எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 26, 2012

டீ, டீ, டீ டீ டீ, டீ குடிக்க வாங்க! :D

இந்தியா வந்ததில் இருந்து டீ குடிப்பது என்றால் ஒரு தண்டனையாக இருக்கிறது.  பொதுவாய் மாலை வேளை, காபி, டீ குடிப்பதைத் தவிர்த்து விட்டேன்; என்றாலும் சில சமயம் அதிகம் வேலை இருக்கையில் ரங்க்ஸுக்குத் தயாரிக்கும் தேநீரில் கொஞ்சம் குடிக்கலாம் என்றால் அதன் சுவை!  கடவுளே!  உலகின் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடான இந்தியாவில் இப்படி ஒரு தேயிலையானு தோணுது!  வெறுத்தே போச்சு! ராகிமால்டே போதும்னு முடிவுக்கு வந்துட்டேன்.

ராமாயண காலத்திலே அனுமான் கொண்டு வந்த சஞ்சீவனி மூலிகைகளால் கொடுக்கப்பட்ட கஷாயம்/வடிநீர் தேநீராய் இருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது.  ஆகையால் இந்தியாவிலே தேநீர் ராமாயண காலம் தொட்டே இருக்குனு வைச்சுப்போம். :D  ஆனால் வடகிழக்குப் பிராந்தியங்களில் இந்தத் தேயிலை ஒரு காட்டுப் பயிராக வளர்ந்து இருந்ததாகவும் அந்தப் பகுதி மலைவாழ் மக்கள் இந்த இலையைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை அருந்தியதாகவும் சொல்கிறார்கள்.  இது தெரிய வந்தது 12-ஆம் நூற்றாண்டிலாம்.  ஆனாலும் அதன் பின்னரும் தேயிலையோ அதன் பயன்பாடோ இந்தியா முழுதும் பரவவில்லை.  அதற்கு பிரிட்டிஷ் காரர்கள் வர வேண்டி இருந்தது. :P

இந்தியாவிலே 1820-ஆம் ஆண்டிலேயே கிழக்கிந்தியக் கம்பெனிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள தேயிலையின் பயன்பாட்டை அறிந்து கொண்டு அந்தப் பகுதிகளை அங்கே ஆண்டு கொண்டிருந்த அரசர்களிடமிருந்து விலைக்கு வாங்கி விட்டனர்.  ஆனால் இங்கிலாந்திலோ ப்ரூக்பாண்ட் தேயிலை 1845 ஆம் வருஷம் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்லப்படுகிறது.  ப்ரூக் பாண்டின் முதல் டீக்கடை 1869-இல் துவங்கப் பட்டிருக்கிறது.  இவருக்குப் போட்டியான லிப்டனோ 1893-இல் ஆரம்பித்துள்ளார்.  இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆரம்பித்த லிப்டன் டீ கம்பெனியின் தேயிலைக்கு நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது.  ப்ரூக் பாண்டை விடவும் இது அதிகம் ஸ்ட்ராங்க் எனவும் சொல்லப் பட்டிருக்கிறது.  இந்தப் போட்டி இந்தியாவிலே அப்போதெல்லாம் அதிகம் வரவில்லை.

இந்திய மக்கள் மெல்ல மெல்லவே தேநீருக்கு அடிமையாகி இருக்கின்றனர்.  அப்போதும் வட இந்தியா முழுதும் பரவிய தேநீர் மோகம் தென்னிந்தியாவுக்கு வரவில்லை.  ஹிஹி, எனக்குத் தெரிஞ்சு தேநீர் குடிக்க அப்போதெல்லாம் விளம்பரம் செய்வார்கள்.  நான் சின்ன வயசிலே மதுரை கழுதை அக்ரஹாரத்திலே (மேலப் பாண்டியன் அகழித் தெரு) இருந்தப்போ சில அக்காக்கள் கைகளில் டீப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வருவாங்க.  வீடு வீடாய்ப் போய்த் தேநீர் குடிக்கச் சொல்லி சாம்பிள் பாக்கெட்டுகளைத் தருவாங்க.  ஒருதரம் சாம்பிள் பாக்கெட்டில் தேநீர் போடுவதற்கும் சொல்லிக் கொடுத்தாங்க.  அப்போதெல்லாம் வெந்நீரைக் கொதிக்க வைத்துத் தேயிலையில் ஊற்றி ஊற வைத்துப் பின் பாலைக் காய்ச்சித் தேநீரை வடிகட்டிச் சேர்த்துச் சர்க்கரை சேர்க்கவேண்டும்.  தேயிலை ஊற ஊறத் தேநீரின் சுவையும், மணமும் அதிகமாய் இருக்கும்.

