பலதும் எழுத நினைச்சு ஆனால் ஏனோ எழுதப் பிடிக்காமல் இருக்கேன். என்றாலும் சில நிகழ்வுகள் மனதைப் பாதித்தவற்றை மட்டும் சொல்றேன். சில/பல புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. அதில் எங்கள் ப்ளாக் மூலம் பரிசாகக் கிடைத்த ஆனந்தப் பூங்காற்றே புத்தகம், கடுகு சார் எனக்கு அனுப்பி வைத்த கமலாவும் தொச்சுவும் ரேவதி எனக்குப் பரிசாய் அளித்த அமரதாராவின் இரண்டாம் பாகம் ரங்கதுரையின் கதையும் அடக்கம். இன்னும் சில புத்தகங்களும் உண்டு. மோகன் ஜி அனுப்பிய சாஸ்தாம்ருதம், ஜிஎம்பியின் புத்தகம், வைகோவின் புத்தகம் என இருக்கின்றன. ஒரு மனது போனால் போகட்டும். உனக்கப்புறம் என்ன ஆகுமோ அது இப்போவே ஆகிவிட்டதாய் நினைச்சுக்கோ என்றாலும் இன்னொரு மனசு தவிப்பாய்த் தவிக்கிறது. இதனால் மனஸ்தாபமே வந்து விட்டது. எனக்கு அது தான் ஆச்சரியம். மனிதர்களின் உண்மையான முகம், நாம் அறியாத பக்கம் நன்றாகத் தெரிந்தாலும் அதிர்ச்சியும் மன வருத்தமும் இன்னமும் அடங்கவில்லை. இப்படிக் கூடவா? இப்படிக் கூடவா என மனம் அடிச்சுக்கறது. இத்தனைக்கும் இது நடந்து ஒரு வருஷம் போல் ஆகப் போகிறது. ஆனாலும் நினைத்தாலே மனம் பதறுகிறது. இதனால் எனக்கு வரவேண்டிய கார்த்திகைப் பணமும், கணுப் பணமும் வராமல் போய் விட்டன. நம்ம ரங்க்ஸ் வேறே முடியாமல் இருந்துட்டு இப்போத் தான் கொஞ்சம் எழுந்திருந்து நடமாடும் நேரம் இப்படிச் சீர் வராமல் போனதில் எங்க இரண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம். எங்களைப் பொறுத்தவரை இதனால் எல்லாம் உறவு பாதிக்காது/பாதிக்கக் கூடாது என்பதே! ஆனால் நடப்பதே வேறே மாதிரியா இருக்கே! என்ன செய்வதுனு புரியவே இல்லை. :(
நான் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் போனதே இல்லை. மதுரையில் முன்னெல்லாம் மேலமாசிவீதி, டவுன் ஹால் ரோடோடு சேரும் முக்கில் வண்டியை வைத்துக் கொண்டு சோவியத் யூனியன் புத்தகங்களை விற்பார்கள். தூதரக அலுவலகத்துக்குக் கடிதம் போட்டால் மாதா மாதம் இலவசமாயும் புத்தகங்கள் வரும். அது தவிர ஹனுமந்தராயன் கோவில் தெரு முக்கில் மீனாக்ஷி பதிப்பகம்/புத்தகங்களும் விற்பனை செய்தார்கள் இருந்தது. அங்கே போய்ப் பழக்கப் படுத்திக் கொண்டதில் அவங்க விற்பனைக்கு வந்திருக்கும் புதுப் புத்தகம் ஏதேனும் ஒன்றைப் படிக்கத் தருவார்கள். அப்போல்லாம் எழுத்தாளரைப் பொறுத்து நாலணாவில் இருந்து ஒரு ரூபாய் வரை வாங்கிப்பாங்க. நிறையப் புத்தகம் படிச்சிருக்கேன் அப்படி வாங்கிப் படிச்சதில் அதிகம் ஜெயகாந்தனின் புத்தகங்கள்.
யதேச்சையாக அறிமுகம் ஆன பழைய பேப்பர் காரரின் கூடையில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை. பணமே வாங்கிக்காமல் படிச்சுட்டுக் கொடு பாப்பானு புத்தகங்களைத் தருவார். அதன் பின்னரும் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்கார். அது ஒரு பொற்காலம்னு சொல்லலாம். கல்யாணம் ஆகி வவுந்தப்புறமா என்னோட புத்தக ஆர்வத்தைப் பார்த்து மிரண்டு போன நம்ம ரங்க்ஸ் என்னைப் புத்தகக்கடைபக்கமே கூட்டிச் சென்றதில்லை. எத்தனையோ புத்தகக் கண்காட்சி நடந்தும் நான் போனதே இல்லை.சித்தப்பாவிடம் இருந்த புத்தகங்களே நிறையப் படிக்காதவை இருந்ததால் எப்போ டி.நகர் போனாலும் ஐந்தாறு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வருவேன். ரயிலில் அலுவலகம் செல்லும்போதும்/திரும்பி வரும்போதும் அலுவலக ஓய்வு நேரத்தின் போதும் புத்தகங்களே துணை.