எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 29, 2013

ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!

பருப்புத் தேங்காய் பற்றிச் சொல்கையில் ஒரு விஷயத்தை விட்டுட்டேன்.  திருநெல்வேலிக்காரர்கள் பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்க மாட்டார்கள். பருப்புத் தேங்காய் செய்முறையும் தனியாக இருக்கும். அரிசி மாவு, உளுத்தமாவு, கடலைமாவு சேர்த்துக் கொஞ்சம் கனமான இழைகள் கொண்ட தேன்குழல்கள் செய்து, அதை வெல்லப் பாகில் சேர்ப்பார்கள்.  இது ஒரு பித்தளையில் ஆன அரை அடுக்கு நிறையச் செய்து வைத்து அதன் நடுவில் சின்னதாகக் கூம்பு போல் பருப்புத் தேங்காய் 2 பிடித்து வைப்பார்கள்.  முழு அடுக்கில் கிட்டத்தட்ட அப்போதைய ஒரு மூட்டை அரிசியை வடிக்கலாம் எனில் அரை அடுக்கில் அதில் பாதி வடிக்கலாம்.  அப்போ பருப்புத் தேங்காய் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
முன்னெல்லாம் ஒரு மூட்டை அரிசிக்கு பக்காப்படி ஐம்பது படி இருக்கும்.  இப்போ மூட்டைனு தருவது பத்து கிலோ, பதினைந்து கிலோ, இருபது, இருபத்தைந்து கிலோ பைகள்.  ஆகவே உங்கள் கணக்குப் பழைய முறையில் போடும் கணக்காக இருக்க வேண்டும். :)))) அதோடு பருப்புத் தேங்காய் வகைகளில் பூந்திப் பருப்புத் தேங்காயை மறந்துட்டேன். :))))

ஆச்சு, பக்ஷண வேலை முடிஞ்சாச்சு;  வடாம், வற்றல் போட்டாச்சு, துணி, மணி எடுத்துத் தைக்கக் கொடுத்தாச்சு.  எல்லாம் செய்த நாம் முக்கியமானதை விட்டுட்டோமோ?  இல்லை; அதெல்லாம் விடலை. என்னனு கேட்கறீங்களா?  அதான் சமையலுக்கு ஆள் போடுவது!  கல்யாணம் நிச்சயம் ஆனதுமே இப்போல்லாம் காடரிங் கான்ட்ராக்டரைப் பார்த்தாகணும்.  பல பெரிய கான்ட்ராக்டர்கள் சத்திரங்களில் திருமண முஹூர்த்தத் தேதிகளுக்கு முன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுகின்றனர்.  நாம் கூப்பிடும் கான்ட்ராக்டர் அப்படிச் சத்திரங்களில் முன் பதிவு செய்தவராக இருந்தால் அவரே சத்திரத்துக்கும் சேர்த்து நம்மிடம் பேசிவிடுவார். இல்லை எனில் சத்திரக்காரர்களை நம்மைச் சந்தித்துப் பேசச் சொல்லுவார்.  கல்யாணத் தேதி உறுதி செய்துவிட்டுச் சத்திரத்துக்கு அலையும் மக்கள் இப்படி ஒரு வசதியா என நினைத்துக் கொண்டு ஒத்துக்கொள்வார்கள்.  1996-ஆம் வருடம் நடந்த எங்கள் உறவினர் கல்யாணத்தில் அம்மாதிரி நடந்தது.  நல்லவேளையாகச் சத்திரம் நிறைய அறைகளோடு இருந்தாலும், சமையல், சாப்பாடு சோபிக்கவில்லை என்பதோடு சரியாகக் கவனிக்கவும் இல்லை. ஜூலை மாதம் கல்யாணம் நிச்சயம் செய்த பின்னர் செப்டம்பர் மாதத் தேதிகளில் சத்திரம் கிடைக்காமல், அக்டோபரில் சத்திரம் கிடைத்த முஹூர்த்தத் தேதிக்குக் கல்யாணம் மாற்றப் பட்டது.

பார்க்க இது வசதியாகத் தோன்றினாலும் சத்திரத்து நிர்வாகிகளுக்கும், சமையல் கான்ட்ராக்டர்களுக்கும் இடையில் எழுதப் படாத ஒப்பந்தம் இருக்கிறது. இப்போதெல்லாம் சத்திரங்கள் அடுத்த ஜனவரி 2014 முஹூர்த்தங்களையும் தாண்டி முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அதோடு வாடகையும் அதிகம்.  மதுரையில் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் மங்கள நிவாஸில் திருமணம் நடத்த முதலில் பணம் வாங்கவில்லை.  வாங்க ஆரம்பித்த பின்னரும் குறைந்த தொகையே வாங்கினார்ர்கள்.  ஆனாலும் யாரும் அங்கே கல்யாணம் செய்ய முன்பதிவு செய்யமாட்டார்கள். அக்கம்பக்கத்து வீடுகளை இணைத்து வாசலில் பெரிய பந்தல் போட்டு மணல் பரப்பி மேடை அமைத்துக் கல்யாணம் செய்துவிடுவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் மனிதர்கள் அந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள்.

இப்போதும் சமையல் காடரிங் ஆட்களிடம் விடாமல் சொந்தமாக சாமான்களை வாங்கிக் கொடுத்துச் சில கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சாமான்களை நாமே சமையல்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.  அதற்கெனத் தனியாகப் பொறுப்பான ஒருத்தரை நியமிப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் இந்த அறையை உக்கிராணம் என்றே அழைப்பார்கள்.  பல கல்யாணங்களிலும் இந்த உக்கிராணம் பார்க்க சமையல்காரர்களே தங்களுள் ஒருத்தரை நியமிக்கச் சொல்வார்கள்.  இதை ஏற்காமல் வீட்டு மனிதரில் நெருங்கிய ஒருவரைச் சொல்வதும் உண்டு.  இம்முறையில் பின்னால் மிஞ்சும் மளிகை சாமான்களில் பிரிக்காதவற்றை நாம் வாங்கிய கடையிலேயே கொடுத்துவிடலாம். வீணாகும் பொருட்களான காய்கள், பழங்கள், வாழை இலை போன்றவை அக்கம்பக்கம் பகிர்ந்து கொடுத்தும் சில நாட்களுக்கு வரும். பிரித்த மளிகை சாமான்கள் வீட்டு உபயோகத்துக்கு வந்துவிடும்.  அவை குறைந்தது இரண்டு மாதங்களாவது ஓட்டும்படியாகவே இருக்கும்.

கல்யாணச் செலவில் தடுமாறி இருக்கும் குடும்பங்கள் இம்முறையில் ஓரிரு மாதங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும்.  விறகிலிருந்து வாங்கிப்போடுவார்கள். இப்போது சாதாரணமாக ஒரு இனிப்பு, வடை, பாயசம், வறுவல், அப்பளம், ஒரு கறி, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், மோர்,சாதம், பருப்பு, ஊறுகாய் என்ற குறைந்த பக்ஷத் திட்டத்துக்கே ஒரு இலைக்கு நூற்றைம்பதில் இருந்து இருநூறு வரை, நாம் அழைக்கும் கான்ட்ராக்டரின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்திருக்கின்றனர். நாம் சாமான் வாங்கிச் செய்தால் இதில் பாதிப் பணம் கூட ஆகாது.  ஆனால் மேற்பார்வைக்குச் சரியான ஆட்கள் இருக்க வேண்டும். கல்யாணத்தன்றோ அல்லது முதல்நாளோ வைக்கும் ரிசப்ஷனில் போடப் படும் ஸ்பெஷல் சாப்பாடு, நாம் தேர்ந்தெடுக்கும் மெனுவைப் பொறுத்துக் குறைந்த பக்ஷம் முன்னூறு ரூபாயிலிருந்து இன்னும் மேலே தான் போகிறது.  அதோடு சில குறிப்பிட்ட சமையல் கான்ட்ராக்டர்கள் ரிசப்ஷனுக்கு வருபவர்களுக்கு உபசாரம் செய்ய எனத் தனியாகச் சில பெண்களை அழைத்து வருவார்கள்.


அவர்கள் மருதாணி எனப்படும் மெஹந்தி இடுவது, வளையல் கொடுப்பது போன்றவற்றைப் பார்க்கின்றனர்.



 இன்னொரு பக்கம் பழங்களைப் பிழிந்து எடுக்கும் ஜூஸ் ஸ்டால்கள் இவர்களின் கவனிப்பில் இருக்கும்.


குழந்தைகளைக் கவர பஃபூன்கள், அல்லது டெடி, மிக்கி மவுஸ் முகமூடியில் ஆட்கள்,




 பஞ்சு மிட்டாய், பீடா ஸ்டால், இது தவிர காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஸ்டால்,



இன்னொரு பக்கம் சாட் ஐட்டங்கள் உள்ள ஸ்டால், சமோசா அல்லது புதினா வடை, பாதாம், முந்திரிப் பருப்பு வகைகள் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வருவார்கள்.  பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு ஐடமாக வரும்.  இந்த வட இந்தியக் கலாசாரம் எப்போ தமிழ்நாட்டுக்கு வந்ததுனு புரியலை.  கிட்டத்தட்டப் பத்துவருடங்கள் வட இந்தியாவில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் கல்யாணங்களில் கலந்து கொள்ளும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது எங்களுக்கு.


அதோடு பெண், பிள்ளை உடை அணியும் முறையும் வட இந்தியக் கலாசாரத்தில் தான். ஆனால் ஹிந்தியை மட்டும் வெறுப்போம்.  ஹிந்தி அரக்கினு பட்டமெல்லாம் கொடுப்போம்.  சாப்பாட்டில் வட இந்திய சாட் உணவு வகைகளும், மேல்நாட்டு பிட்சாவும், பர்கரும் தான் முதலிடம் பெறுகிறது.  இப்படியான சாட் வகைகளுக்கு என்றும் ஒரு ஸ்டால் இருக்கும்.  அங்கே பேல் பூரி, பானி பூரி,  வகைகள் இடம் பெறும்.  இது எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு அதுக்கப்புறமா வரிசையிலே நின்னு பெண், மாப்பிள்ளைக்குப் பரிசு கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போனால் சாப்பாடே இறங்காது.  ஏற்கெனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்கும்.  இலையில் உட்கார்ந்துட்டு எழுந்துக்க வேண்டியது தான்.   ஏற்கெனவே நிறைஞ்ச வயித்திலே எதைப் போடமுடியும். ஆக மொத்தம் கொஞ்சம், கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வருபவர்களே அதிகம்.  ஆனால் அதில் இடம் பெறும் உணவு வகைகள் நாற்பதுக்குக் குறையாது.  மெனு அடுத்த பதிவில் இடம் பெறும்.

18 comments:

  1. நாமே எல்லா சாமான்களையும் வாங்கி செய்வது, இப்போது கனவாகி விட்டது... பணம் எவ்வளவு ஆனாலும் கான்ட்ராக்ட் தான்...

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் சமையல் காண்டிராக்டர்கள் நீங்கள் சொல்லியுள்ளபடி சுத்தமாக அ முதல் ஃ வரை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். காலை டிபனில் ஸ்வீட், சிறு தோசை 2, இட்லி பூரி பொங்கல், வடை என்று இத்தனை ஐடம் போடுவதில் தொடங்குகிறது வயிற்ரை அடைக்கும் நேரங்கள்.

    என் சகோதரி கல்யாணத்தில் ஏற்பாடு செய்யப் பட்ட சமையல்காரர் மாப்பிள்ளைக்கு தூ...ரத்து உறவினர். நாங்கள் 'மதுரையில் வைக்கிறோம் திருமணத்தை' என்று சொல்லியும் 'எங்களுக்கு இந்த ஊரில்தான் மனுஷா அதிகம்' என்று சென்னையில் வைக்கச் சொல்ல, அப்போது சென்னை எங்களுக்குப் பழக்கமில்லா ஊர். அந்தச் சமையல்காரர் படுத்திய பாடு சொல்லி மாளாது! தாலி கட்டிய நாளன்று பெண் வீட்டைச் சேர்ந்த நாங்கள் 15 பேர் சத்திரத்தில் 'சாப்பாடு காலி, இல்லையெ'ன்று சொல்லப் பட்டு வெளியில் ஹோட்டலில் சாப்பிட்டோம்!!! முதல்நாள் வாங்கிவைத்த ஒரு மூட்டை அரிசி சென்ற மாயம் தெரியாது! அனுபவங்கள்!

    ReplyDelete
  3. வட இந்திய பழக்கம் இப்போது தமிழ்கத்திலும்.....

    முதலில் ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் அதிகமாக சாப்பிடச் செய்தால், மெயின் சாப்பாடு குறைவாகச் செய்தால் போதும் - ஒரு தட்டு கணக்கு எனப் பார்க்கும்போது செலவு சமையல் காரருக்கு குறைவாகவே வரும் - கல்யாண வீட்டார்களுக்கு தான் அதிக செலவு! :)

    ReplyDelete
  4. ஸ்டால் அமைப்பு இப்போது எல்லா வகுப்பினர் திருமணங்களிலும் புகுந்து கொண்டு விட்டது.
    காலம் மாறுதும் கருத்து மாறுது. கோலம் மாறுது, கொள்கை மாறுது.

    ReplyDelete
  5. ருசிகரமான பல கல்யாணத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க டிடி, வெகு அபூர்வமாகச் சிலர் இன்னமும் மாறாமல் இருக்கின்றனர். அதில் ஒண்ணு சென்ற நவம்பரில் மாயவரத்தில் நடந்த ஒரு கல்யாணம். அதிலே சாமான்களை வாங்கிக் கொடுத்துத் தான் செய்தார்கள்.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரி, சில வருடங்கள் முன்னர் தஞ்சையில் நடந்த ஒரு கல்யாணத்தில் காலை பதினொன்றரை மணிக்கு இரண்டாவது பந்தியிலேயே எல்லாம் தீர்ந்து போய் அடுத்து வந்தவர்களுக்கு ஏதோ ஒப்பேத்தினார்கள். நாங்க நாலைந்து பேர் கொஞ்சம் தாமதமாய்ச் சாப்பிடப் போக சாதமும், மோரும் மட்டும் (தாராளமா விளாவியது) கிடைத்தது. தொட்டுக்க ரசத்தின் அடி மண்டி. :))) ஊறுகாய் கூடக் கிடையாது. இத்தனைக்கும் கல்யாணத்தில் கூட்டம் இல்லை.

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், நீங்க சொல்வது சரியே, அந்தக் கருத்துத் தான் எனக்கும். கல்யாண வீட்டார் இதைப் புரிஞ்சுக்கணும்னு தான் என்னோட கருத்தும். :(

    ReplyDelete
  9. வாங்க இ சார், ஜி+இல் குலுக்கு குலுக்குனு குலுக்கி, உலுக்கிப் பார்த்துட்டேன். உங்க கமென்ட் அங்கே காணோமே! குழுமத்திலும், இங்கேயும் தான் இருக்கு. :)))) காக்காய் ஊஷ்ஷ் ஆயிடுத்தோ! :)))

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, பல விஷயங்களும் மாறி விட்டன! :(

    ReplyDelete
  11. வாங்க வைகோ சார், வரவுக்கு நன்றி.

    ReplyDelete

  12. buffet முறையும் வந்து விட்டது.இதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் பொருள்கள் வேஸ்ட் ஆகாது.காண்ட்ராக்ட் கொடுக்கும்போது வருபவரின் எண்ணிக்கையை குறைத்துச் சொல்லி சேமிக்கவும் முடியாது. ஏனென்றால் எத்தனை ப்ளேட்டுகள் எடுக்கப் பட்டன என்பதுதான் கணக்கு. திருமணங்களில் அதிக செலவு செய்து ஆடம்பரம் காட்டுவது பெருமையாய்ப் போய்விட்டது.

    ReplyDelete
  13. வட இந்திய கலாசாரம் தான் எல்லா இடங்களிலும்.... சாப்பாடும், சாட்டும், மேக்கப்பும்..:(

    எங்கள் கல்யாணத்திலேயே காண்ட்ராக்ட் தான் விட்டோம். ஒரு விதத்தில் வசதி. நாமே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம். கோலம் போடுவதிலிருந்து, ஆரத்தி தயார் செய்வது வரை அவர்கள் வேலை...

    பருப்புத் தேங்காயை என் புகுந்த வீட்டில் பணியாரம் என்று சொல்வார்கள்...:)

    ReplyDelete
  14. பஃபே பார்க்கவில்லை. வட இந்தியத் திருமணங்களில் தான் பார்த்திருக்கேன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ப்ஃபே எனச் சொல்லிட்டு உணவுப் பதார்த்தங்கள் ஒவ்வொண்ணுக்கும் பக்கத்திலே ஒருத்தர் நிற்கிறாங்க. நாம தட்டை எடுத்துட்டுப் போனால் நமக்கு வேண்டியதை நாமே எடுத்துக்க முடியாது. அவங்க தான் போடறாங்க. ஏதானும் கூட வாங்கிக்கப் போனால் இதை முதல்லே சாப்பிட்டுட்டு வாங்க, அப்புறமாப் போடறோம்னு சொல்லிடறாங்க. இதுக்குப் பேர் பஃபே இல்லை. :))))))) பல இடங்களிலும் இம்மாதிரியான உபசாரத்தைப் பார்த்துட்டேன். பஃபே என்றால் என்னனு தெரியலை!

    ReplyDelete
  15. வாங்க கோவை2தில்லி, நீங்க சொல்வது சரியாக இருந்தாலும் பணம் ஒட்டிக்கு இரட்டி மட்டும் இல்லை. ஒண்ணுக்குப் பத்து பங்கு அதிகம். சென்ற வருடம் நடந்த உறவினர் திருமணத்தில் சாப்பாட்டுச் செலவு மட்டுமே ஒன்பது லக்ஷம். :((( இதுவே ஆள் போட்டுச் செய்திருந்தால் நிச்சயமாய் ஐந்து லக்ஷத்துக்குள்ளேயே அடங்கும். அதுக்குக் குறைச்சலாகவே ஆகும் என்றாலும் விலைவாசியைப் பொறுத்துக் கூடக் குறைச்சு ஆகலாம் இல்லையா!

    ReplyDelete
  16. ஆமாம் ஆற்காடு மாவட்டத்தில் பருப்புத் தேங்காய் பணியாரம் என்றே சொல்லப்பட்டுப் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  17. ஸ்டால் அமைப்பு பெரிதாக இன்னும் இங்குவரவில்லை. ரிசப்சனுக்கு சிலர்செய்கிறார்கள்.

    ReplyDelete