நாங்க (நானும், அண்ணாவும், தம்பி அப்போ கைக்குழந்தை) சுற்றி உட்கார்ந்து கொண்டு அவங்க கொடுக்கப் போகும் தேநீரைக் குடிக்க ஆவலுடன் காத்திருப்போம். குருவிப் படம் போட்ட ப்ரூக்பாண்ட் தேயிலைப் பொட்டலம் மிகவும் பிரபலம்.  அவங்க இந்தப் படங்களைக் குழந்தைகள் சேர்ப்பதற்கெனத் தேயிலைப் பாக்கெட்டுகளோடு கொடுப்பாங்க.  தீப்பெட்டிப் படங்கள் சேகரிப்பு மாதிரி இதுவும் சேகரிக்கப்படும்.  அதுக்கப்புறமா வந்தது தான் லிப்டன் தேயிலை.  ப்ரூக்பாண்டை விடவும் ஸ்ட்ராங்க் எனச் சொல்லப்பட்டது. ஆனால் எதுவாக இருந்தாலும் ஒரிஜினல் அஸ்ஸாம் தேயிலையில் ஒரு முறை தேநீர் குடித்தால் அதன் பின்னர் எந்தத் தேநீரும் பிடிக்காது.  இப்போ இந்த ப்ராண்ட் பெயர் எல்லாம் பெயரளவுக்குத் தான்னு நினைக்கிறேன்.  எல்லாமே யூனிலிவரின் கீழே இருக்கிறது என நம்புகிறேன்.  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தேயிலையின் தரம் இந்தியாவில் கிடைக்கும் தேயிலையில் இல்லை.  நமக்குக் கிடைப்பது கடைசித் தரம் தான். :((((

படங்கள்: கூகிளார் தயவு.  எல்லாரும் இப்போ தேநீரோ, காஃபியோ குடிக்கும் நேரம். (இந்தியாவில்)


ஹா, ஹா, தலைப்பு எப்படியோ விடுபட்டிருக்கிறது. ::)))))

39 comments:

 1. தேநீர் ஆசை இல்லை. காபியை விட முடிவதில்லை. இரண்டு வேளை காபி கட்டாயம்! காபியிலும் இது மாதிரிக் குறைகள் வரும் என்றாலும் பால் கோளாறு என்று சமாதானம் செய்து கொண்டு 'நாளைக் காபி என்றும் நல்ல காபி கிடைக்குமென்று நம்பிக்கைக் கொள்வாயடா' என்று குடித்து விடுவது வழக்கம்! லிப்டன் விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 'லிப்டன் ரூபி.......' (புள்ளியிட்ட இடங்களில் வரும் வரி நினைவில்லை!) என்ற வரியை மூன்றுதரம் ஏலம் போட்டு விளம்பரம் முடியும்!

