலம் போடுபவர்களும் இல்லை.

எனக்கு இந்த அடுப்பு மாமியார் வீட்டுக்கு வந்து தான் பழக்கம். எங்க அம்மா வீட்டில் வெந்நீருக்கு மட்டும் இம்மாதிரி ஒரு மண் அடுப்பு உண்டு. மற்றச் சமையலுக்கு அம்மா இரும்பு அடுப்பில் சமைப்பாள். ஆனால் நான் சமைக்கப் பழகியது எல்லாம் குமுட்டியில் தான். இரும்புக் குமுட்டியில் சமைத்துப் பழகினேன். மண்ணிலும் குமுட்டி உண்டு. இரும்புத் தகட்டில் சின்ன ஓட்டைகளோ அல்லது கம்பிகளாகவோ போட்டுக் கொண்டு மண்ணால் அடுப்பைப் போட்டுவிட்டு நடுவில் தீ எரிய வரும் ஓட்டையில் அந்தத் தகட்டைப் பதித்துவிட்டு மேலே பாத்திரம் வைக்க வேண்டி நாலு பக்கமும் குமிழாக எழுப்பி விடுவோம். கீழே உள்ள வாயில் தேங்காய் நார் அல்லது, விராட்டியில் லேசாக எண்ணெய் ஊற்றிக் கொண்டு, மேலே இரும்புத் தகடு இருக்குமிடத்தில் கரியைப் போட்டுவிட்டு விசிறியால் விசிறினாலோ அல்லது காற்று வரும் திசையில் வைத்தாலோ அடுப்புப் பிடித்துக் கொள்ளும். ஆனால் காற்று வரும் திசை தென் திசை எனில் அடுப்பின் வாயை தென் திசை நோக்கி வைக்க மாட்டோம்.

அப்போது எங்க அம்மா வீட்டில் ஜனதா ஸ்டவ்னு ஒண்ணு இருந்தது. ஸ்டவ் அதுவும் ஜனதா ஸ்டவ் அப்போத் தான் பிரபலம் அடைந்து கொண்டு வந்தது. அதுவும் அந்த ஸ்டவ் பாடி, ஆடி, ஜோசியம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சதும் இன்னும் அதிகம் பிரபலம் ஆனது. ஸ்டவ் நகர்ந்துக்கறது என்றெல்லாம் சொல்வாங்க. சும்மாவே கவலைப்படும் அப்பாவும், அம்மாவும் ஸ்டவ் நகர்ந்துக்கறச்சே அதிலே என்னைச் சமைக்க விடுவாங்களா?? கல்யாணம் ஆகி வந்து மாமியார் வீட்டில் விறகு அடுப்புச் சமையலுக்கு அப்புறம் சென்னைக் குடித்தனத்தில் தான் ஸ்டவ் அடுப்பு. அங்கே சமைச்சது உம்ராவ் னு ஒரு ஸ்டவ் அடுப்பு. இது வட மாநிலங்களில் மட்டுமே பிரபலம்னு நினைக்கிறேன். பம்ப் ஸ்டவ் புழக்கத்தில் இருந்தாலும் அப்போதெல்லாம் ஒரிஜினல் ஸ்பிரிட் போட்டே அதைப் பற்ற வைப்பார்கள். ஸ்பிரிட் சுலபமாய்க் கிடைக்காது. லைசென்ஸ் வேணும்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை. அப்புறமா அந்தப் பழக்கமெல்லாம் போய் நான் பம்ப் ஸ்டவ் பயன்படுத்தினப்போ மண்ணெண்ணை விட்டுத் தான் பற்ற வைச்சேன். காஸ் கல்யாணம் ஆனதுமே வாங்கியாச்சு என்றாலும் சில சமயம் அதிகத் தேவைகளுக்கு ஸ்டவும் தேவைப்படும். இப்போ எல்லாரும் ஆச்சரியப்படும்படியான ஒரு செய்தி. நான் காஸ் வாங்கியப்போ சிலிண்டர் டெபாசிட் 50 ரூ. சிலிண்டரில் காஸோடு சேர்த்து 16 ரூயும் சில்லறையும். அடுப்பு ஒரு ஐம்பது ரூபாய் . எல்லாம் சேர்த்து 150 ரூக்குள் ஆச்சு. 16 ரூபாயில் இருந்து பத்தொன்பது ஆனப்போ பயங்கரமாக் கோபம் வந்தது. இப்போ???? (((

17 comments:

  1. பழைய நினைவெல்லாம் வந்ததே.
    நானும் குமுட்டி அடுப்பு விறகடுப்பில் தான் ஆரம்பித்தேன். பம்ப் ஸ்டவ்வுக்கு ஸ்பிரிட் வாங்க லைசென்சும் வாங்கி வச்சிருந்தோம்.
    உம்ராவ் திரி ஸ்டவ்வும் உண்டு.
    அந்ததிரி ஸ்டவ் அணைத்ததும் ஒரு
    வாடை வரும் பாருங்கோ வீடு பூரா
    மணக்கும்.!!!!!!!!!!!!!
    சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்,

    As usual ப்லொக் கமென்டை முழுங்கிடித்து !!!!!

    கோட்டை அடுப்பு இந்த மாதிரி பண்ணின அடுப்பில்லையே . நீளமா குழி தோண்டி செங்கல் வச்சு அடுக்கி இருக்கும் .கல்யாணத்துக்கு எங்க வீட்டுல கோட்டை அடுப்பில் தான் சமையல். அந்த டேஸ்ட் தனிதான் . உபயோகிச்சப்புறம் அதெ சாம்பலால நிறப்பி மூடிடுவா.

    ReplyDelete
  3. ஸ்பிரிட் விட்டு பத்தவைக்கற சாதனம் பேரு காக்கடா!! எனக்கு கட கட நு சிரிப்பு வரும் பேர் கேட்டு:))

    ReplyDelete
  4. !!!!!!!!!!போயே போய்டுத்.......!!!!!!!!!:)))))))))))

    ReplyDelete
  5. வாங்க லக்ஷ்மி, ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சு போல. நல்லமாதிரியாக இனிமையாய்ப் பொழுது கழிந்ததா? :D

    ஆமாம் அந்த உம்ராவ் ஸ்டவ் அணைச்சால் மண்ணெண்ணை நாற்றம் குடலைப்பிடுங்கும் தான். :)))))

    ReplyDelete
  6. கோட்டை அடுப்பு நீங்க சொன்னாப்போலயும் உண்டு. இதுவும் உண்டு ஜெயஸ்ரீ. இப்படித் தான் எங்க வீட்டில் மதுரையில் கொல்லைப்பக்கம் வெந்நீர் உள் பக்கம் இருக்கும். இதோடு இன்னும் கொஞ்சம் செங்கல் வைச்சுக் கூடவே போட்டுப்பாங்க. விசேஷ நாட்களிலே அந்த மாதிரி எக்ஸ்ட்ரா அடுப்புப்போடும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காயெல்லாம் உடைச்சு வெல்லம் நிவேதனம் செய்து...... எல்லாம் ஒரு காலம்! :))))))

    ReplyDelete
  7. அட, ப்ளாக் உள்ளே விட்டுடுத்தா?? நல்வரவு, வாங்க வாங்க,

    ஆமாம், காக்கடா தான். பேரே மறந்து போயிருக்கேன். எனக்கு நினைவிலே வரலை. :)))))

    ReplyDelete
  8. we used to help our athai_gal when we visit paati veedu where they cooked in these kind of adupu. Ippo every thing got changed. Still in my house,i cook prasadam for any big pooja in kumuti.

    andha kaala ninaivugal dhandha maamiku oru "jey".:)

    ReplyDelete
  9. மாமி
    பதிவிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று - நேயர் விருப்பம் னு கூட சொல்லலாம் :)
    நீங்கள் தான் என்று நினைக்கிறேன் - ஒரு முந்தய பதிவில் ஆவணி அவிட்டம் அன்று ஆரம்பிக்கும் வேத அப்யாசம் ஒரு செமஸ்டர் முறை போல ஆறு மாசம் சென்று அப்புறம் விருப்பமான பகுதியை குரு குலத்தில் படிப்பார்கள் என்றும், ஸாம வேதிகள் வேறொரு முறையை பின் பற்றுவதால் அவர்களது ஆவணி அவிட்டம் பின்னர் வருவதாகவும் படித்த நினைவு. இதை பற்றிய விளக்கம் நீங்கள் எழுதியதாக இருந்தால் மீண்டும் போட முடியுமா? என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  10. அட??? எஸ்கேஎம், இன்னமும் நினைவு வைச்சிருக்கீங்களா?? நல்வரவு. உங்களுக்கும் மலரும் நினைவுகளை இந்தப் பதிவு கிளப்பி விட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. எனக்கும் அப்போப்போ குமுட்டிச் சமையல் சாப்பிட ஆசை வரும் தான். ஆனால் என்னோட ஆஸ்த்மாவை நினைச்சுக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கு. :( காப்பியே கொட்டையை வீட்டிலேயே வறுத்து, வீட்டிலேயே அன்றன்றைக்கு அரைச்சுக் காப்பிப் பொடி தயார் செய்து தான் போட்டுட்டிருந்தோம். அதையும் நிறுத்தியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!!!!!!!!!! :))))))))))))

    ReplyDelete
  11. ஸ்ரீநி, போட்டாச்சு, இன்னும் சில நாட்கள் உங்க பதிவுப்பக்கம் வரமுடியாதுனு நினைக்கிறேன். :((( பல பதிவுகளுக்கும் போக முடியறதில்லை. சிலர் ஏன் வரதில்லைனும் கேட்கிறாங்க. :((( பார்க்கலாம். :)))))

    ReplyDelete
  12. அடுப்பு சமையல்,கரி எல்லாம் வந்து விட்டது. மரத்தூள் அடுப்பைக் காணோமே:)
    உம்ராவ் மறக்க முடியுமா. பாம்பீயிலிருந்து வாங்கிக் கொண்டு வரச் சொல்லி
    உபயோகப் படுத்தின நினைவு. 1967இல் திருமணத்துக்கு அடுத்த வருடம்
    காஸ் அடுப்பு வந்த்தது. நான் இணைப்பு வாங்கிய போது விலை 19ரூபாயாக இருந்தது.சேலத்தில்..

    அடுப்பும் ,சாணியும்,புடி துணியும் மறந்தே போயாச்சு!!
    இப்ப கூட உங்கள் வீட்டில் கரி அடுப்பு பார்த்த நினைவு வருகிறது. மறதியில் சொல்கிறேனோ:)

    ReplyDelete
  13. வாங்க வல்லி, நீங்க மறக்கல்லாம் இல்லை. குமுட்டியைக் கீழே தான் வைத்துக்கொண்டிருக்கிறேன். திடீர்னு தேவைனா எடுக்கணுமே. அதைத் தான் காட்டி இருப்பேன். பார்த்திருக்கலாம். :)))))அம்மியும் சமையலறையில் பதித்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. ஜனதா ஸ்டவ் நினைவிருக்கிறது. நிறைய ஆவி சம்பாஷணை நடந்திருக்கிறது ஜனதா ஸ்டவ் உபயத்தில்.

    ReplyDelete
  15. “ நுடன் ஸ்டவ்” என்று ஒன்று வந்தது. 1978-79ல டெல்லி போனபோது எங்கப்பா வாங்கி வந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.ரொம்ப கரிஆகாமல் எரியும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்சம் நாளில் கேஸ் அடுப்பு வாங்கிவிட்டதால் அதை ரொம்ப உபயோகபடுத்தல.பழைய
    அடுப்புகளை நினைவு படுத்தும்விதமான நல்ல பகிர்வு மாமி. நன்றி.

    ReplyDelete
  16. 76ஆம் வருஷமே நூதன் ஸ்டவ் வந்துடுச்சுனு நினைக்கிறேன் ராம்வி. அதிலே மண்ணெண்ணெய் இருப்புத் தெரிய தெர்மாமீட்டர் மாதிரி அளவுகோல் வைத்திருப்பார்கள். அப்போல்லாம் எண்ணையும் கிடைத்தது. நானும் பயன்படுத்தி இருக்கேன். காஸ் எங்களுக்கு அஜ்மேரில் இருந்து நசிராபாத் வரணும். போய்ச் சொல்லி அவங்கபதிவு பண்ணி வர இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். அப்போவும் அவங்க கொண்டு வந்து போட மாட்டாங்க. நாம் தான் போய் எடுத்து வரணும். அது வரைக்கும் நூதன் ஸ்டவில் தான் சமையல். :))) பம்ப் ஸ்டவும் இருந்தது. ப்ரபாத். பெரிசு, சின்னது இரண்டு. ஆனால் அதைப் பயன்படுத்தாதேனு சொல்லிடுவார்.

    ReplyDelete
  17. லேட்டாக வந்தாலும் சாப்பாடு கிடைக்கும்தானே :)

    இந்த அடுப்பு ஊரில் நம்ம வீட்டிலும் இருக்கிறது.

    ReplyDelete