எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 31, 2022

பிள்ளையாரும் கிருஷ்ணனும் பட்ட பாடு!

இந்த வருஷம் கோகுலாஷ்டமிக்கு பக்ஷணங்கள் வெளியே வாங்கினாலும் நிவேதனத்துக்கு எனக் கொஞ்சமாக முறுக்கு, தட்டை, கர்ச்சிக்காய், பாயசம், வடை, திரட்டுப்பால் ஆகியவை செய்தேன். அன்றே உடம்பு சரியில்லாமல் இருந்தது அதுக்கப்புறமா சுமார் ஒரு வாரம் வயிறும்/உடம்பும் மாறி மாறிப் படுத்தல். இந்த அழகில் காலில் வேறே வீக்கம் மறுபடி ஆரம்பிச்சது. குழந்தைங்க வந்திருக்கும்போது இப்படி இருக்கேனு நினைச்சுக் கொண்டே இருந்தோம். சாப்பாடு ஓரிரு நாட்கள் மருமகள் பண்ணினாலும் வந்த இடத்தில் வேலைச்சுமைகளை ஏற்ற வேண்டாம்னு காடரர் மூலமா சாப்பாடு ஏற்பாடு பண்ணச் சொன்னேன். வீட்டில் சாதம் மற்றும் ஏதேனும் காய் மட்டும் மருமகள் பண்ணிடுவாள். அவங்க ஊருக்குப் போகும் இரண்டு நாட்கள் முன்னர் குலதெய்வம் கோயிலுக்குப் போனப்போக் கூட நான் போகலை. என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. அலைச்சல் ஒத்துக்காது என்பதோடு வயிறு நிலைமையும் இரண்டுங்கெட்டானாக இருந்தது. புழுங்கலரிசிக் கஞ்சி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  கோகுலாஷ்டமி அன்னிக்குப் படமெல்லாம் எடுக்க முடியலை. என்ன செய்ய முடியும்? பையர்/குஞ்சுலு ஆகியோருக்கும் ஜூரம். இரண்டு நாட்கள் கழிச்சு மருமகளும் படுத்துக் கொண்டாள். :( வீடு முழுக்க மருத்துவர் சிகிச்சையாக இருந்தது. கடைசியில் உடம்பு கொஞ்சம் சரியானது. எல்லோரும் திங்களன்று மடிப்பாக்கம் கிளம்பிப் போனாங்க. இன்னிக்கு நைஜீரியாவுக்கு விமானம் ஏறப் போறாங்க. நைஜீரியா நேரப்படி வியாழனன்று மதியம் போய்ச் சேருவாங்கனு நினைக்கிறேன்.


அப்பம், வடை, கொழுக்கட்டை, இட்லி வகைகள், பாயசம், சாதம், பருப்பு நெய்யுடன்



நெல்லையை நினைத்துக் கொண்டே ராமர் படத்தில் பிரதிபலிப்பு விழாதவண்ணம் பக்கவாட்டில் நின்று கொண்டு ஒரு படம்.
 


பூஜை முடிஞ்சு தீபாராதனை.


