எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 29, 2013

ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!

பருப்புத் தேங்காய் பற்றிச் சொல்கையில் ஒரு விஷயத்தை விட்டுட்டேன்.  திருநெல்வேலிக்காரர்கள் பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்க மாட்டார்கள். பருப்புத் தேங்காய் செய்முறையும் தனியாக இருக்கும். அரிசி மாவு, உளுத்தமாவு, கடலைமாவு சேர்த்துக் கொஞ்சம் கனமான இழைகள் கொண்ட தேன்குழல்கள் செய்து, அதை வெல்லப் பாகில் சேர்ப்பார்கள்.  இது ஒரு பித்தளையில் ஆன அரை அடுக்கு நிறையச் செய்து வைத்து அதன் நடுவில் சின்னதாகக் கூம்பு போல் பருப்புத் தேங்காய் 2 பிடித்து வைப்பார்கள்.  முழு அடுக்கில் கிட்டத்தட்ட அப்போதைய ஒரு மூட்டை அரிசியை வடிக்கலாம் எனில் அரை அடுக்கில் அதில் பாதி வடிக்கலாம்.  அப்போ பருப்புத் தேங்காய் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
முன்னெல்லாம் ஒரு மூட்டை அரிசிக்கு பக்காப்படி ஐம்பது படி இருக்கும்.  இப்போ மூட்டைனு தருவது பத்து கிலோ, பதினைந்து கிலோ, இருபது, இருபத்தைந்து கிலோ பைகள்.  ஆகவே உங்கள் கணக்குப் பழைய முறையில் போடும் கணக்காக இருக்க வேண்டும். :)))) அதோடு பருப்புத் தேங்காய் வகைகளில் பூந்திப் பருப்புத் தேங்காயை மறந்துட்டேன். :))))

ஆச்சு, பக்ஷண வேலை முடிஞ்சாச்சு;  வடாம், வற்றல் போட்டாச்சு, துணி, மணி எடுத்துத் தைக்கக் கொடுத்தாச்சு.  எல்லாம் செய்த நாம் முக்கியமானதை விட்டுட்டோமோ?  இல்லை; அதெல்லாம் விடலை. என்னனு கேட்கறீங்களா?  அதான் சமையலுக்கு ஆள் போடுவது!  கல்யாணம் நிச்சயம் ஆனதுமே இப்போல்லாம் காடரிங் கான்ட்ராக்டரைப் பார்த்தாகணும்.  பல பெரிய கான்ட்ராக்டர்கள் சத்திரங்களில் திருமண முஹூர்த்தத் தேதிகளுக்கு முன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுகின்றனர்.  நாம் கூப்பிடும் கான்ட்ராக்டர் அப்படிச் சத்திரங்களில் முன் பதிவு செய்தவராக இருந்தால் அவரே சத்திரத்துக்கும் சேர்த்து நம்மிடம் பேசிவிடுவார். இல்லை எனில் சத்திரக்காரர்களை நம்மைச் சந்தித்துப் பேசச் சொல்லுவார்.  கல்யாணத் தேதி உறுதி செய்துவிட்டுச் சத்திரத்துக்கு அலையும் மக்கள் இப்படி ஒரு வசதியா என நினைத்துக் கொண்டு ஒத்துக்கொள்வார்கள்.  1996-ஆம் வருடம் நடந்த எங்கள் உறவினர் கல்யாணத்தில் அம்மாதிரி நடந்தது.  நல்லவேளையாகச் சத்திரம் நிறைய அறைகளோடு இருந்தாலும், சமையல், சாப்பாடு சோபிக்கவில்லை என்பதோடு சரியாகக் கவனிக்கவும் இல்லை. ஜூலை மாதம் கல்யாணம் நிச்சயம் செய்த பின்னர் செப்டம்பர் மாதத் தேதிகளில் சத்திரம் கிடைக்காமல், அக்டோபரில் சத்திரம் கிடைத்த முஹூர்த்தத் தேதிக்குக் கல்யாணம் மாற்றப் பட்டது.

பார்க்க இது வசதியாகத் தோன்றினாலும் சத்திரத்து நிர்வாகிகளுக்கும், சமையல் கான்ட்ராக்டர்களுக்கும் இடையில் எழுதப் படாத ஒப்பந்தம் இருக்கிறது. இப்போதெல்லாம் சத்திரங்கள் அடுத்த ஜனவரி 2014 முஹூர்த்தங்களையும் தாண்டி முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அதோடு வாடகையும் அதிகம்.  மதுரையில் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் மங்கள நிவாஸில் திருமணம் நடத்த முதலில் பணம் வாங்கவில்லை.  வாங்க ஆரம்பித்த பின்னரும் குறைந்த தொகையே வாங்கினார்ர்கள்.  ஆனாலும் யாரும் அங்கே கல்யாணம் செய்ய முன்பதிவு செய்யமாட்டார்கள். அக்கம்பக்கத்து வீடுகளை இணைத்து வாசலில் பெரிய பந்தல் போட்டு மணல் பரப்பி மேடை அமைத்துக் கல்யாணம் செய்துவிடுவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் மனிதர்கள் அந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள்.

இப்போதும் சமையல் காடரிங் ஆட்களிடம் விடாமல் சொந்தமாக சாமான்களை வாங்கிக் கொடுத்துச் சில கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சாமான்களை நாமே சமையல்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.  அதற்கெனத் தனியாகப் பொறுப்பான ஒருத்தரை நியமிப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் இந்த அறையை உக்கிராணம் என்றே அழைப்பார்கள்.  பல கல்யாணங்களிலும் இந்த உக்கிராணம் பார்க்க சமையல்காரர்களே தங்களுள் ஒருத்தரை நியமிக்கச் சொல்வார்கள்.  இதை ஏற்காமல் வீட்டு மனிதரில் நெருங்கிய ஒருவரைச் சொல்வதும் உண்டு.  இம்முறையில் பின்னால் மிஞ்சும் மளிகை சாமான்களில் பிரிக்காதவற்றை நாம் வாங்கிய கடையிலேயே கொடுத்துவிடலாம். வீணாகும் பொருட்களான காய்கள், பழங்கள், வாழை இலை போன்றவை அக்கம்பக்கம் பகிர்ந்து கொடுத்தும் சில நாட்களுக்கு வரும். பிரித்த மளிகை சாமான்கள் வீட்டு உபயோகத்துக்கு வந்துவிடும்.  அவை குறைந்தது இரண்டு மாதங்களாவது ஓட்டும்படியாகவே இருக்கும்.

கல்யாணச் செலவில் தடுமாறி இருக்கும் குடும்பங்கள் இம்முறையில் ஓரிரு மாதங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும்.  விறகிலிருந்து வாங்கிப்போடுவார்கள். இப்போது சாதாரணமாக ஒரு இனிப்பு, வடை, பாயசம், வறுவல், அப்பளம், ஒரு கறி, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், மோர்,சாதம், பருப்பு, ஊறுகாய் என்ற குறைந்த பக்ஷத் திட்டத்துக்கே ஒரு இலைக்கு நூற்றைம்பதில் இருந்து இருநூறு வரை, நாம் அழைக்கும் கான்ட்ராக்டரின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்திருக்கின்றனர். நாம் சாமான் வாங்கிச் செய்தால் இதில் பாதிப் பணம் கூட ஆகாது.  ஆனால் மேற்பார்வைக்குச் சரியான ஆட்கள் இருக்க வேண்டும். கல்யாணத்தன்றோ அல்லது முதல்நாளோ வைக்கும் ரிசப்ஷனில் போடப் படும் ஸ்பெஷல் சாப்பாடு, நாம் தேர்ந்தெடுக்கும் மெனுவைப் பொறுத்துக் குறைந்த பக்ஷம் முன்னூறு ரூபாயிலிருந்து இன்னும் மேலே தான் போகிறது.  அதோடு சில குறிப்பிட்ட சமையல் கான்ட்ராக்டர்கள் ரிசப்ஷனுக்கு வருபவர்களுக்கு உபசாரம் செய்ய எனத் தனியாகச் சில பெண்களை அழைத்து வருவார்கள்.


அவர்கள் மருதாணி எனப்படும் மெஹந்தி இடுவது, வளையல் கொடுப்பது போன்றவற்றைப் பார்க்கின்றனர்.



 இன்னொரு பக்கம் பழங்களைப் பிழிந்து எடுக்கும் ஜூஸ் ஸ்டால்கள் இவர்களின் கவனிப்பில் இருக்கும்.


குழந்தைகளைக் கவர பஃபூன்கள், அல்லது டெடி, மிக்கி மவுஸ் முகமூடியில் ஆட்கள்,




 பஞ்சு மிட்டாய், பீடா ஸ்டால், இது தவிர காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஸ்டால்,



இன்னொரு பக்கம் சாட் ஐட்டங்கள் உள்ள ஸ்டால், சமோசா அல்லது புதினா வடை, பாதாம், முந்திரிப் பருப்பு வகைகள் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வருவார்கள்.  பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு ஐடமாக வரும்.  இந்த வட இந்தியக் கலாசாரம் எப்போ தமிழ்நாட்டுக்கு வந்ததுனு புரியலை.  கிட்டத்தட்டப் பத்துவருடங்கள் வட இந்தியாவில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் கல்யாணங்களில் கலந்து கொள்ளும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது எங்களுக்கு.


அதோடு பெண், பிள்ளை உடை அணியும் முறையும் வட இந்தியக் கலாசாரத்தில் தான். ஆனால் ஹிந்தியை மட்டும் வெறுப்போம்.  ஹிந்தி அரக்கினு பட்டமெல்லாம் கொடுப்போம்.  சாப்பாட்டில் வட இந்திய சாட் உணவு வகைகளும், மேல்நாட்டு பிட்சாவும், பர்கரும் தான் முதலிடம் பெறுகிறது.  இப்படியான சாட் வகைகளுக்கு என்றும் ஒரு ஸ்டால் இருக்கும்.  அங்கே பேல் பூரி, பானி பூரி,  வகைகள் இடம் பெறும்.  இது எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு அதுக்கப்புறமா வரிசையிலே நின்னு பெண், மாப்பிள்ளைக்குப் பரிசு கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போனால் சாப்பாடே இறங்காது.  ஏற்கெனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்கும்.  இலையில் உட்கார்ந்துட்டு எழுந்துக்க வேண்டியது தான்.   ஏற்கெனவே நிறைஞ்ச வயித்திலே எதைப் போடமுடியும். ஆக மொத்தம் கொஞ்சம், கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வருபவர்களே அதிகம்.  ஆனால் அதில் இடம் பெறும் உணவு வகைகள் நாற்பதுக்குக் குறையாது.  மெனு அடுத்த பதிவில் இடம் பெறும்.

Wednesday, June 26, 2013

சீர் கொண்டு வா வெண்மேகமே

பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா வகுப்பினரும் செய்கின்றனர்.  பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத் தேங்காய் என்பது முக்கியம்.  வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும் கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன.  பார்க்க படம்.






இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய் செய்வார்கள்.  அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப் படும்.  இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர் மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப் பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப்  பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம்.  முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன்.  வீட்டுக்கு வந்ததும் தான் தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும்.  முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும் முக்கியமானவை.

இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும்.  இதற்கு மேலும் பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.  பொதுவாக மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம்  பெற்று வந்தது.  இப்போதெல்லாம் யாரும் அதைச் சீண்டுவதில்லை.  இது காடரிங்காரங்க  மூலம் ஒப்பந்த அடிப்படையில் பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல்.  முன்னெல்லாம் வீடுகளிலேயே செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும் வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள்.  சமையல் நம் பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும் ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும்.  கல்யாணம் முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள்.  ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  இது அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம்.  பல கல்யாணங்கள் இப்படி வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை, பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு என்கிறார்கள்.  இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள் மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை.




வெறும் பருப்புத் தேங்காயும், மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும்.  வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும்.  மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள்.  ஆனால் தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார்.

மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண் செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி செய்வதாகக் கூறுகின்றனர்.  பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும், பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர்.  எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான் சொல்வார்கள்.  பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம் தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை.  நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும் சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் நடந்துவிடும்.  சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ, பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது.  எல்லாத்துக்கும் உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள்.

ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள்.  முன்பெல்லாம் கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து, பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக் கொண்டாடினார்கள். இது மிகப் புதுமையாக இருந்தது.  பல நிச்சயதார்த்தங்கள் சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப் பார்க்கவில்லை.  காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை.  அதனால் படங்கள் பகிர முடியவில்லை.  சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சென்றிருந்தேன்.  சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.  வைதிக முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச் சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது.  அணைக்க வேண்டுமா?

Monday, June 24, 2013

கண்ணன் துணை இருப்பான்! சந்தோஷமான செய்தி!


ஒரு பத்துநாட்களாகவேக் கடுமையான உழைப்பு. :))) கண்ணன் கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.  பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன் சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.  ஆகவே குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரிட் அவுட் எடுத்துக் கொண்டு எதுக்குத் தொந்திரவு?  பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு!  போடலாம் தான்.  அது தெரியும்.  ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க.  அதைப் பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம்.  ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.

எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு.  அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங் தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது.  கூடியவரை எல்லாத்தையும் சரி பண்ணினேன்.  பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய், ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும்.  வியாழனன்று பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால் அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார்.  பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங் செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம்.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம்.  அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி நேரம்.  ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனின் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில் இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால்.  டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார்.  பின்னர் அவரே வெளியே வந்து காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக் கவனித்துவிட்டு எங்களை அழைத்தார்.  கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம்.  படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய் மூலம் சொல்லணும்னு இருந்தோம்.

 பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும் அவங்களுக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம் வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது.  மேலும் இப்போது முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள் வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார்.  இனி எல்லாம் கண்ணன் கையில்.  அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ் அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம்.  அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ கணினியோ, மடிக்கணினியோ இல்லை.  ப்ரின்டிங் செக்‌ஷனில் மட்டும் இருக்குமோ என்னமோ!  நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை.  போட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி இருப்பாரே! :))))

போகப் போகத் தெரியும்.  கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.  இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது.  அவருடைய தூண்டுதல் இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே.  அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார்.  மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று.

பி.கு: நேற்றைய பல்லவனில் கிளம்பி நேற்றிரவு ஒன்பதேகாலுக்கு வீட்டுக்கு வந்தாச்சு. சென்னை ரசிகர்களுக்கு என் வரவைக் குறித்து முன் கூட்டித் தெரிவிச்சால் கூட்டம் கூடும் என்பதால் தெரிவிக்கவில்லை. :))))))

Friday, June 21, 2013

காதல் என்பது எது வரை! கல்யாண காலம் வரும் வரை!


சூரி சார் தன்னோட பதிவிலே பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் ஆசை வருதுனு ஒருத்தன் புலம்புவதைப்  பத்திச் சொல்லி இருக்கார்.  அப்படிப் பார்க்கிற பொண்ணுங்க எல்லார் கிட்டேயும் வழியறதுக்குப் பேர் காதலா? எப்போதுமே எதிர் எதிர் பாலினங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தான். ஆனால் அது எல்லாரிடமும் ஏற்பட்டால் அதன் பெயர் காதலே அல்ல. சில ஆண்கள் ஒருதலைப் பக்ஷமாக ஒரு பெண்ணைப் பார்த்து மனம் பறி கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு சென்று தங்கள் காதலைச் சொல்லி அவளையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  நம் தமிழ்த் திரைப்படக் காதல்கள் பெரும்பாலானவை இப்படியானதே. அதோடு இல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய், அந்தப் பெண்ணிடம், "என்னை விட்டா வேறே யாரு உன்னைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ வரப் போறாங்க!" என்று மறைமுகமாக மிரட்டுவதும் உண்டு.  பயத்திலே வருவதற்குப் பெயர் காதலா என்ன?  காதலனை நினைக்கையிலேயே காதலியின் மனம் மலர்ந்து போவது அவள் முகத்திலும், கண்களிலும் தெரியும்;  தெரிய வேண்டும்.  காதல் என்றால் உள்ளங்கள் தான் முதலில் பேசிக்கணும்.  உள்ளங்கள் ஒன்றுபட்டது கண் வழியே ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுப்பாங்க.  அதுக்கப்புறமாத் தான்  நேரிலே சொல்றது எல்லாமும் நடக்கும்.  அப்போவும் உடனடியாகச் சொல்பவர்கள் இருக்க மாட்டாங்க.  தயங்கித் தயங்கி சொன்னால் தப்பாய் எடுத்துப்பாங்களோனு நினைப்பாங்க.

ஒருத்தருக்கொருத்தர் அசடு வழிஞ்சு சிரிச்சுப்பாங்க.  அவங்களையும் மீறி ஒரு நாள் உண்மை வெளிவரும்.  வரணும். அது வரைக்கும் ஏதோ சாதாரணமாப் பார்க்கிறது மாதிரி நினைச்சுட்டு, பேசிட்டு இருப்பாங்க. ஆனால் கண்கள் வழி உள்ளம் பேசிக்கிட்டு இருக்கும்.  இது எல்லாரிடமும் ஏற்படக் கூடிய ஒன்றல்ல.  தினம் தினம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.  ஆனால் காதல் என்பது ஒருத்தரிடம் தான் வரும். ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருத்தர் பார்க்கிறச்சே எல்லாரையும் பார்க்கிற மாதிரித் தான் பார்ப்பாங்க.  ஆனால் குறிப்பாக ஒருத்தரிடம் மட்டுமே மனம் திறக்கும்.  இது ஒரே சமயம் இருவரிடமும் நடக்கணும். இரண்டு பேருக்கும் இந்த உணர்வு தோணணும். சினிமாவிலே எல்லாம் வர மாதிரி துரத்தித் துரத்திக் காதல் வராது.  அதிலும் உண்மையான காதல் அப்படி எல்லாம் வராது.  வந்தால் அது தூண்டிவிட்டதுனு தான் சொல்ல முடியும். 

பூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும். காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும்.  மலர்ந்து மணம் பரப்பியதும் அந்த சுகந்தத்தில் உலகமே தெரியாது. ஆனால் ஒண்ணு, காதல் எல்லாமே வெற்றியில் முடியறதில்லை.  தோல்வியும் கிட்டலாம். எது வந்தாலும் தாங்கிக்கும் மனோபாவம் வரணும்.  பழி வாங்கக் கூடாது.  இப்போதெல்லாம் ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் துரத்தும் ஆண்கள் அந்தப் பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றிக் கொலை செய்கின்றனர்.  இப்படி நமக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது காதலே இல்லை. அன்பு அதுவும் உண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது.  ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும்.  மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும்.  தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது. 

அதோடு இன்னொன்று. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிச்சயமாய் வித்தியாசம் உண்டு.  காதலில் பல விஷயங்களை நாம் நம் அறிவுக் கண் கொண்டு பார்க்க மாட்டோம்.  பல குறைகள் தெரிய வராது.  அதே காதலர்களுக்குத் திருமணம் ஆன பின்னால் குறைகள் பூதாகாரமாகத் தெரிய வரும்.  பலவீனங்கள் அனைவருக்கும் உண்டு.  குறைகள் இல்லாத மனிதரும் இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்கும் மனம் வேண்டும்.

Saturday, June 15, 2013

நான் எழுதியது கடிதம் அல்ல!!! உள்ளம்! :))))))

காதல் கடிதம் எழுதும் போட்டி அறிவிச்சிருக்காங்க.  வல்லி வெளுத்துக் கட்டறாங்க.  நமக்குக் காதல் கடிதம் எல்லாம் எழுத வராது.  ஆனாலும் நான் முதன் முதலா என் கணவருக்கு எழுதின கடிதம் ஓரளவு நினைவிலிருந்து இங்கே கொடுக்கிறேன்.  அதுக்கு அவர் கொடுத்த பதிலும், போஸ்ட் கார்டில் ஒரே பக்கம், {க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,} அதையும் ஓரளவுக்கு நினைவிலிருந்து தரேன்.  என்ன, கொஞ்சம் வார்த்தைகள் மாறி இருக்கலாம்.


//அன்புள்ள

நமஸ்காரங்கள். உங்களை எப்படி அழைப்பதுனு தெரியவில்லை;  அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.  இங்கே நீங்கள் ஊருக்குப் போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.  கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலே என்னையும் கூட்டிக் கொண்டு போவீங்கனு நினைச்ச சமயத்திலே நீங்க மட்டும் தனியாப் போக நேர்ந்தது வருத்தமாவும் இருக்கு.  இங்கே வேறு யாரோடும் மனம் விட்டுப் பேச முடியலை.  நான் பேசுவது அவங்களுக்கு எல்லாம் பிடிக்குமானும் தெரியலை.  நிறைய வித்தியாசங்கள் இருக்கு! இங்கே எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்றதொரு வெறுமை என் உள்ளத்தில் ஏற்படுகிறது.

நீங்கள் எப்போது புனாவிலிருந்து வருவீர்கள்?? தீபாவளிக்குக் கூட வரமாட்டீர்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, உண்மையா? அப்போ இனி உங்களைப் பார்ப்பது எப்போது? கொஞ்ச நாட்கள் எங்க அம்மா வீட்டில் இருந்துவிட்டு வரட்டுமா? வேலைக்கு ஆர்டர் வந்திருக்குனு அப்பா எழுதி இருந்தார்.  அங்கே போய் வேலையில் சேர்ந்துடவா? நீங்கள் போகும்போது என்னையும் அழைத்துப் போயிருக்கலாம்.  விட்டுட்டுப்போயிட்டீங்க. எனக்கு இப்போ உடனே அங்கே பறந்து வந்துடணும் போல இருக்கு.  என்ன செய்யறதுனு புரியலை. மனம் கிடந்து தவிக்கிறது. தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனைப் போல் தவிக்கிறேன். //

கிட்டத்தட்ட இப்படி ஒரு கடிதம் இன்னும் ருசிகரமாக, உணர்ச்சிகரமாகவும் எழுதி நம்ம ரங்க்ஸுக்கு அனுப்பி வைச்சேன்.  முதல் லெட்டர்.  அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன்.  பதில் என்ன வந்தது தெரியுமா?  போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,

செள.கீதாவுக்கு,

அநேக ஆசிகள்.  இப்பவும் உன் கடிதம் கிடைத்தது.  ரொம்ப நன்றாகத் தமிழ் எழுதுகிறாய்.  கதை படிப்பது போல் இருந்தது.  அடிக்கடி எழுதிப் பழகு. அவ்விடம் அப்பா, அம்மா, ராஜி, ஶ்ரீதர், கணேஷ் செளக்கியமா?  எனக்குச் சென்னை மாற்றலாகி விட்டது.  இன்னும் ஒரு வாரத்தில் ரிலீவ் செய்வார்கள்.  அங்கே வந்ததும் மெட்ராஸில் குடித்தனம் வைக்க வீடு பார்த்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்து உங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போக உத்தேசம்.  மற்றவை நேரில்.  வேணும் ஆசீர்வாதம்

சாம்பசிவம்.

பி.கு.:--ஆடிட் ரிப்போர்ட் தான் பக்கம் பக்கமாக எழுதுவார். :P :P :P :P  வல்லி ருக்மிணியோட கடிதத்தைப் போட்டிருக்காங்க போல.  போய்ப் படிக்கணும். :)))))

Thursday, June 13, 2013

நான் நலமே, நீங்கள் நலமா?

நேற்றுக் கோவை செல்ல நேர்ந்துவிட்டது.  ஒரு வாரமாக டிக்கெட்டுக்கு முயன்றுவிட்டு நேத்துத் தான் போக மட்டும் கிடைத்தது.  சந்திக்க வேண்டியவங்களை இன்னிக்குச் சந்திச்சதும் உடனே திரும்பியாச்சு.  பேருந்துப் பயணம் என்பதால் கொஞ்சம் அலுப்பு, கால் வலி, வீக்கம் எல்லாம். மற்றவை பின்னர்.

Saturday, June 08, 2013

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!

ப்யூட்டி பார்லர் விஷயத்தில் பலரும் ஆமோதித்தாலும் பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பதிவில் பகிரவில்லை எனினும் குழுமங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. கலாசார மாற்றங்கள் தேவையே என்றாலும் ஒட்டுமொத்தமாக நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் சரியல்ல.  இதில் சிலர் இப்போது லிவிங் டுகெதர் வந்திருக்கிறதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம்  தொலைக் காட்சி தயவு! ஆனால் சிலர் நான் சொல்வது சரியே என்றும் சொல்கின்றனர்.  பேச்சு வார்த்தையில் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு பெண் தற்கொலையே செய்து கொண்டதாகச் சொல்கிறார் நண்பர் ஒருத்தர்.  பெண்கள் இத்தனை கோழைகளாகவும்  இருக்கக் கூடாது.  எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். கல்யாணம் என்பதை இருவர் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்ற எண்ணமே இன்றைய  இளம் சமுதாயத்திடம் காணப்படுகிறது.  மேலும் கற்பனைகளும் பலவாறு உள்ளன.  அது எல்லாம் முடிந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்து உண்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது.

ஆகவே பெண், பிள்ளை இருவருமே தக்க அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. விருப்பு, வெறுப்புக்கள் நிச்சயமாக மாறுபடும்.  குறைகள் இருபக்கமும் இருக்கும்.  குறைகளைப் பாராட்டாமல் பொதுவான நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒத்துப் போகும் விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். பொதுவாக மருத்துவர்களில் இருந்து அனுபவம் வாய்ந்த அனைவரும் கூறுவது என்னவெனில் எல்லாவற்றையும் முதலிலேயே பேசி முடித்துவிட்டால் அப்புறம்பேச ஒன்றும் இருக்காது என்பதோடு ஆர்வமும் குறைந்துவிடும் என்பதே. மேலும் பேசிப் பழகிய ஒருவர் சொல்வது என்னவென்றால், என்னதான் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப் பழகினாலும் வாழ்க்கை என்று வாழப்போனபோது நிறைய வித்தியாசங்கள், மாறுபாடுகள் இருக்கத் தான் செய்தன என்பதே. என்னைப் பொறுத்த வரையில் இது எல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சிறு வயசில் இருந்தே கொண்டு வரும் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றது. பல பெண்கள் இப்போது திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதை எல்லாம் மீறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  சரி, இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

*********************************************************************************

கல்யாணத்துக்கான சாமான்கள் தயார் செய்யணும்.  இவற்றில் வற்றல், வடாம், அப்பளம் போன்றவையும் அடங்கும்.  முன்னாட்களில் எல்லாம் இவற்றை வீடுகளில் போட்டுக் கொடுப்பார்கள்.  நிறையச் செய்ய வேண்டிய காலங்களில் அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து உதவுவார்கள்.  உடல் சிரமத்தை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் அது. அப்பளம் இடுகையில் பாடுவதற்கெனச் சில பாட்டுக்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது லலிதாம்பாள் சோபனம்.  சகோதரி சுப்புலக்ஷ்மியால் தொகுக்கப் பட்ட இதைப் பாடிக்கொண்டே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை செய்வார்களாம்.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு காரியத்தைச் செய்கையில் நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும் என்பதே.  உணவு தயார் செய்பவர்களும் நல்லதையே நினைக்க வேண்டும். அப்பளம், வற்றல்கள், வடாம்கள் எல்லாம் போடுவது கல்யாணச் சீரில் வைக்க மட்டுமின்றி விருந்தினருக்குப் பரிமாறவும் தேவைப் படும் ஒன்றாகவும் இருக்கும்.

இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்களே இந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லாருமே சரியாகக் கொடுப்பதாகச் சொல்ல முடியவில்லை.  ஆங்காங்கே இவர்களிலும் சிலர் கேட்டால் சரியாகக் கொடுப்பது என வைத்திருக்கின்றனர். சிலர் கேட்டாலும் இவ்வளவு தான் இந்த ரேட்டுக்கு எனச் சொல்வது என வைத்திருக்கின்றனர்.  மேலும் கல்யாணத்தில் பக்ஷணங்கள் செய்வது என்றொரு வழக்கம் உண்டு.  பெண் வீட்டிலேயே செய்யப்படும் இந்த பக்ஷணங்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்துச் செய்ய ஆரம்பிக்கப் படும்.  பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வார்கள்.  குல தெய்வப் பிரார்த்தனைகளும் உண்டு.  கல்யாணப் பத்திரிகை அடித்து வந்ததுமே பிள்ளையாருக்கு முதல் பத்திரிகை வைத்துவிட்டுப் பெண்ணை/பிள்ளையை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோயிலில் சென்று பத்திரிகைகளை வைத்து வணங்கிப் பின்னர் விநியோகம் ஆரம்பிப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யப் படும்.

அதே போல் பக்ஷணங்கள் தயார் செய்யவும் நாள் பார்த்து அன்று  மர உரல், அல்லது கல் உரலை அலம்பிச் சந்தனம், குங்குமம் வைத்து, உலக்கைக்கும் சந்தனம், குங்குமம் வைத்து உரலில் முதலில் நல்ல காய்ந்த மஞ்சளைப் போட்டுப் பொடியாக இடிப்பார்கள்.  இதுக்கு மஞ்சள் இடிக்கிறது என்று சொல்வதுண்டு.  ஐந்து, ஏழு, ஒன்பது என எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகளைக் கூப்பிட்டு இடிக்கச் சொல்வார்கள்.  அதன் பின்னரே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்.  இப்போதெல்லாம் காடரிங் கான்ட்ராக்டர்களே செய்வதால் அவங்க என்னிக்கு, எப்படிச் செய்யறாங்கனு எல்லாம் சொல்ல முடிவதில்லை.  பல கல்யாணங்களையும் ஒத்துக் கொள்வதால் ஒரு தொழிற்சாலை போல் ஒரு பக்கம் முறுக்குகள் சுத்தியவண்ணமாகவும், லட்டுகள் பிடித்த வண்ணமாகவும் இருக்கும் என்கின்றனர்.  ஒருமுறையாவது நேரில் போய்ப் பார்க்கணும்னு வைச்சிருக்கேன்.  எப்போ முடியும்னு தெரியலை.

நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான்.  எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.

Tuesday, June 04, 2013

கண்ணன் தடையின்றி வருவான்!

http://kannanvaruvan.blogspot.in/2013/06/blog-post.html


கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் நம நமவென இருந்தது.  எல்லாம் காப்பிரைட் குறித்தே.  ஏப்ரலில் வந்த சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன் மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும் என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன்.  காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத் தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார்.  தமிழில் பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு திரு ராமசாமி சொல்கிறார்.  அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு அநுமதி தரோம்னு சொல்றார்.  மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே எனக்கு சந்தோஷமான விஷயம்.  மற்றவை போகப் போக.  மொழி பெயர்த்ததை அவங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார்.  அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு. செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன்.   நேரிலேயும் வந்து பார்க்கச் சொல்கிறார்.  போகணும்.  கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன்.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

சத்திரம் பார்த்து ஏற்பாடு பண்ணியாச்சு அல்லது வீட்டில்கல்யாணம் நடத்த ஏற்பாடு பண்ணியாச்சு.  முக்கியமாய் நினைவு கூர வேண்டிய ஒரு விஷயம் கல்யாணம் நிச்சயம் ஆனதும் குறைந்தது மூன்று மாதங்களுக்குள்ளாகக் கல்யாணத்தை நடத்திடணும்.  தள்ளிப் போடக் கூடாது. தள்ளிப்போடுவதால் பிரச்னைகள் வரலாம்.  திருமணமே நிற்கும் அளவுக்குப் போகலாம்.  அதோடு பெண்ணும், பிள்ளையும் கல்யாணம் தான் நிச்சயம் ஆயாச்சே என அடிக்கடி சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.  இதனாலும் பல பிரச்னைகள் வருகின்றன என்பதோடு திருமணங்கள் நின்றே போயிருக்கின்றன.  உறவினர் ஒருத்தர் பிள்ளைக்குத் திருமணம் நிச்சயம் செய்தார்கள்.  நிச்சயதார்த்தத்துக்கே ஐந்து லக்ஷம் செலவு.  பின்னே?? ஒரே பிள்ளை!  பிள்ளை கொஞ்சம் சாதாரணமான இந்தக் காலத்தில் பிற்போக்கும் என்னும்படியான பழக்கங்களோடு இருந்திருக்கிறார். இத்தனைக்கும் ஐடியில் தான் வேலை.  அதோடு திருமணம் நிச்சயித்த பெண்ணோடு அடிக்கடி பேசவும் முயற்சிக்கவில்லை.  இதைக் கண்டு அந்தப் பெண் தானே தொலைபேசியில் பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருக்கிறாள்.  தனியே சந்திக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாள். திருமணம் நிச்சயம் தான் ஆகிவிட்டதே, பின்னர் என்ன தடை என்பது மாதிரியும் கேட்டிருக்கிறாள்.

அந்தப் பிள்ளை சாதாரணமாகவே, "திருமணத்துக்கு முன்னரே சந்தித்துப் பேசிக் கொண்டால் கல்யாணம் ஆனதும் என்ன புதுசா இருக்கும்?? உன்னை நானும், என்னை நீயும் அப்போத் தான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும்.  இப்போப் பேசுவது என்ன இருந்தாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வோடு தான் பேசுவோம். மனம் விட்டுப் பேசத் தாலிகட்டினால் தான் முடியும்.  ஆகையால் நான் வரலை." என்று சொல்ல பிள்ளை முற்போக்காக இல்லைனு சொல்லிப் பெண் வீட்டில் நிச்சயித்த திருமணத்தையே நிறுத்திவிட்டார்கள்.  அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து பிள்ளையின் அப்பா இறந்துவிட்டார்.  ஆகவே பெண் பார்க்கையிலேயே இந்தப் பெண் தான் என்பது நிச்சயமாய்த் தெரிந்துவிட்டால், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை அப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.  பெற்றோர் சம்மதத்தோடு பேசுவது நல்லது.  பேசுவதையானும் ஒத்துக்கொள்ளலாம்.  வெளியே சேர்ந்து செல்வதைத் தவிர்க்கவே வேண்டும்.  நிச்சயம் ஆன பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து வண்டியில் வெளியே போய் விபத்துக்கள் நேரிட்டு அதனாலும் திருமணங்கள் நின்றது உண்டு.

திருமணம் நிச்சயமாகி ஆறு மாசம் கழிச்சுத் திருமணம் நடக்கையில் அந்தப் பெண்ணும், பிள்ளையும் அதிகம் பழகிக் கடைசியில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் போய் நின்ற திருமணங்களும் உண்டு. வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாக ரத்துக்குப்போனவர்களும் உண்டு.  இதை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இன்னொரு இடத்தில் பெண்ணும், பிள்ளையும் பார்த்துக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பிச்சாச்சு.  சத்திரம் கூட முடிவு செய்து விட்டார்கள்.  ஒரு நாள் தொலைபேசியில் பேசும்போது பையன், பெண்ணிடம், கொஞ்சம் மாடர்னாக டிரஸ் செய்துக்கோ;  எனக்கு அதான் பிடிக்கும்.  இன்னமும் கர்நாடகமாய் இருக்கியே!  நீ இருக்கும் மல்டிநேஷனல் கம்பெனியில் மற்றப் பெண்களெல்லாம் எப்படி இருக்காங்கனு சொன்னானாம்.  அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.  முக்கியமாய்க் கல்யாணத்துக்கு முன்னரே இப்படி அலங்கரிச்சுக்கோ;  அப்படி நடந்துக்கோனு சொன்னால் கல்யாணத்துக்கு அப்புறமா அடிமை வாழ்க்கை தான்னு அந்தப் பெண் பெற்றோரிடம் முறையிடப் பெண்ணின் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்கள்.  கல்யாணமும் நின்னு போயாச்சு.   ஆகவே அந்தக் காலங்களில் பெண்ணும், பிள்ளையும் சந்திக்க வேண்டாம் என்று சொன்னதிலும் அர்த்தமில்லாமல் போகவில்லை.  இவை எல்லாம் இந்தக் காலத்து ஏற்றதாய் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற முக்கியமான ஒன்று என்னவெனில் பெண்ணும், பிள்ளையும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்து குடும்பம் நடத்த வீட்டுப் பெரியவர்களின் அனுபவ வார்த்தைகளையும் இயன்றால் மருத்துவக் கவுன்சலிங்கும் பெறலாம்.


பத்திரிகைகள் கொடுக்கக் கல்யாணப் பெண்ணே நேரில் செல்வது இப்போது வழக்கமாகி இருக்கிறது.  சில இடங்களில் பெண்ணும், பிள்ளையும் சேர்ந்தே செல்கின்றனர். தன் தந்தையோடு கல்யாணப் பத்திரிகை கொடுக்கச் சென்ற பெண், விபத்து நேரிட்டு, நல்லவேளையா அந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் ஆகலை; தந்தைக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து.... இத்யாதி....இத்யாதி! பெண் வீட்டிற்குப் பிள்ளை வீட்டிலும், பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டிலும் கல்யாணம் சொல்வது என்னும் வழக்கத்தை அநுசரித்து அவரவர் அச்சிட்ட பத்திரிகைகளை அவரவர் உறவினருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு செல்வது உண்டு.  இது பொதுவான வழக்கம்.  எல்லாரும் கடைப்பிடிப்பது.  பெண்ணின் பெற்றோர் ஒரு நாள் வந்தால், பையரின் பெற்றோர் ஒரு நாள் செல்வார்கள். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம், சர்க்கரை, கல்கண்டு இத்யாதி சாமான்களோடுபோய்ப் பத்திரிகைகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

இப்போ அடுத்து நாமப் பெண்ணும், பிள்ளையும் செய்துக்க வேண்டிய முக்கியமானவைகளைப் பார்ப்போமா?   டிடி, பக்ஷணங்களுக்குக் கொஞ்சம் காத்திருக்கத் தான் வேணும். :)))) எல்லாத்தையும் விட முக்கியம் அழகு செய்து கொள்வது.  இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லரில் போய்த் தான் அலங்காரம் செய்துக்கறாங்க.  அல்லது ப்யூட்டிஷியன் சத்திரம்//வீடுகளுக்கே வராங்க.  திருமணம் நிச்சயம் ஆனதுமே ப்யூட்டி பார்லருக்குப் போகும் பெண்கள் அங்கே பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமானவை தானானு பார்த்துக்கணும்.  அல்லது சொந்தமான அழகு சாதனப்பொருட்களைக் கொண்டுபோயிடணும்.

அங்கே எல்லார் முகத்திலும், உடலிலும் போட்டதை நமக்கும் போடுகையில் பலருக்கும் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி அரிப்பு, தடிப்பு, வீக்கம் என்றெல்லாம் வருகிறது.  கூடியவரை இயற்கையான முறையில் அழகு செய்து கொள்ளலாம் என்றாலும் இன்றைய நாட்களில் எவரும் அதை ஒப்புக் கொள்ளப்போவதில்லை. ஆகவே கூடியவரை அழகுசாதனப்பொருட்களாவது சொந்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  ஆயிரக்கணக்கில் ப்யூட்டி பார்லருக்குக் கொடுக்கையில் ஒரு ஆயிரம் செலவு செய்து சொந்தமாக அழகுப் பொருட்கள் வாங்குவதில் தவறே இல்லை.   நம் தோல் பாதிப்படையாமல் இருக்கும்.   எத்தனையோ பெண்களுக்கு இந்த அழகு சாதனப்பொருட்களாலும்  ப்யூட்டி பார்லருக்குப் போனதினாலும் கல்யாண சமயத்தில் முகமே வீணாகிப் போயிருக்கிறது.  விசாரித்தால் ஒரு புராணமே வெளிவரும். :(

இப்போதெல்லாம் கல்யாணப் பிள்ளைக்கும் ப்யூட்டி பார்லர் அலங்காரம் உண்டு என்பதால் இந்த விஷயத்தில் அவரும் கவனமாகவே இருக்க வேண்டும். 

Sunday, June 02, 2013

நாங்களும் போடுவோமுல்ல ரயில்வே ஸ்டேஷனை!

இது போன வருஷம் மார்ச் மாசம்,  ஒரு ரயில்வே ஸ்டேஷனில் வண்டிக்குக் காத்திருக்கையில் எடுத்தது.  எங்கள் ப்ளாக் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனைப் போட்டிருக்காங்க.  இதுவும்  ஒரு ரயில்வே ஸ்டேஷன் தான்.  எதுனு கண்டு பிடிங்க.  அங்கே காத்திருக்கும் நேரத்தில் இந்தப் பிள்ளையார் கோயில் குருக்கள் வந்து பிள்ளையாருக்கு அபிஷேஹம், அலங்காரம் எல்லாம் பண்ணினார்.  அதிலிருந்து இந்த இரண்டு படங்கள்.

ஒண்ணு அதிகாலையில் இருட்டாக இருக்கிறச்சே எடுத்தது.  இன்னொண்ணு வெளிச்சம் வந்தப்புறமா எடுத்தது.  எந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன்னு ஸ்ரீராம், கெளதமன் சார், சூரி சார், ஜீவி சார் ஆகியோர் கண்டு பிடிச்சுடலாம்.  அதிலும் சூரி சார் முதல்லே சொல்லிடுவார். :))))

அதிகாலையில் எடுத்தது.  கருக்கிருட்டிலே எடுத்தேன்.  குருக்களும் அப்போவே வந்துட்டார்.





இது அலங்காரம் பண்ணறச்சே எடுத்தது.  கண்டு பிடிங்க பார்க்கலாம்.