நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ அதோடு சேர்ந்து நானும் தினம் தினம் தூங்கி, விழித்து, நம்ம ரங்க்ஸைக் கவனித்துக் கொண்டு பொழுது ஓட்டமாய் ஓடுகிறது. இரவு படுக்கையில், அப்பாடா, காலை நீட்டிப் படுக்கலாம் என்று தோன்றும். தூக்கம் வராது. சுமார் பனிரண்டு வரை புரண்டு புரண்டு படுப்பதோடு சரி. ரங்க்ஸுக்குப் பசித்தால் அவர் படுத்திருக்கும் அறையிலிருந்து என்னைக் கூப்பிட ஒரு மணி அமேசான் மூலம் வாங்கி உள்ளது. நான் படுக்கும் எங்கள் படுக்கை அறையில் அதைப் ப்ளகில் சொருகி இருக்கோம். அவர் அறையிலிருந்து பட்டனை அழைத்தால் சங்கீத அழைப்பு வரும். உடனே எழுந்து போய் என்ன எனக் கேட்டுவிட்டு வேண்டியதைச் செய்துவிட்டு வருவேன். இரவு காவல் இருக்கும் பெண் இருந்தாலும் குடிக்க ஏதேனும் வேண்டும் எனில் என்னைத் தானே அழைக்கணும். என்றாலும் நானும் அங்கே படுக்காதது அவருக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கு. சில சமயம் என்னை விட்டுட்டு எல்லோரும் எங்கே போனீங்க என்பார். அல்லது நான் மட்டும் தான் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கேனா? மத்தவங்க இல்லையா என்பார்! ஏன் என்னைப் பார்க்க யாருமே வரலை என்பார். ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அழுகை வரும். என்றாலும் அவர் எதிரே காட்டிக்காமல் வீட்டில் தான் இருக்கீங்க என்பேன். அரை மனதாக அப்படியா என்பார். உடனேயே சரி, நீ போய்த் தூங்கு என்பார்.
எங்கே போய்த் தூங்கணும் என்றால் கொஞ்சம் யோசிச்சுட்டு, நம்ம ரூமில் தான். நான் இப்போ கெஸ்ட் ரூமில் தானே இருக்கேன் எனச் சரியாகச் சொல்லுவார். நேத்திக்கு என் தம்பி தொலைபேசியப்போ நான் குளித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் நான் நீங்கல்லாம் வந்தால் தங்குவீங்களே, அந்த ரூமில் படுத்துண்டு இருக்கேன். அக்கா எங்க பாத்ரூமில் குளிக்கிறா எனச் சரியாகச் சொல்லி இருக்கார். சில சமயங்கள் தடுமாற்றம். இதெல்லாம் பரவாயில்லை என்பது போல் இந்த கதீட்டர் பிரச்னை. அடிக்கடி, இன்ஃபெக்ஷன் ஆகிறது. இன்னமும் அவரால் பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல் உட்கார முடியலை என்பதால் கதீட்டர் இருக்கணும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஆவதைப் பார்த்தால் கழட்டி எறியணும் போல் இருக்கு. :(
காலை நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும், இரவு நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும் (இருவருமே உறவு) வருகிறார்கள். ஒத்துப் போகிறதா எனில் ஒண்ணும் சொல்ல முடியாது. சில விஷயங்களைப் பொது வெளியில் எழுதவோ சொல்லவோ முடியாது. வாயை மூடிக்கணும். அவ்வளவே. அல்லது; எனக்குச் சகிப்புத் தன்மை குறைச்சல்னு வைச்சுக்கலாம். தினம் தினம் பிசியோதெரபியும் நடக்கிறது, சீக்கிரம் எழுந்து நடமாட மாட்டாரானு இருக்கு. அறுவை சிகிச்சை நிபுணர் பயாப்சி பண்ணிப் பார்க்கணும் என்கிறார். அதுக்கு ஒத்துக்கோங்க என்கிறார். ரங்க்ஸுக்கும் இஷ்டம் இல்லை. எனக்கும் இல்லை. தெரிந்த பல மருத்துவர்களிடமும் அவங்க கருத்தைக் கேட்டாச்சு. வேண்டாம்னே சொல்றாங்க. என்னோட உபிசவான தி.வாவும் அதையே சொல்லுகிறார்.இனி வரும் நாட்கள் எப்படியோ தெரியாது. நல்லபடியாகக் கழியணும்னு எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த அழகில் ஸ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தையாவது நெல்லை தயவில் வீடியோவில் பார்த்தேன். நெல்லைக்கு நன்றி நினைவாக அனுப்பி வைத்ததுக்கு. ஆனால் தி/கீதாவின் பிள்ளை கல்யாணம், நெல்லையின் பெண் கல்யாணம் நடந்தப்போ நான் மருத்துவமனையில் மருத்துவர்களோடு ஆலோசனைகளில் மூழ்கி இருந்ததால் சுத்தமாய் நினைவில் இல்லை சொல்லவே வெட்கமாக இருந்தாலும் அதான் உண்மை. பின்னால் நினைவு வந்து விசாரித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இணையமே மறந்துடுமோ என்னமோ! :(
ரொம்ப வருத்தமா இருக்கு நீங்க எழுதி இருப்பதைப் படிக்கும்போது. இது மிகவும் சிரமமான நேரம். இந்த நேரத்தை நல்லபடியாக சீக்கிரம் கடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteவாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், அனுபவங்கள். ஆனால் அப்போ எல்லாம் மாமா தெம்பாக இருந்தார். பிடிச்சுக்க ஒரு கை இருந்தது. இப்போ அது இல்லாமல் தான் பிரச்னையே!
Deleteஎங்கள் வீட்டு கல்யாணத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்பதே செய்தி எனக்கு. நன்றி. உங்கள் நிலையில் இதை எல்லாம் கவனிக்க நேரமோ மனநிலையோ இருக்காது. மாமா சீக்கிரம் நல்லபடி குணமாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநெல்லை உடனே அனுப்பி விட்டார். மிகவும் எதிர்பார்த்திருந்த கல்யாணம் ஆச்சே! ஆகவே உடனே பார்த்தேன். சேமிப்பிலும் இருக்கு.
Deleteஇணையம் பக்கம் நீங்கள் வராத நிலையில் உங்களுடன் பேச வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். வேறு பல வேலைகளில், டென்ஷனில் விட்டுப்போய் விடுகிறது. குற்ற உணர்வாய் இருக்கிறது.
ReplyDeleteஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க பிரச்னைகள், வேலைகள்னு இருக்குமே. இந்த அழகில் எங்கே பேசறது? ஆனால் எனக்கு என்னமோ எங்கள் ப்ளாக் வாட்சப்பே வருவதில்லை. செர்ச்சில் போட்டுக் கண்டு பிடித்துப் பார்ப்பேன். அதுக்குள்ளே நிறையச் சேர்ந்திருக்கும்.
Deleteஇந்தக் காலத்தில் படுக்கையில் இருக்கும் பேஷண்டை பார்த்துக் கொள்ள ஆள் வருவதே சிரமமாயிருக்கிறது. பணத்துக்காக அக்கடமைக்கு பார்த்துக் கொள்வார்கள். ஓடுவதிலேயே குறியாய் இருப்பார்கள். ஓரளவாவது உண்மையாக, மனசாட்சியுடன் பார்த்துக் கொள்ள உறவாய் இருப்பதால் சாத்தியம். அவர்களால் ஏற்படும் அதிருப்திகளை பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் எதாவது சிரமம் இருக்கலாம்.
ReplyDeleteஅந்தப் பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உறவு. மற்றபடி எங்களுக்கும் அந்தப் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஹோம்கேர் மூலமாக வந்தவங்க. மாமா அழைக்கையில் உடனே என்னனு கேட்டுத் தொலைபேசிப் பேச்சைக் குறைத்துக் கொண்டு இருக்கலாமோ எனத் தோன்றும். கைகளையும் அவ்வப்போது ஹான்ட் வாஷ் மூலம் சுத்தப் படுத்திக்கலாம்னும் தோணும். சில சமயம் சொல்லிடுவேன். அவங்க முகங்கள் சுண்டிப் போகும். எனக்குத் தான் பொறுமை இல்லை, சரியாக வேலை வாங்கத் தெரியலைனு நினைச்சுப்பேன்.
Deleteமாமா மட்டும் பழைய மாதிரி செயலாய் இருந்திருந்தால் நீங்கள் இருவரும் என் மகன் திருமணத்துக்கு கட்டாயம் வந்திருப்பீர்கள்.
ReplyDeleteநிச்சயமாய். சென்னையாக இருந்திருந்தால் கூடப் போயிட்டுத் தான் வரணும்னு பேசிக் கொண்டிருந்தோம் நெல்லை வீட்டுக் கல்யாணத்துக்கும் போயிருப்போம்.
Deleteகீதா அக்கா கஷ்டங்களைக் கடந்து செல்ல உங்களுக்கு சக்தியை இறைவன் அருளிட பிரார்த்தனைகள்.
ReplyDeleteகீதா
நன்றி தி/கீதா. விரைவில் உங்கள் மகன், மருமகளோடு அம்பேரிக்காவில் வாழவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Deleteஇன்று நினைத்தேன், சார் எப்படி இருக்கிறார், உடல் நலத்தில் முன்னேற்றம் உள்ளதா என்று
ReplyDeleteகேட்க நினைத்து இருந்தேன்.
நீங்கள் எழுதியதை படிக்கும் போது "இறைவா சார் விரைவில் நலபெற வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.
நீங்களும் உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள். ஸ்ரீராம் , கீதா வீட்டு கல்யாணம் தெரியும், நெல்லை பெண்ணுக்கும் கல்யாணம் முடிந்து விட்டதா? எல்லோருக்கும் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்!.
நன்றி கோமதி அரசு, நீங்கள் நல்லபடி அரிசோனா போய்ச் சேர்ந்து மகன், மருமகள், பேரன், சம்பந்தி ஆகியோருடன் நல்லபடியாகப் பொழுதைக் கழிக்கவும் பிரார்த்தனைகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமாக இருக்கிறீர்களா? உங்கள் பதிவை நேற்று இரவுதான் படித்துப் பார்த்தேன் எப்படியோ உடன் படிக்க இயலாது விட்டுப் போய் விட்டது . மன்னிக்கவும்.
பதிவில் நீங்கள் சொல்லிய செய்திகள் மனதை வருத்தமுறச் செய்தது. மாமாவுக்கு நன்றாக குணமாகி இருக்குமென நினைத்தேன். அவர் உடல்நிலை முடியாமல் இருந்ததினால், தற்போது அதனால் களைப்பாக இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ளும் வேலைகளில் தாங்கள் இருப்பீர்கள்.. அதனால்தான் வலையுலகத்திற்கு வரவில்லை போலும் என நினைத்தேன். இன்னமும் சிறிது தொந்தரவுகள் அவருக்கு இருப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
நீங்கள் பதிவில் அழுகை வருகிறது என்று சொன்ன இடத்தில் நானும் கண் கலங்கி விட்டேன். இறைவன் அனைவரையும் நல்லபடியாக வைத்திருக்கவும், மாமாவின் உடல்நிலை பூரண குணமடைவும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக முன்பு போல் எழுந்து நடமாடி உங்களுக்கு உதவியாயிருக்கும்படி விரைவில் குணமாகி விடுவார். கவலை வேண்டாம். உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பதிவின் வாயிலாக த்தான் நம் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் மகனின் திருமணமும், சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களின் பெண் திருமண செய்தியும் தெரிந்து கொண்டேன். இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்கள் அன்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையால் என் கணவர் பயாப்சியோ ம/ற்ற அறுவை சிகிச்சையோ இல்லாமல் எழுந்து நடமாட வேண்டும். இப்போது என் எண்ணமெல்லாம் அதுவே தான், இப்படி ஒரு நிலைமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. திகைப்பாய் இருக்கு.
Deleteஇணையம் உங்களை மறந்துவிடுமா இல்லை நீங்கள்தாம் இணையத்தை மறந்துவிடுவீர்களா?
ReplyDeleteஇணையம் நினைப்பே சில சமயங்கள் வருவதில்லை. எக்கச்சக்கமாக வேலைகள். இணையத்திலும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன இப்படி ஒரு மோசமான நிலைமை யாருக்குமே வர வேண்டாம்.
Deleteமாமாவின் உடல்நிலை சரியின்மை மனதுக்குக் கஷ்டம்தான். ஏதோ.. உதவிக்கு இருவர் இருக்கிறார்களே என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அதிலும் குறை தெரிந்தால் வேறு என்ன வழி இருக்கிறது?
ReplyDeleteஉங்களைப் போல் தான் என் பிள்ளை/சில சமயம் பெண் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ப்ராக்டிகலாக நான் படும் சிரமங்கள் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குத் தான் தெரியும். அவங்க இருப்பதால் என் வேலைகள் எதுவும் குறையப் போவதும் இல்லை.
Deleteபெண்ணின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அதற்கு முந்தைய இரு வாரங்களும் பிந்தைய ஒரு வாரமும் ரொம்ப வேலைகள். திருமணத்தில் ரிசப்ஷன் மற்றும் மறுநாள் மதியம் வரை, பிறகு மூன்றாம் நாள் கட்டுச்சாதம் அன்றும் எனக்கு அளவுக்கு அதிகமான வேலை. யார் யாரைப் பார்த்தோம், எல்லோரிடமும் பேசினோமா, கொடுக்கவேண்டியதைக் கொடுத்தொமா என ஒன்றுமே நினைவில் இல்ஙாத அளவு வேலைப் பளு. பசங்க ஊர் போய்ச் சேர்ந்தாச்சு. செட்டிலாகிறார்கள். அதுவே நிம்மதி
ReplyDeleteஉங்கள் பெண்ணின் திருமணப்படங்களை எதிர்பார்த்திருந்தேன், எல்லா வேலைகளும் முடிந்து நீங்கள் அப்பாடாவென ஓய்வெடுக்கும்போது படத்தை அனுப்புங்கள். குழந்தைகள் க்ஷேமமாக இருக்கப் பிரார்த்தனைகளும் மனமார்ந்த ஆசிகளும்.
Deleteஎனக்கு நேற்று சிறிது உடல் நிலை சரியில்லை. அதுவே மனதளவில் பாதித்துவிட்டது. மனைவி பக்கத்துலயே இருக்கணும்னு தோன்றியது. உங்கள் நிலை நன்கு புரிகிறது
ReplyDeleteநீங்களும் என் கணவர் மாதிரி எமோஷ்னல் டைப். ஆகவே உடல்நலம் பாதித்தால் கட்டாயம் மனமும் பாதிக்கும். என்ன, ஏது என இப்போவே ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டு குணப்படுத்திக்கொள்ளுங்கள். கட்டாயம் மனைவி பக்கத்தில் இருக்கணும். இருந்தே ஆகணும்.
Deleteவயதான காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் வேதனைகள், உடல் சார்ந்த பிரச்சினைகள், மன அழுத்தம் எல்லாம் மனதில் வருத்தத்தை அளிக்கிறது. விரைவில் நீங்களும் உங்கள் கணவரும் இந்த வலிகள் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅல்மோஸ்ட் தினமும் உங்களோடு பேச வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஏதோ வேலையில் மறந்து விடுவேன். மாமா உடல் நிலை தேறி வர வேண்டுகிறேன். இந்த மாதிரி சமயங்களில் குழந்தைகளும் அருகில் இல்லாதது நமக்கும் கஷ்டம், அவர்களுக்கும் மன உளைச்சல்.
ReplyDeleteநீண்ட இடைவெளியின் பின் வருகிறேன். படிக்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஇறையருளால் விரைவில் எல்லாம் நலமாக இருக்க வேண்டுகிறோம்.