இன்னிக்குப் பிள்ளையார் சதுர்த்திக்கு நல்லபடியா எல்லாம் பண்ணணுமேனு ஒரே திகைப்பு! காலையில் அதற்கேற்றாற்போல் வேலை செய்யும் பெண்மணி ஒரு மணி நேரம் தாமதம். மடமடவென சமையலறை, பூஜை அறை ஆகியவற்றை மட்டும் பெருக்கித் துடைத்துவிட்டுக் குளிச்சுட்டு வந்து வேலைகளை ஆரம்பிச்சேன். முடிச்சுட்டுக்கொழுக்கட்டை வேலைகளைச் செய்தேன். பனிரண்டு தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை, பனிரண்டு உளுந்துப் பூரணக் கொழுக்கட்டை பண்ணுவதற்குள்ளாக மணி பதினொன்று ஆகிவிட்டது. வடை நான்கு அப்பம் நான்கு தட்டி நிவேதனத்துக்குனு வைச்சுட்டு அடுப்பை அணைச்சுப் பின்னர் மத்தியானமாப் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் எழுந்து வந்து பூஜையில் கலந்துக்கவே முடியலை. கால்களெல்லாம் நடுக்கம். உடலில் ஓர் பதட்டம். எதையாவது கீழே போட்டுடுவேனோ அல்லது நானே விழுந்துடுவேனோனு பயம். சாப்பிட உட்கார்ந்தால் ஒரு பிடி கூட இறங்கவில்லை. ஒரு கைப்பிடி சாதத்தில் ரசத்தை விட்டுச் சாப்பிட்டுவிட்டு ஒரு கரண்டிப் பாயசமும் சாப்பிட்டுவிட்டு எழுந்தால் முடீயவே இல்லை. சட்டுனு மனதில் ஏதோ தோன்றி ரங்க்ஸிடம் சொல்லிட்டுச் சாப்பாடு மிகுந்தது மற்றும் கொழுக்கட்டை மாவு, பூரண வகைகள், வடை மாவு, அப்பம் மாவு எல்லாவற்றையும் வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துட்டுப் போய்ப் படுத்துட்டேன். 3 மணி வரையிலும் கால்களில் எண்ணெயைத் தடவிக்கொண்டு ஓய்வில் இருந்த பின்னர் எழுந்து வந்து அடுப்பைச் சுத்தம் செய்து சமையலறை சுத்தம் செய்து கோலம் போட்டுவிட்டுக் காஃபி த்யார் செய்தேன். இரவுக்குக் காலை சாதமும் இட்லியும் இருக்கு. அதை வைச்சு ஒப்பேத்திடலாம். 

Monday, August 22, 2022

தாத்தாவுக்கு வெண்டைக்காய் நகைகள்


 



நான் வயிற்றுத் தொந்திரவால் எழுந்திருக்காமல் படுத்திருந்தப்போ, அப்புறமா மருத்துவரிடம் போயிட்டு வந்தப்போ எல்லாம் என்னை எப்படி இருக்குனு கேட்டுக் கொண்டே இருந்தது. அதோடு இல்லாமல் எனக்காக get well soon   என்று பூக்களால் படம் வரைந்து எழுதியும் கொடுத்திருக்கு.




அவங்க அம்மா சமைக்கையில் தாத்தா வெண்டைக்காய் நறுக்கிக் கொடுத்தார். அப்போத் தாத்தாவுக்கு வெண்டைக்காயால் அலங்காரம் செய்து பார்த்துவிட்டுச் சிரிக்கிறது. இப்போ முடியாமல் படுத்திருப்பதைப் பார்த்தால் கஷ்டமா இருக்கு.


ஒரு வாரமாக வயிறு வழக்கம்போல் தன் வேலையைக் காட்டி விட்டது. அதோடு கோகுலாஷ்டமியும் வந்து விட்டுப் போயாச்சு. படங்கள் எல்லாம் எடுக்கவே இல்லை. குட்டிக் குஞ்சுலு நான் கோலம் போட்டுவிட்டுக் காய்ந்த பின்னர் காவி இடும்போது தானும் கூடவே வந்து நான் இடுவதைப் பார்த்துக் கொண்டு அதே போல் தானும் காவி இட்டு உதவி செய்தது. அப்புறமாத் தாத்தாவுடன் எங்கள் தளத்தில் எல்லாருடைய வீட்டையும் பார்த்துக் கால் வைச்சிருப்பதையும் கிருஷ்ணா உம்மாச்சியின் பிறந்த நாளை ஏன் இப்படிக் கால் வைச்சுக் கொண்டாடுகிறாங்க என்றும் கேட்டுக் கொண்டது.  அன்னிக்குத் தான் கொடைக்கானலில் இருந்து திரும்பி இருந்ததால் அதோட அப்பாவுக்கு ஜுரம். போன தரம் வந்திருக்கும்போதும் ஜூரம். இன்னிக்கு இப்போது குஞ்சுலுவுக்கும் நல்ல ஜுரம். 



 



Tuesday, August 16, 2022

குஞ்சுலு அப்டேட்ஸ்

சின்னச்சிட்டு/குட்டிக் குஞ்சுலு வந்ததில் இருந்து சரியா இருக்கு வேலைகள் எல்லாம். காலம்பரப் பால் குடிப்பதில் இருந்து மத்தியானம் சாப்பிடும் வரைக்கும் பிடிவாதம். இரண்டு நாளைக்குச் சமர்த்தாகத் தலை வாரிப் பின்னிக் கொண்டது. அப்புறமா அதோட இஷ்டப்படி பின்னலைனு என் கிட்டேக் கோபம். வரமாட்டேன்னு சொல்லிடுத்து. பூ வைச்சுக்க மட்டும் என்னிடம் வரும். தாத்தாவோடு பசில்ஸ் விளையாட்டெல்லாம் விளையாடும். நம்ம வீட்டுக் கூடத்தின் டைல்ஸ் இரண்டுக்கு இரண்டு எனப் பெரிசா இருக்கா! அதுக்குப் பாண்டி விளையாடத் தோதாக இருக்கு. சில்லாக்கு ரோஜாப் பூவின் இதழ்கள். அதைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தாத்தாவோடு பாண்டி ஆடும். ஒரே கொட்டம் தான். அதுக்கப்புறமாக் களைச்சுப் போய்க் கொடுக்கும் பாலை ஒரே மூச்சாகக் குடிச்சுடும்.

நடு நடுவில் அவங்க அம்மாவோ/அப்பாவோ ஆங்கில வார்த்தைகள் டிக்டேஷன் கொடுப்பாங்க. சின்னச் சின்னக் கணக்குகள் கொடுப்பாங்க. அதையும் செய்துக்கும் மூஞ்சியைத் தூக்கினபடியே.மற்ற நேரங்கள் படம் வரையும். ஐபாடில் கார்ட்டூன்கள் பார்க்கும். ஐ பாடைக் கொடுத்துட்டால் வாங்கி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். அதோட அப்பா வரணும். பையர் வந்து ஏதேனும் சொல்லிச் சமாளிச்சு ஐபாடை வாங்கி வைப்பார். ஐபாடில் சார்ஜ் இல்லைனா பேசாம இருக்கும். வெளியே போனால் கொண்டு வந்திருக்கும் இரண்டு பேபீஸில் ஏதேனும் ஒண்ணை இங்கி/பிங்கி/பாங்கி போட்டுப் பார்த்துத் தேர்வு செய்து கொண்டு எடுத்துப் போகும்.

முந்தாநாள் பையர் வெளியே சாப்பிடலாம்னு  இரவு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். எல்லோரும் முன்னாடி போயிட நான் மட்டும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அதோட அம்மா திரும்பிப் பார்த்துட்டுப் பாட்டியால் நடக்க முடியலை பாருனு அதுகிட்டேச் சொன்னதும் உடனே ஓடி வந்து தன் கையை நீட்டி என் கையைப் பிடிச்சுக்கொண்டு அழைத்துச் சென்றது. படி ஏறும்போதும்/இறங்கும்போதும் என் கையைப் பிடிச்சுக்கோ என்று சொல்கிறது. அவங்க அம்மாவிடம் பாட்டியால் ஏன் நடக்க முடியலைனு கேட்டதுக்குப் பாட்டிக்கு முழங்கால் பிரச்னை/வலி என்று சொல்லி இருக்கா. உடனே என்னிடம் வந்து உனக்கு முழங்கால் பிரச்னையா? வலிக்கிறதா? டாக்டர் கிட்டேப் போனியா? நான் கூட்டிப் போகவா என்றெல்லாம் கேட்டது. நான் டாக்டரிடம் காட்டி மருந்தெல்லாம் சாப்பிடறேன் என்றேன். உடனே ஏன் உனக்கு முழங்காலில் வலி என்று கேட்டது. நான் எனக்கு வயசாச்சு இல்லையா அதான் என்றேன். கொஞ்சம் யோசிச்சது. தாத்தாவைப் பார்த்தது. உடனே என்னிடம் தாத்தா கூட வயசாச்சு. அவர் உன்னை விட வயசானவர் தானே? அவர் ஏன் வேகமாய் நடக்கிறார் என்றெல்லாம் கேட்டது. அதுக்கு அவ அம்மா ஏதோ சொல்லிச் சமாளிச்சா. தாத்தாவெல்லாம் பாய்ஸ், ஸ்ட்ரெங்க்த் நிறைய இருக்கும் என்றெல்லாம் சொன்னா.

நேற்று இரவுச் சாப்பாட்டுக்கு அவ அம்மா சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்தப்போ இது விளையாட்டுக்கு மாவு கேட்டிருக்கு. பாட்டியைப் போய்க் கேள்னு சொல்லி இருக்கா அவ அம்மா. உடனே என்னிடம் வந்து மாவு கேட்டது. அது dough (டோ" என்று சொன்னது எனக்கு டோர்(கதவுனு) காதில் விழுந்தது. அல்லது புரிந்து கொண்டேன். எந்தக் கதவைத் திறக்கணும்னு கேட்கவும் கோபம் வந்து விட்டது. தலையில் அடித்ஹ்டுக் கொண்டு "டோ" "டோ" என்று கோபமாய்ச் சொன்னது. பின்னர் புரிந்து கொண்டு அவ அம்மாவிடம் போய் வாங்கிக்கோ என்றேன். இன்னிக்குப் பழனி போயிட்டு அப்படியே கொடைக்கானல் போகணும்னு காலம்பரவே கிளம்பிப் போயிருக்காங்க. நாங்களும் போகணுனுதான் பையரின் திட்டம். ஆன மட்டும் சொல்லிப் பார்த்தார்.நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். அலைச்சல் ஒத்துக்கலை. ரொம்பவே அசதியா ஆயிடும். அதோடு மேலே ஏறிக் கீழே இறங்கினு முழங்கால் விட்டுப்போயிடும். அதுக்கப்புறமா அவங்க மட்டும் கிளம்பிப் போயிருக்காங்க. பழனியை முடிச்சுட்டுக் கொடைக்கானலுக்குப் போய்க் கொண்டிருக்காங்கனு நினைக்கிறேன். அல்லது போய்ச் சேர்ந்திருக்கலாம். வீடு வெறிச்சென்று இரண்டு நாளைக்கு இருக்கும். கோகுலாஷ்டமி அன்று திரும்பி வராங்க. எனக்குக் கோகுலாஷ்டமிக்குக் கொஞ்சமா ஏதேனும் பக்ஷணம் பண்ணலாமானு ஒரு எண்ணம். உடம்பு இடம் கொடுக்கணும். பார்ப்போம்.! 

Monday, August 01, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 9

கமலாம்பிகை சந்நிதிக்குப் போகும் முன்னரே, அங்கே தனிக்கோயிலாக இனொரு அம்மன் சந்நிதி உள்ளது. நீலோத்பலாம்பிகை என்னும் அல்லியங்கோதை என்னும் திருநாமம் கொண்ட அம்மன் அருகிலேயே தோழிப் பெண் கந்தனைத் தூக்கிக்கொண்டு. பிள்ளையை அருமையாய் அம்மை தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறாள். இங்கேயே பள்ளியறையும் என்பது குறிப்பிடத் தக்கது. இல்லைனா இந்த சந்நிதியைப் பார்த்திருக்கத் தவறி இருக்கும். அவ்வளவு அவசரம். கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்து கமலாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம். பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் கமலாம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ளாள். தனிக்கோயில் என்றால் தனிதான். தனியான மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் தனிக் கொடிமரம், பலிபீடம், நந்தி. வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளதாய்ச் சொல்கின்றனர். எனக்கு இந்தத் திசைக்குழப்பம் அதிகம் உண்டு என்பதால் அதைச் சரியாய்க் கவனிக்கவில்லை.

 நம் உடலின் மூலாதாரமே திருவாரூர் எனச் சொல்கின்றனர். அந்தத் திருவாரூர்க் கோயிலிலும் கமலாம்பிகையின் கோயில் அமைப்பு சந்திரயோகம் என்று திருமந்திரம் சொல்லும் யோகதத்துவங்களின் அமைப்பில் உள்ளதாய்க் கூறுகின்றனர். (அம்பாள் உபாசகர்கள் தான் இது பத்தி விளக்கணும், விளக்கலாம் என்ற விதி இருந்தால்) நம்ம நண்பர் அங்கே உச்சிஷ்ட கணபதி என்ற பெயரில் இருக்கார். அவர் கிட்டே அம்மாவைப் பார்க்க அநுமதி வாங்கிண்டு உள்ளே போனால், அநிந்திதை, கமலினி(ஆமாங்க சுந்தரரின் இரு மனைவியரே தான்) அவங்க துவாரபாலகிகளாய் இருக்கிறாங்களாம். இந்தக் கோயிலில் மட்டுமா? எல்லாக் கோயிலிலுமா? தெரியலை! 

யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் மலரோடு, இடக்கையை இடுப்பில் வைத்தவண்ணம், மேல் கரங்கள் அக்ஷமாலை, பாசம் ஏந்திய வண்ணம் காக்ஷி அளிக்க, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டவண்ணம் காக்ஷி கொடுக்கிறாள் கமலாம்பிகை. முக்கியமான, முதன்மையான சக்தி பீடம் என்றும் ஞானசக்தி பீடம் எனவும் சொல்கின்றனர். பிராஹாரத்தில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் காணப்படுகின்றனர். பிராஹாரம் சுற்றி வரும்போது மேல் திசையில் காஸ்யபலிங்கர் சந்நிதிக்கு அருகே அக்ஷரபீடம். இந்த அக்ஷரபீடத்தைப் பார்த்தால் பிண்டி போன்ற அமைப்போடு உருவமற்று இருப்பதால் சட்டென யார் கண்ணையும், கருத்தையும் கவராத வண்ணம் இருக்கிறது. நாங்க சொல்லியே சிலர் தெரிந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. திருவாசி இருப்பதால் ஓரளவு இது முக்கியமான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம். உற்றுக் கவனித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.

 நல்லவேளையா இங்கே வந்த குருக்கள் தீப ஆராதனை காட்டினதில் பீடத்தின் எழுத்துக்கள் கொஞ்சம் புரிய வந்தன. கீழே தாமரை போன்ற அமைப்பில் செதுக்கப் பட்டு, சுற்றித் திருவாசி. அதிலே எழுத்துக்கள். கிரந்தம் எனத் தோன்றுகிறது. ஓரளவு தான் கிட்டே போகமுடியும். உள்ளே போகமுடியாது என்பதால் பின்னாலும் எழுத்துக்கள் இருந்தால் அது தெரியவில்லை. நம் உடலின் ஆறு ஆதாரங்களும் இந்த 51 அக்ஷரங்களில் அடங்குவதாகவும், இதையே யோக சாதன அக்ஷரபீடம் என்றும் சொல்கின்றனர். வெகு நுணுக்கமான தத்துவங்கள் அடங்கிய ஒன்று. என் சிறு மூளைக்குள் ஓரளவு எழுத்துக்களும், அதன் முக்கியத்துவமும் மட்டுமே ஏறியது. இங்கேயே கொஞ்சம் தள்ளி சரஸ்வதியும் குடி கொண்டுள்ளாள். ஞானத்தைக் கமலாம்பிகையும், மொழி வல்லமையை அக்ஷரபீடமும், கல்வியை சரஸ்வதியும் தருவதாய் ஐதீகம். இப்படி ஒரே கோயிலிலேயே இவை அனைத்தும் அமைந்ததாய் மற்ற எந்தக் கோயிலிலும் காணமுடியாது என்று சொல்கின்றனர். நல்லவேளையாய் இங்கே கொஞ்சம் பார்க்க முடிந்தது. என்றாலும் கோயிலின் சேவகர் கையில் சாவியை வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தது மனதில் தைத்துக்கொண்டிருந்ததால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல் திருவாரூர்ப் பயணம் அமைந்தது.

***********************************************************************************

இத்துடன் 2010 ஆம் ஆண்டில் சென்ற திருவாரூர்ப் பயணக் கட்டுரை முடிஞ்சிருக்கு. ஏனெனில் பாதியிலேயே திரும்பி விட்டதால் முழுவதும் பார்க்கலை. இப்போப் போனப்போக் கேட்கவே வேண்டாம். தரிசனம் செய்வதே பெரும்பாடாக இருந்தது. இன்னொரு முறை எல்லாம் வாய்க்கப் போவதில்லை. இன்னும் இங்கே ரௌத்ர துர்கை, நவகிரஹ சந்நிதி, ருண விமோசனர் (லிங்க வடிவில்) ஆகிய முக்கியமான சந்நிதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் பற்றி விரிவாக எழுத முடியலை என்பது வருத்தமாக இருக்கிறது.