  ReplyDelete
 2. சுவையான தகவல்கள்; சுவையான பதிவு. பச்சைத் தண்ணீர் - சாரி பச்சைத் தேநீர் குடித்திருக்கின்றீர்களா? பச்சைத் தேநீர், எலுமிச்சைப் பிழிந்து, தேன் சேர்த்து, (பால் தேவை இல்லை) குடிக்கலாம். ஒரிஜினல் ஊட்டி தேயிலை நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. இருப்பதிலேயே மட்ட ரகம்தான் உள்நாட்டு சந்தைக்கு. மற்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுவிடும். :( நமக்கு கிடைப்பது டஸ்ட் டீ தான். தேயிலை டீ அல்ல

  ReplyDelete
 4. வாங்க ஸ்ரீராம், லிப்டன் விளம்பரம் ரொம்பவே பிரபலம் தான், எனக்கும் குறிப்பிட்ட வரிகள் நினைவுக்கு வரலை. ஆனால் காஃபி விஷயத்தில் எங்க வீட்டில் தரம் நிரந்தரம். எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து இன்று வரை நாங்க கறந்த பால் தான் வாங்கறோம். எப்போவாவது அவசரத்தேவைக்குனு வாங்கும் பாக்கெட் பால் எங்களைப் பல முறை ஏமாற்றியதுண்டு. ஆகவே காஃபியோ, பாலோ, தேநீரோ நல்ல பாலில் தான். அதுக்கே தேநீர் சுவை மோசம்னா தேயிலையின் தரம் எப்படினு பார்த்துக்குங்க. :)))))

  ReplyDelete
 5. பச்சைத் தேநீர் அடிக்கடி குடிப்பேன் கெளதம் சார். வெளியே போனால் சில இடங்களில் சாப்பிட்டாலோ, தண்ணீர் குடிச்சாலோஉடனே எனக்கு வயிறுக்கோளாறு ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் பச்சைத் தேநீரும், ஆரோருட் கஞ்சியும் தான் கை கொடுக்கும். ஊட்டியிலே தேயிலை நல்லாத் தான் இருக்கு; ஆனால் அதையே ஊட்டித் தேயிலைனு இங்கே வாங்கினால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :( நாங்க ஊட்டியிலே இருக்கையிலும் இலையாகவே வாங்கிப் பயன்படுத்தினோம். இங்கே க்ரானுல்ஸ் கூட சுமார் தான். :(

  ReplyDelete
 6. வாங்க எல்கே, உள்நாட்டுச் சந்தைக்கு எல்லாமுமே மட்டரகம் தான் தராங்க. நமக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!:(

  ReplyDelete
 7. காபியை விட முடிவதில்லை. இரண்டு வேளை காபி கட்டாயம்! //

  ம்ம்ம்ம், நான் கல்யாணம் ஆறவரைக்கும் காஃபி குடிச்சதில்லை; அப்புறம் தான் பழக்கமாச்சு. எனக்கு நேர் எதிர் ரங்க்ஸ்

  காஃபியிலேயே நீச்சலடிப்பார். என்னோட ஒரு வாய்க் காஃபி பதிவைத் தேடிப் பிடிச்சுப் படிக்க முடியுமானு பாருங்க(நேரம் இருந்தால்)சுட்டி தரேன்.

  ReplyDelete
 8. அசாம் மாநில தேநீர் நன்றாக இருக்கும். ஆனாலும் அவை பெரும்பாலும் ஏற்றுமதி ஆகி விடுகிறது. சில சமயங்களில் என் அசாம் நண்பர் ஒருவர் அவரது தோட்டத்தில் பறித்த தேநீர் இலைகளைப் பதப்படுத்தித் தந்திருக்கிறார். அந்த தேநீர் அருந்திய பிறகு சாதா தேநீர் அருந்த பிடிப்பதில்லை.

  இப்போது ப்ரூக்பாண்ட், லிப்டன் எல்லாமே யுனிலீவர் கீழே தான்....

  ReplyDelete
 9. பெங்களூரில், COORG காபிப் பொடி நன்றாக இருக்கிறது. Pure coffee powder.

  ReplyDelete
 10. வாங்க வெங்கட், ஆமாம், அஸாம் தேயிலைக்கு நிகரில்லைதான். இப்போல்லாம் ஒரிஜினல் அஸாம் தேயிலை கிடைப்பதில்லை.

  ReplyDelete
 11. வாங்க கெளதம் சார், மறுவரவுக்கு நன்றி. இங்கேயும் கூர்க் காபி பவுடர் தான் கொட்டை வாங்கி அரைத்துக் கொள்கிறோம். டாடா கூர்க். :)))) அவங்க கிட்டேயே தேயிலையும் கொஞ்சம் சுமாரா இருக்கும். க்ரானுல்ஸ். இலையின் சுவையே அலாதிதான். இப்போல்லாம் கிடைக்கிறதே குதிரைக் கொம்பு.:(

  ReplyDelete
 12. காபி பதிவு குடிச்சிட்டேன்...ஸாரி படிச்சிட்டேன்...நல்லா இருந்தது... காபி எங்கள் உறவுகளிலும் சொம்பை டம்ப்ளர் கணக்காகச் சொல்லும் காபி மித்திரர்கள் உண்டு. நான் நிஜமாவே (நிசம்மா...) ஒரு வாய்தான். அப்புறம் அந்த Rh நெகட்டிவ் கட்டுரை விக்கிக்கு அனுப்பி விட்டீர்களோ....

  ReplyDelete
 13. இப்பல்லாம் நாளுக்கு ஒரு புது கம்பெனி டீ அறிமுகமாகிரதே.விளம்பரம் பார்த்துவாங்குகிரவர்களும் அதிகமாகிகிட்டே வராங்க இதில் டிப் டிப் டீயும் இருக்கே.கடக் சாய்னு ஒன்னு இருக்கு சூடும் சுவையுமாக நல்லா இருக்கும். வட நாட்ல வித விதமான டீ விரும்பிகள் இருக்காங்க.

  ReplyDelete
 14. வாங்க ஸ்ரீராம், காபி பதிவைக் குடிச்சதுக்கு நன்னி. :))) Rh நெகட்டிவ் கட்டுரை விக்கி பசங்களுக்கு அனுப்பி அதிலே வந்து....... எல்லாம் ஆச்சு! :))))))

  ReplyDelete
 15. வாங்க லக்ஷ்மி, புதுசா வர டீத் தூள் எப்படி இருக்குமோ! :( கடக் சாயும் குடிச்சிருக்கேன். மும்பையிலே குளிர்காலம், மழைக்காலத்திலே அந்த லெமன்க்ராஸ் இலையைப் போட்டுத் தருவாங்க பாருங்க ஒரு சாய், அதுக்கு ஈடு, இணை உண்டா! :))))))

  பஞ்சாபிக் காரங்களோட ஏக் கண்டே சல்னே கா சாயும் ஒரு வாய் குடிச்சிருக்கேன். இது நிஜமான ஒரு வாய்! :)))))

  ReplyDelete
 16. காபி இதுவரை சுவைத்ததில்லை. தேநீரும் கல்லூரியில் படிக்கும் போது தான் ஆரம்பித்தது. அது கூட அவசியம் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

  டிப் சாயெல்லாம் எனக்கு பிடிப்பதில்லை. மெஷின் சாய் ஓக்கே....

  ReplyDelete
 17. ப்ரூ என்று கொடுமையான காபி ஒன்று விற்பார்களே?

  இந்தியாவில் டீ விலை அதிகம் என்று அமெரிகாவிலிருந்து டப்பா டப்பாவாக க்ரீன் டீ வாங்கிக் கொண்டு போவோரை அறிவேன்.

  ReplyDelete
 18. வாங்க கோவை2தில்லி, அதென்ன மெஷின் டீ?? புரியலை! காபி, டீ குடிக்கலைனா நல்லது தான். :))))

  ReplyDelete
 19. வாங்க அப்பாதுரை, ப்ரூங்கற பேச்சே நம்ம ரங்க்ஸின் நாக்கிலேயே வராது. தொலைக்காட்சி ப்ரூ விளம்பரம் வந்தால் கூட சானல் மாத்திடுவார்னா பாருங்க! :P:P:P தொண்டையிலே எப்படி இறங்கும்?? மாடே நேரே வந்து நான் தான் பாலைக் கொடுத்தேன்னு சொன்னால் தான் நம்புவார்; இல்லைனா பாக்கெட் பாலாய் இருக்குமோனு ஆயிரம் சந்தேகம்! :P:P:P

  ReplyDelete
 20. நீங்களாவது நல்ல தேயிலையா வெளிநாட்டில் வாங்கி கொடுங்க. கொஞ்சம் குடிச்சு பார்த்துக்கிறோம்.எங்களுக்குப் பழகிப்போச்சு.

