எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 02, 2024

கோலத்தில் கொண்டாடிய பண்டிகை!


 பால்கனியில் கனுப்பிடி வைச்சேன். மொட்டை மாடிக்கு இப்போல்லாம் ஏற முடியாததால் இங்கேயே வைச்சுடுவேன். நான் மட்டும் தான் என்பதால் ஒற்றை இலை போடாமல் இரண்டு இலைகள் போட்டு இரண்டிலும் வைப்பேன். கூட யாரேனும் இருந்தால் எனக்குத் தனி இலை, அவங்களுக்குத் தனி இலைனு இரண்டு ஆயிடும். ஆனால் யாருமே இல்லையே!



கனுவன்று போட்ட கோலம்.


 
பொங்கலன்று போட்ட கோலம்.



இந்த வருஷம் பூஜை பண்ண முடியலை என்பதால் பால்கனியில் சூரியக் கோலம் போட்டு எல்லாம் எடுத்து வைச்சுப் பண்ணாமல் பொங்கல், அன்னம், அவிசு, காய்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகியவ்ற்றை சுவாமிக்கு எதிரே வைத்து முடிஞ்ச மட்டும் கொண்டு வைத்துக் கொண்டு நிவேதனம் மட்டும் பண்ணினேன். அதுக்குள்ளேயும் அவருக்குப் பசி அதிகமாகி விட்டது. நேரம் ஆயிடுச்சே! :( பின்னர் சாப்பிடும்போது சாப்பாடு இறங்கலை . கஷ்டமாக இருந்தது. படம் எடுக்க முடியலை. ஒரேயடியாகப் பரத்தி இருந்ததால் மற்றவற்றை எடுத்து வைச்சுட்டு முக்கியமான பொங்கல், அவிசு மட்டும் படம் எடுத்துப் போட்டிருக்கேன்.


போகி அன்று போட்ட கோலம்

குட்டிக் குஞ்சுலுவிடம் பொங்கல் தினங்களை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். முதல்நாள் என்ன செய்வோம்,என்பதை வீடு சுத்தம் செய்து பண்டிகை நாளுக்காகத் தயார் செய்வோம் என்றும்  இரண்டாம் நாளான பொங்கலன்று சூரிய, சந்திரர்க்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம் என்றும் சொல்லிவிட்டு மூன்றாம் நாளன்று மாடு, கன்று, பறவைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவங்களுக்கும் இயற்கையைப் பேணி வருவதற்கான நன்றியைச் சொல்லுவோம் என்றும் சொன்னேன். அதோடு சகோதரர்களுக்காகச் சகோதரிகள் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள் என்றும் சொன்னேன். எல்லாமே வாய்ஸ் மெசேஜ் அதான். அதுவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது. ஊருக்குப் போகும் அவசரத்தில்.

29 comments:

  1. அக்கா அவர்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி. உடல்நிலை எப்படி உள்ளது? நலம் தானே?

      Delete
  2. ஆனா யாரும் இல்லையே..  ன்னு படிக்கும்போது வருத்தமாதான் இருந்தது.  சிரமமான நிலையிலும் எதையும் வீட்டுக் கொடுக்காமல் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போல்லாம் பண்டிகை நாட்களில் தனியாகச் செய்வது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் அந்தக் காலத்தில் என் அப்பா என்னிடம், இதெல்லாம் செய்வது குழந்தைகளுக்குக்காகத் தானே என்பார். அது மனதில் வந்து செய்ய வைத்து விடும். அப்போ அப்பாவிடம் நீ இங்கே செய்தால் அங்கே நாங்க இருக்கும் இடத்தில் நன்றாக இருந்துடுவோமானு கடுப்படிப்பேன். ஆனால் அதன் ஆழ்ந்த உட்பொருள் இப்போப் புரிந்து விட்டது. ஆகவே பண்டிகைகளைக் கூடியமட்டும் விடுவதில்லை. எல்லாம் குழந்தைகளுக்காகத் தானே!

      Delete
  3. மாமாவுக்கு பூஜை முடிவதற்குள் பசி..  ஆனால் பரிமாறும் போது பசி இல்லை என்பதும் வருத்தம் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் அவர் சாப்பாடு ஒரு ஒழுங்குக்கு வரச் சில நாட்கள் ஆகும் என நினைக்கிறேன். ஒரு தோசை, ஒரு சப்பாத்தி, இரண்டு இட்லி எனச் சாப்பிடுகிறார் சர்க்கரை அளவு உடம்பில் குறைஞ்சுடுமோனு பயப்பட வேண்டி இருக்கு.

      Delete
  4. கோலங்கள் அருமை.  குட்டி குஞ்சுலுவுக்கு தாங்க்ஸ் கிவிங் டே என்று அறிமுகப்படுத்தியது சிறப்பு.  

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இது உழவர்கள், கால்நடைகள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் விழாதானே!

      Delete
  5. அடடே இன்றுதான் எபியில் தங்களைக் குறித்து கேட்டு இருந்தேன்.

    ஏன் பதிவுகள் எழுதவில்லை ? தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நிலைமை இன்னமும் பூரணமாகச் சரியாகலை. சரியானதும் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். மிக்க நன்றி.

      Delete
  6. குட்டிக்குஞ்சுலுவுக்குப் பொங்கல் பற்றிச் சொன்னது சூப்பர். நல்ல விளக்கம். அது நன்றி சொல்லும் பண்டிகைதானே!

    பொங்கல் கோலங்கள், கனு எல்லாமே நன்றாக இருக்கிறது.

    மாமாவின் உடல் நலம் நன்றாகி வரும் என்று நினைக்கிறேன், கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. ஆமாம், இது நன்றி சொல்லும் பண்டிகை தான். குழந்தையும் Sun God சன் காட், மூன் காட், Moon God என்று சொல்லி அறிமுகம் செய்ததும் உற்சாகமாகக் கேட்டுக் கொண்டாள்.

      Delete
  7. பேத்திக்கு பொங்கல் பண்டிகையின் காரணத்தை சொன்னதும். பேத்தி அதற்கு பதில் தந்ததும் மகிழ்ச்சி. கோலங்கள் அழகு. முடிந்தவரை பண்டிகைகளை விடமால செய்யும் மன பலம் தான் வேண்டி இருக்கிறது, அப்படி மன பலத்துடன் செய்து விட்டீர்கள்.
    சார் முன்பு போல உங்களிடம் உணவுகளை விரும்பி கேட்டு செய்ய சொல்லி சாப்பிடும் நிலை உருவாக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. உங்கள் கனிவான விசாரிப்புகளுக்கு நன்றி. குழந்தைக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருப்பதால் கேட்டுக் கொள்கிறாள். முன்னெல்லாம் எனக்குப் பண்டிகைகள், விரத நாட்கள் போன்ற சமயங்களில் எனக்கப்புறமா யார்? என்னும் பெரிய கேள்வி வரும். இப்போக் குழந்தையிடம் சொல்லுவதால் என் மனசுக்கும் ஆறுதல்.

      Delete
  8. பொங்கல் கொண்டாட்டங்கள் - நன்று. யாரும் இல்லையே - வருத்தம் தான். சந்தர்ப்ப சூழல்கள் இப்படி அமைந்தால் ஒன்றும் செய்ய முடியாதே. உங்களை இந்தப் பயணத்தில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க முடிந்தது பற்றி எங்களுக்கும் மகிழ்ச்சி தான். வரவுக்கு மிக்க நன்றி.

      Delete
  9. யாரும் இல்லையே என்ற வார்த்தைகளை நீங்க matter of factனு எழுதியிருந்தாலும் மனதைத் தைத்தது

    ReplyDelete
    Replies
    1. சரியாகப் புரிந்து கொண்டீர்கள் நெல்லை. உண்மை அது தானே.

      Delete
  10. கோலங்கள் மிக அழகு. நன்றாகப் போட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலைமையில் நான் மிகச் சிறிதாக கடமைக்குப் போட்டிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்போவுமே ஈடுபாட்டுடன் செய்தே பழக்கம் ஆகி விட்டது. அதுவும் பண்டிகைநாட்களில் ஏதேனும் கொஞ்சம் குறைந்தாலும் மனதை அறுத்து விடும். கடமைக்குனு எதுவும் செய்தது இல்லை.

      Delete
  11. மாமா பூசைகள் செய்ய முடியாத நிலை வருத்தம் தருகிறது. விரைவில் சரியாகணும்னு ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகணும். மறுபடி அவர் பூஜைகள் எல்லாம் பண்ணணும் என்பதே என் இப்போதைய பிரார்த்தனை.

      Delete
  12. குட்டிக் குஞ்சுலு இன்னும் வளர்ந்திருக்கும். உங்கள் இருவருக்குமான தகவல் பரிமாற்றம் நெகிழ்வு

    ReplyDelete
    Replies
    1. தாத்தா, அப்பா மாதிரி நல்ல உயரமாக வருகிறாள். அவள் வயசுக்கு விபரங்கள் நன்கு புரிகின்றன. விரைவில் மன முதிர்ச்சி வந்துடும்னு நினைக்கிறேன்.

      Delete
  13. ஶ்ரீராமர் பிரதிட்டைக்கு முன் தினமிருந்து நீங்கள் கொடுத்த பட்டாபிஷேக இராமர் படமும் தினப்படி மலர் அலங்காரத்திற்கும் உபசாரங்களுக்கும் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. படிக்கவும் கேட்கவுமே சந்தோஷமாக இருக்கிறது. அந்த ராமர் கிருபையால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

      Delete
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களின் பொங்கல் கொண்டாட்டதின் விதவிதமான ஒவ்வொரு நாளின் அழகான கோலங்களும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    நீங்கள் தினமும் மிகவும் சிரமப்பட்டு கோலங்களை போட்டிருப்பீர்கள். ஆனாலும், மனதின் சிரமங்களை குறைக்க, இவ்வாறு வரும் பண்டிகைகளையும் விடாது கொண்டாடியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. இப்படி பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு நாம் செய்யும் போது மனக்கலக்கங்கள் குறைந்து ஒரு புத்துணர்வு ஏற்படுவது உறுதி.

    தற்சமயம் தங்கள் கணவர் நலமடைந்து வருவது மிக்க சந்தோஷத்தை தருகிறது. முன்பு போல் அவர் யூடிப்பில் பார்த்து அங்கு யாராவது செய்யும் சமையலை (அது உங்களுக்கும் ஏற்கனவே கை வந்த கலையாக இருக்கும்.) உங்களைச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். அந்தளவிற்கு விரைவில் பூரண நலம் பெற்று விடுவார். கவலை வேண்டாம். அதற்கு ஆண்டவன் நம் பக்கம் என்றும் கண்டிப்பாக துணையாக இருப்பார்.

    தங்கள் பேத்திக்கு நம் பாரம்பரிய விஷேடங்களை எடுத்துச் சொல்லி, அவளையும் ஊக்கமுறச் செய்வதும் சந்தோஷத்தை தருகிறது. தங்களின் செயல்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள் அவளும் அதன்படி கேட்டு நடந்து கொள்வதும் மகிழ்வாக உள்ளது தங்கள் பேத்திக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. வாங்க கமலா, உங்கள் நீண்ட கருத்துரைக்கு நன்றி. கோலம் போடுவதில் சிரமம் எல்லாம் ஏதும் இல்லை. அம்பத்தூரில் சொந்த வீட்டில் பத்தடி அகல வாசலில் பத்தடிக்கும் போட்ட கோலங்களை நினைத்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. வேலையில் மனதை ஈடுபடுத்திக் கொண்டால் தான் அலை பாயாமல் இருக்கும். இப்போதெல்லாம் அவர் ஐ பாட் பார்ப்பதோ யூ ட்யூப் பார்ப்பதோ இல்லை. அதுவும் மனதுக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது. சிறிது நேரம் சேர்ந்தாற்போல் உட்கார முடியவில்லை. அதான் காரணம். மற்றபடி பேத்தி இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதால் நான் சொல்வதைப் புரிந்து கொள்கிறாள்.

    ReplyDelete
  16. ரொம்ப நாட்களுக்குப்பிறகு வலையுலகம் வந்தேன். வந்ததும் உங்கள் கணவரின் உடல் நலம் எப்படியிருக்கிறதோ என்று பதிவுகளைத்தேடிப்பார்த்த போது, உங்கள் கணவர் உடல் நலம் தேறி வருகிறார் என்பதறிந்து மகிழ்ச்சியடந்தேன். மனசு நிம்மதியாக இருக்கிறது. இந்த வயதில் எப்படியெல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் , உடலும் மனமும் எந்த அளவிற்கு தளர்வடைந்திருக்கும் என்பதெல்லாம் இதே நிலைமையில் நான் முன்பு இருந்திருப்பதால் எனக்கு நன்றாக புரிகிறது! நோயுற்றவர்கள் குழந்தைக்கு சமானம்! இதுவரை இருந்த பொறுமையையும் நிதானத்தையும் விட இப்போது தான் அதிக அளவு பொறுமை தேவையாக இருக்கும்! சமாளித்துக் கரையேறி விடுவீர்கள் என்பது நிச்சயம்! ஆனால் அதோடு உங்களையும் கவனித்துக்கொள்வது தான் மிகவும் முக்கியம்! உங்கள் உடல் நலத்தில் அலட்சியமாக இருக்காதீர்கல்!
    இதுவும் கடந்து போகும்!

    ReplyDelete