எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 06, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --9


வித்யாவின் கல்யாணம் நெருங்குவதால் ராதாவை உதவிக்கு அழைத்துப் போவதாக அகிலாண்டம் சந்துருவிடம் கூற அவளைத் தனியாக அனுப்ப மனமில்லாத சந்துரு தான் அழைத்து வருவதாய்க் கூறினான்.  ஆனால் அகிலாண்டம் திட்டமாக மறுத்துவிட்டாள். "அவ அம்மா, அப்பா தான் சண்டை போட்டுட்டுப் போயிட்டாங்க.  அதுக்காக பிள்ளைத் தாய்ச்சியை நாம விட்டுட முடியுமா?  நான் அழைச்சிட்டுப் போய் அவளுக்கு வாய்க்கும், வயித்துக்கும் வேண்டியதைக் கொடுக்கிறேன்." என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.  சந்துருவால் எதுவும் பேச முடியவில்லை.  ராதாவைக் கூடியவரையிலும் தனிமையில் அவன் சந்திக்க விடாமல் இந்த கர்ப்பத்தைக் காரணம் காட்டிக் காவல் காத்தாள் அகிலாண்டம். ஆனால் குழந்தை பிறக்கையில் என்ன செய்வது என்பதை இப்போதே யோசிக்க வேண்டுமே.  ராதாவே சொல்லுவது தான் சரி. நாம சொல்ல முடியாது என முடிவெடுத்தாள்.  ராதாவிடம் தனிமையில், "அவன் கோபப் படாமல் இந்தக் குழந்தையை ஏத்துக்கப் பண்ண வேண்டியது உன் பொறுப்பு." என்றும் கூறி இருந்தாள்.  வித்யாவின் கல்யாணம் நன்றாகவே நடந்தது.  அகிலாண்டம் எல்லாம் தன் பிள்ளை சந்துரு விருப்பப் பட்டுச் செய்வதாகவும், மாட்டுப் பெண்ணான ராதாவுக்கு அத்தனை இஷ்டமில்லை என்பது போலவும் எல்லார் முன்னாலும் பேசினாள்.

ராதாவின் அப்பா, அம்மா கல்யாணத்துக்கு வரவில்லை.  "அவங்க கோபம் இருக்கட்டும் ஒருபக்கம்; நாம சீமந்தம் செய்ய வேண்டாமா? எல்லாரும் வந்திருக்காங்க.  இதை ஒட்டிச் சீமந்தம் சிறப்பாச் செய்துடுவோம்; நாளெல்லாம் ஏற்கெனவே பார்த்துட்டேன்.  சீமந்த நாள் கிடைக்கிறது கஷ்டம்.  வளர்பிறையிலே தான் பண்ணணும்."  என்று அகிலாண்டம் நீட்டி முழக்கினாள்.  தாயையே கோபத்துடனும், வெறுப்புடனும் பார்த்தான் சந்துரு.  என்றாலும் பேச வழியில்லாமல் அவள் இஷ்டத்துக்கு ஆட வேண்டியதாகிவிட்டது. அவசரம் அவசரமாக ராதாவின் பெற்றோருக்குத் தொலைபேசியில் தகவல் சொல்லப் பட்டுவிட்டுச் சீமந்த ஏற்பாடுகள் நடந்தன.  அவர்களும் ஒரு காரை ஏற்பாடு பண்ணிக் கொண்டு இயன்றவரை சீர் வரிசைகளோடு வந்தார்கள்.  வந்தவர்களை அகிலாண்டம் மனமகிழ்ச்சியோடோ, சந்தோஷமாகவோ வரவேற்கவில்லை. வேண்டாவெறுப்பாகவே வரவேற்றாள்.  சீரைக் குற்றம் சொன்னாள்.  திடீர் ஏற்பாடினால் இவ்வளவு தான் முடிந்தது எனச் சொன்ன ராதாவின் பெற்றோரிடம் முகம் கொடுத்தே பேசவில்லை.  உண்மை நிலை தெரிந்திருந்ததால் ராதாவின் அம்மாவுக்குக் கோபம் வந்து பேச வாயெடுத்தபோது, ராதாவின் மெல்லிய கரம் அவளைத் தொட்டது.  திரும்பிப் பார்த்தவள் பெண்ணின் கண்களில் தெரிந்த வேண்டுகோளைக் கண்டதும் வாய் மூடி மெளனியானாள்.  சீமந்தம் முடிந்ததும் அன்றிரவு சாஸ்திர, சம்பிரதாயப் படி(எல்லாருக்கும் உண்டானு தெரியாது)  ராதாவையும், சந்துருவையும் அலங்கரிக்கப்பட்ட அறையில் தனியாகச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தது.  சந்துரு தனிமையில் வரப்போகும் ராதாவுக்குக் காத்திருந்தான். ராதாவும் வந்தாள்.

வந்தவளைக் கட்டி அணைத்தவண்ணம், "என்னை மன்னிச்சுடு ராதா;  மன்னிச்சுடு' நான் பாவி." எனத் தலையில் அடித்துக் கொண்டான்.  ராதா திகைத்தாள். "என்ன ஆச்சு இப்போ?  நமக்குத் தான் குழந்தை பிறக்கப் போறதே, இப்போப் பார்த்து இப்படி எல்லாம் சொல்லலாமா?" என்று கேட்க, உடனேயே  "எப்படி மறைக்கப் போறீங்க ரெண்டு பேரும் பிரசவத்தின் போது?" என்று கேட்டான் சந்துரு.  ராதா ஆடிப் போனாள்.  திகைப்பும், பயமும் கண்களில் தெரிய, "நீங்க... உங்களுக்கு,,,,,,,, நீங்க....." என்று தடுமாறினாள்.

"எனக்கு எப்படித் தெரியும் தானே?  நீயும் உன் அம்மாவும்,, உன் அம்மா ஊருக்குப் போறதுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்ததைப் பூராவும் கேட்டேன்." என்றவன்,"எல்லாம் என் தலை எழுத்து.  பொறுப்பில்லாத அம்மாவும், அப்பாவும். ஒண்ணு அம்மாவையாவது நம்மோடு கூட்டிக் கொண்டு போயிருக்கணும்.  இல்லைனா அப்பாவையாவது கூட்டிப் போயிருக்கணும்.  ஆனால் அவங்க கொஞ்சமாவது யோசிப்பாங்கனு நினைச்சேன்.  இவ்வளவு பேசற அம்மாவுக்கே புத்தி இல்லை.  என்னத்தைச் சொல்றது!' என்றான்.

பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராதா, "உங்க அம்மா உயரமாவும், மேல்வயிறாகவும் இருக்கிறதாலே வயிறு அதிகமாத் தெரியாதாம்.  அதோடு எப்போவுமே கொஞ்சம் மேடிட்ட வயிறு வேறே.  அதனால் சமாளிச்சுடுவாங்க.  பிரசவம் தான் நீங்க டூர் போவீங்களே அந்தச் சமயம் மருத்துவர் கிட்டேச் சொல்லிக் குழந்தையை எடுக்கச் சொல்லலாம்னு சொல்லிட்டு இருக்காங்க.  அப்போ சரியான நாளா இருக்கணும்;  அதோட அவங்க உடம்பு தாங்கணும்; வயசாச்சு இல்லையா? அதான் எனக்குக் கவலை.' படபடவெனப் பேசிய ராதாவையே பார்த்த சந்துரு, "உனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லையா?" என்றான்.