  ReplyDelete
 21. இங்கே இருந்த பொழுது ஸ்டார்பக்ஸில்
  காபி வாங்கி அல்லது நீங்களே கலந்து கொண்டு சாப்பிட்டுப் பார்த்திருக்கீறீர் களா? என்ன, இன்ன மாதிரி கலவை என்று சொல்ல அல்லது கலக்கத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான். அப்புறம் சூடான அந்த திரவத்தை உறிஞ்சும் வசதியினூடான அந்த அட்டைக் கோப்பையில் சுமந்து கொண்டு வந்து, டிரைவ் பண்ணும் பொழுது உறிஞ்சிக் கொண்டு போக வேண்டியது. அம்மாடி! ஒரு மீடியம் சைஸ்ஸூக்கு எவ்வளவு தருகிறார்கள்! வயிறே நிறைந்து ஏப்பம் விடுகிற அளவுக்கு...

  நம்மை மாதிரி காப்பிக் குடியர்க்கு
  மனதைக் கொள்ளை கொள்ளும் வெவ்வேறு நாட்டு காப்பிக்கொட்டை ரகங்களை வரிசைகட்டி அடுக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா தான். ஜென்மத்தில் சாப்பிட்டேயிராத நாட்டு கொட்டை வாங்கி அங்கேயே அரைத்துக் கொண்டு வந்து, பில்ட்டரில் இட்டு .. அடடா!

  ReplyDelete
 22. வாங்க விச்சு, நாங்க வரச்சே கொஞ்சம் காப்பிக்கொட்டை மட்டும் கொண்டு வந்தோம். :))))) தேயிலை எல்லாம் இந்தியத் தேயிலை தானே! அதான் எடுத்துட்டு வரலை. ஆனால் தரம் என்னமோ சூப்பர் ரகம்! இங்கே அப்படி இல்லைதான். :(((

  என்றாலும் இந்தியாவில் கிடைக்கும் உயர்ரகத் தேயிலையிலேயே உங்களுக்கு அருமையான தேநீர் தயாரித்துத் தரேன். வாங்க.

  ReplyDelete
 23. வாங்க ஜீவி சார், ஸ்டார்பக்ஸில் ப்ரூட் காஃபி தான் எங்க சாய்ஸ். ஆனால் லார்ஜ், மீடியம் வாங்கறதில்லை., ஸ்மால் வாங்கி ஹாஃப் அண்ட் ஹாப் பால் சேர்த்துச் சர்க்கரை போட்டு இரண்டு பேரும் பகிர்ந்துப்போம். அதுவே நிறைய இருக்கும்.

  ஸ்டார்பக்ஸில் மசாலா சாய் நல்லா இருக்கும்னு சொல்லிட்டுப் பொண்ணு வாங்கிக் கொடுத்தா! :))))) எங்களுக்குப் பிடிக்கலை; அவளுக்கு அப்செட் ஆகி எல்லாப் பத்திரிகையிலும் தலைப்புச் செய்தியாக் கொடுத்தா.

  ReplyDelete
 24. யு.எஸ்ஸில் இருக்கையில் எப்போதுமே வறுத்த கொட்டை கொலம்பியன் தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டிலே அரைத்து அவ்வப்போது காஃபி மேக்கரில் போடுவது தான். என்றாலும் நம் ஊர்ப் பாலில் டபரா, தம்பளரில் சாப்பிடும் சுகம் இல்லை என்பதும் உண்மையே.

  அதோடு இந்தியாவிலேயே கிட்டத்தட்ட 95 வரைக்கும் நல்ல தரமான காஃபிக்கொட்டை வாங்கி வீட்டிலேயே வறுத்து, வீட்டிலேயே அரைத்துத் தான் காஃபி போட்டிருக்கேன். காபிக்கொட்டை மெஷினை இப்போ செப்டம்பரில் இந்த வீடு மாற்றும்போது தான் விலைக்குப் போட்டேன். கையால் அரைக்கும் மிஷின். :))))))) காரைக்குடி மிஷின் என்று சொல்வார்கள். படம் எடுத்து வைச்சுக்கணும்னு இருந்தேன்; அதுக்குள்ளே அவசரம் அவசரமாக் கிளம்பறாப்போல் ஆயிட்டது.

  ReplyDelete
 25. ஸ்ட்ராங்க் டீ சாப்பிட்டதில் தலைவலி போயே போச்! (டீ,டீ,டீடீடீ டீ) அருமை. நம் தேசத்தில் கடைகளில் கிடைக்கும் டீத்தூள் அதன் விலைக்கேற்ப இருக்கின்றது. (அவையெல்லாம் உண்மையில் டீத் தூள் தானா? ஹ்ம்) அஸ்ஸாம் தேயிலை வெளிநாட்டில் கிடைக்கின்றது. விலையைப் பாருங்கள். நம் தேசத்தில் விற்கப்படும் தாஜ் டீ சற்று தேவலாம் (விலை சற்று அதிகம் தான்). ஒரு முறை இலங்கை நண்பர் தேயிலை கொண்டு வந்து அவர் கையாலேயே தேனீர் தயாரித்தார். சுவையோ சுவை. கூர்க் காஃபி அருமை. தேனீர் - தயாரிப்பில் தான் சுவை அமைகின்றது.

  ReplyDelete
 26. those golden teas are long gone நம்பூர்ல .
  என்ன பாட்டு அது ? தங்க நிறம் ததும்பினு வருமே advertisement !! :(
  ம்...கோர்ட் லேந்து வந்தப்புறம் அழகான ஆரஞ்சு நிறத்தில் கொழுமலை டீ எட்டூருக்கு வாசனையோட பாட்டி மெதுவா ஆத்தி தாத்தாவுக்கு வெள்ளி கப்ல கொஞ்சம் கொஞ்சமா விட எங்க தாத்தா அனுபவிச்சு சாப்பிடற ந்யாபகம் சமீபத்ல என் colleague UK லேந்து கொண்டுவந்து தந்த Tetley's Yorkshire Tea குடிச்சப்போ வந்தது:)) நம்பளோடது எல்லாம் அங்க போயிடறது போல இருக்கு. போனவாரம் நுவரேலிய டீ வந்திருக்கு .அட்டகாசமா இருக்கு வாசனையும் நிறமும்.SRILANKANS சாப்பிடறமாதிரி DASH OF LEMON AND KITHUL நன்னாவே இருந்தது. நம்ப ஊர் டார்ஜிலிங்க் டீன்னு ஒண்ணு வாங்கிண்டு வந்து சாப்பிட்டா... கடவுளே !! துக்கமா ஆக்கிடுத்துப்பா . கொடுக்காபுளி கொட்டை தோல் மாதிரி:(( இங்க டீயோ... டீ!! ரெட் புஷ் என்ன ஊலாங்க் என்ன ஜாஸ்மின் என்னனு . எத்தனை இருந்தாலும் நம்ப குட் ஓல்ட் டீ தனிதான்ம் இவர் ஸ்பைஸ் டீன்னா கஷாயம் வரதுன்னு ஓடுவார்!

  நேத்து luciano ல coffee கூர்க்/ கர்னாடகா காஃபியை நினைவு படுத்தினது

  ReplyDelete
 27. வாங்க தீக்ஷிதரே, காபி, டீயின் மணமும், சுவையும் உங்களைக் கூட இங்கே இழுத்துட்டு வந்திருக்கே! :)))))) அஸ்ஸாம் தேயிலை வடமாநிலங்களில் கிடைக்கும். கொஞ்சம் தரக் குறைவுதான் என்றாலும் இங்கே கிடைப்பதைவிடத் தரமாகவே இருக்கும். இலங்கைத் தேயிலையிலும் தேநீர் குடிச்சிருக்கோம். அப்படி ஒண்ணும் சுவை தெரியலை; கீழே ஜெயஸ்ரீயும் இலங்கைத் தேநீரை நல்லா இருக்குனு சொல்றாங்க.

  ReplyDelete
 28. வாங்க ஜெயஸ்ரீ, பாட்டு என்னமோ மறந்து போச்சு! :((( ஆனால் இப்போல்லாம் தேநீரோ, காபியோ வெளியே போனால் குடிப்பது ஒரு தண்டனையாகவே இருக்கு! கர்நாடகா காஃபி அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. கர்நாடகாவிலே கிட்டத்தட்டப் பதினைந்து நாட்கள் தங்கி இருந்து மங்களூர், உடுப்பி, முகாம்பிகா, சிருங்கேரி, ஹொரநாடு, போன்ற ஊர்களில் காஃபி குடிச்சுப் பார்த்துட்டோம்.

  முன்னெல்லாம் கும்பகோணம் டிக்ரி காஃபினு சொல்வாங்க. இப்போல்லாம் சிக்ரி காஃபியா ஆயிடுத்து அது. சகிக்கலை. நான் வெளியே போனால் பால் தான். அல்லது பால் சேர்க்காத சுக்கு, மல்லிக் காபி. சிலர் சுக்குமல்லிக் காபிக்கும் பால் சேர்க்கணும்னு பிடிவாதம். வேண்டாம்னுடுவேன். :)))))

  ReplyDelete
 29. உங்கள் பதிவுகள் - காஃபி (அ) டீ சாப்பிடுவது போல. நித்யமும் காஃபி, டீ போல உங்கள் பதிவுகளைப் பார்வையிடுகின்றோம். ஆகையினாலேயே, மறுமொழியிட்டோம். :)))))

  ReplyDelete
 30. நாங்களும் டீ சாப்பிட வந்துவிட்டோம்.

  ReplyDelete
 31. Tata டீ ஒரு ரகத்தில் 15 % leaf tea கலந்து கிடைக்கிறது. அது கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி நம் ஊரில் ஏற்றுமதி போக Dust Tea மட்டுமே டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறோம். இஞ்சி ஏலக்காய் கலந்து சமாளிக்க வேண்டியதுதான். என்ன கொஞ்சம் பாயசம் போலிருக்கும்.

  ReplyDelete
 32. வாங்க தீக்ஷிதரே, மறு வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. வாங்க மாதேவி, டீ பிடிச்சதா? :)))))

  ReplyDelete
 34. மோ.சி. பாலன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. டாடாவின் குறிப்பிட்ட அந்தத் தேயிலை தான் முந்தாநாள் வாங்கிட்டு வந்திருக்கோம். ஓரளவுக்கு க்ரானுல்ஸ் எனலாம். என்றாலும் டீயின் மணம்?????????? இஞ்சி, ஏலக்காய் போட்டாலும் தேநீரின் தனிப்பட்ட மணம் எங்கே?? தேடணும். :(((((((

  ReplyDelete
 35. மேடம் உங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன். வாய்ப்பிருந்தால் வருகை தரவும். நன்றி!

  www.blogintamil.blogspot.com

  ReplyDelete
 36. உலகின் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடான இந்தியாவில் இப்படி ஒரு தேயிலையானு தோணுது!

  ReplyDelete
 37. நன்றி துரை டேனியல், வலைச்சரத்தில் பார்த்தேன். உங்கள் அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 38. வாங்க ராஜராஜேஸ்வரி, பார்த்து ரொம்ப நாளாச்சு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete