எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 25, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 2


வெள்ளிக்கிழமையும் வந்தது,  அவசரம், அவசரமாச் சாப்பிட்டுட்டுக் கிளம்பினார்.  ஏன்னா அங்கே போனால் ரிசல்ட் தெரிஞ்சதும் உடனே பணம் கட்டணும்.  அதுக்கு எப்படிச் செய்யச் சொல்றாங்களோ, வரதுக்கு நேரமாச்சுன்னா என்ன செய்யறது! அங்கே போனால் இன்னும் ரிசல்ட்டே வரலைனு சொல்லிட்டாங்க.  சரி, எப்போ வரலாம்னு கேட்டால், சாயந்திரமா எதுக்கும் வந்து பாருங்கனு அலட்சியமா ஒரு பதில். என்ன சொல்ல முடியும்?  பேசாமல் திரும்பி வந்தாச்சு.  சாய்ந்திரமாத் தொலைபேசியில் அலுவலகத்தை அழைத்து இப்போ வரலாமா என்று கேட்டால் எதுக்கும் ஆறு மணிக்கு வந்து பாருங்க.  போட்டாலும் போடுவோம்னு பதில் வந்தது.

அப்போத் தான் எனக்கு நினைப்பு வந்தது, சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்துக்காக இரண்டு வருடங்கள் முன்னாடி நாங்க சிதம்பரம் போனதும், அங்கே அருமையான தரிசனம் கிடைத்ததும்.  உண்மையே.  சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்துக்காகச் சிதம்பரம் வரோம்னு எங்க கட்டளை தீக்ஷிதர் கிட்டேச் சொன்னதும்,அவர் எங்களுக்காக லாட்ஜில் நாங்க கேட்டுக் கொண்டதன் பேரில் தங்குமிடம் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்.  மற்றபடி உள்ளே அழைத்துக்கொண்டெல்லாம் செல்ல முடியாது என்பதைத் தெளிவாக்கி விட்டார். ஏனெனில் எங்களுக்கு அந்தச் சலுகையைக் கொடுத்தால், பின் அவரிடம் கட்டளை வைத்திருக்கும் அனைவருக்கும் அதே போல் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே யாருக்கும் எந்தவிதச் சலுகையும் கிடையாது எனக் கூறிவிட்டார்.  அதே போல் கோயிலின் அனைத்து தீக்ஷிதர்களும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர்.  எந்தவிதமான விஐபிக்கோ, விவிஐபிக்கோ அங்கே சலுகைகள் கிடையாது.  அன்றன்றைக்குக் கட்டளை நடத்தும் கட்டளைதாரர்கள் தவிர மற்றவர் யாரும் சந்நிதிக்கு அருகே வர முடியாது.  பொதுமக்களில் முன்னால் வந்து இடம் பிடித்துக்கொண்டவர்கள் இருக்கலாம்.  மற்றபடி உள்ளே நுழைய முடியாதவர்கள் வெளியே இருந்து பார்த்துக்கொள்ளலாம்.

