2015 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் என் தங்கை (சித்தி பெண்) கணவரின் சஷ்டிஅப்தபூர்த்திக்குச் சென்றோம். பின்னர் அங்கிருந்து நாகர்கோயில் வந்து அங்கே சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்னர் கன்யாகுமரிக்கும் போனோம். பின்னர் கன்யாகுமரியிலிருந்து ஶ்ரீரங்கம் வந்தோம். நாகர்கோயிலில் பத்மநாபபுரம் அரண்மனை தவிர்த்துத் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். சுமார் 3000 ஆண்டு பழமையான இந்தக் கோயிலில் சுமார் 500 வருடங்களாகக் கும்பாபிஷேஹமே காணாமல்.திருப்பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்திருக்கிறது. இப்போது தான் ஆன்மிகப் பெரியோர்கள் சேர்ந்து திருப்பணிக்கும் கும்பாபிஷேஹத்துக்கும் முயற்சிகள் பல செய்து நாங்க போன சமயம் திருப்பணி ஆரம்பித்து மிக மெதுவாக/உண்மையிலேயே மிக மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்றாலும் மூலவரைத் தரிசிக்கப் பிரச்னை ஏதும் இல்லை. பின்னர் வந்த நாட்களில் சந்நிதி மூடப்பட்டதாக அறிந்தோம். அப்போப் போன அனுபவங்களே கீழ்க்கண்ட பதிவில் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். முன்னர் எழுதின அதன் சுட்டிகளும் மேலே கொடுத்திருக்கேன். இப்போக் கும்பாபிஷேஹம் ஆகி அதன் விபரங்கள் எல்லோரும் பகிர்ந்து வருவதால் கோயில் பற்றியும் ஆதிகேசவப் பெருமாள் பற்றியும் அனைவரும் அறிய வேண்டி மீண்டும் இங்கேயும் முக்கியமான பதிவை மட்டும் பகிர்ந்திருக்கேன்.
படம் நன்றி கூகிளார்
நேற்று (இந்தப் பதிவு எழுதிய வருஷத்தில்) எழுதிய பதிவில் கேஷுவின் வலக்கரம் சின்முத்திரை காட்டுவதாக எழுதி இருந்தேன். ஆனால் அது தப்புனு கேஷுவோட படத்தோடு விளக்கம் அளித்திருக்கிறார் நாகர்கோயில்காரர் ஆன திரு கண்ணன் ஜே.நாயர். நாகர்கோயில்க் காரர் ஆன அவர் சின்முத்திரை தக்ஷிணாமூர்த்திக்கே உரியது என்றும் இது சின் முத்திரை இல்லை, யோகமுத்திரை என்பார்கள் என்றும் எழுதி இருக்கிறார். கோயிலில் தரிசனத்தின் போது பட்டாசாரியார் (போத்திமார்) சின்முத்திரை என்றே சொன்னதாக நினைவு. கையில் குறிப்புப் புத்தகங்கள் ஏதும் இல்லை. மனதில் குறித்துக் கொண்டது தான். தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் தேடிப் பார்த்தபோது விக்கி பீடியாவில் சின்முத்திரை என்றே இருக்கிறது. தினமலர் கோயில் பக்கத்தில் முத்திரை என்று மட்டுமே போட்டிருக்கின்றனர். இன்னொரு வலைப்பக்கம் யோகமுத்திரை என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே அதன் பின்னர் படங்களைத் தேடி எடுத்துப் பெரிது படுத்திப் பார்க்கையில், நாமெல்லாம் "டூ" விட்டால் "சேர்த்தி" போடுவோமே அது போல் விரல்களை வைத்திருக்கிறார் கேஷு! ஆக நம்மோடு சேர்த்தி தான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முத்திரையின் அர்த்தமே வேறே. இதற்குத் தத்துவ ரீதியாக அர்த்தமே வேறாகும். சுவகரண முத்திரை என்பதை நம் தோழி எழுதிய முத்திரைகள் குறித்த பதிவில் படித்திருக்கிறேன். அதை உறுதியும் செய்து கொண்டேன். ஆகத் தவறாகச் சின் முத்திரை எனக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும். இப்போது கோயிலின் தலவரலாறு.
