எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 25, 2012

உபநயனம் என்றால் என்ன! 3


உபநயன ஸம்ஸ்காரம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல, என்பதைக் குறிக்கும் ஸ்லோகம் கீழே கொடுத்திருக்கிறேன்.

கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்

என்ற இந்த ஸ்லோகம் இது ராஜாக்களான க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் கூட இருந்ததைக் காட்டுகிறது.  ஆகவே உபநயனம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே என்றானது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஆகும். இந்த உபநயனத்தின் மூலம் குழந்தையை குருவிடம் சேர்ப்பித்துக் கல்வி கற்க ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கியமான சம்ஸ்காரமே உபநயனம் ஆகும்.  கல்விக்காக மாணவனைத் தயார் செய்யும் ஒரு சம்ஸ்காரம் என்றும் சொல்லலாம்.  இதற்கு அப்தோபதேசம் என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.

கல்வியே மாணவனுக்கு உள்ளத் தூய்மையை ஏற்படுத்தி உயர்ந்த சிந்தனைகள் தோன்றும்.  நல்லது, கெட்டதை ஆராயும் போக்கு உருவாகும். உண்மை எது, பொய் எது எனப் பிரித்துப் பார்க்கத் தெரியும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியாயும் அதே சமயம் ஆன்மிகத்திலும் ஈடுபடும்படியாகவும் செய்யக் கூடியது குருகுலக் கல்வி முறையே. இந்த குருகுலக் கல்வி முறையில் மாணவன் குருவிடம் தங்கி இருந்து அவரோடு ஒவ்வொரு நாட்களையும் கழித்து அவர் வாய் மூலமாகப் பாடங்களைக் கேட்டு மூளையில் பதிய வைத்துக்கொள்கிறான். வேதக்கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அவரவருக்கு எந்தக் கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தையும், அறிவையும் மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடிந்தது.  இதற்கு குருவின் அருகாமையிலேயே இருக்க வேண்டும்.

ஒவ்வொருத்தரும் அவரவருக்குத் தேவையானதைக் கற்க முடிந்த காலம் அது, அரசர்கள் ராஜ்ய பரிபாலனம் பற்றியும் வியாபாரிகள் வியாபாரம் குறித்தும், வீரர்கள் ஆயுதப் பயிற்சிகளும், பிராமணர்கள் வேதக்கல்வியோடு சேர்ந்து ஆயுதங்களைக் கையாளவும் தெரிந்து வைத்திருந்தார்கள்.  வழிவழியாக இவை எல்லாம் காப்பாற்றப்பட்டு ஒவ்வொருத்தரிடம் முறையாக ஒப்புவிக்கப் படுகிறது.  வாய்மொழியாகவே வேதம் எப்படிப் பரவி இருக்கிறது என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகையதோர் கல்விக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவதே உபநயன சம்ஸ்காரம்.  இப்போது உபநயனம் செய்யப்படும் வடுவிற்கு என்ன என்ன முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

முதலில் "வடு" என அழைக்கப்படும் சிறுவனை மங்கள நீராட்டுவார்கள்.  சின்னஞ்சிறு பாலகனை வடு என அழைப்பார்கள்.  மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர்.  குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேஹம் செய்வது போல் தலையில் விடுவார்கள்.  இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என ஐதீகம்.  இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும்.  உபநயனத்திற்குச் சிறுவனின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள்.  அதற்கு முதல்நாள் இந்த உதகசாந்தி நடைபெறும்.  மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தடுக்கும்.  மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும்.  பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள்.  இதற்கு ரக்ஷாபந்தனம் எனப் பெயர்.  இன்னல்களிலிருந்து காக்கும் ரக்ஷை அது.

அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது.  இதற்கு "நாந்தீ என்று பெயர்.  இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு.  முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது.  பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம்.  பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன்காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள்.  மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைக்கப் பட்டிருக்கும்.  ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர்.  ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது.  ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது.  இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.



தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

7 comments:

  1. மாசி மாசம் திருவண்ணாமலையில் ஒரு கனபாடிகளின் பையனுக்கு உபநயனம். காலையில் கிளம்பி போனோம். தி.மலையை நெருங்கும்போதே மேகங்கள் சூழ்வதை பார்த்தோம். உபநயன வீட்டுக்கு போய் சேரும் போது அப்போதுதான் உதக சாந்தி ஆரம்பித்து இருந்தார்கள். தூறல் ஆரம்பித்தது. சற்றைக்கெல்லாம் கன மழை. அது சீசனே இல்லை! அதனால் தட்டைப்பந்தல்தான் போட்டு இருந்தார்கள்! குடைகளை பிடித்துக்கொண்டு ஜபம் பூர்த்தி ஆயிற்று. மழை விட்டுவிட்டது!

    ReplyDelete
  2. சமீப காலத்தில் இப்படி சம்பிரதாயமாக உபநயன தாரணம் நடந்து நான் செல்லவில்லை! என்னைத்தான் அழைக்கவில்லையா, அல்லது யாரும் இப்படி இக்காலத்தில் செய்வதில்லையா, தெரியவில்லை!! :)))

    ReplyDelete
  3. எங்க வீட்டு உப நயனமும் சிறப்பாக நடந்தது.

    ReplyDelete
  4. வாங்க வா.தி. தகவல் பகிர்வுக்கு நன்றி. :))))

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், எங்க பையருக்குச் சிறப்பாக அனைத்து சம்பிரதாயங்களோடும் உபநயனம் செய்வித்தோம். நாந்தி அன்று வந்தவர்களுக்குத் தனி சமையல், சமையல்காரங்க எங்க வீட்டுக் கொல்லையிலேயே அடுப்புப் போட்டுச் செய்தார்கள். நானும் என் மாமியாரும் வைதீகர்கள் சாப்பாடு தயார் செய்தோம். அந்த இலைகளைக் கூட மத்தவங்க எடுக்கக் கூடாதுனு எங்க வீட்டு மனிதர்களே எடுத்தாங்க. அது ஒரு காலம். :)))))

    எந்தக் காலமானாலும் உதகசாந்தியும், நாந்தியும் செய்யாமல் பூணூல் இருந்திருக்காது. நீங்க முதல் நாள்போயிருக்க மாட்டீங்க; அதான் தெரியலை.

    என்னோட கல்யாண எபிசோட் படிச்சுப் பாருங்க. கல்யாணத்திலேயும் நாந்தி எங்களுக்கு இருதரப்பிலும் உண்டு. கல்யாணமும் நான்கு நாள் கல்யாணம். :)))))

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, நாந்தி பற்றிப்பதிவே போட்டிருந்தீங்களே? பார்த்தேன். வரவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. நல்ல விஷயங்கள். தெரியாத/புரியாத சில விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete