புவனேஸ்வரை/புபனேஸ்வர் முதல் முதல் பார்க்கையில் நன்கு இருட்டி விட்டது. சொல்லவே மறந்துட்டேனே! தமிழ்நாட்டை விட்டு வடகிழக்கில் செல்லச் செல்ல சீக்கிரம் இருட்டி விடுகிறது. மூன்று மணிக்கே தன் கதிர் வீச்சைக் குறைத்துக் கொள்கிறான் சூரியன். நாலு, நாலரை மணிக்கெல்லாம் கையெழுத்து மறைந்து ஐந்து மணிக்கு நன்கு இருட்டி விடுகிறது! ஆறு மணிக்கெல்லாம் நம்ம ஊர் எட்டு மணி மாதிரி இருட்டு கப்பி விடுகிறது. நாங்கள் போய்ச் சேர்ந்த அன்றிரவு ஏழு மணிக்கெல்லாம் சாலையில் விடுதியை நோக்கிப் பயணம் செய்கையில் ஒன்பது, பத்து மணி ஆகிவிட்ட மாதிரி ஒரு நினைப்பு! சாலைகள் சுத்தமாக இருந்தன! எங்கும் ஒளி வெள்ளம்! சுத்தமான நடைமேடைகள். அதில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் இல்லை. நடைமேடையைத் தாண்டி தெருக்களில் இடம் பெற்றிருந்த கட்டிடங்கள்! எல்லாம் ஒரு ஒழுங்காக இருந்தன.
புவனேஸ்வர் நகரமே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நகரம் என்பார்கள். சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் வரை அதாவது 1948 ஆம் ஆண்டு வரை ஒரிசா/ஒடிஷா வின் தலைநகரமாகக் கட்டாக் தான் இருந்தது. அதன் பின்னரே புவனேஸ்வர் ஒடிஷாவின் தலைநகரமாக மாறியது. இதை நிர்மாணித்தவர் Otto Königsberger என்னும் ஜெர்மானியர். ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகருக்கு அடுத்தபடி இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட புதுமையான நகரமாக புவனேஸ்வர் விளங்குகிறது. அதற்காக இது ஒண்ணும் மிகப் புதுமையான நகரமும் இல்லை. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாறு கொண்டது இது. அவ்வளவு ஏன்? மஹாபாரதத்தில் வரும் சேதி/செடி வம்சத்தினரின் தலைநகராக விளங்கி இருக்கிறது. 2BCE ஆண்டிலேயே இதன் அருகிலேயே இருக்கும் சிசுபால்கர் என்னும் நகரம் அப்போது தலைநகராக இருந்ததாகத் தெரியவருகிறது.
இந்த நகரம் திருபுவனேஸ்வரம் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் பின்னர் புவனேஸ்வர் என மாறியதாகவும் சொல்கின்றனர். மூன்று புவனங்களையும் கட்டி ஆளும் அந்த ஈசனின் நகரம் என்னும் பெயரில் இது வழங்கப்படுகிறது. இதைக் கோயில்களின் நகரம் என்றும் சொல்கின்றனர். பழமையான பல கோயில்கள் இங்கு உள்ளன. எல்லாக் கோயில்களுக்கும் போவதெனில் குறைந்தது ஒரு வாரமாவது அங்கே தங்க வேண்டும். இந்த நகரின் வேறு பெயர்கள் தோஷாலி, கலிங்க நகரி, நகர் கலிங்கா, சக்ர க்ஷேத்திரா, ஏகாம்ர கானன் (இங்கேயும் ஒரு மாமரம்) ஏகாம்ர க்ஷேத்திரா, மந்திர மாலினி நகரி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த ஊரில் அமையப் பெற்ற லிங்கராஜா கோயிலில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவுக்கு தூர தூரங்களில் இருந்தெல்லாம் சிவ பக்தர்கள் தோள்களில் காவடி சுமந்து கொண்டு , "போல் பம்" எனக் கூவிய வண்ணம் கால்நடையாக வருகின்றனர். இப்படிச் செல்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் கால்நடையாகச் செல்வதுண்டு. கட்டாக்கின் இடத்தை இது பிடித்தாலும் இதையும் கட்டாக்கையும் இரட்டை நகரங்கள் என அழைக்கின்றனர். மிக நீண்ட வரலாறுடைய இந்த நகரத்தின் வரலாற்றை நாளை காண்போம். இப்போது விடுதியில் நடந்த சம்பவங்கள்! :)
*********************************************************************************
அறையில் படுத்ததும் நல்ல தூக்கம். வியர்வையே இல்லை என்பதால் தூக்கம் கலையவே இல்லை. ஆகவே காலை நாலு மணிக்குத் தான் விழிப்பு வந்தது. எப்போவுமே நல்லாத் தூங்கிட்டேன்னா காலை நாலு மணிக்குத் தானாக விழிப்பு வந்துடும். இரவு முழுவதும் எழுந்திருக்காததால் இயற்கை உபாதையைக் கழிக்கக் கழிவறை சென்றேன். மேல்நாட்டு முறைக் கம்மோட்! அதில் உட்காரும் முன்னர் அமரும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டி அருகில் இருந்த குழாயை எடுத்து நீருக்காக அமுக்கினேன். நீரே வரவில்லை. சரினு பக்கத்தில் குளிப்பதற்கென இருந்த குழாய்களில் ஒன்றின் கீழ் வாளியை வைத்து நீரைத் திறந்தேன்! புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! காற்றுத் தான் வந்தது. சிறிது நேரம் குழாய்களை மூடி மூடித் திறந்தேன். ஒரு வேளை குழாயை வெகு நேரம் திறக்காமல் வைத்திருந்தால் காற்றுப் போய் அடைத்துக் கொண்டு நீர் வராமல் தடுக்கும் என்பதால். கிட்டத்தட்ட இருபது நிமிடம் போராடி விட்டு வேறு வழியில்லாமல் நன்கு தூங்கும் ரங்க்ஸை எழுப்பினேன்.
தூக்கக் கலக்கத்தில் எழுந்தவருக்குக் கோபம். ஏனெனில் அன்றைய தினம் வெளியே செல்ல வண்டிக்கு ஒன்பது மணிக்குத் தான் வரச் சொல்லி இருந்தோம். முதல்நாளே விடுதிக்காப்பாளர் மூலம் எல்லாம் பேசி முடிவு செய்திருந்தது. ஆகவே காலை மெதுவாக எழுந்திருக்கலாம் என்று முடிவு. இப்போது அர்த்த (?) ராத்திரியில் நான் எழுப்பவே கோபம் வந்தது. என்னனு கேட்கத் தண்ணீர் வரலை என்று சொன்னேன். குழாயைச் சரியாகத் திறக்கத் தெரியலை என என்னைத் திட்டிட்டுப் போய்க் குழாயை மீண்டும் திறந்து மூடி, திறந்து மூடி, திறந்தார். ஹிஹிஹி! எனக்காவது ஒரு சொட்டு நீர் வந்தது. இப்போ சுத்தம்! பத்து நிமிடங்கள் போல் பார்த்துவிட்டுப் பின்னர் செக்யூரிடியிடம் சொல்லலாம் என லிஃப்டுக்குக் கிளம்பினார். நானும் கூடவே சென்றேன். அங்கே போனால் லிஃப்ட் அமுக்க அமுக்க மேலே வரவேஇல்லை. சில குடியிருப்பு வளாகங்களில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு வரை லிஃப்ட் இயக்கம் தடை செய்திருப்பார்கள். அப்படித் தான் இருக்கும்னு நினைத்துக் கீழே போகும் எண்ணத்தைக் கைவிட்டோம்.
மீண்டும் அறைக்கு வந்து விடுதிக்காப்பாளரின் எண்ணுக்குத் தொலைபேசினோம். இதற்குள்ளாக எனக்கு இயற்கை உபாதைனு ஒண்ணு இருந்ததே மறந்தே போய் விட்டது. நல்ல வேளைதான் என நினைத்துக் கொண்டேன். காப்பாளர் தொலைபேசியை எடுத்துப் பேசியவர் இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பயன்படுத்திக்கச் சொன்னார். சரினு அங்கே போய்க் குழாய்களைச் சோதித்து விட்டு என்னை அங்கே பயன்படுத்தச் சொன்னார் ரங்க்ஸ். நானும் சரினு முயலவே ஒரு டம்பளர் தண்ணீர் தான் வந்தது. அங்கேயும் நின்று விட்டது. மறுபடியும் காப்பாளருக்குத் தொலைபேசி! அங்கேயும் வரவில்லைனு சொல்லவே அவர் செக்யூரிடிக்குத் தான் தொலைபேசித் தகவல் தெரிவிப்பதாகச் சொன்னார். நாங்களும் லிஃப்ட் இயங்கவில்லை என்பதால் அப்படியே செய்யும்படி சொன்னோம்.
யுகங்களாகக் கழிந்த அரை மணி நேரத்திற்குப் பின்னர் நீர் சொட்டுச் சொட்டாக வர ஆரம்பித்தது. அப்படியும் நல்ல வேகத்தில் வரவில்லை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பார்த்தோம். அங்கே நீர் கொஞ்சம் வேகமாக வந்தது. அங்கிருந்த கீசரும் நன்றாக வேலை செய்தது. ஆகவே என்னை அங்கே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு வரும்படி ரங்க்ஸ் சொல்ல நானும் சென்றேன். அவர் தான் மட்டும் கீழே இறங்கிப் போய்க் காஃபி வாங்கி வருவதாகச் சொல்ல (இதுக்குள்ளே காலை ஆறு மணி ஆகி இருந்தது) நான் குளிக்கும் திட்டத்தை ஒத்திப் போட்டுவிட்டு நானும் கிளம்பினேன். இருவருக்கும் பலத்த வாத, விவாதம். நீ வரவேண்டாம்னு அவர் சொல்ல, அப்போ எனக்குக் காஃபியே வேண்டாம்னு நான் சொல்ல வேறு வழியில்லாமல் அரை மனதாக அவர் சம்மதிக்க இருவரும் கீழே இறங்கினோம். அன்று ஊர் சுற்றி வேறு பார்க்க வேண்டும். அங்கே எத்தனை இடத்தில் ஏறி இறங்கணுமோ தெரியலை!
யப்பாடி ஒரு மாடிக்கு எத்தனை படிக்கட்டுகள்! இப்படி ஐந்து மாடி இறங்கணுமே! அப்புறமாக் காஃபி வாங்கிட்டு மறுபடி மேலே ஏறணும்! அந்தக் காப்பாளர் இருந்திருந்தா காஃபியோ, டீயோ ஏதோ ஒண்ணு போட்டுக் கொடுத்திருப்பாரே! நம்ம நேரம்! மெல்ல மெல்லக் கீழே இறங்கினோம். இரண்டு மாடி இறங்கிய பின்னர் ஒரு பெண்மணி அங்கே நடைப்பயிற்சி செய்ய அவரிடம் லிஃப்ட் ஏன் இயங்கவில்லை எனக் கேட்டோம். அது இப்படித் தான் அடிக்கடி தகராறு செய்யும் என அவர் சொன்னார். வேலைக்குச் செல்பவர்கள் பலரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். மூச்சு வாங்க ஐந்து மாடியும் இறங்கினோம். அது மட்டுமா? இந்தக் குடியிருப்பு வளாகத்தின் முதல் தளமே வீதியிலிருந்து கிட்டத்தட்ட இருபது அடி உயரத்தில் அமைந்திருந்தது. அதற்கு இறங்க இருபது படிகள்! அவற்றையும் இறங்கியாக வேண்டும். அங்கே இருந்த செக்யூரிடியிடம் லிஃப்ட் இயங்காதது குறித்தும் நீர் வராதது குறித்தும் கேட்டோம். தண்ணீர் வருவதற்கு மோட்டார் போட இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் தான் வரவேண்டும் என்றும் சொன்னதோடு லிஃப்டை சரி செய்ய ஏற்பாடு செய்வதற்கும் இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் வந்தப்புறம் தான் தொலைபேசித் தெரிவித்துக் கம்பெனியில் இருந்து ஆள் வர வேண்டும் எனவும் அதற்குக் குறைந்தது பத்து மணி ஆகும் எனவும் தெரிவித்தார். பின்னர் செக்யூரிடியிடம் காஃபி எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு இருவரும் மெல்ல இறங்கிச் சென்றோம்.
சோதனை மேல் சோதனையாக இருக்கிறதே.....
ReplyDeleteஇதுக்கு மேலே சோதனை எல்லாம் வந்து விட்டன! :(
Deleteஅதென்னவோ தெரியவில்லை. நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் ஏதாவது பிரச்ச்னை இருந்துகொண்டே இருக்கிறதே
ReplyDeleteஎல்லா நேரமும் சௌகரியமும் கிடைக்காதே ஐயா! இதுவும் ஏற்கத் தானே வேண்டும்! :)
Deleteசோதனை மேல் சோதனையா? அந்த அதிகாலை வேதனை ரொம்பவும் சிரமம்தான்!
ReplyDeleteஉண்மை சுரேஷ்!
Deleteஅடடா! ஏன் இத்தனை சோதனைகள்?
ReplyDeleteசமாளிக்கிறோமானு மேலே இருக்கிறவன் பார்த்திருப்பான்! :)
Deleteம்ஹூஉம். என் ஜகனாதன் என்னிடமே இருக்கார்ப்பா. நான் ஐந்து மாடி ஏறுவதாக இல்லை.
ReplyDeleteஹிஹிஹிஹி, இதுக்கே அசந்துட்டா எப்பூடி?
Deleteகாலைக்கடன் ரொம்பவே கடனாகிப் போனது போல??!! ம்ம் ரொம்பவே சோதனை போல..தொடர்கின்றோம் இன்னும் அடுத்து என்ன பயமுறுத்தியது என்பதை....ஆனாலும் சமாளித்திருக்கின்றீர்கள் இறைவனின் அருளால்..
ReplyDeleteஆமாம், அந்த விஷயத்தில் நான் ரொம்பவே ரெகுலர்! :) அன்னிக்குத் தான் நேரத்தில் கடமை ஆற்ற முடியவில்லை! :)
Delete