கமலாம்பிகை சந்நிதிக்குப் போகும் முன்னரே, அங்கே தனிக்கோயிலாக இனொரு அம்மன் சந்நிதி உள்ளது. நீலோத்பலாம்பிகை என்னும் அல்லியங்கோதை என்னும் திருநாமம் கொண்ட அம்மன் அருகிலேயே தோழிப் பெண் கந்தனைத் தூக்கிக்கொண்டு. பிள்ளையை அருமையாய் அம்மை தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறாள். இங்கேயே பள்ளியறையும் என்பது குறிப்பிடத் தக்கது. இல்லைனா இந்த சந்நிதியைப் பார்த்திருக்கத் தவறி இருக்கும். அவ்வளவு அவசரம். கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்து கமலாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம். பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் கமலாம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ளாள். தனிக்கோயில் என்றால் தனிதான். தனியான மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் தனிக் கொடிமரம், பலிபீடம், நந்தி. வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளதாய்ச் சொல்கின்றனர். எனக்கு இந்தத் திசைக்குழப்பம் அதிகம் உண்டு என்பதால் அதைச் சரியாய்க் கவனிக்கவில்லை.
நம் உடலின் மூலாதாரமே திருவாரூர் எனச் சொல்கின்றனர். அந்தத் திருவாரூர்க் கோயிலிலும் கமலாம்பிகையின் கோயில் அமைப்பு சந்திரயோகம் என்று திருமந்திரம் சொல்லும் யோகதத்துவங்களின் அமைப்பில் உள்ளதாய்க் கூறுகின்றனர். (அம்பாள் உபாசகர்கள் தான் இது பத்தி விளக்கணும், விளக்கலாம் என்ற விதி இருந்தால்) நம்ம நண்பர் அங்கே உச்சிஷ்ட கணபதி என்ற பெயரில் இருக்கார். அவர் கிட்டே அம்மாவைப் பார்க்க அநுமதி வாங்கிண்டு உள்ளே போனால், அநிந்திதை, கமலினி(ஆமாங்க சுந்தரரின் இரு மனைவியரே தான்) அவங்க துவாரபாலகிகளாய் இருக்கிறாங்களாம். இந்தக் கோயிலில் மட்டுமா? எல்லாக் கோயிலிலுமா? தெரியலை!
யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் மலரோடு, இடக்கையை இடுப்பில் வைத்தவண்ணம், மேல் கரங்கள் அக்ஷமாலை, பாசம் ஏந்திய வண்ணம் காக்ஷி அளிக்க, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டவண்ணம் காக்ஷி கொடுக்கிறாள் கமலாம்பிகை. முக்கியமான, முதன்மையான சக்தி பீடம் என்றும் ஞானசக்தி பீடம் எனவும் சொல்கின்றனர். பிராஹாரத்தில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் காணப்படுகின்றனர். பிராஹாரம் சுற்றி வரும்போது மேல் திசையில் காஸ்யபலிங்கர் சந்நிதிக்கு அருகே அக்ஷரபீடம். இந்த அக்ஷரபீடத்தைப் பார்த்தால் பிண்டி போன்ற அமைப்போடு உருவமற்று இருப்பதால் சட்டென யார் கண்ணையும், கருத்தையும் கவராத வண்ணம் இருக்கிறது. நாங்க சொல்லியே சிலர் தெரிந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. திருவாசி இருப்பதால் ஓரளவு இது முக்கியமான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம். உற்றுக் கவனித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
நல்லவேளையா இங்கே வந்த குருக்கள் தீப ஆராதனை காட்டினதில் பீடத்தின் எழுத்துக்கள் கொஞ்சம் புரிய வந்தன. கீழே தாமரை போன்ற அமைப்பில் செதுக்கப் பட்டு, சுற்றித் திருவாசி. அதிலே எழுத்துக்கள். கிரந்தம் எனத் தோன்றுகிறது. ஓரளவு தான் கிட்டே போகமுடியும். உள்ளே போகமுடியாது என்பதால் பின்னாலும் எழுத்துக்கள் இருந்தால் அது தெரியவில்லை. நம் உடலின் ஆறு ஆதாரங்களும் இந்த 51 அக்ஷரங்களில் அடங்குவதாகவும், இதையே யோக சாதன அக்ஷரபீடம் என்றும் சொல்கின்றனர். வெகு நுணுக்கமான தத்துவங்கள் அடங்கிய ஒன்று. என் சிறு மூளைக்குள் ஓரளவு எழுத்துக்களும், அதன் முக்கியத்துவமும் மட்டுமே ஏறியது. இங்கேயே கொஞ்சம் தள்ளி சரஸ்வதியும் குடி கொண்டுள்ளாள். ஞானத்தைக் கமலாம்பிகையும், மொழி வல்லமையை அக்ஷரபீடமும், கல்வியை சரஸ்வதியும் தருவதாய் ஐதீகம். இப்படி ஒரே கோயிலிலேயே இவை அனைத்தும் அமைந்ததாய் மற்ற எந்தக் கோயிலிலும் காணமுடியாது என்று சொல்கின்றனர். நல்லவேளையாய் இங்கே கொஞ்சம் பார்க்க முடிந்தது. என்றாலும் கோயிலின் சேவகர் கையில் சாவியை வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தது மனதில் தைத்துக்கொண்டிருந்ததால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல் திருவாரூர்ப் பயணம் அமைந்தது.
***********************************************************************************
இத்துடன் 2010 ஆம் ஆண்டில் சென்ற திருவாரூர்ப் பயணக் கட்டுரை முடிஞ்சிருக்கு. ஏனெனில் பாதியிலேயே திரும்பி விட்டதால் முழுவதும் பார்க்கலை. இப்போப் போனப்போக் கேட்கவே வேண்டாம். தரிசனம் செய்வதே பெரும்பாடாக இருந்தது. இன்னொரு முறை எல்லாம் வாய்க்கப் போவதில்லை. இன்னும் இங்கே ரௌத்ர துர்கை, நவகிரஹ சந்நிதி, ருண விமோசனர் (லிங்க வடிவில்) ஆகிய முக்கியமான சந்நிதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் பற்றி விரிவாக எழுத முடியலை என்பது வருத்தமாக இருக்கிறது.
அர்ச்சகர்கள் பக்தர்களின் உணர்வுகளை பல இடங்களில் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
ReplyDeleteஇரண்டு பக்கமும் தவறுகள் உண்டு கில்லர்ஜி. அர்ச்சகர்கள் அறநிலையத்துறையின் கடைநிலை ஊழியருக்குக் கூடப் பயப்பட்டே ஆகணும். பல கோயில்களில் இதை நேரிடையாகப் பார்த்திருக்கோம். :(
Deleteஒரு கோவிலுக்குப் போனால் ஓரிரு முக்கிய சன்னிதிகளைச் சேவித்துவிட்டு, அவசரக் குடுக்கையாகத் திரும்பி, பெருமாளைச் சேவித்துவிட்டோம் என்ற அல்ப திருப்தி அடைகின்றதை எண்ணிப் பார்க்கிறேன். இந்தத் தடவை வரதராஜர் மற்றும் யோக நரசிம்மர் சன்னிதிகளை முழுமையாகச் சேவித்தேன் (வெங்கடேசப் பெருமாளைச் சேவித்த பிறகு)
ReplyDeleteநாங்கள் சென்ற முறை நின்று நிதானமாகப் பார்க்க நினைத்தது தான் அவசரக் கோலம் அள்ளித்தெளித்தாற்போல் ஆகிவிட்டது. ஆனால் இப்போது சென்றபோது நவகிரஹங்கள், ருண விமோசனர், ரௌத்ர துர்கை போன்றோரையும் பார்த்துக் கொண்டோம். கமலாம்பிகை சந்நிதியைச் சுற்றி வராததாலும் நடுவில் நீலோத்பலாம்பிகை சந்நிதியில் நிற்காமல் சென்றதாலும் அதையும் அக்ஷரபீடத்தையும் பார்க்கவில்லை. நினைவும் இல்லைனு சொல்லலாம். ஒரே பதட்டம். நிற்க முடியாமல்/நடக்க முடியாமல் போனதில் திகைத்துத் தடுமாறி விட்டோம். :(
Deleteஶ்ரீரங்கத்திலோ கேட்கவே வேண்டாம்.. இன்னும் சேவிக்காத சன்னிதிகள் நிறைய இருக்கின்றன
ReplyDeleteநாங்க சில சந்நிதிகள் படி ஏறணும் என்பதால் போகவில்லை. மற்றபடி அநேகமாகப் பார்த்திருக்கோம். மேலே ஏறணும் என்பதால் தன்வந்திரியையும், மேட்டழகிய சிங்கரையும் கீழே இருந்தே பார்த்துப்போம்.
Deleteஎனக்கு அடுத்த ஜென்மம் திருவாரூரிலாம். சரி... அப்போது எல்லாச் சன்னதிகளையும் சேவித்துக்கொள்ளவேண்டியதுதான்.
ReplyDeleteஎனக்கு இதோடு சரியாப் போச்சாம். நீங்க அடுத்த ஜன்மத்தில் யாரைக் கிண்டல் செய்வீங்கனு நினைச்சு இப்போவே வருத்தமாயிருக்கு! :))))))
Deleteஅம்பிகைக்கும் தனி நந்தி இருக்குமா? எல்லா இடங்களிலுமா, இங்கு மட்டுமா?
ReplyDeleteசில முக்கியமான கோயில்களில் உண்டு.
Delete//அநிந்திதை, கமலினி (ஆமாங்க, சுந்தரரின் இரு மனைவியரேதான்)//
ReplyDeleteஅதெல்லாம் எனக்குத் தெரியாதே.. அவ்வப்போது படிக்கறதுதான், மறக்கறதுதான்..
தொடரும் பாரா விவரங்கள் நிறைய விஷயங்கள் சொல்கிறது. எனக்கு இந்தப் பிறவியில் முக்தி இல்லை என்று தெரிகிறது. இன்னும் சில பிறவிகள் எடுக்கவேண்டும் போலும்.. இதெல்லாம் மனசில் பதியவில்லையே... ஏறவில்லையே.....
எல்லாம் சரியாகிவிடும் ஶ்ரீராம். அதோடு எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருந்தால் என்னைப் போன்றவர்கள் என்ன செய்வோம்? :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திருவாரூர் கமலாம்பிகை சன்னதியைப்பற்றி தாங்கள் விவரித்த விதம் அருமை. படிக்கும் போதே கண்களில் காட்சி வருகிறது. அவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். இக்கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் என்றாவது ஒருநாள் கிட்டி வர இறைவனை வேண்டிக் கொண்டேன்.
ஸ்ரீ சுந்தரர் மனைவிகளாக பார்வதி தேவியின் தோழிகள் இருவருரையும் மணந்து கொண்ட கதை தெரியும். அவர்களே அக்கோவிலில் துவாரபாலகிகளாக சிலை வடிவில் இருப்பது தெரிந்து கொண்டேன்.
சில பெரிய கோவில்களுக்கு செல்லும் போது சில சன்னதிகளை தரிசியாது விட்டு விட வாய்ப்பு உள்ளது போலும். காரணம் நம் பிரயாண அவசரங்கள், இயலாமைகள் போன்றவைதான். நிதானமாக இருந்து தரிசிக்க அக்கோவில் அருகிலேயே தங்கி இருக்கும் வாய்ப்பையும் பெற வேண்டும். நாங்களும் இப்போது வந்திருந்த ஸ்ரீ ரங்கம் கோவிலில் பல சன்னதிகளை தரிசியாமல் வந்து விட்டோம். எல்லாமே நல்லவையாக நடக்க நம் விதிப்பயனும் நம்முடன் ஒத்து வர வேண்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. வெகு தாமதமாக வந்து பதில் சொல்வதற்கு மன்னிக்கவும். அடுத்தடுத்து வேலைகளில் இது மறந்தே போய்விட்டது. ஆமாம், நீங்கள் சொல்லுவது போல் பெரிய கோயில்களுக்குப் போனால் எல்லா சந்நிதிகளையும் தரிசிப்பது என்பது இயலாது போகிறது. மனசு அடிச்சுக்கும். ஆனால் நிதர்சனம் முகத்தில் அறையும்.
Deleteபெரிய கோவில்களில் எல்லாச் சந்நிதிகளையும் தரிசிப்பது முடியாத காரியம்தான்.
ReplyDeleteநல்ல விரிவாக தந்துள்ளீர்கள்.
திருவாரூர் கோயில் சென்றிருந்த போது கோயில் முழுவதும் சுற்றி வந்திருந்தாலும் மீண்டும் போனால்தான் நீங்கள் விவரிச்சிருப்பதை நினைவுபடுத்திக் கொண்டு பார்க்க வேண்டும். வாய்ப்பு எப்போது கிடைக்குமோ? நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்கிறேன்.
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன். மீண்டும் போக வாய்ப்புக் கிடைத்தால் நன்றாகப் பார்த்துவிட்டு வாருங்கள்.
Deleteபதிவை எப்படியோ விட்டிருக்கிறேன் கீதாக்கா.
ReplyDeleteபெரிய கோயிலில் கமலாம்பிகை சன்னதி தனியாக இருப்பது நினைவிற்கு வரவில்லையே...சுற்றி சுற்றி வந்தாலும் பல இடங்களில் வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் பார்க்காமல் விடுபட்டிருக்கும்.
கீதா
அது தனி சந்நிதி இல்லை தி/கீதா! தனிக் கோயில்னு சொல்லலாம். சிதம்பரம் கோயிலில் கூட சிவகாமி அம்மன் தனிக் கோயிலில் இருப்பாள், பார்த்திருக்கலாம்.
Deleteசுந்தரருக்கு இரு மனைவியர் என்பதும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இப்படியான பல விஷயங்கள் பதிவதில்லை மூளையில். அம்பிகையின் வடிவம் சனந்தி பற்றி எல்லாம் நன்றாகப் பார்த்து தரிசித்துச் சொல்றீங்க கீதாக்கா. நான் எல்லாம் போனேனா, பிரார்த்தித்தேனா அதுவும் கூட எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதோடு முடிந்துவிடும் அப்போது அறிந்தவர்கள் அனைவரது முகமும் வந்து செல்லும்....நீங்கள் உட்பட எல்லோரும்......
ReplyDeleteகீதா
நானெல்லாம் நிறையக் கதாகாலட்சேபங்கள் கேட்டதால் இதை எல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சது. நான் பொதுவாகவே எந்தக் கோயிலுக்குப் போனாலும் நின்று நிதானமாகப் பார்ப்பேன். முன்னெல்லாம் நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிக்காது. அவசரப்படுத்துவார். இப்போல்லாம் அவரும் கூட நின்று பார்க்கிறார்.
Deleteமிகவும் தாமதமாக வந்துள்ளேன்.. மன்னிக்கவும்..
ReplyDeleteகமலாலயம் பற்றி சிறப்பான தகவல்கள் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.. மகிழ்ச்சி.. நன்றி..
தாமதமெல்லாம் இல்லை. நானும் தாமதமாகத் தான் பதில் கொடுக்கிறேன். நன்றி.
DeleteGreat to know that you can read grantha lipi. Superb memoire.
ReplyDeletePosted a comment it vanished. Great to know your knowledge on grantha lipi.
ReplyDeleteஇரண்டுமே வந்திருக்கின்றன வசுமதி. பாராட்டுக்கு நன்றி.
Deleteஇந்த மாதிரிப் பழம்பெருங்கோவில்களை உங்கள் எழுத்திலேயே தரிசித்துக்கொள்கிறேன். திருவாரூர் போனதில்லை. ஏன், பல புகழ்பெற்ற கோவில்கள்பக்கம் போனதே இல்லை. நம்ம கதை இப்படித்தான் இருக்கு. ஜூனில் ஒரு உறவினரின் அன்பினால் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலப் பெருமாள் என தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.
ReplyDeleteஎது கிடைக்கவேண்டுமோ அது கிடைக்கும். எங்கே இருக்கவேண்டுமோ அங்கே இருப்போம்..
நாங்க நிறையப் போயிட்டு வந்திருக்கோம் ஏகாந்தன். என்றாலும் வெங்கட், துளசிதளம் துளசி மாதிரி எல்லாம் இல்லை. ஓரளவுக்குப் போயிருக்கோம். எங்களோட கயிலை யாத்திரை மின்னூலும் வந்திருக்கு. இப்போக்கிண்டில் மூலமாத் தாமிரபரணிக்கரைக் நவ கயிலாயம், நவ திருப்பதி எழுதினவற்றைத் தொகுத்து மின்னூலாக்கி இருக்கேன். இன்னமும் சில பயணங்கள் பாக்கி இருக்கு. தொகுத்துக் கொண்டிருக்கேன். நடுநடுவில் இரண்டு மடிக்கணினிகளும் கொடுக்கும் பிரச்னை, வீட்டு வேலை, உடல்நலக்குறைவு என மெதுவாகப் போகிறது. முன்னெல்லாம் தொடர்ந்து மத்தியானம் 3மணி நேரம் உட்காருவேன். சாயங்காலம் உட்கார முடியாது இரவு பத்துமணி வரை உட்காருவேன் சமீப காலங்களில் சீக்கிரம் படுத்துக்கொள்வதால் உட்கார முடிவதில்லை. கண்ணும் அவ்வப்போது பிரச்னை கொடுக்கும்.
Delete