எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 17, 2014

நான் சிரித்தால் தலை தீபாவளி!

எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சுத் தான் தீபாவளி வந்தது.  தலை தீபாவளி என்பதால் மதுரைக்குப் போகணும்.  நான் அப்போ வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.  தீபாவளிக்கு அலுவலகத்தில் ஒரு நாள் தான் லீவு.  காஷுவல் லீவில் கையை வைச்சு முன்னே ஒரு நாள், பின்னே ஒரு நாள் போட்டுக் கொண்டு மதுரை போகணும்.  ரங்க்ஸுக்கு லீவுப் பிரச்னை இல்லை.  அவர் ஜாலியா லீவ் போட்டுட்டார்.  எனக்கும் ரங்க்ஸுக்கும் என்னோட பெரியப்பா தீபாவளிக்குப் போக மாலை ஏழு இருபதுக்குக் கிளம்பும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தார்.  பெரியப்பா அப்போது ஸ்டேட் வங்கி மவுன்ட்ரோடு கிளையில் இருந்தார்.  ஆகவே மவுன்ட் ரோடிலேயே உள்ள ரிசர்வேஷன் கவுன்டரில் டிக்கெட்டை வாங்கி எங்களுக்குக் கொண்டு கொடுத்துவிட்டு அவரும் தீபாவளிச் செலவுக்குப் பணத்தை அப்பாவிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டார்.


ஊருக்குக் கிளம்பற அன்னிக்குக் காலம்பரவே பெட்டியைத் தயார் செய்ய வேண்டி இருந்தது.  அன்னிக்கு எனக்கு லீவ் போட முடியாது.  மாலை ஒரு மணி நேரம் முன் கூட்டிக் கிளம்பவேண்டும்.  அதுக்கு அக்கவுன்டன்ட் கிட்டே முதல்நாளே மனுப்போட்டு வைச்சிருந்தேன்.  ரங்க்ஸுக்கு அன்னிக்கு லீவு தான்.  அவர் வீட்டில் இருந்தார்.  சமைச்சு அவருக்கும் போட்டுட்டு,நானும் சாப்பிட்டுட்டு அலுவலகம் போயிட்டு மாலை நாலு மணிக்குக் கிளம்பி நாலரைக்கு பேசின் பிரிட்ஜ் வரும் வொர்க்மென் சிறப்பு ரயிலில் அம்பத்தூர் வந்தேன்.  அன்னிக்குனு ரயில் கொஞ்சம் நின்னு, நின்னுத் தான் போனது.  அம்பத்தூர் போய் வீட்டை அடையும்போதே ஐந்தரை ஆயிடுச்சு.  ரங்க்ஸ் தயாராக இருந்தார்.  நானும் முகம், கை,கால் கழுவி உடை மாத்திக் கொண்டு அவசரத்தில் எதுவும் சாப்பிட முடியாததால் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டுப் பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.  மாலை விளக்கேற்றும் நேரம் என்பதால் சாப்பாடு சாப்பிடவும் முடியாது.  நல்ல பசி.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு நாங்க இருந்த 1, தெற்குப் பூங்கா வீதியிலிருந்து அம்பத்தூர் பேருந்து நிலையம் வரைக்கும் நடந்தே தான் போனோம்.  அப்போல்லாம் ஆட்டோ கிடையாது என்பதோடு பேருந்து நிலையத்தில்  ஒன்றிரண்டு குதிரை வண்டிகளும், நாலைந்து சைகிள் ரிக்‌ஷாக்களும் தான் இருக்கும்.  அவையும் பேருந்து நிலையத்திலிருந்து உள்ளே தான் வரும்.  அதுவும் டபுள் சார்ஜ் கேட்பாங்க.  ஏனெனில் திரும்பிப்போகும்போது வண்டி காலியாய்த் தான் போகணும். அதெல்லாம் ஆடம்பரம் என நினைத்த காலம் அது.  ஆகவே நடந்தே போனோம்.

70 -A எண்ணுள்ள பேருந்து தினத்தந்தி அலுவலகம் வழியாகப் போகும்.  அதில் தான் எழும்பூர் போகணும்.  நேரடியாக அப்போது அம்பத்தூரிலிருந்து எழும்பூருக்கு வண்டி இல்லை.  ரயிலில் போயிருக்கலாம்.  ஆனால் ரயிலும் அப்போது கரி வண்டி தான் போய்க் கொண்டிருந்ததால் முக்கால் மணிக்கு ஒரு தரம் தான் வரும். நாங்கள் கிளம்பிய நேரம் ரயில் வண்டி இல்லைனு நினைக்கிறேன்.  எல்லாவற்றையும் யோசித்தே பேருந்தைப் பிடித்தோம்.  அயனாவரம் வரைக்கும் வேகமாய்ப் போன பேருந்து அதன் பின்னர் வேகம் தடைப்பட்டு மெல்ல மெல்ல ஊர்ந்து போக ஆரம்பித்தது.  இப்போது மாதிரி அப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல்னு சொல்லமுடியாது என்றாலும்  ஏதோ மாநாடோ, அல்லது அரசியல் கூட்டமோ நடைபெற்றதால் பேருந்துகள் வழக்கமான வழியில் செல்ல முடியவில்லை.







மணியோ ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.  விஷயம் தெரிந்த பேருந்துப் பயணிகள் சிலர் எங்களை அடுத்த நிறுத்தத்தில் இறங்கி டாக்சி வைத்துக் கொண்டு போகச் சொன்னார்கள்.  ஆனால் என்னமோ தெரியலை, ரங்க்ஸ் அதுக்குச் சம்மதிக்கலை.  பார்ப்போம்னு இருந்துட்டார்.  ஒருவழியா ஏழேகாலுக்கு தினத்தந்தி ஆஃபீஸ் வந்து சேர்ந்தது.  இறங்கி அந்தக் குறுக்குப் பாதையில் ஓட்டமாக ஓடினோம்.  படி ஏறி, இறங்கி முதல் ப்ளாட்ஃபார்முக்குள் போனோம்.  திருவனந்தபுரம் மெயிலும் அப்போது தான் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.  ரயிலோடு கொஞ்ச தூரம் ஓட்டமாக ஓடி ஏற முயற்சித்தால் வண்டி வேகம் பிடித்துவிட்டது.  கார்ட் எங்களைத் தடுத்துவிட்டார்.  செயலற்று நின்றோம்.


கூகிளார் கொடுத்த ரயில்.

19 comments:

  1. ம்ம்ம்.... டாக்ஸியில் வந்திருக்கலாம்!

    ReplyDelete
  2. என்னாச்சு? அப்புறம்? இப்படி தொடர்கதை போல ....தொடரும்??!! இல்ல ரயில் கோச் போயே போச்??!! அடடா.....அப்போ தலை தீபாவளி??

    ReplyDelete
  3. சசஸ்பென்ஸ்ஆ?

    டிகெட்டும் வாங்கிக்கொடுத்து செலவுக்கு காசுமா? ஆகா.
    ஆட்டோ இல்லாத பொற்காலம். ஆகா.

    ReplyDelete

  4. நீங்கள் சிரித்தீர்களா ?( தலைப்பு கேட்க வைத்தது)

    ReplyDelete
  5. ரயில் போயே போச்! பிறகு என்ன ஆயிற்று . எப்படி ஊர் போய் சேர்ந்தீர்கள்.?

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்.. அப்புறம்?

    கதை கேட்கும் ஆர்வம் தான்!

    ReplyDelete
  7. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அப்புறம் என்னாச்சு? அறிய ஆவல்.

    ReplyDelete
  9. @ஶ்ரீராம்,

    எந்தச் செலவையும் ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சுச் செய்ய வேண்டிய நிலைமை அப்போ! :)))) புதுக்கல்யாணம்னு பேரே தவிர ஒரு சினிமானாக் கூட யோசிப்போம். :) அப்போல்லாம் அம்பத்தூரில் எங்க வீட்டுக்கிட்டேயே டூரிங் தியேட்டர் உண்டு. ராத்திரி எட்டு மணிக்காட்சியிலே 2 சினிமாக் காட்டுவாங்க. அநேகமா அதில் தான் போயிருக்கோம். அப்புறமாக் கொஞ்சம் முன்னேற்றம் வந்ததும் தான் தியேட்டரில் போய் சினிமா! :)))) எனக்குத் தெரிஞ்சு எண்பதுகள் வரை அம்பத்தூரில் டூரிங் தியேட்டர் இருந்தது. :))))

    ReplyDelete
  10. மதுரையிலே பார்த்தது எல்லாம் தியேட்டர் தான். இதிலே என்ன ஆச்சரியம்னா நாங்க கல்யாணம் ஆனப்புறமாப் பலமுறை மதுரை போயும் நாங்க ஒரு சினிமாக் கூடச் சேர்ந்து மதுரையில் பார்க்கவில்லை. அவர் தனியா ஒன்றிரண்டு போயிருக்கார். நானும் அப்படியே! அண்ணா, தம்பியோடும், அம்மாவோடும் போயிருக்கேன். :)))) மதுரையில் அவரும், நானுமாய்ப் போனதில்லை. :

    ReplyDelete
  11. வாங்க துளசிதரன், இன்னிக்கு முடிஞ்சாச் சொல்றேன். :)))

    ReplyDelete
  12. வாங்க சுரேஷ், பொறுங்க. டிவியைப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேனா, இங்கே கவனம் இல்லை. :))

    ReplyDelete
  13. ஹாஹா, வாங்க அப்பாதுரை, அடிக்கடி காணாமல் போறீங்க! பெரியப்பா தான் ஒரு விதத்தில் எங்க குடும்பத்துக்கு காட் ஃபாதர்! அவர் இல்லைனா இன்னிக்கு இந்த வாழ்க்கை இல்லை!

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், அப்போல்லாம் நிறையவே சிரிச்சிருக்கேன். அப்புறமாத் தான் குறைஞ்சு போச்சு! :)

    ReplyDelete
  15. வாங்க ராஜலக்ஷ்மி, அதெல்லாம் விட மாட்டோமுல்ல!:)

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், நிதானமாக் கதை சொல்றேன். :)

    ReplyDelete
  17. வாங்க காசிராஜலிங்கம், நீண்ட நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க போல! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. வாங்க கோமதி அரசு, சொல்றேன். :)

    ReplyDelete