மீள் பதிவு 148 ஆம் பதிவு. இன்னிக்கு சர்வதேசக் காஃபி தினமாமே அதான், இப்போத் தான் நேரம் கிடைச்சது மீள் பதிவைப் போட!
ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன். ஆனால் காஃபி சம்மந்தமாவும் எழுதப் போறேன். ஆகவே தலைப்புக்கும் அதுக்கும் சம்மந்தம் வந்துடும், சரியா? முதலில் நான் ரசித்த ஒரு ஜோக்:
மனைவி கணவனிடம்: ஏங்க, எங்க அம்மா போட்டுத் தர காஃபியைக் குடிக்கவே மாட்டேங்கறீங்க?
கணவன்: எனக்குத் தண்ணியிலே கண்டம்னு ஜோசியர் எச்சரிக்கை பண்ணி இருக்கார், அதான்.
ஹிஹிஹி, கல்கியிலே இந்த வாரம் வந்தது. கொஞ்சம் மாறி இருக்கலாம். கல்கியை அதுக்குள்ளே தேடும்படியா எங்கோ வச்சுட்டேன். ஆனால் அர்த்தம் இது தான். ரொம்ப நல்லா சிரிக்க முடியுது. போனமுறை ஜோக் போட்டதைக் கைப்புள்ள தவிர யாருமே ரசிக்கல்லை. யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை. ஆனால் எங்க வீட்டிலே நகைச்சுவை மட்டும் இல்லை எல்லாச் சுவைக்கும் பஞ்சம் இல்லை. எங்க பிறந்த வீட்டிலே காஃபி எல்லாம் ரொம்பக் கட்டுப்பாட்டோட குடிப்பாங்க. காலை ஒரு தரம், மாலை ஒரு தரம். அதுவும் தம்ளர் எல்லாம் சின்னதாத் தான் இருக்கும். நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே (அப்போ நான் காஃபியே குடிக்க மாட்டேன், என் கணவராலே பழக்கம் ஆனது, இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்.) புகுந்த வீட்டுக்கு வந்தா முதலிலே அவங்க காஃபி குடிக்கிற தம்ளரைப் பார்த்தாலே பயமா இருந்தது. எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே அவங்க அவங்க நினைச்சப்போ காஃபி குடிச்சாங்களா? எனக்கு மயக்கமே வந்துடுச்சு. ஒரு சமயம் என் மாமியார் என் கிட்டே தனக்கு ஒரு வாய்க் காஃபி கலந்து எடுத்து வரும்படிச் சொல்ல நான் literally took it ஒரு சின்னத் தம்ளரிலே எடுத்துப் போய்க் கொடுக்க அவங்க விசித்திரமா என்னைப் பார்த்தாங்க. அப்புறம் பாருங்க, ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா நான் அசந்து போயிட்டேன்.
என் கணவரோ அதுக்கு மேலே என்னைக் கூப்பிட்டு வகுப்பே எடுத்தார். ஒரு வாய்க்காஃபின்னா ஒரு தம்ளர். இது பெரிய வாய். கொஞ்சமாப் போதும்னா அது 1/2 தம்ளருக்குக்கொஞ்சம் கூட, அது சின்ன வாய்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் ஒரு வாய்க் காஃபின்னா நான் பெரிய வாயா? சின்ன வாயான்னு கேட்டு சந்தேக நிவர்த்தி பண்ணிக்கிட்டே கொடுக்கிறது வழக்கமாப் போச்சு. ஆனால் இன்னிக்குப் பாருங்க காலையிலே அவருக்குக் காஃபி கொடுத்துட்டு நான் யோகா பண்ணிட்டுக் குளிக்க ஏற்பாடு செய்யும்போது திடீர்னு எனக்கு ஒரு வாய்க் காஃபி கொடு, னு என் கணவர் கேட்க,யோகாவிலேயே கவனமாக இருந்த நான் மூச்சுப் பயிற்சியிலே இன்னும் என்ன பண்ணறது? மூச்சை நிறுத்தணும்னா எத்தனை நேரம் நிறுத்தறோம்னு தெரிய எண்ணிக்கை வேணும், எண்ணிக்கையிலே கவனம் இருந்தா மூச்சை நிறுத்தறது இயல்பா இருக்காது,னு யோசிச்சிட்டே காஃபி கொடுத்துட்டுக் குளிக்கப் போயிட்டேன். வந்து டிஃபன் கொடுத்துட்டு, காஃபி தான் இன்னிக்கு 2 தரம் குடிச்சாச்சே, மோர் கொடுக்கலாமானு யோசிச்சப்போ அவர் நீ 2-ம் தரம் காஃபி எங்கே கொடுத்தே, சும்மா காட்டிட்டுப் போயிட்டே? ஒரு வாய்னா அர்த்தம் சொல்லி இருக்கேன், இன்னும் புரியலியேங்கறார், என்னத்தைச் சொல்றது, ஒரு பெரிய வாயாக் காஃபியைக் கலந்து கொடுத்தேன், ஏற்கெனவே படிக்கிற நாளில் அவரோட சொந்தக்காரங்க வந்து என் கணவர் கிட்டே படிப்பு முடிச்சதும் மேலே என்ன செய்யப் போறேன்னு கேட்டதுக்கு, மேலே இப்போ ஒண்ணும் கூரை எல்லாம் மாத்த வேணாம் எல்லாம் நல்லாத் தானே இருக்குன்னு பதில் சொன்னவர் ஆச்சே, அதனாலே ஜாஸ்தி பேச்சுக் கொடுத்தா மாட்டிப்போம்னு தெரிஞ்சா விடு, ஜூட், வெற்றிகரமா வாபஸ்.
**********************
இன்னிக்கு அவள் விகடனிலே ஒரு கல்லூரி மாணவி தன்னோட ரத்த குரூப் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததுன்னும், அதனாலே பெண் பார்த்தவங்க வேண்டாம்னு சொல்லிட்டதாயும் வருத்தப்பட்டிருக்காங்க. இதைப் படிச்சதும் ரொம்பவே வருத்தமா இருக்கு. மருத்துவம் நிறையவே முன்னேற்றங்களைக் கண்டிருக்கு. எனக்கு முதல் பிரசவம் அப்போ என் பெண்ணிற்கு வந்த மஞ்சள் காமாலை மூலம் தான் எனக்கு "O" Rh Negative வகை ரத்த குரூப் எனத் தெரிய வந்தது. இத்தனைக்கும் எங்க வீட்டிலே எங்க சித்தப்பா ஒரு டாக்டர் தான். மதுரைக்கு அருகே சின்னமனூரில் டாக்டராக இருந்தார். எங்க அம்மாவோட தங்கை கணவர். (அந்த ஏரியாவிலே அவருக்குத் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு உண்டு.) இருந்தாலும் யாருக்கும் இது பத்தி அப்போ யோசிக்கத் தெரியலை. என் பெண்ணைத் தினமும் வெயிலில் போட்டு எடுத்ததும், அதுக்கு அப்புறம் 2-வது பிரசவத்தில் பையனுக்கு வயிற்றிலேயே 7-ம் மாசத்திலேயே மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததும், பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடனும், enlargement liverஉடனும் பிறந்த அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) அதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாலே ரத்த குரூப் பார்க்க ஆரம்பிச்சாங்க, அல்லது குழந்தை உண்டானதும், ரத்த குரூப் பார்த்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாங்க. சொந்தம் என்றால் தான் இப்படி இருக்கும்னு முன்னாலே சொல்லிட்டிருந்தது என்னோட விஷயத்திலே பொய்யாப் போச்சு. நானும் என் கணவரும் முன்னைப் பின்னே தெரியாதவங்கதான். எங்களுக்கு இப்படி நடக்கலியா? ஆகவே ரத்த குரூப் பாருங்க, ஆனால் இளைஞர்களே, இந்தச் சின்னக் காரணத்துக்காகப் பார்த்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க, இப்போவெல்லாம் கருவில் குழந்தை உருவானதுமே அதுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏராளமா இருக்கு, கவலை வேண்டாம்.
அவள் விகடனிலே ரசிச்ச ஒரு சிறு கவிதை:
ஒரு பெண்குழந்தை கேட்கிறது:
நான் பிறந்தப்போ
நெல்மணி கொடுக்க
முயற்சித்தாயாமே!
இப்போ கொடும்மா.,
பசிக்கிறது!"
இதுவும் ஒரு கல்லூரி மாணவி எழுதியது தான். ரொம்பப் பெரிசா எழுதறேன்னு எல்லாரும் சொல்றதாலே பம்பாய் பயணம் முடிஞ்சா நாளை தொடர்கிறேன்.
காலை ரெகுலர் காஃபி சாதாரண அளவாய் இருந்தலும் அடுத்தடுத்த டோஸ் சின்ன டோஸ்தான். எனக்கு கம்மியாய் வராதே என்றால் சாதாரண டோஸ் கலந்து அதை பாதியாய் செய்து கொடுத்துட்டு என்று பாஸிடம் சொல்வேன்!
ReplyDeleteகாலை ரெகுலர் காஃபி சாதாரண அளவாய் இருந்தலும் அடுத்தடுத்த டோஸ் சின்ன டோஸ்தான். எனக்கு கம்மியாய் வராதே என்றால் 'சாதாரண டோஸ் கலந்து அதை பாதியாய் செய்து கொடுத்துடு' என்று பாஸிடம் சொல்வேன்!
ReplyDeleteகல்கி ஜோக் சிரிப்பு வரலை! இப்போ கல்கியே கிடையாது தெரியுமோ....
ReplyDeleteசர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் தண்ணீர் அழைத்து சொல்வாரே..."எவ்வளவு தரம் சொல்லி இருக்கிறேன்... காஃபிக்கு பக்கத்தில் தண்ணியை வைக்காதே என்று" என்று கடிந்து கொள்வார்.
என்னதான் மீள்பதிவு என்றாலும் கடைசி வரியை எடிட் செய்திருக்கக் கூடாதோ....
ReplyDeleteஅவள் விகடன் கவிதை கள்ளிப்பால் கிழவியை நினைவு படுத்தியது.
வணக்கம் சகோதரி
ReplyDeleteமீள் பதிவாக இருந்தாலும் பதிவு அருமை.
தண்ணி காஃபி ஜோக்ஸ் நன்றாக உள்ளது. சிரித்தேன்.
ஒரு வாய் காஃபியின் அர்த்தங்கள்.. ஹா ஹா ஏற்கனவே எனக்கும் இவை அனுபவங்களாக இருந்தன. ஏனென்றால், என் புகுந்த வீட்டிலும் இப்படித்தான் ஒரு வாய்காஃபி அடிக்கடி அருந்துவார்கள்.
மேல் கூரை இப்போதைக்கு மாற்ற வேண்டிய அவசிய மில்லை.. ஹா ஹா. ரசித்து சிரித்தேன்.
ரத்த க்ரூப்பெல்லாம் பார்த்து திருமணம் நடை பெறாமல் போவது வருத்தம்தான். ஆனால், இப்போதுதான் இப்படி பல விஷயங்களுக்காக திருமணங்களை நிராகரிக்கிறார்களே!! என்ன செய்வது...? . திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயப்பட்டால் போதும் என்ற முடிவுக்கு அனைவரும் வந்து விட்டார்கள் போலும்..! நடப்பது கலி காலமில்லையா?
ரசித்த கவிதை மனதை சங்கடபடுத்தியது. "என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தை நானே கலைத்திருப்பேனே.." என்ற பாடலையும் நினைவு படுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெகட்டிவ் ரத்த க்ரூப் எல்லாம் அதெல்லாம் முன்ன இப்ப எலலம் எல்லாத்த்துக்கும் மருத்துவத்தில் தற்காப்புகள் இருக்கு. பெண் நெகட்டிவ் ப்ளட் குரூப் னு ஒதுக்கறது எல்லாம் டூ மச்.
ReplyDeleteகல்கி கவிதை சிரிப்பா இல்லை.
நெல்மணி கவிதை மனதை என்னவோ செய்தது. சிந்துபைரவியில் நானொரு சிந்து பாட்டு நினைவுக்கு வந்தது, அதில் இப்படித்தான் பாடுவாள் நாயகி. தன் விதி தெரிந்திருந்தால் தானே அப்போதே கலைத்திருப்பேன்னு.
கீதா
மீள் பதிவு - நன்று. காஃபி குடிப்பதை விட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.
ReplyDeleteமீள் பதிவு அருமை.
ReplyDelete