நீண்ட நாட்கள் கழிச்சு இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்தோம். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் எங்க சாலையிலேயே அமைந்திருக்கும் சிருங்கேரி மடத்துக் கல்யாண மண்டபத்தில் கல்யாணம். பெண் எதிர் வீடு. இரண்டு வருஷங்களாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது அமைந்துள்ளது. சிறப்பாகக் கல்யாணம் நடந்தது. நடுவில் எங்கேயுமே போகாமல் வீட்டிலேயே இருந்த நான் பையர் வந்தப்போக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது தான். அங்கேயும் மற்றக் கோயில்களுக்கு எல்லாம் இறங்கவே இல்லை. மாரியம்மனை மட்டும் பார்த்துவிட்டு வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்தேன். அவங்க எல்லோரும் போயிட்டு வந்தாங்க.
இன்னிக்குக் கல்யாணத்துக்கும் போக முடியுமா என்பது நேற்று வரை சந்தேகமே!நேற்று நம்மவரிடம் நான் வரலை. நீங்க மட்டும் போங்கனு தான் சொன்னேன். ஆனால் காலம்பர எழுந்ததும் அவர் நீயும் வா! என்று சொல்லிட்டார். கொஞ்சம் உள்ளூர பயம் தான். வயிறு என்ன சொல்லுமோஎன்ன பண்ணுமோ எனக் கவலை தான். கல்யாணத்தில் காலையிலேயே போய்விட்டதால் காலை ஆஹாரம் லேசாக எடுத்துக்கலாம்னு போனோம். மாத்திரைகள் சாப்பிட்டாகணுமே! ஃப்ரூட் கிச்சடி, அக்கார அடிசில், வெண் பொங்கல், இட்லி, தோசை, பூரி, சாம்பார் வடைனு மெனு. நான் ஒரே ஒரு இட்லி போட்டுக் கொண்டு ஒரு தோசையும் போட்டுக் கொண்டேன். வலுக்கட்டாயமாக சாம்பார் வடையைச் சொல்லச் சொல்லக் கேட்காமல் போட்டுட்டாங்க. ஒரே ஒரு இட்லி, ஒரே ஒரு தோசைக்கு மிளகாய்ப் பொடி மட்டும் தொட்டுக் கொண்டு, சாம்பார் வடையுடன் சாப்பிட்டு முடிச்சேன். மற்றது எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
இப்போதெல்லாம் வீட்டில் சாப்பிட்டாலே ஒத்துக்கறதில்லை சில சமயம். முந்தாநாள் அப்படித் தான் ஒரே ஒரு வடை சாப்பிட்டேன். அன்றிரவெல்லாம் தண்டனை மாதிரி வயிற்றுப் போக்கு! நேற்றுப் பூரா ஓ.ஆர்.எஸ். தான் குடித்துக் கொண்டிருந்தேன். அதுவும் எல்லா ஃப்ளேவரும் பிடிக்கலை/ஒத்துக்கலை. ஆரஞ்சு ஃப்ளேவர் மட்டும் தான். இன்னிக்குக் கல்யாணத்திலே கூட பெண்ணின் அம்மா/பிள்ளையின் அம்மா எல்லோருமே கையில் ஓ.ஆர்.எஸ். வைத்துக் கொண்டிருந்தார்கள். யாருக்கு உடம்போனு நினைச்சேன். இப்போதைய பருவமும் அடிக்கும் சில்லென்ற காற்றும் உடம்பு/வயிறு இரண்டுக்கும் ஒத்துக்கலை போல! பலருக்கும் வயிற்றுப் பிரச்னை இருக்கு. :(
கல்யாணம் சிறப்பாக நடந்தது. சாப்பாடையும் ஒரு வழியாக அங்கேயே முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்திருந்தோம். பதினோரு மணிக்குத் தான் சாப்பாடு ஆரம்பிச்சது. பொதுவாகவே எந்தக் கல்யாணமாக இருந்தாலும் நான் மதியச் சாப்பாடு சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். இன்னிக்கு வீட்டில் போய்ச் சமைக்கணும் என்பதால் ஒரு ரசம் சாதமாக முடிச்சுக்கலாம்னு உட்கார்ந்தேன். காய்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அவியல் தவிர்த்து. அதிலும் தேங்காயோ என்னமோ ஒரு வாசனை வந்தது என்பதால் சாப்பிடலை. முருங்கைக்காய் வேகவே இல்லை. மற்றபடி வேண்டாம்னு சொன்னாலும் கேட்காமல் சாம்பாரை விட்டுட்டாங்க. கொஞ்சமாக விடச் சொல்லியும் ஒரு கரண்டி விழுந்து விட்டது.. ஆனால் சாம்பார் நல்ல ருசி. காய்கள் நிறையப் போட்டிருந்தாலும் சாம்பார் கூட்டு மாதிரி இல்லாமல் நல்ல நீர்க்கவே இருந்தது. ரொம்ப நாட்கள்/வருஷங்கள்/மாதங்கள் கழிச்சு சாம்பார் சாதம் சாப்பிட்டேன். அடுத்து வத்தக்குழம்பு கொண்டு வந்தாங்க வேண்டாம்னு சொல்லிட்டு (மோர் சாதத்துக்கு விட்டுக்கலாமேனு) ரசம் விடச் சொன்னேன். ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நல்ல ரசமான ரசம். சூடாக வேறே இருந்தது. அப்பளம் தான் ஒண்ணுக்கு மேலே கண்ணிலே காட்டலை, கருமி! :( பெரிய அப்பளமாக இருந்ததால் மிச்சத்தை வைச்சுண்டு சாப்பிட்டேன். அந்த ரசம் சாதத்தைச் சாப்பிட்டு முடிச்சேன். இரண்டாவது முறை அப்பளமே கேட்கலை. :( எவ்வளவு கஷ்டம் பாருங்க! அடுத்து சாதம் போட்டுக்கொண்டு (கொஞ்சமாக) தயிர் விட்டுக் கொண்டேன். தொட்டுக்க வத்தக்குழம்பு. மணத்தக்காளி வத்தல் குழம்பு, அருமை. கிடாரங்காய் ஊறுகாயும் புது மாதிரியாக இருந்தது. வடக்கே போடுகிறாப்போல் சர்க்கரை போட்டிருந்தாங்க. ஆக மொத்தம் நல்லதொரு சாப்பாடு. வடை எல்லாம் போடலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இனிப்பு பெங்காலி ரஹம். சேச்சே, மறந்துட்டேனே, தயிர் வடை போட்டாங்களே!
எல்லாம் முடித்துக் கொண்டு ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுவிட்டு பீடாவை வாயில் போட்டுக் கொண்டு வெளியே வந்தால் பக்கத்தில் மடத்து (வித்யார்த்திகள்) வேதம் பயிலும் மாணாக்கர்கள். ஏழு வயதிலிருந்து பதினாறு/பதினேழு வயது வரயிலான மாணாக்கர்கள். ஒட்டிய வயிறோடும், கண்களில் பளிச்சிடும் பிரகாசத்தோடும் வேஷ்டியைத் தட்டுச்சுற்றாகக் கட்டிக் கொண்டு வேதங்களை மனனம் செய்து கொண்டிருந்தார்கள். அவங்களைப் பார்த்ததும் உடலில் இருந்து சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வெளியே போய்விட்டது! :( இந்த மாதிரியான சாப்பாடெல்லாம் அவங்களுக்கு எப்போக் கிடைக்கும்? சாப்பாடையே பிரதானமாக நினைச்சிருந்தால் வேத சம்ரக்ஷணம் பண்ணுவது எப்படி? இந்த வயதிலேயே எத்தனை மன உறுதி? உற்சாகம்! எதுக்கும் அசராமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்து வருவது எவ்வளவு போற்றத்தக்கது? இது எதையும் நினைச்சுக் கூடப் பார்க்காமல் அவங்க உபாத்தியாயம் செய்ய வந்தால் நாம் நம்ம வழக்கப்படி அவங்களிடம் பேரம் பேசுவோம் இல்லையா? வாத்தியார் அதிகப் பணம் கேட்கிறார் எனப் புகார் கூறுவோம்! :(
வெகு நாட்களுக்குப் பிறகு சுவையான பதிவு..
ReplyDeleteநன்றி தம்பி.
Delete// வேதம் பயிலும் மாணாக்கர்கள். ஏழு வயதிலிருந்து பதினாறு/பதினேழு வயது வரயிலான மாணாக்கர்கள். ஒட்டிய வயிறோடும், கண்களில் பளிச்சிடும் பிரகாசத்தோடும்.. //
ReplyDeleteஇறைவன் துணை இருக்கட்டும்..
ஆமாம். இறைவன் கண்டிப்பாகத் துணை இருப்பான். எனக்கு அவங்களைப் பார்த்ததுமே நாம் பேரம் பேசும் நினைவு வந்து தொலைத்தது. :(
Deleteகல்யாண பதிவு நன்று.
ReplyDeleteமணமக்கள் நீடூழி வாழ இறைவன் துணை இருக்கட்டும்.
நன்றி கில்லர்ஜி. பெண் ரொம்பக் கெட்டிக்காரி. நல்லதொரு இல்வாழ்க்கை நிச்சயம் அமையும். நீடூழி வாழட்டும்.
Deleteஏதோ கண் திருஷ்டியோ என்னமோ, பெண்ணின் அம்மா கல்யாணத்தன்று ஓஆர் எஸ்ஸோடு திரிந்ததைச் சொன்னேன் அல்லவா? நாங்கல்லாம் வந்தப்புறமா ஏதோ பிரச்னையாகி உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம். எங்களுக்குத் தெரியலை. இன்னிக்குத் தான் காலம்பர வெள்ளிக்கிழமை வெற்றிலை, பாக்குக் கொடுக்கப் போனால் அவங்க பெரிய பெண் இந்த விஷயத்தைச் சொன்னார். இன்னமும் மருத்துவமனியிலிருந்து வரலை. அதுவேறே மனசுக்கு வேதனையா இருக்கு! :))))
Deleteசுவையாகப் படித்துக்கொண்டு வரும்போது கடைசி பாரா கண்களை நிறைத்து விட்டது.
ReplyDeleteஆமாம், எங்களுக்கும் அவங்களைப் பார்த்ததும் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வெளியே வந்து விட்டது! :(
Deleteநல்ல சமையல்காரர் வாய்த்திருந்திருக்கிறார் போல... கிடாரங்காய் ஊறுகாய் என்றதும் நாவூறியது. சர்க்கரை என்றதும் ஆற்வம் காணாமல் போய்விட்டது! நல்ல தரமான ஊறுகாய்க்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன் சில மாதங்களாய்...
ReplyDeleteஇந்தக் கிடாரங்காய் ஊறுகாய் நிச்சயமாய் உங்களுக்கும் பிடித்திருக்கும் ஸ்ரீராம். நன்கு ஊறிக்கொண்டு உப்பும், உறைப்பும் அந்த லேசான இனிப்புமாக வாய்க்கே இதமாக இருந்தது. ஒரு முறை போட்டுப் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.
Deleteஇருமினாலேயே உடம்பெங்கும் எங்கு வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு அவஸ்தைப்படுத்துகிறது என்று நான் சொன்னதற்கு எங்கள் மருத்துவர் என்னை தினசரி அல்லது முடிந்தவரை இளநீர் மற்றும் ஓ ஆர் எஸ் சாப்பிடச் சொன்னார். நானும் ஓரஞ் சுவைதான் சாப்பிட்டேன். வழக்கம்ப்ல தொடரவில்லை!
ReplyDeleteஉங்களிடம் உள்ள பெரிய குறையே இந்த அலட்சியம் தான் ஸ்ரீராம். நானெல்லாம் முடிந்தவரை மருத்துவர் சொல்லுவதைக் கடைப்பிடிப்பேன். அப்படியும் தொடர்ந்தால் தான் பிரச்னையாக இருக்கும். ஓ ஆர் எஸ் இல்லைனாலும் இளநீர் வாங்கிச் சாப்பிடலாம். விடாதீங்க. ஓ ஆர் எஸ்ஸை விட இளநீர் தான் சிறப்பு. இருமினால் எனக்கும் விலாவில் பிடித்துக்கொண்டு நாள் கணக்கில் விடாது. குனிய முடியாது. சிரமமாக இருக்கும். வலி வேறே கொல்லும்.
Deleteஇளநீர் நல்லது. சென்னையில் 50ரூபாயாமே.... பெங்களூரில் இருந்து தொலைவில் 40ரூ இளநீர் (ஒரு லிட்டர் தண்ணீர் இருந்திருக்கலாம், அல்லது முக்காலுக்கும்்மேல்). இரண்டு சாப்பிட்டபின்தான் கொஞ்சம் உட்கார்ந்தபிறகு உயிர் வந்தது. இதுபற்றி எழுதுகிறேன்.
Deleteஉங்கள் வயதுக்கு நீங்கள் கம்ப்ளெயிண்ட் சொல்லும்போது நானும் என் கஷ்டம் பற்றிச் சொல்ல கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் வந்து விடுகின்றன... 'நேற்று போல் இன்று இல்லை..... இன்று போல் நாளை இல்லை' என்று பாடிக்கொண்டிருக்கிறேன்!
ReplyDeleteஉடல்நலக்கேட்டிற்கு வயதெல்லாம் ஒரு காரணமே இல்லை. என்னோட வயதில் என் மாமியார் மிகவும் சுறுசுறுப்பாக நடமாடினார். கீழே உட்கார்ந்து சாப்பிடுவார். தன்னந்தனியாகத் திநகர் மச்சினர் வீட்டுக்கும் அம்பத்தூரில் எங்க வீட்டுக்கும் போயிட்டுப் போயிட்டு வருவார். நினைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கடைசி வரை. கடைசி 3 நாட்கள் தான் மருத்துவர்களின் கண்டிப்பினால் எதுவுமே கொடுக்க முடியலை. அதுவும் 93 வயசில்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியில் சென்று, மனதுக்கு திருப்தியாக பிடித்ததை சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள். தங்களுக்கு வாழ்த்துகள். உடல்/ மன நிலைமை சரியில்லாமல் கஸ்டபடும் போது இப்படிபட்ட சில திருப்பமான சம்பவங்கள் மனதுக்கு நன்றாக இருப்பதாகக் தோன்றும். அந்த வகையில் இந்த கல்யாணம் தங்களுக்கு ஒரு மன சந்தோஷத்தை அளித்தது மகிழ்ச்சியே..! அங்கு சில சமையல் ஐட்டங்கள் நன்றாக உள்ளதென மனந்திறந்து பாராட்டி கூறிய தங்களின் பெரிய மனதுக்கு பாராட்டுக்கள்.
/இந்த வயதிலேயே எத்தனை மன உறுதி? உற்சாகம்! /
இறுதியில் தங்களின் இரக்கப்பட்ட மனது நினைத்தது உண்மைதான். அந்த மாதிரி மடங்களில் பயிலும் பாலகர்களை பார்க்கும் போது மனது கஸ்டமாகத்தான் உணரும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, வரவுக்கும் ஆதரவான கருத்துக்கும் மிக்க நன்றி. உண்மையில் இந்த மாற்றம் என் உடம்புக்கும், மனதுக்கும் தேவையாகத் தான் இருந்தது. ஓரளவு சாப்பாடும் சுவைக்க முடிந்தது. இந்த மாற்றம் என் உடலில்/மனதில் தொடர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கேன். மடத்து மாணாக்கர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவும் பிரார்த்திப்போம்.
Deleteநல்ல சாப்பாடுன்னு அட போட்டுக் கொண்டே வந்தால் கடைசிப் பாரா மனதை என்னவோ செய்துவிட்டது. அவங்களையும் இப்படிக் கல்யாணத்தில் கூப்பிட்டு ஒரு வேளை ஒரே ஒரு வேளை சாப்பாடு போடலாம் இல்லையா? இல்லை போடக் கூடாதுன்னு ஏதாவது விதிமுறைகள் இருக்கோ? வேதம் பயில்வதால்?
ReplyDeleteகீதா
இல்லை தி/கீதா. வேதம் பயிலும் பிரமசாரிகள் வயிறு நிறைய எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கலாம். ஆனால் ருசி பார்த்து, தரம் பார்த்தெல்லாம் சாப்பிடக் கூடாது/முடியாது. பிரமசாரியாக இருக்கையிலேயே அலைபாயும் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் அல்லவா? அதனால் முதலில் அவங்களுக்கு உணவுக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வெற்றிலை,பாக்குப் போடுவது, அலங்காரப் பொருட்கள் பயன்படுத்துவது, வாசனாதித் திரவியங்கள் பயன்படுத்துவது போன்றவை பிரமசரியத்தில் அனுமதி இல்லாதவை.. பிரமசரியம் முடிந்து கிரஹஸ்தனாக ஆகும்போது மேல் சொன்னவற்றைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம், ஆசாரியர் அனுமதியுடன்.
Deleteகீதாக்கா உங்கள் வயிறு செய்யும் பிரச்ச்னைக்கு அப்புறம் எதுக்கு வடை கேட்கவே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு வேற ஹாஹாஹாஹாஹாஹா....அப்புறம் தோன்றியது ஆமா அக்கா சின்னக் குழந்தைதானே!!!
ReplyDeleteசமையல் பிரமாதம் போல!! ரொம்பக் காலத்துக்குப் பிறகு நல்ல சமையல் இல்லையா....உங்க கேட்டரர் பீட் ரூட்டா சமைச்சுத் தருவதற்கு மாறுதலான ஒரு சாப்பாடு....
கீதா
வடைனா ரொம்பவே பிடிக்கும். இப்போ ஒரு வடை தின்னவே பயம்! :( என்ன போங்க! என்னோட அந்தப் பழைய காடரர் இன்னமும் பீட்ரூட் ரசம், பீட்ரூட் வெங்காயக் கூட்டு, கறி எனப் பண்ணித் தள்ளுகிறார். எங்களைத் தவிர மத்தவங்க ரசிப்பாங்க போல! இப்போதைக்குக் காடரிங்கே வேண்டாம்னு பையர் ஆர்டர்! அந்தச் சாப்பாடெல்லாம் சுத்தமாகவோ, சுகாதாரமாகவோ பண்ணி இருக்க மாட்டாங்க, அதான் உன் (எனக்கு) வயிறு அடிக்கடி தகராறு பண்ணுது என அவர் கருத்து.
Deleteஶ்ரீரங்கத்துல அனேகமா எல்லாக் கடைகளிலும் நாமதான் இலை எடுத்துப் போடணும். கஷ்டமான வேலைதான்
Deleteவெளியிலே போக முடியாம பல உடல் அவஸ்தைகள் இருக்கறப்ப, இது ஒரு நல்ல சேஞ்ச். சாப்பிட்டு வந்து எதுவும் ஆகியிருக்காது என்று நம்புகிறேன். இந்த மாற்றம் உங்களுக்குக் கொஞ்சம் புத்துணர்வு அதுவும் நல்ல சாப்பாடு சுவைத்து ரசித்து சாப்பிட்டிருக்கீங்க. ...எனவே புத்துணர்ச்சி கொஞ்சம் வந்திருக்கும்...
ReplyDeleteகீதா
நல்லபடியா எதுவும் ஆகலை. இப்படியே கடந்து போகட்டும்னு வேண்டிண்டு இருக்கேன். :))))) வெளியே போய் மனிதர்களைப் பார்த்ததே புத்துணர்ச்சியுடன் தான் இருக்கு.
Deleteதிருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி வந்தது அருமை.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகள் அந்த மணமக்களை நல்லபடியாக வாழவைக்கும்.
கல்யாண வீட்டு சாப்பாடு வயிற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தது கேட்டு மகிழ்ச்சி.
வேதபாடசாலை மாணவர்கள் வாழ்க வளமுடன். சிறு வயதில் கஷ்டபட்டால் பிற்காலத்தில் சிறந்து விளங்குவார்கள்.
நல்ல உணவை ரசித்து எழுதியிருக்கீங்க.
ReplyDeleteவேத அத்யயநம் பண்ணுவது சுலபமன்று.
ReplyDeleteநம் அற்பப் புத்திதான் பணத்தின் மீது நம்மைப் பற்றுவைக்கத் தூண்டுகிறது. அதை மீற முடியவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன், படுகிறேன்.
மகள், அது உங்கள் குணம் என்றாள். சில நாட்களுக்கு முன் இங்கு ஒரு கோவிலுக்கு அரிசிக்காக ஐயாயிரம் கொடுத்தாள். (என்னிடம் சொல்லவில்லை. அவள் அம்மா நான் ரொம்ப வற்புறுத்திக் கேட்டபின் சொன்னாள். நான் எப்போதும் 50-100ரூ மட்டும் கொடுக்கும் வழக்கமுடையவன் ஹிஹி)
கல்யாண சாப்பாடு சுவையாக சென்றது ..
ReplyDeleteஇறுதியில் வேதபராயண மாணவர்கள் ஒட்டிய வயிறு :( மனதை வருத்தியது வாழ்க அவர்கள் மன உறுதி.