பிரம்மா யாகம் செய்யும்போது தவறு நேரிட கேசன், கேசி ஆகிய இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க வேண்டித் திருமாலை வேண்ட, அவரும் கேசனை அழித்துக் கேசியின் மேல் பள்ளி கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும், தாமிரபரணி நதியையும் திருமாலை அழிக்க வேண்டி அழைக்க, பூமாதேவி அந்த இடத்தை மேடாக்கினாள். கங்கையும், தாமிரபரணியுமோ திருமாலை வணங்கி அவரைச் சுற்றிக் கொண்டு வட்டமாக ஓடத்தொடங்கினார்கள். திருமாலைச் சுற்றி வட்டமாக ஆறுகள் இரண்டும் ஓடியதால் "வட்டாறு" என அழைக்கப்பட்ட இடம், திருவும் சேர்ந்து திருவட்டாறு எனப்படுகிறது.
//வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை
பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.//
நம்மாழ்வார்
என நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். கேசனை அழித்ததால் கேசவன் என இவரை அழைக்கின்றனர். கேசியோ தப்ப முயற்சி செய்தான். 12 கைகளுள்ள அவன் தப்ப முயன்ற போது கேசவப் பெருமாள் அவன் கைகளில் 12 ருத்ராக்ஷங்களை வைத்துத் தப்பவிடாமல் தடுத்தார். இந்தப் பனிரண்டு ருத்ராக்ஷங்கள் இருந்த இடமே திருவட்டாறைச் சுற்றி இருக்கும் 12 சிவன் கோயில்கள். மஹாசிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் 12 சிவாலயங்களையும் தரிசித்த பின்னர் திருவட்டாறுக்கு வந்து இங்கே கேஷுவின் காலடியில் உள்ள சிவனையும் தரிசித்துச் செல்வார்கள். இங்கே பெருமாளின் நாபியில் இருந்து தாமரையோ, பிரம்மாவோ கிடையாது. இவரை திருவனந்தபுரத்து அனந்துவுக்கு அண்ணன் என்றும் சொல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரைக்கும், பின்னர் பங்குனி மாதம் அதே 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை சூரியனின் அஸ்தமன கதிர்கள் இந்தப் பெருமாளின் மேல் படும் என்கின்றனர்.
கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது,கைடபர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். இங்கேயும் ஒரு ஒற்றைக்கல் மண்டபம் உண்டு. கோயிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் உள்ள தூண்களில் தீப லக்ஷ்மியின் சிலைகள் காணப்படுகின்றன. (படம் எடுக்க அனுமதி இல்லை) கோயிலின் கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டில் தமிழில் பொறித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாளை திருவோணம் இந்தக் கோயிலின் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதைத் தவிரவும் ஐப்பசி, பங்குனித் திருவிழா, தை மாசம் கள பூஜை ஆகியன பிரசித்தி பெற்றது ஆகும்.
முதலில் படம் எடுக்கலாம்னு நினைச்சுப் பிரகாரங்களைத் தூரத்துப் பார்வையில் படம் எடுத்தேன். அங்கிருந்த அறநிலையத் துறை அதிகாரி பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுத்தார். ரொம்பவும் ரகசியமாவெல்லாம் எடுக்க இஷ்டமில்லை. பார்த்துட்டாங்கன்னா காமிராவைப் பிடுங்கி அழிப்பாங்க. அதிலே ஏற்கெனவே எடுத்ததும் போயிடும். ஆகையால் நிறுத்திட்டேன். பிரகாரம் இப்படித் தான் நீளமாகப் போகிறது. இந்தக் கோயில் திருவனந்தபுரம் அனந்துவோட கோயிலை விடப் பழமையானது என்றும் கிட்டத்தட்ட 3000 வருடப் பழமையான ஒன்று என்றும் சொல்கின்றனர்.
கோயிலின் தோற்றம், பக்கவாட்டுப் பார்வையில்
அங்கிருந்த அறிவிப்புப் பலகை! இதைப் படம் எடுக்க மட்டும் அனுமதி கொடுத்தாங்க. :)
சயனத்திருக்கோலத்தில் இருக்கும் பல பெருமாள் விக்ரஹங்களும் பொதுவாக வலப்பக்கம் இருக்கும் சயனத்திருக்கோலத்திலேயே காணப்படுவார்கள். இது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர்
பெரிய எழுத்தில் இருப்பவை இன்று/இப்போது எழுதியவை. மற்றவை பழைய பதிவின் மீள் பதிவு. நன்றி.
தலவரலாறு தகவல்கள் அறிந்தேன்.
ReplyDeleteபுகைப்படங்கள் காணொளி போலவே சிம்பல் இருக்கிறது.
புகைப்படங்களில் அது ஏதோ தப்பா வந்திருக்கு கில்லர்ஜி. எடுக்கணும்னு நினைச்சேன். முடியலை.
Deleteஎன்னிடம் தெரிவித்திருந்தால் படங்கள் அனுப்பியிருப்பேன். ஊர் வந்தபிறகு அனுப்பறேன்.
ReplyDeleteபரவாயில்லை, இருக்கும் படங்கள் போதும். சிரமப்படாதீர்கள்! :)))) இப்போ எங்கே வாசம்?
Deleteசிவபெருமான், காலடியில் இருக்காரா? அப்படி ஒன்றும் கிடையாதே
ReplyDeleteவட்டமா ஓடுவதால் வட்டாறா? புதிது புதிதாக கண்டுபிடிக்கறீங்களே. வாட்டாறு
//இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.//
Deleteவாட்டாறு எனச் சங்ககாலப் பெயர் இருப்பதையும் மன்னன் ஒருவன் இருந்ததையும் குறித்துக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாததால் குறிப்பிடவில்லை. நம்மாழ்வார் பாசுரத்தில் "வாட்டாறு" என்றே வந்திருப்பதாகவும் அறிந்தேன். மேலே உள்ள பாசுரமும்"வாட்டாற்றானடி" என்றே ஆரம்பிக்கிறது அல்லவா?
Deleteசிவபெருமான், காலடியில் இருக்காரா? அப்படி ஒன்றும் கிடையாதே
ReplyDeleteவட்டமா ஓடுவதால் வட்டாறா? புதிது புதிதாக கண்டுபிடிக்கறீங்களே. வாட்டாறு
எங்களிடம் கோயிலில் வழிபாடுகள் நடத்திய போத்திமார்கள் கூறியதையே எழுதினேன். எனக்குத் தெரிந்து பலரும் அப்படித்தான் சொல்கின்றனர்.
Deleteஅதிலும் குறிப்பாக அந்த இடத்தில் ஆரத்தியைக் காட்டிக்கொண்டே சொன்னார்.
Deleteஏழு வருடங்கள் ஆகிவிட்டன போயிட்டு வந்து. இது அப்போ எழுதின பதிவு தான். இங்கே மீள் பதிவாய்க் கொடுத்திருக்கேன்.
Deleteவிரிவான தல வரலாறு அறிந்துகொண்டோம் சிறப்பான தலம்.
ReplyDeleteலிங்க் தனி ஜன்னலில் திறக்குமாறு அமைத்தால் வசதியாய் இருந்திருக்கும். இரண்டு பழைய பதிவுகளுக்கும் போய் பார்த்தேன். இரண்டுமே படித்துக் கருத்திட்டிருக்கிறேன்.
ReplyDeleteமுன்னேயே ஒருதரம் கேட்டிருந்தீங்க. எனக்கு அதெல்லாம் எப்படினு தெரியலை. லிங்குக்கான ஐகானில் சுட்டியைக் கொடுத்து அப்ளை கொடுப்பேன்.
Deleteமிகவும் பழமையான கோவில் என்பது மிகவும் ஆச்சர்யம். எப்படி இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் விட்டார்கள் என்பதும் ஆச்சர்யம். 2015 ல் சென்று வந்திருக்கிறீர்கள். அப்போதிலிருந்து வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன.. ஆனால்.
ReplyDeleteஆமாம், கோயிலை யாருமே கவனிக்காமல் போய் உள்ளூர்க்காரர் ஒருத்தர் தான் வெளிநாட்டில் இருந்து வந்து புனர் உத்தாரண வேலைகளை ஆரம்பிச்சிருக்கார். அதுவும் 2014 ஆம் ஆண்டு. மெல்ல மெல்ல ஆரம்பிச்சு இப்போத் தான் முடிச்சிருக்காங்க. மூலவரைப் பதப்படுத்தவே மூன்றாண்டுகள் தேவைப்பட்டது என்கின்றனர்.
Deleteஅவர் கையில் என்ன முத்திரை வைத்திருக்கிறார் என்று பார்க்க முடியவில்லை. அவை பற்றி அப்போதே திவாண்ணாவும் அப்பாதுரையும் கேட்டிருந்திருக்கிறார்கள்.
ReplyDeleteவலக்கை ஆள்காட்டி விரல்/சுண்டு விரல் நீட்டியவண்ணம் மற்ற இரண்டு விரல்களின் மேல் கட்டை விரல் மூடியவண்ணம் இருக்கும். குழந்தைகள் "டூ" விட்டப்புறமா "சேர்த்தி" போட்டுக்கக் காட்டுமே அது.
Deleteநாகர்கோவிலில் படித்த காலத்தில் சுசீந்திரம் தவிர திருவட்டார் சென்றதில்லை. உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteதுளசிதரன்
திருவட்டாரெல்லாம் எனக்கும் கேள்வி ஞானம் தான். போனப்புறமாத்தான் பல விஷயங்களும் தெரிய வந்தன.
Deleteஹை கீதாக்கா எங்க ஊர்க் கோவில் பத்தி...சூப்பர்!!! பல முறை சென்றிருக்கிறேன்...திற்பரப்பு அருவி சென்றால் இதுவும் உண்டு. பத்மநாபர் ஷேத்திரம் அளவு இங்கு மக்கள் அதிகம் இருந்ததில்லை அப்போது. இப்ப எப்படியோ தெரியவில்லை.
ReplyDeleteகீதாக்கா காணொளிகள் புகைப்படங்களாகவே இருக்கு ...காணொளிகள் இல்லை, பரவால்ல அதனால..
திருவட்டாறு - பெயர்க்காரணம் நீங்கள் சொல்லியிருப்பதுதான்...எங்க ஊரைப் பாடிய நம்மாழ்வார்தான் இதையும் சொல்லியிருக்கிறார்...
எங்கள் ஊர் பெருமாளும் கடுகு சர்க்கரை தான் மூலவர். அதனால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. எங்க ஊர்ல யாரேனும் குளிக்காம இருந்தா, ' என்னடா திருவாழிமார்பானா' என்று சொல்வாங்க....
படங்கள் எடுக்க அனுமதி கிடைத்திருக்காதே...விட்டாங்களா?
கீதா
அவை காணொளிகளே இல்லை தி/கீதா. முன்னால் கில்லர்ஜிக்குச் சொல்லி இருப்பேன் பாருங்க. படங்கள் எடுக்க அனுமதியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படம் என்ன அங்கே இருந்தப்போப் பப்படம் கூடக் கிடைக்கலை! :(
Deleteமுந்தைய பதிவுகளும் வாசித்தேன் கீதாக்கா
ReplyDeleteகீதா
நன்னி, நன்னி. நன்னியோ நன்னி.
Deleteஅக்கா இந்த முத்திரையத்தானே பாபா முத்திரை என்று ரஜனி ஒரு படத்தில் காட்டுவார்....
ReplyDeleteஇது யோக முத்திரைதான்..
கீதா
தெரியலையே தி/கீதா. நான் ரஜினி படம் தொலைக்காட்சியில் வந்தவை மட்டும் பார்த்திருக்கேன். பிடிச்சது முள்ளும் மலரும்/ஆறு முதல் அறுபது வரை. வீரானோ என்னமோ ஒரு படம் பாதி பார்த்தேன். இரு கதாநாயகிகள். மீனாவும் ரோஜாவுமா? அப்படித்தான் போல! முடிவு தெரியாது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இந்தப் பதிவுக்குத்தான் மாலையில் மீண்டும் படித்து விட்டு கருத்துக்கள் தரலாம் என வந்தேன். ஆனால் தங்கள் பதிவாக( காலையில் இதைப்படித்தேன்) வேறு புது பதிவை காட்டியது. இப்போது அதையும் படித்து விட்டு அதற்கும் கருத்து தந்து விட்டு இதற்கும் வந்துள்ளேன்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் ஸ்தல வரலாறு, முத்திரை விபரம், கோவிலின் காட்சி படங்கள் அனைத்தையும் பார்த்து தெரிந்து கொண்டேன். மிக விபரமாக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். மேற்கண்ட இரு சுட்டிக்கும் சென்று படித்து வந்தேன். பழமையான பெரிய கோவிலையும். 22அடி நீள அனந்த சயன கோலத்திலிருக்கும் பெருமாளையும் சேவித்து கொண்டேன்.
இது போன்ற பெரிய கோவில்கள் என்றில்லை, சிறிய கோவில்களில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கிறார்கள். ஆனால் அங்கு படங்கள் எடுத்து விபரமாக யூடியூப்பில் வருகிறது. அதன் விபரம் என்னவென்று தெரியவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து இப்போது இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைப் பெற்றது குறித்து மிகவும் சந்தோஷம். அதையும் யூடியூப்பில்தான் பார்த்து தரிசித்து கொண்டேன். ஸ்ரீமன்நாராயணன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோவிலின் தல வரலாறு அருமை.
ReplyDeleteபடங்கள் செய்திகள் அருமை.