"என்னங்க செய்யமுடியும்?  அவங்க நிலையை மருத்துவர் என் கிட்டே எடுத்துச் சொல்லிட்டார்.  இப்போ அவங்களுக்கு ஆதரவு தான் தேவை.  அதை நாம தான் கொடுக்கணும்.  நீங்க தெரிஞ்சதாக் காட்டிக் கொண்டால், நான் தான் சொல்லிட்டேன்னு நினைப்பாங்க. " என்றாள் யோசனையுடன்.  "இல்லை, மருத்துவரே என்னை அழைத்து அறிவுரை சொன்னாள்." எனச் சொல்லி விடுகிறேன். ஒருத்தரும் இல்லாமல் தன்னந்தனியாக உன்னால் எப்படிப் பிரசவத்துக்கெல்லாம் துணை இருக்க முடியும்.  சரி நடக்கட்டும்; பார்த்துக்கொள்ளலாம்.  நாம இப்போது தூங்கலாம். பாவம், வேலை செய்து களைத்துப் போயிருக்கே.  நிம்மதியாத் தூங்கு." என்றான்.

8 comments:

  1. இது திடீர் திருப்பமாக இருக்கே? சுவாரசியம்தான்

    ReplyDelete
  2. அகிலாண்டம் அம்மாவுக்கு 'மாமியார் திலகம்' மகுடம் சூட்ட நாள் குறித்தாயிற்று போலிருக்கு :))

    ReplyDelete
  3. பாட்டியை கண்டு ரொம்ப நாளாச்சேன்னு எட்டி பார்த்தா கன்னாபின்னான்னு தலைவலியா இருக்கே!!!!! காணாமல் போன நண்பர்கள் குழாம் பதிவுக்கு மேலும் கன்னாபின்னாவென கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

    ஜாகை எங்கே ஸ்ரீரங்கத்தில்? அங்கே தான் பாட்டி (சொந்த பாட்டி, உங்களை சொல்லலே :D) பெரியம்மா, அத்தை இன்ன பிற கூட்டம் இருக்கிறது. இந்தியா வந்தால்(!) ஸ்ரீரங்கம் வந்தால்(!!) ஒரு நாளைக்கு மேல் இருந்தால்(!!!), இன்னொரு போண்டா மீட் போடுவோம்!


    இந்த தொடர்கதை படிச்சதும், நீங்க சொல்ற‌ காணாமல் போன நண்பர் குழாம் சேர்ந்து ஒரு கதையை நாசம் பண்ணினோமே அது நினைவுக்கு வருது.. ஏன் ட்விஸ்டுங்கற பேர்லே இப்படி ஒரு கொலவெறி!!!!!! நடத்துங்கோ! :)

    ReplyDelete
  4. வாங்க லக்ஷ்மி, ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாங்க ஜீவி சார், நான் என்னமோ வித்தியாசமான கற்பனை செய்ததாக நினைச்சேன். ஆனால் இப்படியும் இருப்பாங்க போல! :((((

    ReplyDelete
  6. வாங்க தங்கச்சிக்கா, கொ/பா., நீண்ட நாள் கழிச்சு வந்ததுக்கு முதல்லே நன்னி ஹை!! ஹாஹா, ஜாகை எங்கேயா? சொல்ல முடியாதே~ ஸ்ரீரங்கத்திலே இருக்கேன், அம்புடுதேன்! :P:P:P:P

    ReplyDelete
  7. //நீங்க சொல்ற‌ காணாமல் போன நண்பர் குழாம் சேர்ந்து ஒரு கதையை நாசம் பண்ணினோமே அது நினைவுக்கு வருது.//

    நீங்கல்லாம் சேர்ந்து உருப்படியா எழுதினாத் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். :P:P:P

    ReplyDelete
  8. இவள் தாயே அல்ல போலும்! பேய்! நாய் என்று சொல்ல மனம் வரவில்லை! மேல் வயிறு தெரியாது... இது சரியா என்று தெரியவில்லை. நீங்கள் சொல்லும் சம்பிரதாயங்கள் எங்கள் வீடுகளிலும் உண்டு!!

    ReplyDelete