ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன், அவர்கள் பூஜை அறையிலும் கூட நாயன்மார்களோ அல்லது திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை. இதன் காரணம் என்ன?கீதா சாம்பசிவம் போன்று இதன் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
நெல்லைத் தமிழன் கேள்வி.
இந்நிலை நீடிக்காமல் விஜயநகரப் பேரரசும், நாயக்கர், மராத்தியர் ஆட்சிக்காலங்களும் மக்களுக்கு மீண்டும் பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பித்து விழாக்களை எல்லாம் ஒழுங்கு செய்து மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். என்றாலும் மக்கள் முழு மனதுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வில்லை.அவர்களுக்குள் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஒரே வீட்டிலேயே அண்ணன் சிவ பக்தனாகவும், தம்பி வைணவ பக்தனாகவும் இருந்த காலம் போய் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.
அந்நாளைய படிப்பில் சைவத்திருமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களே கோயில் சிவாசாரியார்களாக இருக்க முடியும் என்னும் நிபந்தனைகள் எல்லாமும் இருந்திருக்கிறது. சாமானிய மனிதன் தமிழ் கற்றால் கூடத் தமிழ் இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம் என நிறுத்திவிடாமல் பன்னிரு திருமுறைகளையும் கூடக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவற்றைப் பண் அமைத்துப் பாட வேண்டும் என்னும் நிபந்தனையும் கூட இருந்திருக்கிறது. இது நம் தமிழ்த்தாத்தா அவர்கள் தமிழ் கற்கும்போது கூட இருந்திருக்கிறது என்பதை அவருடைய சுய சரிதையின் மூலம் காணலாம். தமிழ் கற்க இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் இருக்க ஆங்கிலப் பள்ளிகள் நாளாவட்டத்தில் பெருகின. அவை ஆங்கிலத்தைப் போதித்ததோடு நிற்காமல் தமிழின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லக் குறைத்தார்கள். முன்னெல்லாம் சிவ தீக்ஷை பெற்றவர்களே தமிழில் பண்டிதர்கள் ஆகலாம் என்றிருந்தது மாறித் தமிழை ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்னும் நிலைமைக்கு மாற்றியது அக்கால ஆங்கில அரசு. அதே சமயம் இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்களும் சரி, மற்றத் தமிழர்களும் சரி தேவார/திருவாசகங்களைப் படித்து ஓதி சிவ தீககை பெற்றே மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் முற்றிலும் வேறான நிலைமை.
இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வைணவப் பிரிவினையின் மூலம் வைணவர்கள் விஷ்ணு ஒருவனே தெய்வம்! என்னும் கொள்கையையும் தூக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குள் வடகலை/தென்கலைப் பிரிவுகள் தோன்றினாலும் ஸ்ரீராமானுஜர் காலத்துக்குப் பின்னால் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் பட்டாசாரியார்களே சந்நிதிக்குள் பாசுரங்கள் பாடும் முறையை ஏற்படுத்தினார்கள். அதைத் தவிரவும் பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்களைத் தேர்ந்தெடுத்துத் தனி கோஷ்டி முறையை உருவாக்கி இதற்கென்றே தனிப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
சைவர்களில் சைவர் எனத் தனியாக இருந்தவர்கள் ஆதி சைவர்களும், சிவாசாரியார்களுமே. இருவருமே ஒன்றே எனச் சிலர் சொன்னாலும் பலர் மறுக்கவும் செய்கின்றனர். இவங்க சிவனைத் தவிர்த்து வேறே கடவுளை வணங்குவதில்லை. அதே சமயம் பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் புதியதொரு பிரிவு தோன்றியது. இவர்கள் ஆதி சங்கரரைத் தங்கள் குருவாக ஏற்றவர்கள். அவருடைய ஷண்மத தத்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்தக் கடவுள்களிடமும் பேதங்கள் கிடையாது. சர்வம் சிவ மயம் என்றாலும் சர்வம் விஷ்ணு மயம் என்றாலும் ஏற்பவர்கள். பஞ்சாயதன பூஜை என்னும் ஷண்மத வழிபாட்டில் முக்கியமான பூஜை முறையைப் பலரும் ஏற்று அதன்படி பூஜை செய்பவர்கள். இவர்களில் சிவ பூஜை மட்டுமே செய்பவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். மற்றவர்களை ஏற்க மாட்டார்கள்.
இந்த ஸ்மார்த்தர்கள் என்னும் பிரிவினர் கோயில்களில் வழிபாடுகளைச் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வைணவர்களில் அப்படி இல்லை.ஆகம நடைமுறைகள் தெரிந்த பட்டாசாரியார்கள் என அனைவருமே கோயிலின் கர்பகிரஹத்தில் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பிரபந்தங்களை ஓதத் தெரிந்தவர்கள். ஆனால் அதே சமயம் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்கள் பன்னிரு திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஓதவும் தெரியும். ஆனாலும் எப்போது எனத் தெரியாத காலத்திலேயே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் தோற்றுவிக்கப்பட்டுச் சைவ மடங்களால் ஆதரிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இருக்கும் கோயில்களின் கால வழிபாட்டின்போது தேவார/திருவாசகங்களை ஓதும் பேறு பெற்று இன்று வரை பல கோயில்களிலும் ஓதி வருகின்றனர். இவர்களில் ஸ்மார்த்தர்களும் சேர்ந்து கொள்வார்கள். பலருக்கும் ஓதத் தெரிந்திருந்தாலும் சிவன் கோயில் நடைமுறைப்படி ஓதுவார் தான் ஓத வேண்டும் என்றிருப்பதால் அவர்தான் ஓதுவார். கூடவே நாமும் தெரிந்தால் சொல்லலாம்.
சிதம்பரத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் வந்து பன்னிரு திருமுறைகளை ஓதுவதை இன்றும் பார்க்க முடியும். அங்கே உள்ள தீக்ஷிதர்கள் ஸ்மார்த்தர்கள் ஆனாலும் அவர்கள் ஈசனின் நேரடிச் சீடர்கள் என்பதால் அவர்கள் கர்பகிரஹத்தில் வழிபாடுகள் செய்ய உரிமை பெற்றவர்கள் என்பதோடு அனைவருக்குமே பன்னிரு திருமுறைகளை ஓதவும் தெரியும். பெரும்பாலும் அபிஷேஹ காலத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லிக் கொண்டோ அல்லது திருமுறைகளை ஓதிக்கொண்டோ அபிஷேஹம் செய்வார்கள்.எல்லாக் கோயில்களிலும் பன்னிரு திருமுறைகளை முறைப்படி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் அந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மடங்களால் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் பங்கு கொள்பவர்களே பிராமணர்கள் தாம். அனைவரும் சேர்ந்து தேவார முற்றோதல் என்னும் நிகழ்ச்சியை அடிக்கடி தொடங்கி நிறைவும் செய்வார்கள். கட்டாயப்பாடமாகப் பன்னிரு திருமுறைகளை வைக்காமல் விருப்பப் பாடமாக வைத்திருப்பதால் இதில் ஆர்வம் உள்ளவர்களே கலந்து கொள்கின்றனர். திருப்புகழும் அப்படித் தான் எல்லாக் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தியே ஆகவேண்டும். வைணவர்களுக்கு மகாவிஷ்ணுவிடம் உள்ள பற்றும், பாசமும், பக்தியும் சைவர்கள்னு சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களுக்கு இல்லை என்றே சொல்லணும். மிகச் சின்ன வயசிலேயே வைணவ பக்தி நெறிமுறைகள் போதிக்கப்படுகின்றன என்பதற்கு என் முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். அவர்களின் புதல்வன் "ஆத்ரேயனே" சான்று. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். இங்கேயும் "சிந்துஜா ஹரிகதை" போன்ற மேதைகள் உள்லனர் என்றாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.. வைணவர்கள் மறந்தும் பிறன் தொழமாட்டார்கள் என்பதற்குச் சிதம்பரம் கோயிலின் பெருமாளே சாட்சி. ஆனால் மற்றவர்கள் எல்லாவற்றையும் ஏற்பார்கள். இந்துக்களின் இன்றைய நிலைமைக்கு அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சிவன் கோயில்களில் ஸ்வாமி பல்லக்கைத் தூக்குபவர்கள் பிராமணராய்த் தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் விஷ்ணு/பெருமாள் கோயில்களில் அவர்களைத் தவிர வேறே யாரும் பெருமாளின் பல்லக்கைத் தொடக் கூட முடியாது. பிராமணர்கள் அலகு குத்திக்க மாட்டாங்க, கடினமான வேலைகளைச் செய்ய மாட்டாங்க என்பவர்கள் அந்த ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோள்பட்டையைப் பார்த்தால் தெரியும்.
வேறு கருத்துள்ளவர்கள் சொல்லலாம்.
இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?..
ReplyDeleteஓம் ஹரி ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
ஆமாம், எத்தனையோ அன்பர்கள் திருமுறைகளை முற்றோதல் செய்து கொண்டே இருக்கின்றனர். அது குறித்து எனக்கு மின் மடல் வரும் அல்லது அழைப்பு வரும். ஆகவே வெளிப்படையாகத் தெரியலையே ஒழிய தேவார/திருவாசகங்கள் ஓதப்பட்டே வருகின்றன. வைணவத்தில் பிரபந்தம் சேவித்தல் எனத் தனியாக இருப்பதைப் போல் எல்லாச் சிவன் கோயில்களிலும் இருப்பதில்லை. ஆனாலும் அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயில் கோயிலில் அடிக்கடி தேவாரக் குழுவினர் சேர்ந்து கொண்டு தேவாரம் பாடி ஈசனை வணங்குவது உண்டு. ஒரு காலத்தில் போயிருக்கேன். இப்போவும் நடக்கிறது எனத் தெரியும்.
Deleteஆஹா இங்கே பதில் சொல்லீட்டீங்களா ! நன்றி.
ReplyDeleteஆமாம். உங்களுக்கு எப்போத் தேவையோ அப்போப் பயன்படுத்திக்கலாம் திரு கேஜிஜி.
Deleteநிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteஎனக்கும், வெகு காலமாக பிராமணர்கள் எதற்காக அலகு குத்துவதில்லை, பூக்குழி (தீ மிதித்தல்) இறங்குவதில்லை என்ற ஐயப்பாடு இருந்தது.
@கில்லர்ஜி! பூக்குழி மிதித்தல்(தீமிதி) பிராமணரிடமும் உண்டு. என் சொந்த நாத்தனாரே 20/25 வருடங்கள் முன்னர் எங்க ஊரான பரவாக்கரையில் பூக்குழியில் இறங்கிவிட்டுக் காயங்கள் ஏற்பட்டு 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை எடுக்கும்படி ஆகிவிட்டது. பொதுவாகவே எங்க வீடுகளில் கடுமையான பிரார்த்தனைகளை நேர்ந்துக்க வேண்டாம் என்பார்கள். அப்படியும் முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட என் அம்மாவழித்தாத்தா வீட்டில் காவடி எடுப்பதும் உண்டு.
Deleteகோவிலில் பல்லக்குத் தூக்குபவர்கள் வைணவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. பலரும் இருப்பார்கள் (ஆனால் அந்தக் கோவிலில் ரெகுலராக அந்தக் கைங்கர்யத்தைச் செய்பவர்களாக இருக்கவேண்டும்). நான் ஒரு கோவிலுக்குச் சென்று, நானும் பல்லக்கு ஏளப்பண்ணவா என்று கேட்டால், தூரப்போ என்று சொல்லிவிடுவார்கள்.
ReplyDeleteஎன் கேள்வி, வைணவர்கள், கோவிலில் ரெகுலராக ப்ரபந்தங்களை சேவிப்பார்கள். ஆனால் ஸ்மார்த்தர்கள் மற்றும் பிராமணர்கள் அவ்வாறு திருமுறைகளை சேவிப்பதைப் பார்த்ததில்லையே என்று.
ஓதுவார்கள் என்பவர்கள் மாத்திரம்தான் திருமுறைகளைச் சேவிக்க முடியுமா? அவர்கள் இன்ன ஜாதி என்ற தளையால் கட்டப்பட்டவர்களா இல்லை அதற்குரிய படிப்பைப் படித்தவர்களா?
கர்பக்ரஹ வழிபாட்டுக்கும் இதற்கும் ரொம்பவே சம்பந்தம் கிடையாது. வைணவக் கோவில்களில், அர்ச்சகர், ப்ரபந்த சேவையை ஆரம்பித்து வைப்பதும் உண்டு. வைணவர்கள் திவ்யப்ரபந்தத்தை ஒளி குன்றாமல் வளர்த்து வருவதைப் போல (கர்நாடகாவில் கன்னட ஸ்க்ரிப்டில் தமிழ் ப்ரபந்தங்கள் உண்டு, ஆந்திராவில் தெலுங்கு, மற்றும் நவீன இளைஞர்களுக்காக ஆங்கில ஸ்க்ரிப்டில்), சைவர்கள் திருமுறைகளை ஏன் வளர்க்கவில்லை?
துரை செல்வராஜு சார் பதியும் திருமுறைகளில் உள்ள தமிழ்,, பக்தி, கொஞ்சி விளையாடுது. ஏன் அதனைப் போற்றிப் பாதுகாக்கவில்லை? (அனைத்து சைவர்களும்)
கோயில்களில் நீங்க எல்லாம் ப்ரபந்த கோஷ்டி எனச் சேவிப்பதைப் போல் ஸ்மார்த்தர்களோ/சைவர்களோ சேவிக்காமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் தேவாரப் பாடல்கள் பாடி நான் நிறையக் கேட்டிருக்கேன். சிதம்பரத்தில் ஆறுகால பூஜையிலும் தேவார/திருவாசகங்கள் ஓதுவாரால் ஓதப்படும் அதே சமயம் தீக்ஷிதர்களும் கூடவே சொல்லுவார்கள். அதைத் தான் ஓதுவாரைக் கீழே ஒதுக்கி வைச்சுட்டுப் பொன்னம்பலத்தில் தேவாரம் சொல்லுவதில்லை/தமிழை ஒதுக்குகிறார்கள் சிதம்பரம் தீக்ஷிதர்கள் என்னும் அவப்பெயரைச் சூட்டி யாரையோ அரசு சார்பில் அங்கே பொன்னம்பலத்தில் தேவாரம் பாடவென ஒருவரை நியமித்திருந்தார்கள் முந்தைய விடியா அரசில். சும்மா பேருக்குத் தான். அவர் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார்.
Deleteஒருமுறை திருவாதிரைத் திருநாளுக்குச் சிதம்பரம் சென்று பாருங்கள். நாங்க போயிட்டு வந்து எழுதினதையும் படியுங்கள் நெல்லை. சிதம்பரம் தேருக்கு முதல்நாள் ஈசன் பிக்ஷாடனராக வீதி உலா செல்லுவார். அதற்கு முன்னர் மாலை சாயரட்சை வழிபாட்டின் போது மாணிக்கவாசகரின் விக்ரஹத்தை வைத்துத் திருவாசகம் பாடுவார் ஓதுவார். ஒவ்வொரு பதிகம் முடிந்ததும் ஒரு அபிஷேஹம், தீபாராதனை நடக்கும். கடைசியாகச் சொல்லும் பதிகம் முடிந்ததும் அகண்ட தீபாராதனை. அன்றைய தினம் முழு மரியாதையும் மணி வாசகருக்குத் தான். இதை எல்லாம் பார்க்கவே கொடுத்து வைக்கணும். எங்களுக்கு ஒரு வருஷம் கிடைச்சது. ஒவ்வொரு தீபாராதனையின் போது அந்தக் காண்டாமணி ஓம், ஓம், ஓம் என்று சப்தமிடும். மனதும் உடலும் விம்மி அழும்.
Deleteஅடுத்தது தேவார/திருவாசகத்தை மற்ற மொழியில் மொழிபெயர்க்கவில்லை என்கிறீர்கள். இலங்கையில் வசிக்கும் சிவனடியார் மறவன் புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களைத் தெரியுமா உங்களுக்கு? இப்போது நடக்கும் மதமாற்றங்களை எல்லாம் சிவசேனா என்னும் பெயரில் தொண்டர்களைத் திரட்டித் தடுத்து வருகிறார். இந்தப் பெரியவரின் சீரிய முயற்சியால் தேவாரம்/திருவாசகம், பன்னிரு திருமுறை கொஞ்சம் கொஞ்சமாகத் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மொழி பெயர்த்து உதவியது என்னோட அருமை நண்பர் திரு திவாகர் (சிதம்பரம் சொந்த ஊர். நான் சிதம்பர ரகசியம் எழுதுகையில் பேருதவி செய்தார்) பத்திரிகையாளர். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக விசாகப்பட்டினத்தில் வசிப்பவர். அவரும் அவர் மனைவி திருமதி சசிகலாவும் காழிப்பிள்ளை அவர்களின் முதல் திருமுறையை மொழி பெயர்த்தனர். பின்னர் அவர்களோடு தொடர்பு இல்லாமல் போனதில் தற்போதைய நிலவரம் தெரியவில்லை. என்றாலும் திவாகர் எனக்குத் தம்பி போல. எப்போது வேண்டுமானாலும் அவரைக் கேட்டுச் சொல்லுகிறேன்.
Deleteநவ கயிலாயக் கோயில்கள் சென்றபோது கூடக் கோடகநல்லூரிலும் இன்னம் இரு ஊர்களிலும் ஓதுவார்கள் தேவாரம் பண்ணிசைத்துப் பாடுவதைக் கேட்டேன். பாபநாசத்திலும் மதிய வழிபாட்டில் கேட்க நேர்ந்தது. என்ன ஒரு குறை எனில் அவங்களுக்குச் சம்பளம் அப்போ (பதினைந்து வருடங்கள் முன்னர்) 750 ரூபாய் தான் அரசு கொடுத்து வந்தது. அதுவே நவதிருப்பதிகள் எல்லாம் டிவிஎஸ் காரங்க நிர்வாகத்தில் இருப்பதால் எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருந்தனர். யாருக்கும் குறை இல்லை.
Deleteமறவன் புலவு சச்சிதானந்தம் அய்யாவின் பெருமுயற்சியால் திருமுறை, திருநெறி இரண்டுமே http://thevaaram.org/ வெப்சைட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தேவநாகரி, சீனம், ஜப்பான், ஜெர்மன், ஆங்கிலம், ஃப்ரென்ச், இடாலியன், சிங்களம் உள்ளிட்ட பிற மொழிகளில் பொழிப்புரையுடன் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் நம்பூதிரி ப்ரீஸ்ட் மலையாளப் புத்தகத்திலிருந்து திருவெம்பாவை வாசிப்பதைக் கண்டிருக்கின்றேன்.
Deleteநன்றி சூர்யா! எனக்குக் கன்னடம், மலையாளத்தில் மொழிபெயர்ப்பு ஆரம்பித்தது குறித்துத் தெரியும். மேலும் இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை இப்போதே அறிந்தேன். மிக்க நன்றி தகவலுக்கு.
Deleteதேவார/திருவாசகங்களைப் போற்றிப் பாதுகாக்காமல் தூக்கி எறிந்திருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது நெல்லை? திருப்புகழ் ஓதுபவர்கள் பெரும்பாலும் ஸ்மார்த்த பிராமணர்களாகவே இருப்பார்கள். அதைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? நாயன்மார்களில் பெரும்பாலோர் பிராமணரல்லாதவர் என்றாலும் வணங்கும்போது அறுபத்து மூவரையும் சேர்த்தே வணங்குகிறோம்.
Deletehttps://tamilhindu.com/2009/08/book-abt-othuvar ஓதுவார்கள் குறித்த மேல் அதிகத் தகவல்களுக்கு இந்தச் சுட்டி உதவலாம்.
Deleteவைணவக் கோவில்களில், ப்ரபந்த கோஷ்டி என்று பல திவ்யதேசங்களில் (பெரும்பாலான) கிடையாது. இருக்கும் கோவில்களிலும் அவர்களுக்கு எந்த வசதியோ பணமோ கிடையாது. அன்றைய பிரசாதம் அவர்களுக்கு இரு முறை கொடுக்கும் சம்ப்ரதாயம் உண்டு (அதுபோல சேவிப்பதற்கும் அந்த அந்த திவ்யதேசக் கோவில்களில் உள்ளவர்கள்தாம் சொல்ல முடியும். மற்றவர்கள் சொல்ல இயலாது. உதாரணமா எனக்குக் கொஞ்சம் தெரியும் என்றாலும் ஸ்ரீரங்கத்தில் சேவிக்க முடியாது. ஆட்கள் இல்லாத கோவில்களிலும் ப்ரபந்த கோஷ்டியில் சேவிக்க, அதற்குரிய ஆடையலங்காரத்துடன் (ஸ்வரூபம் என்று நாங்கள் சொல்வோம்) இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் சட்டையோடு சமீபத்தில் ஸ்ரீரங்கபட்டினத்தில் அவர்களிடம் அனுமதி பெற்று சேவித்தேன், ஆனால் அது மிகத் தவறு)
Deleteநெல்லை சொல்லியிருப்பது போல் அய்யங்கார்கள் திவ்வியப்பிரபந்தம் வாசிக்கும் அளவுக்கு அய்யர்கள் தேவாரம் திருவாசகம் வாசிப்பதில்லை. உண்மை என்றே நினைக்கிறேன். ஹிஹி.
Deleteசுவாரசியமான நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப நாளாச்சு படிச்சு. இன்னிக்கு அழைச்சுட்டு வந்துட்டிங்க.
Deleteமிக்க நன்றி அப்பாதுரை, வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. கேள்விக்கு ஏற்ற தங்களது பதில்கள் படிக்க நன்றாக உள்ளது. நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களது, படிப்பறிவும், அனுபவ அறிவும் உங்கள் பதில்களில் தெளிவாக புலப்படுகிறது. நிறைய விஷயங்களை தெளிவாக கூறியதற்காக உங்களை பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. உங்களிடமிருந்து ரொம்பச் சுருக்கமான பதில் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளதே! என்றாலும் முக்கிய விஷயங்களைச் சொல்லி விட்டீர்கள். இந்தத் தேவார/திருவாசக முற்றோதல் குறித்தோ, ஓதுவார்கள் சிவன் கோயில்களில் ஓதுவதைப் பற்றியோ ஏதேனும் சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்.
Deleteபிராமணர்கள் என்று நெல்லை குறிப்பிடுவது சைவர்களா? வைணவர்களும் பிராமணர்கள் தான் என்று நினைத்திருந்தேன்.
ReplyDeleteவைணவர்களிலும் சிலர் தமிழ்ப் பாசுரங்களை பாடாதிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த பாஷ்யம் அந்த பாஷ்யம் என்று சொல்வார்கள், ஆனால் திவ்வியப்பிரபந்தம் வீட்டில் இருக்காது. வடமொழியோ தமிழோ பொருள் தெரியாமல் சும்மா சொன்னால் அர்த்தமுமில்லை அழகுமில்லை என்று நினைக்கிறேன்.
நிறைய "பிராமணர்கள்" வீட்டில் திருமுறைகளைத் தினம் படிக்காததன் காரணம் நானறிந்தவரை சும்மா டம்பம் தான். பரம்பரையாக யாரும் படிக்கவில்லை - சமஸ்க்ருதம் தான் "அடையாளம்" என்று தாமாகவே எதையோ கற்பித்துக்கொண்டது தான் தமிழை ஒரு படி கீழே "பிறர் படிக்கட்டும்" என்று விட்டதன் காரணம். எல்லாரையும் இந்த வகையில் சேர்க்க மாட்டேன். காலையில் பொருள்தெரிந்து அக்நிஹோத்ரம் செய்து விட்டு பொருள் தெரிந்து ருத்ரம் சமகம் சொல்லி அபிஷேக ஆராதனை செய்து பிறகு ஒரு மணி நேரம் கண்ணீர் மல்க தேவாரம் திருவாசகம் சொல்லும் "பிராமணர்களை" பார்த்திருக்கிறேன். சிதம்பரம், சீர்காழி, காசி, திருநெல்வேலி, புவனேஸ்வர் போன்ற இடங்களில். ஆனால் சென்னையில் பார்த்ததில்லை. :-).
பிராமணர்கள் என நெல்லை சொல்லி இருப்பது ஸ்மார்த்தர்களை என்றே நான் புரிந்து கொண்டேன். அவங்களுக்குப் பரந்து பட்ட மனது என்பதால் எல்லாவற்றையும் ஏற்பார்கள். அதன் விளைவுகள் தான் இப்போது நடப்பது எல்லாம் என்று கூட எனக்குத் தோன்றும்.
Deleteசம்ஸ்க்ருதம் அடையாளம் என நீங்கள் சொல்லுவதை குறித்து ஓரளவுக்கு நானும் அறிந்திருக்கேன். நான் கல்யாணம் ஆகி வந்தப்போக் கந்த சஷ்டி கவசம், துளசி ஸ்துதி, திருப்பாவை, திருவெம்பாவை, காமாட்சி அம்மன் விருத்தம், அபிராமி அந்தாதி போன்றவற்றைச் சொன்னால் மாமியாருக்குக் கோபம் வரும். இதெல்லாம் வீட்டுக்கு ஆகாது என்பார். பின்னாட்களில் அவரே சொல்லவும் ஆரம்பித்தார்.
நிறைந்த தகவல்கள் அறிந்து கொண்டோம்.
ReplyDeleteThank You Maadevi.
Deleteஅன்று வரிசையாக பதிவுகள் படித்து வந்த நேரத்தில் பதில் என்ன சொல்ல என்றே புரியவில்லை. அலுவலகம்ஸ் என்று விட்டேன். பின் அடுத்தடுத்த பதிவுகள், பதில்கள் என்று இதை மறந்து விட்டேன். மன்னிச்சுக்கோங்க அக்கா.
ReplyDeleteபரவாயில்லை ஸ்ரீராம், நான் வீட்டில் விசேஷக்கெடுபிடியோனு நினைச்சேன். :) எப்போதும் போல் அலுவலககெடுபிடிதான் போல! :(
Deleteதமிழ்த்தாத்தா பதிவு கண்ணில் படவில்லை. இந்தப் பதிவைப் பார்த்தேன். படித்தேன். உங்கள் அளவு விஷய ஞானம் உள்ளவர் சிலரே. துரை செல்வராஜூ அண்ணன் இதில் நிறைய தேர்ச்சி பெற்றுள்ளார். நான் இவற்றில் பூஜ்யம்! நான் ஸ்வாமி அறை பக்கமே செல்வதில்லை. மனதால் நினைந்து கொள்வதோடு சரி. எனவே லேசானா குற்ற உணர்ச்சி கூட உண்டானது.
ReplyDeleteஎன்னாது? ஸ்வாமி அறைக்குப் போவதில்லையா? தினம் காலை எழுந்ததும் ஒரு முறை ஸ்வாமியைப் பார்த்துட்டுத் தானே காஃபி குடிக்கணும். குறைந்த பட்சமாக அலுவலகம் கிளம்பும்போதாவது பாருங்க. மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும் ஒரு பத்து நிமிஷம் காயத்ரி சொல்லிக் கொண்டே ஸ்வாமியைப் பாருங்க. பின்னால் பழகிவிடும்.
Deleteநெல்லை ஒரு பாசுரம் ஒன்றை எனக்கு எதற்கோ பதிலாய் அனுப்பியபோது அதன் தமிழில் பொருளில் மயங்கியது உண்மை. அவரிடம் கூட அதையொட்டி ஒரு யோசனை சொன்னேன். அது நடக்கவில்லை. பாசுரங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டதோடு சரி. துரை அண்ணன் பதிவுகள் படிக்கும்போது சைவ திருமுறைகள் பற்றி எண்ணம் வரும். கோமதி அக்காவும் அவர் கணவரும் நிறைய படித்து, ஸார் இதுபற்றி சொற்பொழிவெல்லாம் ஆற்றியவர். இவர்களுக்கு முன் நான் ஒரு சிறு துரும்பு என்கிற எண்ணம் என்னை ஓரமாக தள்ளி விட்டது!
ReplyDeleteகோமதி குடும்பத்தினர் அனைவருமே சைவ மரபை விடாமல் பின்பற்றுபவர்கள். அவர் மாமனாராகட்டும், கணவராகட்டும் திருமுறைகளில் ஆழ்ந்து போனவர்கள்.கோமதி கூட அவ்வப்போது திருமூலரை மேற்கோள் காட்டுவார். அவங்க சொல், நினைப்பு, எழுத்து எல்லாமே சிவமயம்.
Deleteஎல்லா பின்னூட்டங்களையும் படித்தேன். சுவாரஸ்யம். அப்பாதுரை சொல்லி இருப்பதை நானும் ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteஎன் அப்பா வீட்டிலும் சரி, அம்மாவழித்தாத்தா வீட்டிலும் சரி, தமிழ், சம்ஸ்க்ருதம் எல்லா மொழிகளிலும் ஸ்லோகங்கள், பாடல்கள் சகஜமாகப் புழங்குவோம். அம்மா தினம் காமாட்சி அம்மன் விருத்தம் சொல்லுவார். நானும் நிறைய பஜனைப்பாடல்கள், துளசி ஸ்தோத்திரம், விளக்கு ஸ்லோகம், வெங்கடேச சுப்ரபாதம் என்று சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கேன். ஆனால் திருமணம் ஆனதும் இதெல்லாம் போய் விட்டது. தமிழில் எந்த ஸ்லோகமும் சொல்லக் கூடாது, துளசி பூஜை எல்லாம் பண்ணக் கூடாது கந்த சஷ்டி கவ்சமெல்லாம் வீட்டுக்கு ஆகாது என மாமியாரின் கடுமையான உத்திரவு. அப்படியும் ரகசியமாய் எல்லாமும் பன்ணிக் கொண்டு தான் இருந்தேன். வசதியாக ராஜஸ்தானும் மாற்றிப் போயிட்டோம். பின்னர் வந்தப்போ மாமியாரே எல்லாம் பண்ண ஆரம்பிச்சிருந்தாங்க என்றாலும் கடைசி வரை எனக்கு அனுமதி தரலை. ஆனாலும் நான் தைரியமாக சத்தமாக எல்லா ஸ்லோகங்கள், துளசி பூஜை எனப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அனுமதி எல்லாம் கேட்டுக்கலை.
Deleteகீதாக்க பதிவை வலைப்பக்கம் வந்ததுமே வாசித்துவிட்டேன். ஆனால் எனக்குப் பதில் சொலல்த் தெரியாதே! நம் வீட்டில் அதாவது பிறந்த வீட்டில் பிரபந்தம் என்று எதுவும் கற்றதும் இல்லை. சும்மா பிரார்த்திப்போம், கோயிலுக்குச் செல்வோம் அவ்வளவே. இத்தனைக்கும் பாட்டியின் கீழ் வளர்ந்தவர்கள் நாங்கள், தத்துவார்த்தங்கள் எதுவும் பேசியதும் இல்லை, சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அதனால் எனக்கும் அப்பழக்கம் இல்லை. பாட்டி நாங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து எங்கள் காலில் நிற்க வேண்டும் என்பதைத்தான் போதித்தார்.
ReplyDeleteஆனால் என் தங்கைகளில் இருவர் திருமணமானபின் நிறைய கற்றுக் கொண்டார்கள். நாராயணீயம், கீதை ஸ்லோகங்கள், பிரபந்தம் என்று. அதில் ஒரு தங்கை தற்போது குழந்தைகளுக்கு கீதை ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்து அதற்கு இணையான கதைகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறாள்.
ஆனால் நான் இதனுள் எதிலும் சென்றதில்லை. பிரார்த்தனை மட்டுமே அதுவும் வேண்டுதல் என்பது கிடையாது. வீட்டிலும் பூஜைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மனமார்ந்த பிரார்த்தனை. இறைவனை இறைவனுக்காகத் தொழுவது என்று. மாபெரும் சக்தியாக நினைத்துத் தொழுவது. நன்றி சொல்வது.
அதனால் பதிவையும், எல்லோரது கருத்துகளையும் வாசித்தேன். விஷயங்களும் தெரிந்துகொண்டேன்.
கீதா
நான் வகுப்புக்குப் போய்க் கற்றுக்கொண்டது திருப்பாவை, திருவெம்பாவை தான். அதுவும் அப்பாக் காஞ்சி மடமும் ஸ்ருங்கேரி மடமும் போட்டி போட்டுக்கொண்டு புத்தக உதவிகள், வெள்ளிக்காசுகள் கொடுத்து ஊக்குவிப்பது எனச் செய்தனர். ஆகவே அந்தக் காலம் ஒரு பொற்காலம் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் பஜனைகளும், திருப்புகழ்/திருப்பாவை/திருமுறை வகுப்புகளும் நடந்து வந்தன. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் கோடி அர்ச்சனை முழுக்க முழுக்கத் தமிழில் தினம் நடந்தும் வந்தது.
Deleteஎன் மிகச் சிறிய வயதில் நான் இருந்தது பாட்டி தாத்தா வீட்டில் கற்றுத்தந்த திருப்பாவை, திருவெம்பாவை, அதன் பின் மற்றொரு பாட்டி வீட்டுக்கு வந்த பிறகு படிப்பு மட்டுமே.. திருமணம் ஆகும்வ் அரை, எனக்குத் தெரிந்த ஒரே மடம் காஞ்சி மடம், காஞ்சி மகா பெரியவர். அதுவும் அவர் எங்கள் ஊருக்குக் கால்நடையாக வந்தபோது.
ReplyDeleteமற்ற மடங்கள் ஜீயர் என்பது பற்றி எதுவும் தெரியாது. எனக்குப் பாட்டு கற்றுக் கொடுத்த பாட்டு வாத்தியார் சிவன் கோயில்களில் திருமறை ஓதுவதைக் கேட்டதுண்டு. எனக்கும் சில தேவாரப் பாடல்கள், அபிராமி அந்தாதியின் இரண்டு பாடல்கள் ராகத்துடன் கற்றுக் கொடுத்தார்.
என் நட்புகளின் தந்தை சைவமறை கற்றவர். பாடமாகவே கற்று கோயில்களில் ஓதி பூஜை செய்யும் முறைகளையும் கற்றவர். அவரும் வீட்டிலும் சொல்வார், கோயில்களிலும் ஓதுவார். அவர்கள் குடும்பமே சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் மற்றும் பெரியவர்கள் தீட்சை பெற்றவர்கள். அதனால் ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பார்கள். தினமும் காலை வீட்டில் பூஜையும் திருமறையும் சொல்வார்கள்.
கீதா
அப்பா பள்ளி ஆசிரியர் என்பதால் எங்களுக்கு இம்மாதிரியான ஆசிரிய மக்கள்/ஆசிரியப்பெரியோர்கள் நிறையத் தெரிந்தவர்களாக இருந்தனர். வீட்டில் சண்டை, சச்சரவு என இருந்தாலும் இவற்றில் குறை வைத்ததே இல்லை. அதோடு விடாமல் எல்லாச் சொற்பொழிவுகள், கதா காலட்சேபங்கள், பஜனைகள் எனப் போய்விடுவோம்.
Delete