ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப் பட்டாலும் பெரும்பாலும் வீடுகளில் கொண்டாடுவது இந்த சாரதா நவராத்திரியே ஆகும். பத்து நாட்களும் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களை அம்பிகையின் வடிவாகவே பார்த்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவப் பெண் குழந்தையை அம்பிகையாகப் பாவித்து வழிபட்டு அந்தக் குழந்தைக்குப் பிடித்தனவற்றை உண்ணக் கொடுத்துப் புதிய துணிகளும் கொடுத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
முதல்நாளன்று இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் "குமாரி" எனப் பூஜித்து வணங்குவார்கள். அம்பிகையைக் குமாரியாகப் பார்ப்பது தான் இதன் பொருளே தவிர்த்து அந்தக் குழந்தையின் பெயரை இது குறிப்பிடாது.
இரண்டாம் நாளன்று 3 வயதுப் பெண் குழந்தையைத் திரிமூர்த்தி என்னும் பெயரால் வழிபடுவார்கள்.. மூன்று சக்தியும் சேர்ந்தவளாக அம்பிகையைப் பூஜிப்பது வழக்கம்.
மூன்றாம் நாளன்று 4 வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணி என்னும் பெயரால் வழிபடுவார்கள்.
நான்காம் நாளன்று ஐந்து வயதுக் குழந்தைக்குப்பூஜை செய்ய வேண்டும். ரோஹிணி என்னும் பெயரால் வழிபட வேண்டும்.
ஐந்தாம் நாளன்று 6 வயதுப் பெண்ணைக் காளிகாவாக வழிபடுவது வழக்கம். பகைவர்களை நாசமாக்கும் என்று நம்பப் படுகிறது.
ஆறாம் நாளன்று 7 வயதுப் பெண்ணைச் சண்டிகாவாக வழிபட வேண்டும்
ஏழாம் நாளன்று 8 வயதுப் பெண்ணை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும்
எட்டாம் நாளன்று 9 வயதுப் பெண்ணை துர்கா என்னும் பெயரால் வழிபட வேண்டும்.
ஒன்பதாம் நாளன்று பத்து வயதுப் பெண்ணை சுபத்திரா என்னும் பெயரால் வழிபட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் குழந்தையை அழைத்து வழிபட்டு வரலாம்.அந்தக் குழந்தைகளுக்குப்பிடித்த உணவைச் சமைத்து உண்ணக் கொடுக்கலாம் அல்லது அந்த அந்த நாளுக்கு என்றே உரியதான பிரசாதங்களையும் பண்ணிச் சாப்பிடக் கொடுக்கலாம்.
இவை எல்லாம் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் திரும்ப எழுதி வந்திருக்கிறேன்.இந்த வருஷம் நவராத்திரிக்கு எனத் தனியாக எதுவும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொள்ளவில்லை.எனினும் தசமகா தேவியர் பற்றிய சின்னச் சின்னக் குறிப்புக்களைத் தரலாம் என எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியின் வடிவில் அம்பிகையைத் துதித்து வரலாம். சக்தி உபாசகர்கள் தினந்தோறுமே தசமகா சக்தியரை வழிபட்டு வருபவர்கள் ஆவார்கள். ஆனாலும் இந்த நவராத்திரி சமயத்தில்நாம் வழிபடுவது இன்னமும் சிறப்பைத் தரும். இங்கே வித்யா என்பது வெறும் அறிவை மட்டும் குறிக்காது. அந்த வித்யையினால் நாம் அடையக் கூடிய அம்பிகையின் அளவற்ற பிரபாவத்தையும் குறிக்கும்.ஆனால் இது கடினமானது. உபாசகர்கள் அதிகம் இதில் ஈடுபட வேண்டாம் என்றே சொல்லுவார்கள். நாம் இங்கே ஆழமாக எல்லாம் போக்ப் போவதில்லை. சின்னச் சின்னதாகவே தெரிந்து கொள்வோம்.
முதலில் காளி தேவி. காலி எனவும் சொல்லப்படுகிறாள். காலத்தைக் குறிப்பவள் என்பதாலும் இவ்விதம் அழைக்கின்றனர். இவள் பார்க்க பயங்கர சொரூபியாக இருந்தாலும் இவளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. பத்ரகாளி எனவும் இவளை அழைப்பார்கள். இங்கே பத்ர என்னும் சொல்லுக்கு நன்மை என்றே பொருள்படும். ஆகவே இவள் அனைத்துக் காலங்களிலும் நமக்கு நன்மையே செய்கிறாள். இவள் இருக்குமிடம் ஸ்மசான எனச் சொல்லப்படுகிறது. அது இப்போதைய மயானத்தைக் குறிப்பிடுவதில்லை. மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இவளில் ஒடுங்கும்போது இவள் இருப்பிடத்தைக் குறிப்பது ஆகும்.
ஆதி காலத்தில் பலரும் காளி உபாசகர்களாக இருந்திருந்தாலும் நமக்குத் தெரிந்த காலகட்டத்தில் மஹாகவி காளி தாசனும் அதன் பின்னர் வந்த காலகட்டத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களும் மிகச் சிறந்த காளி உபாசகர்கள். இவளுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில, ஆதி காளி, பத்ரகாளி, ஸ்மசான காளி, கால காளி, குஹ்ய காளி, காமகலா காளி,தனகாளி, சித்தி காளி,சண்டி காளி, ஏகதாரா காளி, டம்பர காளி,கஹனேஸ்வரி காளி, சாமுண்டா காளி, ரக்ஷா காளி இந்தீவரி காளி, ஈசான காளி, மந்த்ரமாலா காளி, தக்ஷிண காளி, வீர காளி, காத்யாயனி, சாமுண்டா, முண்ட மர்தினி எனப் பல பெயர்கள் உண்டு. இவளைப் பார்த்து நாம் பயப்படாமல் சகலவிதமான பயங்களில் இருந்தும் நம்மைக் காப்பவள் இவளே என்பதை உணர்ந்து கொண்டால் காளி வழிபாடு அச்சத்தை ஏற்படுத்தாது.
தெரியாத விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteநிறைய தெரிந்துவைத்திருக்கிறீர்கள். நிறைய படித்தும் இருக்கிறீர்கள்.
ReplyDeleteநான் இதை எல்லாம் தேடித்தேடிப் படிப்பேன். வலை உலகுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இதை எல்லாம் பற்றி எழுதலாம்னு நினைச்சால் பழைய சிநேகிதர்களான மதுரையம்பதி, தக்குடு, தக்குடுவின் அண்ணா அம்பி ஆகியோர் ஶ்ரீவித்யா உபாசனைக்குள் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. இதில் தக்குடுவும் மதுரையம்பதியும் ஶ்ரீவித்யா உபாசகர்கள். அம்பி நரசிம்ம உபாசகர்.
Deleteநல்ல தகவல்கள். அனைவருக்கும் அறியத்தரலாம் என்று காபி பேஸ்ட் செய்து லிங்க் கொடுக்கலாம் என்று பார்த்தால் காபி பண்ண முடியவில்லை!
ReplyDeleteபரவாயில்லை ஶ்ரீராம். எ.பி. குழுவில் போட்டிருந்ததைப் பார்த்தேன். நான் சுமார் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நவராத்திரி பற்றி எழுதி இருப்பதால் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடும் எண்ணம் இருக்கு. பார்ப்போம். முடிந்தால் சிலவற்றின் சுட்டியைக் கொடுக்கிறேன்.
Deleteகாளீஸ்வரியைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும் - பாவங்களைச் செய்வதற்கு..
ReplyDeleteபழிகளைச் சொல்வதற்கு..
பாதகங்களை நினைப்பதற்கு!..
மகத்தான பதிவு.. மகிழ்ச்சி.. நன்றியக்கா..
ஆமாம். கெடுவான் கேடு தானே நினைப்பான். மற்றபடி காளி தெனாலிராமனுக்குக் கூட அருள் புரிந்திருக்கிறாளே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி தேவிகளை பற்றிய விளக்கமும், காளிகா தேவியை பற்றிய விளக்கமும் படிப்பதற்கு நன்றாக உள்ளது. நன்கு மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இப்படி வாய் வார்த்தையாக பாராட்டுவதை விட சகலமும் படித்து தெரிந்து வைத்துக் கொண்டு சிறப்பான புராண தகவல்களை தரும் உங்களுக்கு என் மரியாதையான நமஸ்காரங்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 🙏. அருமையான நல்ல விளக்கங்களுடைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. முன்னெல்லாம் இவற்றை எல்லாம் திரும்பத் திரும்பப் படிச்சிருக்கேன். இப்போது படிப்பது கொஞ்சம் குறைந்து தான் விட்டது. மற்றபடி உங்கள் பாராட்டுகளுக்குப் பாத்திரமாக ஆவதற்கு நான் இன்னமும் முயற்சி செய்யணும்.
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteகாளி வழி பாடு பற்றி சொன்னது அருமை. தேவி மாகாத்மியச் சுருக்கத்தை படித்து வருகிறேன்.
எல்லாவித துன்பங்களில் இருந்தும் நம்மை காப்பவள் அன்னையே.
நன்றி கோமதி.
Deleteநமக்கு வேண்டிய மனபலம், உடல்பலத்தை அன்னை தரவேண்டும் என்பதே இப்போது செய்யும் பிரார்த்தனை.
ReplyDeleteஆமாம், முக்கியமாய் மனபலம். உடல் பலம் தானாக வந்துடுமே! மிக்க நன்றி கருத்துக்கு!
Delete