மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள். மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயெ நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள். ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்.
அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே? இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான்.
இப்போது நாரயணீயத்தில் பட்டத்திரி கூறுவதைப் பார்க்கும் முன் பட்டத்திரி பற்றிய ஒரு சிறு அறிமுகம். கேரளத்தைச் சேர்ந்த மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்சுத பிஷாரடிக்கு வந்திருக்கும் வாத நோயைத் தனக்கு அளிக்குமாறு விரும்பிப் பெற்றுக்கொண்டவர் . பின்னர் நோயின் கடுமை தாங்காமல் குருவாயூரில் இறைவன் சந்நிதியில் 100 நாட்கள் தங்கி ஒரு நாளை ஒரு தசகம் வீதம் 1036 ஸ்லோகங்களை இயற்றினார். ஆரம்பிக்கும் முன்னர் எதில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்தவரைத் துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற எழுத்தச்சனின் கல்வி ஞானத்தையும் எல்லாவற்றுக்கும் மேல் அவரின் பக்தியையும் அறிந்திருந்த பட்டத்திரி முதலில் குழம்பினாலும் பின்னர் தெளிந்தார். பகவானின் மச்சாவதாரம் அவர் மனக்கண்களில் தோன்றியது . பத்து அவதாரங்களையும் பூரணமாக எழுதி நிறைவு செய்ய எண்ணம் கொண்டு முதலில் தன் பிரார்த்தனைகளை பகவத் வைபவம், செளந்தர்யம்,பக்தி லக்ஷணம் ஆகிய முறைகளில் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கிறார். முழுதும் அத்வைதக் கருத்துக்களாகவே காணப்படும் இந்த நாராயணீயம் மிக உயர்ந்ததொரு வேதாந்தமாகக் கருதப் படுகிறது. மேலும் இது முடிவடைந்த நூறாம் நாள் பட்டத்திரியின் வாத நோயும் நீங்கி ஆண்டவனும் தலையசைத்து இவரின் கவிதைகளைப் பாராட்டி திவ்ய தரிசனமும் அளித்தான்.
இதையே நாராயண பட்டத்திரி நாராயணீயத்தில் கூறுவது எப்படி எனில்,
"படந்தோ நாமாநி ப்ரமதபர ஸிந்த்தெள நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா
சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந்
அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸரவாபிலஷிதாந்"
அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இத்தகைய ஆநந்தமயமான வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும்பொருட்டன்று. ஆசைகளே அற்ற பாக்கியசாலிகள் அவர்கள் என்கிறார்.
ஒரு அசட்டுத் தனமான முயற்சி. திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு எழுத முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு அந்தப்பொருள் வரும் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்திருக்கேன். இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மேலே தொடரும். நன்றி.
ஆஹா மாமி தொடருங்கள். என்னை போன்றோர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும்
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDeleteதொடருங்கள் தொடருகிறோம்.
நல்ல பதிவு கீதாம்மா !
ReplyDeleteமார்கழி திங்கள் முதல் நாளில் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்து பதிவு
பிரசாதமா எங்களுக்கு அளித்து சந்தோஷபடுத்தறீங்க!
தொடருங்கள்! அந்த நாராயணன் அனுகிரகம் உங்களை வழி நடத்தட்டும் !
:) திருப்பாவை போட்டி நினைவு வருது..
ReplyDeleteவாங்க எல்கே, நன்றி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, சோபனம் தொடர் முழுசும் படிச்சீங்களா தெரியலை, சகோதரி சுப்புலக்ஷ்மி பத்தி இன்னும் எழுதலை, :( வரவுக்கும், ஊக்கத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாங்க ப்ரியா, நன்றி.
ReplyDeleteபோர்க்கொடி, தெரியும் அதான் நான் இத்தனை நாள் திருப்பாவை கிட்டேயே போகலை. இப்போ வேறொரு குழுமத்தில் நாராயணீயம் பத்திப் பேச்சு வந்தது. நாராயணீயம் எடுத்துப் படிக்கும்போது இப்படிச் செய்தால் என்னனு ஒரு எண்ணம். கொஞ்சம் மாறுபட்டிருக்கணும் என்பதே என் எண்ணமும். :)
ReplyDelete//துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற//
ReplyDeleteஹிஹிஹி மீனை தொட்டுகிட்டு சாப்பிட சொல்லறார்ன்னு நினைச்சேன்!
இப்படியெல்லாம் சில விஷயங்கள் இருப்பதே உங்களாலதான் தெரிய வருது கீதாம்மா. உங்கள் பணி தொடர இறைவன் அருளட்டும்.
ReplyDeleteNice one
ReplyDeleteNice article..
ReplyDeleteபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
ReplyDeleteஎன்று இலக்கணப்படி சரியானாலும், பாடும்போது, படிந்தேலோர் எம்பாவாய்! பாடேலோர் எம்பாவாய் ! என்று பாடவேண்டும்.அப்போதுதான் விளக்கமாக அமையும். ஆனால், இப்போது பாடுகிறவர்களும் ரெம்பாவாய் என்று பாடுகிறார்கள். திருக்குறள் உள்பட தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் மக்கள் புரிந்து கொள்வதற்காக சொற்களைப் பிரித்தே எழுதுகிறார்கள். தயவு செய்து அப்படியே எழுதவும். அது தமிழை உயிர்ப்புடன் திகழச் செய்யும். நன்றி