இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு.
இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.
என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.
செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும்.
பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.
முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!
ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.