http://sivamgss.blogspot.in/2010/12/blog-post_27.html  ஆருத்ரா தரிசனம் குறித்த வர்ணனைகளை இந்தத் தலைப்பில் உள்ள பதிவுகளில் காண முடியும்.  வெளியே இருந்து பார்ப்பவர்களும் எந்தவிதமான தள்ளுமுள்ளோ கூட்டத்தின் நெரிசலோ இல்லாமல் பார்க்க முடிகிறது.  நடராஜர் வரும் வழியில் இரு பக்கமும் பொதுமக்கள் ஒதுங்கி நின்று பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.  அங்கே பொதுமக்கள் கூட்டமாக நின்றாலும் அனைவருக்கும் தெரியும் வண்ணமே நடராஜர் ஆடிக்கொண்டே செல்வார்.  நடராஜரைச் சுற்றி வரும் கூட்டம் தாங்க முடியாத அளவில் எல்லாம் இருக்காது.  திருவிழாக் கூட்டம் என்னமோ தாங்க முடியாமல் தான் இருக்கும்.  ஆனாலும் தடுப்புக்களோ, தர்மதரிசன வரிசை தனி, ஐம்பது ரூபாய் சீட்டுக்குத் தனி, 300 ரூபாய்க்குத் தனினு கம்பி கட்டிப் பிரிச்செல்லாம் போட்டிருக்க மாட்டார்கள்.  அனைவருக்கும் சிறப்பு தரிசனமே.  யாரையும் வரிசையில் மணிக்கணக்காய் நிறுத்திக் காக்க வைத்துத் துன்புறுத்தாமல் அனைவரும் ஒரே சமயத்தில் அழகாய்ப் பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.  தினசரி சுற்றுலாவாக வரும் மக்களும் சரி, உள்ளூர் மக்களும் சரி, நடராஜரைத் தரிசிக்க எந்தவிதக்கட்டணமும் கிடையாது.  தாராளமாகச் சென்று பார்க்கலாம்.  கனகசபையில் ஏறிப் பார்க்க மட்டும் உள்ளூர் தீக்ஷிதர்கள் அனுமதியின் பேரில் தான் செல்ல முடியும்.  ஆனால் கீழே நின்றாலே நடராஜர் திவ்ய தரிசனம் தருவார்.  யாரும் மறைக்க மாட்டார்கள். போ, போனு விரட்டவும் மாட்டார்கள்.  அங்கேயே இருந்து நிதானமாகக் கால பூஜைகள் கூடப் பார்க்கலாம்.  உள்ளே சென்று தரிசனம் செய்ய எந்தவிதமான வரிசைகளும் இருக்காது.  கட்டணமும் கிடையாது. 

ஆனால் இங்கேயோ தினசரி தரிசனத்தில் கூட ரங்கநாதரைத் தரிசிக்க இயலாது.  கட்டணம் என்பதோடு மட்டுமில்லாம் கூட்டம் வேறே.  அரை நிமிஷம் தான் பெருமாளைப் பார்க்க முடியும்.  பிடிச்சுத் தள்ளிடுவாங்க.  திருப்பதியில் தள்ளுகிறாப்போல் இங்கேயும் தள்ளுவாங்க.  என்ன ஒரே வித்தியாசம்னா திருப்பதியில் காவல்துறை தள்ளிவிடும்.  இங்கே அந்த வேலைகளை ஒரு பட்டாசாரியாரே செய்வார். இவங்களோட கெடுபிடி இல்லைனா மக்கள் பாட்டுக்குத் தரிசனம் செய்து விட்டுச் செல்வார்கள்.  இதைவிடக் கூட்டம் அதிகமான சபரிமலையில் எல்லாம் எல்லாரும் நன்றாக தரிசனம் செய்கிறார்கள்.  இன்னும் பல கோயில்கள் பார்த்திருக்கேன்.  பண்டர்பூரில் பண்டரிநாதனைத் தொட்டுத் தடவி தரிசிக்க இயலும். பணம் கொடுத்தால் பிரசாதம் கிடைக்கும் என்பது ஒன்று மட்டுமே அங்கேயும், இங்கேயும் உள்ள வித்தியாசம்.  மற்றபடி பண்டர்பூரிலும்  தள்ளிவிடுதல் கிடையாது.  நாசிக், பஞ்சவடி, ஷிர்டி, உடுப்பி, மூகாம்பிகை, மந்த்ராலயம், அம்பாஜியில், துவாரகையில், சோம்நாத்தில், காசியில் எனப் பல ஊர்களைப் பார்த்தாச்சு.  குருவாயூரில் மட்டும் உள்ளூர் மக்கள் நம்மை முந்திக்கொண்டு செல்வார்கள்.  மற்ற ஊர்களில் எங்கேயும் கோயில்களுக்குச் சென்றால் எந்தவிதமான தடையும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.  ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலும், (சிதம்பரம் நீங்கலாக) நாம் கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என்பதோடு கட்டண தரிசனமும் அரை நொடி மட்டுமே.  இதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த வடநாட்டு யாத்ரிகர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.

பொதுவாக குஜராத்திலேயே எந்தக் கோயில்களுக்குச் சென்றாலும் பெண்களுக்கு எனத் தனிவழி வைத்திருப்பார்கள்.  அது அனைவரும் பார்க்கும் பொது தரிசன மேடைக்கு முன்னாலேயே அமைந்திருக்கும்.  இதன் மூலம் ஆண்கள் தொந்திரவோ, அவர்கள் மறைப்பார்கள் என்பதோ இல்லாமல் பெண்கள் பார்க்க முடியும் என்பதோடு ஒவ்வொருவரும் மற்றவர் முன்னே நின்று பார்க்கவும் இடம் விட்டு, அனுசரித்து நடப்பார்கள் என்பதையும் கூற வேண்டும்.  ஆண்களோடு சேர்ந்தும் பெண்கள் தரிசனம் செய்ய எந்தத் தடையும் இல்லை.  என்றாலும் தனியாக ஒரு வழி எல்லாக் கோயில்களிலும் கட்டாயமாய் இருக்கும்.  கிருஷ்ணன் பெண்களுக்குப் பிரியமானவன் என்பதால் கிருஷ்ணன் கோயில்களில் எல்லாம், அதுவும் முக்கியமாய துவாரகையில் பெண்களுக்கே முன்னுரிமை.  தள்ளு, முள்ளு இல்லாத முன்னுரிமை.  இது குஜராத்தில் மட்டுமே நடக்கும்.

9 comments:

  1. உங்கள் வருத்தம் வரிகளில் நன்கு தெரிகிறது. வருத்தமான விஷயம்தான். இதை ஏன் எல்லோரும் சேர்ந்து முகநூலிலோ வேறெங்காவதோ மாற்றுவதற்கு முன் எடுத்து முயற்சி எடுக்கக் கூடாது?

    ReplyDelete
  2. இப்பல்லாம் கோவிலுக்கு போகனும்னே தோனமாட்டெங்கரது என் அனுபவம் வந்து பாருங்க்.



    http://echumi.blogspot.in/2011/08/blog-post.html

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீராம், இதெல்லாம் நிற்க வேண்டும் எனில் கோயில்களை, அரசு, பல நபர்கள் கொண்ட தேவஸ்தானக் கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு அவர்கள் ஆன்மிகவாதிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும். இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இதைப் பற்றி ஏற்கெனவே நிறையச் சொல்லிட்டேன். :(

    ReplyDelete
  4. வாங்க லக்ஷ்மி, போய்ப் பார்க்கிறேன். நன்றிங்க.

    ReplyDelete
  5. பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 2

    சிறு வயதில் பார்த்த நினைவுகளில் மட்டும் ..!

    ReplyDelete
  6. இந்த மாதிரி உற்சவ விசேஷ தினங்களில் எங்களுக்கெல்லாம் டி.வி.யே ஊடகக் கோயில்; அதன் மின் திரையே தரிசனப் படுதா!திரை ஒளிர்ந்ததும் நெரிசலிலா தரிசனம்! நிகழ்ச்சி வர்ணனையாளர்களும் அந்தந்த உற்சவ நிகழ்விடங்களுக்கே கூட்டிச் சென்று விடுகின்றனர் என்பதையும் மறக்காமல் சொல்லத்தான் வேண்டும்.

    ReplyDelete
  7. வாங்க ராஜராஜேஸ்வரி, பெரும்பாலும் நானும் கூட்டமான கோயில்களைத் தவிர்ப்பேன். இந்த வருஷம் தவிர்க்க முடியவில்லை. :((

    ReplyDelete
  8. ஜீவி சார், இங்கேயும் அப்படித்தான். இந்த வருஷம் ரிஸ்க் தான் எடுத்தோம். :)))))

    ReplyDelete
  9. //அதே போல் கோயிலின் அனைத்து தீக்ஷிதர்களும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். // - மிக ஆச்சர்யமான செய்தி.

    //தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலும், (சிதம்பரம் நீங்கலாக) நாம் கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என்பதோடு கட்டண தரிசனமும் அரை நொடி மட்டுமே// - இது தவறு. நான் இந்த முறை கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள எல்லா திவ்யதேசங்களிலும் (மற்றும் சிவன் கோவில்களிலும், பட்டீஸ்வரத்திலும், ஐவர்பாடியிலும்) தரிசனம் செய்தேன். எங்கேயும் தரிசனத்துக்கு நான் ஒரு பைசா கொடுக்கவில்லை. எங்கேயும் கிளம்புங்கள் என்று சொல்லவில்லை. இன்னும் சேவியுங்கள் என்றுதான் சொன்னார்கள். நீங்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோவில்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete