எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 03, 2024

நவராத்திரிப் பதிவுகள்! தொடரலாம்!

 முன்னெல்லாம் நவராத்திரிப் பதிவுகள் ஒவ்வொரு வருஷமும் போட்டுக் கொண்டிருந்தேன். கொரோனாவுக்குப் பின்னர் எனக்கும் உடம்பு முடியாமல் காலில் பிரச்னை வந்து படுத்ததில் இம்மாதிரி ஆன்மிகம், பக்தி பற்றிப் பதிவுகள் போடுவதே குறைந்து விட்டது. கடைசியாக சஹானா இணைய இதழுக்காக, நவராத்திரிப் பதிவுகள், தீபாவளிப் பதிவுகள்னு எழுதிக் கொடுத்தேன்.அம்பிகையைப் பற்றி நிறைய விலாவரியாக எழுதி இருக்கேன். லலிதாம்பாள் சோபனத்தையும் சௌந்தரிய லஹரியையும் ஒப்பிட்டு எழுதினது எனக்கு மறக்க முடியாத ஒன்று. அது ஃப்ரீ தமிழ் ஈ புத்தகக்குழு மூலம் புத்தகமாக வந்திருக்கு. அதுக்கு நான் காப்புரிமை எல்லாம் வாங்கலைனாலும் திரும்பக் கிண்டிலில் போடலாமானு தெரியலை. என்னோட பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் புத்தகமும் ஈ புத்தகமாக வந்தது அங்கே இப்போது காணக் கிடைப்பதில்லை. அதன் மூலம் என்னோட டெஸ்க் டாப்பில் இருந்ததால் அதைப் பென் ட்ரைவில் காபி செய்து வைச்ச நினைவு. ஆனால் அதைப் போட்டு மீட்டு எடுக்கத் தெரியலை. ஏற்கெனவே ஃப்ரீ தமிழ் ஈ புத்தகமாக வந்தவற்றைக் கிண்டிலில் போடலாமானும் தெரியலை. 


அது போகட்டும். இப்போ நம்ம ரங்க்ஸுக்கு பிசியோதெரபி பயிற்சி கொடுப்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆன்மிகத்தில் முக்கியமாய் யோகத்தில் ஈடுபாடு உடையவர். அவருடன் பேசுகையில் நம் உடம்பின் சக்கரங்களதன் பயன்பாடுகளும், பற்றிப் பேசுவதோடு அல்லாமல் இந்த நவராத்திரியில் தேவி எப்படி அனைத்துச் சக்கரங்களுக்கும்  தொடர்பை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றியும் பேசினோம். தேவியின் சக்தியானது எவ்விதம் விரிந்து  அதன் மூலம் நாம் படைப்பின் அனைத்து அம்சங்களையும் இந்த நவராத்திரி மூலம் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் சொன்னேன்.  முதலில் பித்ரு பக்ஷம் முடிவடைந்து  ஆண்களுக்கு எவ்வாறு உடல், மனம் சுத்தியாகிறதோ அவ்வாறே அடுத்த இந்தப் பத்து நாட்கள் பெண்களுக்கு  தேவி வழிபாட்டின் மூலம் ஏற்படுகிறது. உண்மையில் சாக்தர்கள் அம்பிகையின்  தசமஹா வித்யையும் இந்த நவராத்திரியில் முன்னெடுத்துக் கொண்டாடி தேவியை ஆராதிக்கின்றனர். 




நவசக்திகளையும்  ஒவ்வொரு நாள் வழிபடுவதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்களும் நன்கு செயல்பட ஆரம்பிக்கின்றன. முதல் நாள் சாக்தர்களுக்குப் பர்வத ராஜகுமாரியின் பிறப்பு எனக் கொள்வதால் மூலாதாரச் சக்கரமான குண்டலினியின் செயல்பாட்டில் துவங்குகிறது. பர்வதராஜகுமாரி ஈசனை மணக்க வேண்டி பிரமசாரிணியாகத் தவம் இருப்பது இரண்டாம் நாள் கொலுவில் வழிபடப்படும். இங்கு சுவாதிஷ்டானம் செயல்படுவதால்  அம்பிகையான ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டித் தவம் இருப்பதைச் சுட்டிக் காட்டும்.இதை அடுத்து வரும் சந்திரகாந்தா எனும் சக்தியோ நம்முடைய மணிபூரக சக்ரத்தைச் செயல்பட வைப்பதன் மூலம் மனதை துர் எண்ணங்கள் இன்றி பக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு புனிதத்துடன்  செயல் பட வைக்கிறாள்.

என்றாலும்  அநித்தியமான மனித வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் கஷ்டங்களும் நோய் நொடிகளும் மனித மனதைப் பேதலிக்கத் தான் செய்கின்றன. அதற்கென உள்ள தேவி கூஷ்மாண்டா நம்முடைய அநாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் தைரியத்தைக் கொடுத்து வியாதிகள், கஷ்டங்கள், நோய் நொடிகளில் இருந்து காத்து அருளுவாள்.  இதற்குள் நாம் நம் மனதினுள் தெய்வத்தை தியானிக்க ஆரம்பித்திருப்போம். மனம் ஒருமைப்பட வேண்டி தியானத்தில் அமிழ்ந்து போவோம். இங்கே தான்  ஸ்கந்த மாதா வந்து நம் விசுத்திச் சக்கரத்தைத் தூண்டுவதன் மூலம் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டி அருள்கிறாள். மனதில் மெல்ல மெல்ல அமைதி நிலவ ஆரம்பிக்கும். மனம் ஒருமுகப்படவும் ஆரம்பித்திருக்கும். அடுத்தது நமக்குத் தேவை ஆக்ஞை. ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி விடும் காத்யாயனி தேவியின் சக்தியால் நாம் சஹஸ்ராரத்தில் மனம் ஒன்றி தவம் செய்து ப்ரப்ப்ரும்மத்தை அடைய வேண்டி தியானம் மேற்கொள்ளுவோம்.  சஹஸ்ராரத்தில் நாம் தியானம் செய்யும்போதோ மனமானது  பரிபூரணத்துவத்துடன் ஒன்றி இந்தத் தவத்தினால்  நமக்குப் பல சித்திகளையும் பெற்றுத் தரும்.

இதற்கு உதவும் தேவியே காலராத்ரி எனப்படும் தேவி. இவள் மூலம் நாம் சஹஸ்ராரத்தில் இருந்து மனம் ஒருமித்து தியானத்தில் ஈடுபட ஆரம்பிப்பதன் மூலம் அட்டமஹா சித்திகளையும் அடைகிறோம். மனதில் எந்தப் பொருளிடமும் பற்றுதல்கள் இருக்காது. மனம் அமைதியுடன் இருக்கும்.  அடுத்தநாளன்று மகாகௌரி எனப்படும் தேவியின் அவதாரத்திருநாள். நமக்கு எல்லாம் சரஸ்வதி ஆவாஹனம். இம்முறையில் சக்தி வழிபாடுகளைச் செய்தே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் காளியைக் கண்டார். காளியின் அவதார தினமாகவும் இதைக் கொள்வது உண்டு. இந்த நாளின் வழிபாட்டினால் பழைய நினைவுகள் எல்லாம் மறைந்தும் மறந்தும் போகும். முன் ஜென்ம வாசனைகள் அறுபட்டு விடும் ஒன்பதாம் நாள் அன்று வழிபடும் சித்ராத்ரி தேவியின் மூலம் அட்டமஹா சித்திகளையும் பெறுவதால் அன்றைய தினம் இந்த தேவியை முன் வைத்துக் கொண்டாடுவார்கள். 


இவ்விதம் நாம் நவராத்திரியை ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேவியின் பரிபூரண அருளைப் பெற்று உலகில்  அமைதி நிலவவும், மனம் அமைதி பெறவும் கொண்டாடுகிறோம், தேவியின் மஹிஷ வதமும் கூட நம் மனமாகிய மஹிஷனின் கெட்ட குணங்களை அடியோடு வேரறுத்து மனதில் நல்லெண்ணங்கள் உற்பத்தி ஆவதைக் குறிப்பதே ஆகும். மஹிஷன் எங்கிருந்தோ வரவில்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். நமக்குள்ளே இருக்கும் மஹிஷனைக் கொல்லுவதே இந்தப் பத்து நாட்கள் தேவி வழிபாடு செய்வதன் நோக்கம்.  இதையே சாக்தர்கள் தசமஹா வித்யை எனப்படும் வழிபாட்டின் மூலம் கொண்டாடுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் குழந்தையை அன்றைய தேவியாக மனதில் ஸ்வீகரித்து அந்தக் குழ்ந்தைக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து, ஆடை, ஆபரணங்கள், சாப்பாடு, பக்ஷணங்கள் எனக் கொடுத்து சந்தோஷப்படுத்தி நாமும் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறோம். நவராத்திரியின் தாத்பரியமே தீமையை அழித்து உலகில் நன்மையையும் அமைதியையும் கொண்டு வருவதே ஆகும்.

 நான் பக்தியோ ஆன்மிகமோ கோயில்கள் பற்றியோ எழுதிப் பல நாட்கள்/வருடங்கள் ஆகிவிட்டன. ஆகையால் எழுத்து நடை முன்னே/பின்னே இருக்கும். பொறுத்துக் கொள்ளவும். தகவல்கள் உதவிக்கு நவராத்திரி பற்றி நான் எழுதின பதிவுகள், இன்னும் வாட்சப் மூலம் பெற்ற சில தகவல்கள் ஆகும்.

4 comments:

  1. அன்பின் கீதாமா,
    வெகு நாட்கள் கழித்து வலையுலகம் வருவதில் எனக்கு மகிழ்ச்சி.

    திரு சாம்பசிவம் மேலும் மேலும் குணம் அடைய வேண்டும்.
    நீங்கள் அளித்திருக்கும் விவரங்கள் மிக மிக அற்புதமாகவும்

    மகிழ்ச்சி கொடுப்பதாகவும் இருக்கின்றன.

    அதுவும் கர்மா தொலைய அம்பிகை வழி காட்டுகிறாள் என்பது மனசுக்கு மிக இதமாக
    இருக்கிறது.
    மிக மிக நன்றி மா.
    இந்த நவராத்திரி சிறக்க வாழ்த்துகள். அம்பிகை சரணம்.

    ReplyDelete
  2. அன்பின் கீதாமா,
    வெகு நாட்கள் கழித்து வலையுலகம் வருவதில் எனக்கு மகிழ்ச்சி.

    திரு சாம்பசிவம் மேலும் மேலும் குணம் அடைய வேண்டும்.
    நீங்கள் அளித்திருக்கும் விவரங்கள் மிக மிக அற்புதமாகவும்

    மகிழ்ச்சி கொடுப்பதாகவும் இருக்கின்றன.

    அதுவும் கர்மா தொலைய அம்பிகை வழி காட்டுகிறாள் என்பது மனசுக்கு மிக இதமாக
    இருக்கிறது.
    மிக மிக நன்றி மா.
    இந்த நவராத்திரி சிறக்க வாழ்த்துகள். அம்பிகை சரணம்.

    ReplyDelete
  3. ஆஹா..  பழைய பன்னீர்செல்வமா திரும்பிட்டீங்க போல...   வாங்க..  வாங்க..  ஹெவியான சப்ஜெக்ட் ஆரம்பிச்சுருக்கீங்க...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நவராத்திரியின் சிறப்பு பற்றியும், ஒவ்வொரு நாளும் உடலால் மட்டுமல்லாது மனதாலும் பூஜிக்க வேண்டிய விதி முறைகள் பற்றியும் நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    ஆன்மிகம் பேசும் போது கேட்கும் நபரோ, அதை சொல்லும் நபரோ, அதில் உடன்பாடோடு பேசி, கேட்கும்படிக்கு மென்மையானவராக அமைந்து விட்டால் ஆன்மிகம் ருசிக்கும். இப்போது தங்களுக்கு உதவியாக வந்திருப்பவர் இவ்விதம் அமைந்திருப்பது சிறப்பு.

    /தேவியின் மஹிஷ வதமும் கூட நம் மனமாகிய மஹிஷனின் கெட்ட குணங்களை அடியோடு வேரறுத்து மனதில் நல்லெண்ணங்கள் உற்பத்தி ஆவதைக் குறிப்பதே ஆகும். மஹிஷன் எங்கிருந்தோ வரவில்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். நமக்குள்ளே இருக்கும் மஹிஷனைக் கொல்லுவதே இந்தப் பத்து நாட்கள் தேவி வழிபாடு செய்வதன் நோக்கம். /

    ஆழ்ந்த கருத்துடன் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் பக்தியுடன் தேவியை துதிப்போம். நல்லெண்ணங்கள் பதிய பதிய நமக்குள்ளே இருக்கும் மஹிஷன் மடியட்டும். அது ஒன்றே தேவியிடம் நாம் வேண்டும் வேண்டுதல்கள். பராசக்தி அனைவருக்கும் தன்னருளை தர வேண்டுமாய் நானும் பிரார்த்திக்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete