எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 26, 2013

சீர் கொண்டு வா வெண்மேகமே

பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா வகுப்பினரும் செய்கின்றனர்.  பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத் தேங்காய் என்பது முக்கியம்.  வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும் கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன.  பார்க்க படம்.






இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய் செய்வார்கள்.  அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப் படும்.  இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர் மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப் பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப்  பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம்.  முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன்.  வீட்டுக்கு வந்ததும் தான் தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும்.  முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும் முக்கியமானவை.

இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும்.  இதற்கு மேலும் பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.  பொதுவாக மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம்  பெற்று வந்தது.  இப்போதெல்லாம் யாரும் அதைச் சீண்டுவதில்லை.  இது காடரிங்காரங்க  மூலம் ஒப்பந்த அடிப்படையில் பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல்.  முன்னெல்லாம் வீடுகளிலேயே செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும் வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள்.  சமையல் நம் பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும் ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும்.  கல்யாணம் முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள்.  ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  இது அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம்.  பல கல்யாணங்கள் இப்படி வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை, பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு என்கிறார்கள்.  இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள் மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை.




வெறும் பருப்புத் தேங்காயும், மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும்.  வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும்.  மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள்.  ஆனால் தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார்.

மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண் செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி செய்வதாகக் கூறுகின்றனர்.  பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும், பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர்.  எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான் சொல்வார்கள்.  பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம் தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை.  நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும் சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் நடந்துவிடும்.  சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ, பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது.  எல்லாத்துக்கும் உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள்.

ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள்.  முன்பெல்லாம் கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து, பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக் கொண்டாடினார்கள். இது மிகப் புதுமையாக இருந்தது.  பல நிச்சயதார்த்தங்கள் சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப் பார்க்கவில்லை.  காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை.  அதனால் படங்கள் பகிர முடியவில்லை.  சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சென்றிருந்தேன்.  சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.  வைதிக முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச் சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது.  அணைக்க வேண்டுமா?

26 comments:

  1. மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது. அணைக்க வேண்டுமா?

    மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கவைப்பது
    அமங்களமாக நெருடுகிறது ...

    ஒரு விளக்கு ஏற்றவைத்து மங்களகரமாக கொண்டாடலாமே..!

    ReplyDelete
  2. ஐ... சுவையான பகிர்வு... பருப்புத்தேங்காவில் இத்தனை விதமா...?

    மெழுகுவர்த்தி ஊதி அணைப்பது : வெற்றிகரமாக இத்தனை (?) வருடங்களை ஊதி தள்ளி விட்டார்களாம்...! (விசாரித்ததில் கிடைத்த தகவல்...!)

    ReplyDelete
  3. Superunga!

    intha rEdle, Geethavukku Kalyani enDru pear vaittu viduvaarkaLL.

    ReplyDelete
  4. பருப்பு தேங்காய் சுவாரஸ்யம். அதிலும் முந்திரி பருப்பு பருப்பு தேங்காய்! எல்லாப் ப.தே. களும் பெரும்பாலும் உடைப்பதே கஷ்டமாக இருக்கும்! எங்கள் வீட்டில் என் நிச்சயதார்த்தமும் எங்கள் வீட்டில்தான். என் இளைய சகோதரி நிச்சயதார்த்தமும் ("அதெல்லாம் எங்கள் வீட்டில் வழக்கமில்லைங்க" தங்கையின் வருங்கால மாமியார்!) எங்கள் வீட்டிலேயே. எனவே அறியப்படும் நீதி : மாப்பிள்ளை வீட்டின் அதிகாரத்தைப் பொறுத்தது அது என்பதே!

    ReplyDelete

  5. அப்பப்பா...! எத்தனைவகை பருப்புத் தேங்காய் வகைகள். ...அதிலும் பருப்பே இல்லாத வகைகளுமா.?/ மெழுகு திரியை மங்களகரமாக ஏற்றிக் கொண்டாடலாமே? MAY BE GREAT PEOPLE THINK ALIKE...!( பார்க்க என் பதிவு gmbat1649.blogspot.in/2011/03/blog-post_24.html

    ReplyDelete
  6. ஆஹா, இந்த மனோகரம் பருப்புத்தேங்காயும், வேர்க்கடலை பருப்புத்தேங்காயும் எனக்கு ரொம்ப பிடிச்சது!


    கேக் - எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது!

    ReplyDelete
  7. தலைப்பு மிக பிரமாதம்.
    கல்யாணம் களைகட்டிவிட்டது.
    நீங்கள் சொல்வது போல் மெழுகுவர்த்தி ஏற்றி கேக்வெட்டலாம்.

    ReplyDelete
  8. புடவை கட்டி விட மூணு பேரா!

    மனோகரம் அட்டகாசமான பண்டம். தலைமுறைக்கணக்கில் ஆகிறது கண்ணால் பார்த்து! (ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது தெரிஞ்சா சொல்லுங்க)

    social awareness அதிகமாக ஆக கல்யாணத்துக்கு இன்னும் அதிகமாக செலவு செய்வது விளங்காத முரண்!

    ReplyDelete
  9. வாங்க ராஜராஜேஸ்வரி, ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க டிடி, அப்படியா, இந்த விஷயம் இப்போத் தான் தெரியும் எனக்கு! நன்றிங்க. :)))

    ReplyDelete
  11. வாங்க "இ"சார், ஹிஹிஹி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீராம், பருப்புத் தேங்காய் உடைப்பது வெகு சுலபம். எரிவாயு அடுப்பை மூட்டிச் சிறிது நேரம் எதையானும் அடுப்பில் வைத்துச் சூடு பண்ணிவிட்டுப் பின்னர் பர்னரை அணைத்துப் பருப்புத் தேங்காய்க் கூட்டை அதில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் போதும். அப்படியே விழுந்துவிடும். ஹிஹிஹி!

    ReplyDelete
  13. ஆமாம், பிள்ளை வீட்டின் அதிகாரம் தான் என்பது உண்மையே. எங்க பெண்ணைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் உடனே நிச்சயம் செய்யணும்னு சொல்ல, நாங்க உங்க வீட்டிலே தானே செய்யணும்னு சொல்ல, எங்க மனுஷங்க எல்லாரும் இங்கே இருக்காங்க, இங்கே தான் செய்யணும், இன்னிக்கு ராத்திரியே பிள்ளை வேலைக்கும் போயாகணும், உடனடி நிச்சயம்னு சொல்லக் கடைசியில் எங்க வீட்டிலேயே நிச்சயம் செய்தார்கள்.

    நல்லவேளையா இருந்த இட்லி மாவை வைத்துக் கொண்டு கடையில் ரெடிமேட் சேவை பாக்கெட்டுகள் வாங்கி ஒரு மாதிரியா ஒப்பேத்தினோம். :)))))

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், பருப்புத்தேங்காய்கள் பலவிதம். உங்கள் பதிவைப் படிக்கிறேன்.சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், கரெக்டா பருப்புத் தேங்காய் சாப்பிட வந்துட்டீங்க போல! :))) நல்வரவு. பிறந்த நாளில் கேக் வெட்டும் கலாசாரம் தான் எப்போவோ வந்தாச்சே. இப்போ நிச்சயதார்த்தத்திலேயும் வந்திருக்கு! :)))

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு, பக்ஷணம் பண்ணிட்டாலே பாதி வேலை முடிஞ்சாப்போல! :))))

    ReplyDelete
  17. வாங்க அப்பாதுரை, 3 பேர் என்ன, சுத்தி இருக்கிறவங்க எல்லாருமாக் கூடி அவங்க அவங்க கருத்தை வேறே சொல்லுவாங்க. :)))) போதும், போதும்னு ஆயிடும். :) உங்களூக்கும் மனோகரம் பிடிக்குமா? ஏன் இப்படிப் பெயர் என்பதை ஆராய்ச்சி செய்து சொல்கிறேன். இன்னிக்குத் தான் மைசூர்ப்பாகை முதன் முதல் செய்தவர் யார்னு படிச்சேன். :)))) உங்களைத் தான் நினைச்சுண்டேன்.

    ReplyDelete
  18. ஆமாம், கல்யாணங்களில் செலவு கட்டுக்கடங்காமல் போகிறது தான். :((( வருத்தமளிக்கும் விஷயம்.

    ReplyDelete
  19. மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறதுக்கு முன்னாடி சின்னதா வேண்டுதலும் செஞ்சுக்குவாங்க. அப்படி பர்த்டே விஷ் செஞ்சுட்டு ஊதி அணைச்சா அது பலிக்குமாம். எங்கியோ கேள்விப்பட்டேன். ஆனா, இப்ப தாமரை வடிவில் ஒரு மெழுகுவர்த்தி வந்திருக்குது.ஏத்தினா அது 'ஹேப்பி பர்த்டே' பாடும்.. பாடும்.. பாடிக்கிட்டே இருக்கும். பாடும்போதே தாமரை இதழ்கள் விரிஞ்சு ஒவ்வொரு இதழிலும் ஒவ்வோர் மெழுகுவர்த்தி. அணைக்கத்தேவையேயில்லை.

    திருமணம், நிச்சயங்களில் கேக் வெட்டறது மேற்கத்திய கலாச்சாரம், நாமதான் எல்லாத்தையும் காப்பியடிப்போமே.. இதை ஏன் விட்டு வைக்கணும்.

    ReplyDelete
  20. கல்யாணச் செலவுக்கு ஒரு உச்சவரம்பு கொண்டு வந்து, வரம்பு மீறிய செலவுக்கு வரி வாங்க வேண்டும்.

    மாசேதுங் மாதிரி மைசூர்பா வா? இதை முதலில் செய்த்து யார்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?

    ReplyDelete
  21. சீர் தட்டு எண்ணிக்கை கூடிக்கொண்டெ போவது போல் பருப்புத் தேங்காய் வகையும் பெருக்கலாம் போலிருக்கு உங்க பட்டியலைப் பார்த்தால். ஆனால் அதுவொரு கம்பீர அழகு. இல்லையா... அதை சுலபமாக உடைக்க சொன்ன யோசனை அருமை. நன்றி.

    எத்தனை புதுசு வந்தாலும் பாரம்பர்ய முறைகளை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பது நம் பொறுப்பு. அழகா சொல்றீங்க!

    ReplyDelete
  22. ஆராய்ச்சி செய்து தான் கண்டு பிடிச்சிருப்பாங்க அப்பாதுரை! :)))))அப்புறமா இன்னொரு விஷயம், மைசூர் பா என்றால் கிருஷ்ணா ஸ்வீட்ஸிலே கொடுக்கிறது. மைசூர் பாகு தான் ஒரிஜினலாக்கும். :)))))

    ReplyDelete
  23. வாங்க அமைதி, ஆமாம், நாம காப்பியடிக்கிறதிலே எதை விட்டு வைச்சிருக்கோம்.:(((

    ReplyDelete
  24. வாங்க நிலாமகள், பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லவென்றே ஆரம்பித்த தொடர் இது! :))) கூடவே மாறி வரும் கலாசாரங்களையும் சுட்டிக்காட்டுகிறேன். நன்றிங்க.

    ReplyDelete
  25. பட்சணங்கள் பற்றி அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    எதற்கும் கேக் வெட்டுவது என்றாகிவிட்டது.

    ReplyDelete
  26. வாங்க மாதேவி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete